முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்! பாப்பாமலர்!

முத்து நகையின் சிரிப்பில் உதிர்ந்த முத்துக்கள்!
   (விக்கிரமாதித்தனை பிடித்த சனி இரண்டாம் பகுதி)


விக்கிரமாதித்தன் அனைவரிடமும் விடைபெற்று வேதாளத்துடன் முண்டக நகரி என்னும் பட்டணத்தை வந்து அடைந்தான். அங்கு கோரக்கன் என்னும் செட்டியாரை பற்றி விசாரித்து அறிந்துகொண்டு அவரிடம்தான் முத்துக்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டு அவரிடம் சென்றான்.
      செட்டியாரே! உம்மிடம் ஒரு சுவடு முத்து ஒருலட்சம் பொன் விலையில் இருக்கிறதாமே! அதில் ஒரு சுவடு தேவை! என்று கேட்டான். செட்டியார், உண்மைதான்! முன்பு அந்தவகை முத்துக்களை விற்றுவந்தேன்! இப்போது அவை அகப்படாது! என்றார். ஏன்? அந்த முத்து விளைவது இல்லையா? எங்கு கிடைக்கும்? என்றான் விக்கிரமாதித்தன்.
       செட்டியார்,விக்கிரமாதித்தனை கூர்ந்து நோக்கினார். பின்னர் கூறினார். வாழவந்தான் புரத்தில் வாரண கேசரி என்னும் ராஜனின் மகள் முத்துநகை என்பவள் சிரித்தால் உதிரும் முத்துக்கள் அவை. இப்போது அவள் சிரிப்பது இல்லை! ஒரு மந்திரவாதி அந்த பட்டணத்தையே சபித்து விட்டு முத்துநகையை தன் பாதுகாப்பில் வைத்துள்ளான். அவள் வாய் திறந்து சிரிக்காததால் முத்துக்கள் உதிர்வதில்லை! அதனால் அத்தகைய முத்துக்கள் கிடைப்பது இல்லை! என்றார்.
    விக்கிரமாதித்தன் வாழவந்தான் புரத்தை அடைந்தான். அங்கிருந்த அரண்மனையை நோக்கி சென்றான். அந்த பட்டணமே சபிக்கப்பட்டு அனைவரும் ஜீவனின்றி சிலைகளாக இருந்தனர். அரண்மனையில் நுழைந்து அரசவைக்கு சென்ற போதும் அங்கும் அரசர், மந்திரி பிரதானிகள் அனைவரும் உயிரற்ற சிலைகளாய் இருந்தனர். பின்னர் வேதாளத்தை அனுப்பி அந்த மந்திரவாதியின் இருப்பிடத்தையும் அரசகுமாரியை அவன் அடைத்து வைத்திருக்கும் இடத்தையும் அறிந்துவரச்செய்தான்.
    வேதாளம் தனது மந்திர சக்தியால் அறிந்து பின்வருமாறு சொன்னது, அரசே! அந்த மந்திரவாதி மிகவும் திறமைசாலி! முன் ஆலோசனை மிக்கவன் அந்த பெண் முத்துநகை இருக்குமிடம் தெரிந்தால் அவளை யாராவது கவர்ந்து சென்றுவிடுவார்கள் என்று அம்மந்திரவாதி வெளியே செல்லும் சமயங்களில் அந்தப்புரத்தில்இளவரசியின் தலையை வெட்டி முன்வாசலில் வைத்து செல்கிறான்  திரும்பி வந்து பிறகு தலையை ஒட்டவைத்து உயிர் கொடுத்து அவளுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். அந்த மந்திரவாதி தற்போது ஒரு யாகம் செய்கிறான். அதை செய்து முடித்தால் அவன் பதினான்கு உலகத்தையும் வசப்படுத்திக் கொள்வான். பின்னர் இந்த பெண்ணை அவனது தகப்பன் சம்மதத்தோடு மணந்துகொள்ள நினைத்திருக்கிறான் என்று சொல்லியது.
   விக்கிரமன் வேதாளத்தின் மீதேறி அரண்மனை அந்தப்புரம் சென்றான். அங்கு முத்துநகையின் உயிரற்ற உடலையும் வெளியே வாசலில் இருக்கும் தலையை கண்டு வேதனை கொண்டு வேதாளமே இந்த பெண்ணை எப்படி உயிர்ப்பிப்பது என்று கேட்டான்.  வேதாளம் சுற்றும் பார்த்துவிட்டு சொன்னது, அரசே அதோ அந்த கட்டிலின் மீது இருக்கும் பிரம்பை எடுத்து பார்த்தால் ஒரு கணு தென்படும் அதை திருகினால் அதன் வழியாக ஒரு தைலம் வெளிப்படும் அதை இந்த பெண்ணின் கழுத்தில் தடவி உடலோடு ஒட்டினால் தலை ஒட்டிக்கொள்ளும் பின்பு அந்த பிரம்பினால் மூன்றுமுறை தட்டி எழுப்பினால் தூங்கி எழுந்தது போல முத்து நகை எழுந்திருப்பாள் என்று சொன்னது.

  விக்கிரமாதித்தனும் அவ்வாறே செய்ய அந்த பெண் தூங்கி எழுவது போல எழுந்தாள். எதிரே மந்திரவாதிக்கு பதில் அரசன் விக்கிரமாதித்தனை கண்டு மகிழ்ந்தாள். தாங்கள் யார்? எதற்கு வந்தீர்? என்று கேட்டாள்.
    உஜ்ஜைனி மன்னன் விக்கிரமாதித்தன் நான்! உன் வாயில் இருந்து உதிரும் முத்துக்களை பெற்றுச் செல்ல வந்தேன்!  இதைக்கேட்ட முத்துநகை! மந்திரவாதி இவருக்கு அஞ்சிதான் என்னை வெட்டி வைத்தார். ஆனால் இவரோ என்னை காப்பாற்றிவிட்டார். விதி வலியது என்று சிரித்தாள். அப்போது சில முத்துக்கள் உதிர்ந்தன. அம்முத்துக்களை எடுத்துக்கொண்ட விக்கிரமாதித்தன் பெண்ணே! நீ சமத்காரமாக அந்த மந்திரவாதியிடம் நடந்துகொண்டு அவனை கொல்லும் வழியை தெரிந்துகொள்! அவனை கொன்று உன்னை உன் தந்தையிடம் ஒப்படைப்பேன்! இப்போது நீ பழையபடி உன்னை வெட்டி விடுகிறேன்! என்று சொல்லி தலையை தனியாக வெட்டி வைத்துவிட்டு வேதாளத்தை அங்கே ஒளிந்து மந்திரவாதியை கண்காணிக்குமாறு செய்துவிட்டு வெளியேறினான்.
    இருள் சூழ்ந்த வேளையில் மந்திரவாதி அரண்மனைக்கு திரும்பி முத்துநகையை  உயிர்ப்பித்தான். அவளோ, சலித்துக் கொண்டாள். பெண்ணே! ஏன் சலித்துக் கொள்கிறாய்? என்றான் மந்திரவாதி.
   பெண்ணாய் பிறந்து என்ன பயன்! அழகாய் பிறந்தமையால் யாதொரு பயனும் உண்டா? என்னால் என் தாய் தந்தையர் உயிர் இழந்தனர்.என் நாடும் சபிக்கப்பட்டது! நானாவது சுகப்பட்டேன் என்றால் இல்லை! தினம் தினம் செத்து பிழைக்கிறேன்! இதை நினைத்துதான் சலித்துக்கொள்கிறேன்! என்றாள் முத்துநகை.
    அதைக்கேட்ட மந்திரவாதி! முத்துநகை! கவலைப்படாதே! நான் செய்யும் யாகம் முடியும் தருணம் வந்துவிட்டது. அப்போது பதினாலு உலகமும் எனக்கு கட்டுப்படும். அப்போது உன் தந்தையை உயிர்ப்பித்து அவர் சம்மதத்துடன் உன்னை மணந்துகொள்வேன்! உன் தாய் தந்தையர் உயிர்களெல்லாம் ஒரு செப்புக்குடத்தில் இட்டுபத்ரகாளியம்மன் கோயிலில் வைத்துள்ளேன்! அதை திறந்தால் அவர்கள் உயிர்பெற்று எழுவார்கள். வேள்வி முடிந்ததும் அதைச் செய்கிறேன். இன்னும் மூன்று தினங்கள் பொறுத்திரு! என்றான்.
    எல்லாம் சரிதான் ஸ்வாமி! தங்களை நேரடியாக யாராலும் வெல்ல முடியாது! தந்திரமாக யாராவது கொல்ல முயற்சித்தால் என்ன ஆவது? என்று கேட்டாள் முத்துநகை!

   அடிப்பைத்தியமே! என்னை கொல்ல எவனாலும் முடியாது! என் தலையை ஒரே வெட்டாக வெட்டி  ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் குடித்து நான் வளர்க்கும் வேள்வியில் போட்டுவிட்டு என் உடலை மூன்று மணி நேரம் பூமியில் விழவிடாமல் ஆகாயத்தில் எறிந்துகொண்டிருக்க வேண்டும்! அப்படி செய்பவன் யாரும் இல்லை! நான் வெட்டுப்படும்போது ஒரு துளி ரத்தம் சிந்தினாலும் ஆயிரம் மந்திரவாதிகள் என்னைப்போல தோன்றுவார்கள் என்றான்.
  முத்துநகை! புன் சிரித்து! பலே! உங்களை யாரும் வெல்லவோ கொல்லவோ முடியாது! இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது! என்றாள். இதையெல்லாம் அங்கு பல்லி உருவத்தில் இருந்து வேதாளம் கேட்டுக்கொண்டு இருந்தது. பின்னர் விக்கிரமனிடம் சென்று சொன்னது.
   அரசே! மூர்க்கனான அந்த மந்திரவாதி அந்தி சாயும் வேளையில் வழக்கம் போல அரண்மனைக்கு வருவான். அப்போது நீங்கள் கதவு மறைவில் இருந்து அவன் தலையை ஒரே வெட்டாக வெட்டுங்கள். அவன் வருவதை நான் பல்லியாக இருந்து சமிக்ஞை செய்கிறேன்! அவன் முதல் கதவை தாண்டியதும் நான் பல்லி போல சத்தம் போடுகிறேன்! அவன் கடந்ததும்நான் வாசலை சார்த்துவேன்! அவன் யார் வாசலை சார்த்தியது? என்று திரும்புவான்! அப்போது அவனை ஒரே வெட்டாக வெட்டுங்கள்! நான் அவனது இரத்தம் கீழே விழாமல்  குடித்து விடுகிறேன்! நீங்கள் அவன் உடலை ஆகாயத்தில் வீசி மூன்று மணி நேரம் வரை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றது.
   வேதாளத்தின் திட்டப்படி மறைந்திருந்து மந்திரவாதியை விக்கிரமன் வெட்ட வேதாளம் இரத்தம் குடிக்க உடலை ஆகாயத்தில் வீசி கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருந்தான் விக்கிரமன். இறுதியில் முனிவன் கொல்லப்பட்டான். பின்னர் விக்கிரமன் பத்ரகாளி கோயிலுக்குச்சென்று அங்கிருந்த குடத்தை எடுத்து திறந்தான். பின்னர் அரண்மனைக்கு சென்று முத்துநகையின் தலையை உடலோடு ஒட்டிவைத்தான். பின்னர் முத்துநகை எழுந்திரு! மந்திரவாதி இறந்தான்! என்று மந்திரக்கோலால் மூன்று முறை தட்டினான். முத்துநகை விழித்தாள். கலகலவென சிரித்தாள்! அவள் வாயிலிருந்து முத்துக்கள் சிதறின. அவற்றை எடுத்துக்கொண்டான் விக்கிரமன். பின்னர் அவளது தாய் தந்தையர் நகரவாசிகள் அனைவரும் உயிர்பெற்று எழுந்தனர். இப்போது முத்துநகை மீண்டும் சிரித்தாள் உதிர்ந்த முத்துக்களை எடுத்துக்கொண்டான் விக்கிரமன்.

 விக்கிரமாதித்த மன்னனை அறிந்துகொண்ட வாரணகேசரி மன்னன், முத்துநகையை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் விக்கிரமனை மணந்து கொண்ட மகிழ்ச்சியில் முத்துநகை சிரிக்க இப்போதும் முத்துக்கள் உதிர்ந்தன. அவற்றை எடுத்துக்கொண்ட விக்கிரமன், சில நாள் அங்கு தங்கியிருந்துவிட்டு தன்னுடைய நிலையை கூறி, நாற்பது நாட்களுக்குள் மதுராபுரி மன்னனிடம் முத்துக்களை ஒப்படைக்க வேண்டும். அதனால் கிளம்புவதாக கூறினான்.
  வாரணகேசரி மன்னனும் வழியனுப்பி வைத்தான். செத்துவிடுவான் என்று நினைத்த விக்கிரமன். இன்னுமொரு அழகிய பெண்ணை மணந்து கொண்டு தான் சொன்ன முத்துக்களை கொண்டு வந்திருப்பதை அறிந்த மதுராபுரி மன்னன் அதிசயித்தான்.
   இருந்தாலும் இரத்தினமாலையை அவன் மறக்கவில்லை! அடுத்த வழியை அவன் நாட மந்திரி வேறு வழி சொன்னான்! அது அடுத்தவாரம்.


மேலும் தொடர்புள்ள இடுகைகள்: நான்கு திருடர்கள் கதை! பாகம்1 பாப்பாமலர்.
நான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்!

நான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்!

நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!                   




Comments

  1. அருமை நண்பரே. காத்திருக்கின்றேன் அடுத்தப் பதிவினை வாசிக்க. நன்றி

    ReplyDelete
  2. கதை நல்லா சுவாரஸ்யமாகத்தான் இருக்கு

    ReplyDelete
  3. பள்ளிப் பருவத்தில் விக்கிரமாதித்தன் கதைகளைப் படிப்பதற்கு
    முன்னர் இங்கே போடப் பட்டுள்ள படங்களே அதிகம் மனதில்
    ஒட்டிக் கொள்ளும் .அனைவரும் விரும்பிப் படிக்கும் கதைகளில்
    இதுவும் ஒன்று சகோ .வாழ்த்துக்கள் கதை மேலும் சிறப்பாகத்
    தொடரட்டும் .

    ReplyDelete
  4. பல வருடங்களுக்குப் பிறகு படிக்கும் மாயாஜாலக் கதை. சுவாரசியமாக இருந்தது. அம்புலிமாமா படித்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள்

    ReplyDelete
  5. முகப்பு படத்தின் அளவை குறைக்கவும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2