நண்பர்களைத் தேடிக் கொள்! பாப்பாமலர்!
நண்பர்களைத் தேடிக் கொள்!
பாப்பாமலர்!
ஓரு ஊரில் ஒரு அடர்ந்த காடு
இருந்தது. அதில் பல நாரைகள் வசித்து வந்தன. அதில் ஆண் நாரை ஒன்று பெண் நாரையை
சந்தித்தது. அழகானவளே! என்னை திருமணம் செய்து கொள்ளுகிறாயா? என்று பெண் நாரையிடம்
கேட்டது ஆண் நாரை.
கம்பீரம் மிக்கவரே! உங்களுக்கு நண்பர்கள்
இருக்கிறார்களா? என்று கேட்டது பெண் நாரை.
இல்லை.அதற்கும் கல்யாணத்திற்கும் என்ன
சம்பந்தம்? என்றது ஆண் நாரை.
நல்ல நண்பன் ஒருவன் ஆயிரம் யானைகளுக்கு சமம்.
நண்பர்கள் இல்லாதவன் ஒரு கையை இழந்தவன் போல! நமக்கு எப்போது ஆபத்துவரும் என்று
தெரியாது. பறவைகளான நமக்கு நல்ல நண்பர்கள் தேவை! நீங்கள் நண்பர்களை தேடிக்
கொள்ளுங்கள்! உங்களை மணந்து கொள்கிறேன் என்றது பெண் நாரை.
அன்பானவளே! நீ சொல்வது உண்மைதான்! ஆனால் நான்
யாரோடு நட்பு கொள்வது?
நண்பர்களாவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
அடுத்த கரையில் பறவைகளின் அரசன் கழுகு இருக்கிறது. காட்டில் சிங்கராசா இருக்கிறது.
என்றது பெண் நாரை.
நீ சொன்னவர்களோடு நண்பனாகி பின்னர் உன்னை
மணந்து கொள்கிறேன் என்று பறந்தது ஆண் நாரை. பின்னர் சிறிது நாளில் அது கழுகையும்
சிங்கத்தையும் நண்பனாக்கிக் கொண்டது.
பெண் நாரையும் ஆண் நாரையை மணந்துகொண்டது. அவை
அந்த காட்டில் இருந்த ஒரு ஏரியின் நடுத்திடலில் இருந்த ஒரு கடம்ப மரத்தில் கூடு
கட்டி வாழ்ந்து வந்தன. அவற்றிற்கு இரண்டு குஞ்சுகள் பிறந்தன.
இப்படி இரண்டு நாரைகளும் சந்தோஷமாக குடும்பம்
நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் வேடர்கள் சிலர் வேட்டையாடுவதற்காக
காட்டுக்குள் வந்தனர். அவர்களுக்கு எந்த விலங்கும் சிக்காததால் நாரைகள் இருந்த
மரத்தின் அடியில் அமர்ந்தனர். அவர்கள் கொசுத்தொல்லையை போக்க மரத்தின் அடியில் தீ மூட்டினர்.
புகை மூட்டத்தால் மரத்தில் இருந்த நாரைக் குஞ்சுகள் அலறின.
நாரைகள் அலறுவதை கண்ட வேடர்கள் தீயை அதிகமாக
மூட்டினார்கள். அதில் நாரைக்குஞ்சுகள் விழுந்துவிடும் அதை சுட்டு தின்னலாம் என்று
அவர்கள் பேசிக்கொள்வதை கேட்ட பெண் நாரை, நமக்கு கொடிய ஆபத்து வந்துவிட்டது. இந்த
வேடர்களிடமிருந்து நம் குஞ்சுகளை காப்பாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்
கருடனிடம் சென்று உதவி கேளுங்கள் என்றது. ஆண் நாரையும் வேகமாக பறந்து சென்று
கருடனிடம் உதவி கேட்டது.
கருடனும் என்னால் முடிந்த உதவிகளை
செய்கிறேன்! என்று பறந்துவந்தது. அவர்களை மரத்தின் மேல் ஏற விடாதே! நான் வருகிறேன்
என்று சென்று ஏரியில் மூழ்கி தன் உடல் முழுவதும் ஈரத்துடன் வந்து தீயில் உதறியது.
நீர் பட்டு தீ அணைந்தது. வேடர்கள் மறுபடி மூட்டினார்கள் கழுகு மீண்டும் நீரில்
மூழ்கி தீயை அணைத்தது. இப்படி பலமுறை
நடந்தும் வேடர்கள் விடாக் கண்டர்களாக தீ மூட்டிக் கொண்டு இருந்தார்கள்.
கருடன் குளிரில் நடுங்கியது. அதன் உடல்
முழுவதும் நனைந்து மிகவும் களைத்துப் போய்விட்டது. ஆண் நாரையிடம் பெண் நாரை கருடன்
மிகவும் களைத்துவிட்டார். அவரை ஓய்வெடுக்க சொல்லுங்கள்! நமக்காக அவர் உயிரையும் இழந்துவிடுவார்
போல் உள்ளது. நீங்கள் சிங்கராசாவிடம் சென்று உதவி கேளுங்கள் என்றது.
உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன்! அது
எனக்கு மகிழ்ச்சியே என்று மீண்டும் நீரில் மூழ்கி நெருப்பை அணைத்தது கழுகு. அதே
சமயம் சிங்கத்திடம் சென்று உதவி கேட்டது நாரை. நடந்ததை கேள்விப்பட்ட சிங்கம் என்னை
முதலிலேயே அழைத்திருக்கலாமே!என்று கோபித்த சிங்கம் விரைந்து வந்தது. கர்ஜனை
செய்தபடி சிங்கம் ஏரியில் நீந்தி வருவதை கண்ட வேடர்கள் அங்கிருந்து ஓட்டம்
பிடித்தார்கள்.
என் நண்பர்களுக்கு தொல்லை கொடுத்த அவர்களை
கொன்றே தீருவேன் என்று விரட்டியது சிங்கம். நாரையும் கருடனும் சிங்கத்தை சமாதானம்
செய்தன.
வேடர்கள் ஓடியதும் நாரைக்குஞ்சுகள் நிம்மதி
அடைந்தன. நாரைகள் இரண்டும் நண்பர்களுக்கு நன்றி கூறின. நட்புக்கு நன்றி எதற்கு!
இது எங்கள் கடமை! எப்போது உதவி தேவை என்றாலும் தயங்காமல் கூப்பிடுங்கள் என்று
சிங்கமும் கழுகும் விடைபெற்றன.
பெண் நாரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, இன்று
உங்கள் தந்தையின் நண்பர்களின் உதவியால் பெரும் ஆபத்திலிருந்து தப்பினோம்.
நீங்களும் நல்ல நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள்! அதுவே உங்கள் பலம்! என்று அறிவுரை
சொன்னது. நாரைக் குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் தலையசைத்தன.
ஆபத்தில் காப்பான் தோழன்!
(நன்னெறிக் கதைகளில் இருந்து
தழுவி எழுதியது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இன்று இந்தக்கதை தான் குழந்தைகளுக்கு.
ReplyDeleteநன்றி.
அருமை ஐயா. தோள் கொடுப்பான் தோழன்
ReplyDeleteஆஹா அருமையான நீதிக்கதை, நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பாலைவனத்திற்கு சமம்.
ReplyDeleteஅருமையான நீதி கதை ...தோள் குடுப்பான் தோழன் ... மிகவும் உண்மை...
ReplyDeleteநண்பருக்கு வணக்கம்.
ReplyDeleteஅழகான அருமையான நீதி சொல்லும் கதையைப் பகிர்ந்தமைக்கு எனது அன்பான நன்றிகள். நண்பர்கள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் உண்டா! மகிழ்வான நேரங்களில் மட்டுமல்ல துன்பமான நேரங்களிலும் துணையாய் இருந்து தோள் கொடுப்பவர்களே நண்பர்கள்..
சுரேஷ் தொடர்ந்து இது போன்ற கதைகளை எழுதி வைங்க. எனக்கு அவசியம் தேவைப்படுகின்றது. நன்றி
ReplyDelete