சர்ச்சைக்கு உள்ளாகும் சச்சினின் பாரதரத்னா! கதம்ப சோறு! பகுதி 14.

கதம்ப சோறு! பகுதி 14.

சர்ச்சைக்கு உள்ளாகும் சச்சினின் பாரதரத்னா!


   இந்தியாவில் விருதுகள் ஒருகாலத்தில் கவுரவமாக கருதப்பட்டது. நாட்டிற்கு உழைத்த அறிஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும் அவர்களின் தகுதியை ஆராய்ந்து விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது விருது கொடுப்பது ஒரு அரசியல் ஆகிவிட்டது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருதுகள் என்பது கழக ஆட்சிகளில் உதித்ததுதான்.அது கொஞ்சம் கொஞ்சமாக பரவி டெல்லிவரை சென்றுவிட்டது. இப்போது மத்திய அரசு தரும் பத்ம விருதுகள் உள்ளிட்ட அனைத்திலும் சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விருது சர்ச்சையில் தற்போது வசமாக வந்து சிக்கிக்கொண்டார் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சச்சினுக்கு பாரதரத்னா அவசியமா? என்று ஆரம்பித்து தற்போது அதை எதிர்த்து வழக்கு தொடுக்கும் அளவுக்கு சென்றுள்ளது. மேலும் வாஜ்பாய், தயான்சந்த், ராமாராவ்,கற்பூரி தாகூர், சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களுக்கும் இந்த விருதை வழங்க வேண்டும் என்ற கோஷங்களும் போராட்டங்களும், வேண்டுகோள்களும் வலுத்துள்ளன. என்னைப்பொருத்தவரை சச்சினுக்கு இந்த சர்ச்சை தேவை இல்லை! இந்த விருதை வழங்க முன்வந்தபோதே கவுரவமாக மறுத்திருந்தால் அவர் தலையில் மேலும் ஒரு கிரீடம் சூடியிருக்கும். இதை ஏற்றுக்கொண்ட காரணத்தால் ஓய்வு பெற்றும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் இந்த சாதனை நாயகன்!.

காமன்வெல்த்தை கலக்கிய காமரூன்!

    இந்தியா காமன்வெல்த்தில் கலந்துகொள்ளக்கூடாது! என்ற சர்ச்சைகளை மீறி சல்மான் குர்ஷித் கும்பிடு போட்டு கலந்துகொண்டுவிட சத்தம் இல்லாமல் பிரிட்டிஷ் பிரதமர்  டேவிட் காமரூன் யாழ்ப்பாணம் விஜயம் செய்து டீ கடைகளில் வடை சுட்டு அசத்தி இராணுவ தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை விசிட் அடித்து அசத்தியதும் இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளை 2014 மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூற சிங்கள அரசியல் வாதிகள் கொதித்து எழுந்து விட்டனர்.வெள்ளைக்கார ஆதிக்க மனோபாவம் கொண்ட கேமரூனின் தாளத்திற்கு ஏற்ப இலங்கை ஆடாது என ஆவேசமாக பேசினார் ஜாதிக ஹெல உறுமய கட்சி பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க. மகிந்த ராஜபக்சேவோ இது 30 ஆண்டு பிரச்சனை ஒரே நாள் இரவில் முடிக்க முடியாது. எங்களுக்கு யாரும் கட்டளை இடமுடியாது என்று கொதித்தார். காமன்வெல்த் மாநாட்டை நடத்தி தமிழர்களை கொன்றதை மறைக்க முயன்ற இலங்கையின் முயற்சி தோற்கடிக்கப்பட்ட காமன்வெல்த் மாநாடு கேமரூன் பயணத்தின் விவாத மேடையாக அமைந்துவிட்டது. இந்த மாநாட்டிற்குமொத்தமுள்ள53நாட்டு உறுப்பினர்களில் 23 நாட்டு தலைவர்கள் மட்டுமே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெறுவாரா ஆனந்த்!

   சென்னையில் நடைபெற்றுவரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தற்போது நடைபெற்றுள்ள 8 சுற்று முடிவில் ஆனந்தின் நிலை கவலைக்குரியதாக அமைந்துவிட்டது. முதல் மூன்று சுற்றுக்கள் டிராவில் முடிய நாலாவது மற்றும் ஐந்தாவது சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் பின் தங்கியுள்ள ஆனந்த் இனி நடக்க உள்ள நான்கு சுற்றுக்களில் குறைந்தது மூன்றை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் கார்ல்சன் இன்னும் மூன்று சுற்றுக்களை டிரா செய்தாலே போதுமானது. இப்போதைய நிலையில் கார்ல்சன் ஆனந்தின் தொடர் வெற்றிக்கு செக் வைத்துவிட்டதாகவே தோன்றுகிறது.  பார்ப்போம்.

மீண்டும் சிம்புவோடு இணையும் நயன்தாரா!

        வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது காதலர்களாக இருந்த நயனும் சிம்புவும் பின்னர் நிஜவாழ்க்கையில் பிரிவை சந்தித்த போது திரைவாழ்க்கையிலும் பிரிந்தனர். அவர்கள் அதன்பின் எந்த படத்திலும் இணையவில்லை! தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின் பாண்டிராஜ் இயக்கும் ஒரு புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். முதலில் இந்த படத்தில் அமலாபால் நடிப்பதாக இருந்து கால்ஷீட் பிரச்சனையில் அவர் விலகிவிட, நயனை அணுகியுள்ளார் இயக்குனர். முதலில் மறுத்த நயன் கதையை கேட்டதும் ஓக்கே சொல்லிவிட்டாராம். தனது டிவிட்டர் பக்கத்தில் இதை சொல்லியுள்ளர் இயக்குனர் பாண்டிராஜ். இது திரையுலகில் எதிர்பாராத திருப்பமாக பேசப்படுகிறது. விரைவில் வெள்ளித்திரையில் இந்த ஜோடியை பார்த்து ரசிக்கலாம்!

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு!

  ஈழத்தலைவர்களை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவுச்சின்னமும் பூங்காவும் அமைக்கப்பட்டது. அதைச்சுற்றி பூங்காவும் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது. அப்போதெல்லாம் சும்மா இருந்த ஈழத்தாய், தற்போது அந்த காம்பவுண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி இடித்துத் தள்ளிவிட்டார். கச்சத்தீவை மீட்ப்போம்! இலங்கை போர்க்குற்ற விசாரணை தேவை என்று முழங்கியவரின் இடி முழக்கம் திடீரென காணாமல் போய்விட்டது. இன்று காட்சிகள் மாறுகின்றன. இவர்கள் தங்கள் கட்சி தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைத்து இருப்பது மட்டும் அவர்கள் வீட்டு சொத்தா. மெரினா கடற்கரையின் அழகை இந்த நினைவுச்சின்னங்கள் மேலும் மெருகேற்றுகிறதா? கேவலமான ஒரு அரசியல் தற்போது நடைபெற்றுவருவது ஆரோக்கியமானதல்ல! ஆனால் அதுதான் தமிழனின் தலைவிதி என்றாகிவிட்டது.

நாட்டின் முதலாவது மகளிர் வங்கி!
 மகளிரால் மகளிருக்காக நடத்தப்படும் அனைத்து மகளீர் வங்கி செவ்வாய்க்கிழமை அன்று மும்பையில் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ 1000 கோடி தொகுப்பு நிதியைக் கொண்டு மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, கவுஹாத்தி உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த வங்கியின் கிளைகள் ஒரே நாளில் துவக்கப்பட்டுள்ளது. வங்கி சார்ந்த அனைத்து சேவைகளும் இதில் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கான சேவையை மையமாக வைத்து அவர்களுக்காக இந்த வங்கி துவக்கப்பட்டுள்ளது.

டச்லெஸ் சுவிட்ச் தயாரித்த ஹரி!


  திருநெல்வேலிமாவட்டத்தை சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர் தொடாமலே இயங்கும் டச்லெஸ் சுவிட்ச் ஒன்றை தயாரித்து சாதனைப்படைத்துள்ளார். இன்பிரா-ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதான இந்த சாதனம் இருநூறு ரூபாய் விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சுவிட்சின் மேல்புறம் 2.செ.மீ அல்லது 5.செ.மீ தூரத்தில் இருவிரல்களை ஆட்டினால் சுவிட்ச் ஆன் ஆகும்வகையில் சுவிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிட்சில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மீட்டரில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் விரல்பகுதிவரை வந்து பின்னர் கீழ் திரும்பும். அதை அங்கு உள்ள ரிசீவர் பெற்றுக்கொண்டு சுவிட்சை இயக்கிவிடும். யாருடைய விரல்களை காட்டினாலும் சுவிட்ச் இயங்கும். மின்சார ஷாக் பற்றிய பயம் தேவையில்லை. சாதாரண சுவிட்சுகளை விட குறைந்த அளவு மின்சாரமே எடுக்கும். இந்த நவீன சுவிட்சை வணிக ரீதியில் தயாரிக்க சென்னையை சேர்ந்த சரோஜ் எண்டர்பிரைசஸ் என்ற  நிறுவனம் முன்வந்துள்ளதாக ஹரிராம்சந்தர் மகிழ்ச்சியுடன் கூறினார். இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்!.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

கோதுமை மாவை சலித்தபின் அதன் தவிட்டை வீணாக்காமல் சபீனா பவுடருடன் கலந்து பாத்திரம் துலக்கினால் பாத்திரங்கள் பளிச்சிடும்.

நெல்லிக்காயை தண்ணீர்விட்டு மசிய அரைத்துவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பஞ்சால் தலையின் தோலில் படும்படி தேய்க்கவும். பிறகு கடலை மாவு தேய்த்து நன்கு அலசவும். பொடுகுத்தொல்லை இனி இல்லவே இல்லை.

உங்கள் வீட்டில் எலுமிச்சை நார்த்தங்காய், கடாரங்காய் மரங்கள் பல வருடங்களாக காய்க்க வில்லையா? வேர்ப்பாகத்தில் கல் உப்பு ஒரு கிலோ கொட்டுங்கள் உடனே பலன் தெரியும்.

பப்பாளி இலையை அரைத்து சாப்பிட்டால் டெங்குஜுரம் வராமல் தடுக்கலாம். வந்தாலும் உடனே சரியாகிவிடும். இந்தப்பழம் கண்ணுக்கு நல்லது பால் சேர்த்து சாப்பிட்டால் சூடு தணியும்.

ஜிப் வைத்த பை அல்லது பெட்டியில் துணிகளை வைக்கும்போது மேலே ஒரு நியுஸ்பேப்பர் போட்டு மூடிவிட்டு ஜிப்  போட்டால் திறக்கும்போது ஜிப் மாட்டிக்கொண்டு துணிகள் கிழியாது.

இன்று இப்படி கேட்க முடியுமா?


  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று உறுதியானவுடன் இந்திய ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்வதற்காக நேரு தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப்பின் நேரு சொன்னார். ‘ஆங்கில அதிகாரி ஒருவரிடம் தலைமை ராணுவ தளபதி பொறுப்பை ஒப்படைத்துவிடலாம். ஏனேன்றால் நம்மவர்களுக்கு ராணுவத்தை நடத்திச் செல்வதற்கு போதுமான அனுபவம் கிடையாது என்றார். கூட்டத்திற்கு வந்த அனைவரும்  இந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு ராணுவ அதிகாரி மட்டும் ஐயா! ஒரு வேண்டுகோள்! என நேருவிடம் கூறிவிட்டு, ‘ இந்த தேசத்தை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்கு கூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவங்கள் இல்லை. ஆகையால் நம் இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக ஓர் ஆங்கிலேயரை நியமித்துவிடலாமா?’ என்றார்.
   கூட்டத்தில் அதிர்ச்சியும் அமைதியும் நிலவியது. நேரு கோபப்படாமல், இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தலைமை தளபதி பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று அந்த அதிகாரியை கேட்டார்.
  அந்த அதிகாரி, வேண்டாம்! எங்கள் உயர் அதிகாரியான லெப்டினல் ஜெனரல் கரியப்பா தான் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்றார். அவர் யோசனைப்படி கரியப்பா முதல் இராணுவ தலைமை தளபதி ஆனார்.
இப்படி நேருவிற்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர் லெப்டினண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர். இவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டிணண்ட் ஜெனரல்.
   இன்று இப்படி கருத்து தெரிவிக்க முடியுமா?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஹரி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

    தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அகசிவப்பு கதிர்கள் டெக்னாலஜி உபயோகம். அருமை. வைபி நெட் டெக்னாலஜி எதிர் காலத்தில் இம்மாதிரியான ஒளி டெக்னாலஜி அதிகம் பயன் பாட்டில் இருக்கப் போகிறது. அவரின் இந்த முயற்சி அற்புத மான துவக்கம். முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் குறைந்த விலை. பஞ்சாலை தொழிலாளியின் மகன். இவரிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. ஜேம்ஸ் கேமரூனின் யாழ்பாணம் விஜயம் வரவேற்க்கதக்க ஒன்று, உண்மையில் நம்மூரு எம்.பி.க்கள் சிறப்பு குழு செய்திருக்கவேண்டிய வேலை அது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2