பால் தாக்கரே மரணம்! மும்பையில் பதற்றம்!
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.
மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.
பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது. மும்பை நகரம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது.
நாளை இறுதிச் சடங்கு
தாக்கரேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை பிற்பகல் வரை வரை சிவாஜி பூங்காவில் வைக்கப்படும். பின்னர் மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்ததுடன் கடந்த அரை நூற்றாண்டு கால மகராஷ்டிரா அரசியலில் அசைக்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர்.
மகாராஷ்டிராவின் பூனேவில் 1926-ம் ஆண்டு பிறந்த பால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1966களில் மராட்டிய இனத்துக்கான சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.
மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவர். மகராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக சிவசேனாவை உருவாக்கியவர் பால்தாக்கரே. தமது கட்சிக்காக சாம்னா என்ற பத்திரிகையை உருவாக்கினார்.
1995-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பால்தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.
பொதுவாக எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்காத பால்தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் மட்டுமே கருத்துகளை எழுதி வந்தார். அதுவே அவரது கட்சியினருக்கான கட்டளையாகவும் இருந்தது.
கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி சாம்னாவின் ஆசிரியராக, காலம்னிஸ்டாக வாழ்க்கையை நிறைவு செய்தவர் பால்தக்கரே. பால்தாக்கரேவின் மகன் உத்தவ்தாக்கரேதான் அரசியல் வாரிசாக சிவசேனாவை நடத்தி வருகிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தவிடமாட்டேன் என்பதுதான் பால்தாக்கரேயின் இறுதிப் போராட்ட அறிவிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி தட்ஸ் தமிழ்
தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteஎன்னென்ன கலாட்டா நடக்கப்போகுதோ?
ReplyDeletethank u very much
ReplyDelete