உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 33

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 33


சென்ற இரண்டு வாரங்களாக ஒலி மயக்கம் குறித்து அறிந்தோம். இந்த வாரம் தமிழில் முதல் எழுத்துக்களாக இந்த சொற்கள்தான் வர வேண்டும் என்ற ஒர் மரபு உள்ளது அதை அறிந்து கொள்ள போகிறோம்.
     தமிழில் சொற்களை பெயர்ச்சொல், வினைச்சொல்,இடைச்சொல், உரிச்சொல் என வகைப்படுத்துகிறோம். இந்த சொற்களில் எந்த சொற்களாக இருந்தாலும் சொல்லின் முதலில் சில எழுத்துக்கள் வராது. அதே போல சொல்லின் இறுதியில் சில எழுத்துக்கள் வராது. இவற்றை இப்போது பலரும் அறிவதில்லை! தவிர்த்துவிடுகிறார்கள். ஆனாலும் தமிழ் அறிந்த அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று இந்த எழுத்து மரபு.

   தமிழில் சொல்லின் முதலில் சில எழுத்துக்களே வர வேண்டும். இதை மொழி முதல் எழுத்துக்கள் என்று சொல்லுவார்கள். சில எழுத்துக்கள் முதலில் வராது. உதாரணமாக, டப்பா, டமாரம், டாக்டர், டாக்சி, றாட்டு,ஙொப்பன்,ணங்குனு,னோக்கு,னேக்கு,ரப்பர், ரகு, ராமன், லாரி, லொட்டு, ளோளாயம் போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம்.
   இத்தகைய சொற்கள் நமது பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வந்தாலும் அப்படி பயன்படுத்துவது தவறாகும்.
ட, ற,ஙொ,ண,ன,ர,ல,ள, ழ முதலிய எழுத்துக்கள் சொல்லின் முதல் எழுத்துக்களாக வரக்கூடாது.
  அப்படியானால் மொழி முதலில் வரும் எழுத்துக்கள் என்ன?
 உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.
உயிர்மெய் எழுத்துக்களில் க,ங,ச,ஞ,த,ந,ப,ம,யா,வ, ஆகிய வகை எழுத்துக்கள் மட்டும் மொழிக்கு முதலாக வரும்.

ட, ர,ற,ல,ள வகை எழுத்துக்களை சொல்லின் முதலில் பயன்படுத்துவது கூடாது. அப்படி எழுதுதல் தமிழ் மரபு இல்லை. இப்படி எழுத நேர்ந்தால் முதலில் இ என்னும் உயிரெழுத்து சேர்த்து எழுதுதல் மரபை காப்பதாக தற்போது கருதப்படுகிறது.
 உதாரணமாக ராமன், இராமன், ரப்பர், இரப்பர், டப்பா, இடப்பா,  என்று எழுதப்படுகிறது. அடுத்த பகுதியில் சொல்லின் இறுதியில் இடம்பெறக் கூடாத் எழுத்துக்களை பார்ப்போம்.
  எழுத்தாளர் ஜெய மோகன் பெரிய இலக்கியவாதியாக இருந்தும் தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை கிளப்பி இப்போது இணைய உலகம் இருபக்கமும் விவாதங்களை எழுப்பிக் கொண்டு உள்ளது. தமிழ் வரிவடிவத்திற்கு பதில் ஆங்கில வரிவடிவம் பயன்படுத்தலாம் என்கிறார் எழுத்தாளார். அது எப்படி சாத்தியம் என்றும் கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை இது வெட்டி வேலை என்றே சொல்லுவேன். மொழி வரிவடிவம் குறித்து எனக்கு பெரிய அறிவெல்லாம் இல்லை. ஆனால் நம்முடைய மொழி நமக்கு தாய் போன்றது. குழந்தைக்கு எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய் போன்று வராது. நம்முடைய வரிவடிவமும் தாய் போன்றது. மொழிக்கு தாய் இந்த வரிவடிவம் என்று எடுத்துக் கொண்டால் ஜெயமோகன் சொல்லுவது குழந்தைக்கு வாடகைத்தாயை அமர்த்துவது போன்ற ஒரு விசயத்தை உண்டாக்குகிறது. இது தேவையா? அப்படித்தான் நம் மொழி என்னும் குழந்தை வளரவேண்டுமா? வளர்ந்துதான் விடுமா? யோசிக்கவேண்டிய ஒன்று. அவசரகதியில் இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருப்பாரோ என்றே தோன்றுகிறது.

இனி இலக்கிய சுவைக்கு செல்வோம்!

 நமது இலக்கியவகைகளுக்கு பஞ்சமே இல்லை! கலம்பகம் என்றொரு செய்யுள் இருக்கிறது. அதன் உறுப்புகளில் ஒன்று ஊசல்.
  மகளிர் ஊசல்(ஊஞ்சல்) ஆடியவாறு பாட்டுடை தலைவனை புகழ்ந்து பாடுவது ஊசல் என்னும் கலம்பக உறுப்பாகும். கலம்பகத்தில் நந்திக்கலம்பகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று அதில் அமைந்த ஊசல் பாடல் ஒன்று கீழே!

 ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்!
        உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்!
 ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்!
    அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்!
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
    கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவர்க்கு முன் தோன்றல் கைவேலைப் பாடி
   காஞ்சிபுர மும்பாடி  ஆடாமோ ஊசல்!


செவ்வரி ஓடிய கண்களை உடைய தோழியரே ஊசல் ஆடலாமா? உடுத்திக்கொண்டிருக்கும் பட்டாடை அசைந்து ஆட ஊசல் ஆடலாமா? ஆடகம் என்னும் பொன்னால் செய்த அணிகலன்கள் ஒளி வீச ஊசல் ஆடலாமா? கூந்தலில் முடிந்திருக்கும் மலர்கள் அவிழ்ந்து விழ ஊசல் ஆடிடுவோமா? தெள்ளாறு என்னும் இடத்தில் பகைவர்களுக்கு வானுலகத்தை தந்தருளிய பெரும்படைக்கு தலைவனும் காடவர்க்கு முன் தோன்றியவனுமான நந்திவர்மன் கையில் உள்ள வீர வேலை புகழ்ந்து பாடி ஊசல் ஆடுவோமா? அவனுடைய தலைநகரான காஞ்சிபுரத்தினை புகழ்ந்து பாடி ஆடிடுவோமா? என்று மகளிர் பாடுவதாக அமைந்துள்ளது பாடல்.

  இந்தபாடலில் நந்திவர்மனது தலைநகர் காஞ்சிபுரம் என்றும் அவன் தெள்ளாறு என்னுமிடத்தில் பகைவர்களை வென்றான் என்பதும் காடவர் என்பவருடைய அண்ணன் என்பதும் அறிய முடிகிறது.

மீண்டும் அடுத்தபகுதியில் சந்திப்போம்!


உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. தமிழில் இலக்கணம் என்பது கடினம் என்றே சொல்கிறார்கள். இருப்பினும் அதை தம்மை அறியாமலேயே மிகச்சரியாக எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பயன்படுத்துகிறார்கள். எப்படி நடக்கிறது! உண்மையில் இலக்கணம் நன்கு புரிந்து கொண்டால் மிக எளிதானது. தங்கள் பணி அருமை நண்பரே. தொடருங்கள். நன்றி..

  ReplyDelete
 2. enakku puthiya thakaval!
  nantri sako..!

  ReplyDelete
 3. தங்களின் தமிழில் உள்ள அறிவாற்றல் பாராட்டத்தக்கது.ஜெயமோகனின் இருமொழிக் கலப்புப் பற்றி நீங்கள் சொல்வதில் உண்மையுள்ளது.தங்களின் தமிழார்வம் பாராட்டத் தக்கது.வாழ்த்துக்களுடன் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 4. வலைசரம் மூலம் இங்கு வந்தேன். உங்களுடைய இந்த தொடரை இதுவரை படித்ததில்லை. இனி படிக்க ஆரம்பிக்கிறேன். வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வணக்கம்.

  நானும் இனி உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2