பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 15


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 15

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்துவிட்டதாக சொல்லி பாயிடம் மந்திரிக்க அழைத்துச் செல்கின்றனர். முகேஷின் நண்பன் ரவி திருப்பதி செல்லும் வழியில் காணாமல் போகிறான். முகேஷை அவனது சித்தப்பா அழைத்து வரச்சொல்லி ஒரு ஆட்டோ டிரைவரை அனுப்புகிறார். அவருடன் சென்ற முகேஷ் அங்கு சித்தப்பா பேய் ஓட்டுவதை கண்ணாற பார்க்கிறான். இனி

முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:

 அந்த முழு பூசணிக்காய் முழுவதுமாக வெடித்து சிதற அதன் பாகங்கள் இரத்த சிவப்பில் ஆங்காங்கே சிதறிக்கிடக்க அந்த பேய் பிடித்த பெண்மணி அப்படியே மயங்கி சரிந்தார்.
  முகேஷ் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருக்க அவனது சித்தப்பாம் அந்த பெண்ணின் உச்சி முடியை ஒரு ஆணியில் கட்டி அதை வெட்டினார். பின்னர் சிறிது விபூதியை கையில் எடுத்து ஏதோ மந்திரம் உச்சரித்து அப்பெண்ணின் நெற்றியில் பூசினார். இரண்டு எலுமிச்சை பழங்களையும் திருஷ்டி போல சுற்றி வீசிவிட்டு கையில் கொஞ்சம் விபூதியை கொடுத்து கிளம்ப சொன்னார்.
  அந்த பெண்ணை கூட்டி வந்தவர்கள் சுவாமிஜி! இனி பயமில்லையே! என்று கேட்க.
அதெல்லாம் ஒன்றும் பயப்பட தேவையே இல்லை! இவளை பிடிச்ச பேயை விரட்டி ஆச்சு?இன்னும் கொஞ்சம் நேரத்துல தெளிஞ்சி நார்மலுக்கு வந்துடுவா! தைரியமா கூட்டிட்டு போங்க! அதோ அங்க பிரசாதம் தருவாங்க! வாங்கி சாப்பிட்டு விட்டு போங்க! என்றார்.
  பின்னர் முகேஷை நோக்கி, வாப்பா! முகேஷ்! இப்பத்தான் இந்த சித்தப்பா நினைப்பு உனக்கு வந்துருக்காப் போல என்றார்.
   இல்ல சித்தப்பா! வேலைக்கு போயிடறாதாலே அடிக்கடி வெளியே கிளம்ப முடியலை! சின்னவயசுல இந்த பக்கம் வந்தது. இப்ப எவ்வளவோ மாறி போயிருக்கு! ஒரே ஆச்சர்யமா இருக்கு!
  இந்த மலையே பெரிய அதிசயம் தான்! உலகத்துல மாற்றம் ஒன்று தான் மாறாதது! நாம மாறி வரும் ஜெனரேசனுக்கு தகுந்தா மாதிரி அப்டேட் ஆகிக்கணும் இன்னும் ஆதிவாசியாகவே நாம இல்லை இல்லையா? காலத்துக்கு தகுந்தா மாதிரி நம்ம நடவடிக்கைகளும் மாறனும். அப்பத்தான் காலம் தள்ள முடியும். என்ன வந்தவுடன் உன்னை தத்துவம் பேசி போரடிச்சிட்டேனா? வா உள்ளே போயி கை கால் கழுவிட்டு வா! சாப்பிட்டு விட்டு பிறகு பேசலாம். என்ன சந்திரா! உனக்கும் தான்! என்றவர் உள்ளேநுழைந்தார்.
    கொண்டபள்ளி கிராமத்தின் குஹாத்ரி மலைக்குன்று மனதிற்கு ரம்யமாக இருந்தது. அந்த மலைக்குன்றின் உச்சியில்  ஒரு குகை அதன் எதிர்ப்புறம் இரு சிறு குடிசைகள் வேயப்பட்டு இருந்தது. அதில் ஒன்றில் சமையல் நடந்துகொண்டிருந்தது. குஹாத்ரி வருவோருக்கு அங்கு உணவு வழங்கப்பட்டு கொண்டிருந்தது. மற்றொண்றில் தான் அவனது சித்தப்பா தங்கியிருந்தார்.
   மாலை நேரக்காற்று சுகமாக தென்றலாக வீச மலையில் முளைத்துள்ள மூலிகைச்செடிகளின் வாசம் மூக்கை துளைத்தது. சித்தப்பாவின் பின் நுழைந்து அங்கு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த நீரில் கை கால் முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தான் முகேஷ்.
  முகேஷ் இங்க எல்லோரும் சமம்! இங்க வர்றவங்க என்னோட இருக்கறவங்க எல்லோரும் சேர்ந்து ஒண்ணாத்தான் சாப்பிடுவோம். நீயும் இன்னிக்கு எங்களோட கலந்துக்க போறே வா! என்று அழைத்து சென்றார் சித்தப்பா.
  பக்கத்து குடிசையில் தரையில் பாய் விரித்து வித்தியாசமாக தைத்த இலையில் உணவு பறிமாறப்பட்டது. மண் குவளைகளில் நீர் வைக்கப்பட்டது. உணவு மிகவும் ருசியாக இருந்தது. நீரும் மிகவும் சுவையாக இருந்தது.
  சித்தப்பா! இந்த மெட்ரோ வாட்டர் தண்ணி குடிச்சி குடிச்சி நாக்கு செத்து போய் இருந்தது. எப்ப பாரு ஒரே மருந்து வாசனை! இந்த தண்ணி சுத்தமா சுவையா இருக்கே! என்றான்.
   முகேஷ்! இயற்கை நமக்கு எந்த குறையும் வைப்பது இல்லை! அதைத்தான் நாம பாழடைச்சு நம்மை நாமே கெடுத்துக்கிறோம். இயற்கையிலேயே நல்ல சுத்தமான தண்ணி கிடைக்குது. மனிதர்களான நாமதான் இந்த பூமியிலே கண்ட கழிவுகளையும் போட்டு வதைச்சு நீரை எல்லாம் உறிஞ்சி புது நீர் உள்ளே போக முடியாதபடி காங்கீரிட் போட்டு இயற்கை வளங்களை சிதைக்கிறோம் அதனால மாசடைஞ்ச நீர் குடிக்கிறோம்.
  இங்கே எல்லாமே இயற்கைதான்! இந்த மலையிலே ஒரு சுனை இருக்கு! எவ்வளவு கடுமையான வெயிலிலும் அங்கு நீர் சுரக்கும் அந்த நீர் தான் இது.
  ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கே நான் பார்க்க முடியுமா?
அந்த இடத்துக்கு இருட்டுலெ போக முடியாது நாளைக்கு கூட்டிட்டு போறேன்.
 சரி சித்தப்பா! இந்த இலை கூட வித்தியாசமா இருக்கே! எங்க பக்கத்துல மந்தார இலையை தையல் இலையா தைப்பாங்க! ஆனா இந்த இலை அது மாதிரி இல்லையே!
  இது பலாச இலை! தமிழ்ல முறுக்கன் இலைன்னு சொல்லுவாங்க! இந்த மரம் இங்க நிறைய செழித்து வளருது. இலைகள் இந்த மாதிரி சாப்பிட உதவுவது. ஆடு மாடுகளும் இந்த இலையை விரும்பி சாப்பிடும். சரி சாப்பிடு நல்லா ரெஸ்ட் எடு! நாளைக்கு நீ வந்த வேலையை கவனிப்போம்.
   நான் வந்த வேலை எதுன்னு உங்களுக்கு தெரியுமா சித்தப்பா?
அதுகூட தெரியலைன்னா அப்புறம் நான் எதுக்கு மந்திரவாதி?
 எப்படி எப்படி தெரிஞ்சிகிட்டீங்க? நான் உங்க கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே?
 நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணும்கிறது இல்லே!
அப்புறம் எப்படி தெரியும் அப்பா எதாவது போன் பண்ணாறா?
உங்கப்பாதான் என்கிட்ட பேசவே மாட்டாரே?
அப்புறம் எப்படி தெரிஞ்சது?
நீ எப்படி இங்க வந்தே? நான் அனுப்பிச்ச  சந்திரன் கூடத்தானே?
ஆமாம்!
அவனை எப்படி உன்கிட்ட அனுப்பிச்சேன்! அதே மாதிரிதான் இதுவும்.
எப்படி சித்தப்பா?
இதெல்லாம் மாந்தீரிகத்துல சகஜம்! நாம சில தேவதைகளை வசியம் பண்ணிகிட்டா எல்லாவற்றையும் தெரிஞ்சிக்கலாம்!
எல்லாமே ஆச்சர்யமா இருக்கு! எனக்கும் சொல்லித்தருவீங்களா?
இது எல்லாரும் கத்துக்கற கலை இல்லே கண்ணா! இதுக்குன்னு சில அமைப்புக்கள் உன் ஜாதகத்துல அமையனும் அப்படி அமைஞ்சா நீ வேண்டாமுன்னு சொன்னா கூட அது உன்னை தேடி வரும்.
அப்படி ஒரு அமைப்பு என் ஜாதகத்துல இருக்குதா?
அது உன்னோட ஜாதகத்தை பார்த்தாதான் தெரியும்!
சரி சித்தப்பா! இப்ப சாப்பிட்டு முடிச்சாச்சு! நைட் படுக்கை எங்கே! அந்த குடில்லதானே!
  குடில் உள்ளேயும் படுத்துக்கலாம்! இல்லே காத்தோட்டமா இந்த மலை மேலயும் படுத்துக்கலாம்!
 இங்க மலை மேல வெட்ட வெளியிலா?
ஆமாம்! இங்க எந்த பயமும் இல்லே! நீ வேணா உள்ளே தூங்கு!  நான் காத்தோட்டமா வெளியேத்தான் தூங்குவேன்.
   சரி சித்தப்பா நான் உள்ளேயே தூங்கறேன்.
இருவரும் உணவு உண்டு முடித்துவிட்டு கை கழுவிக்கொண்டு வந்து குடில் முன் அமர்ந்தனர். சித்தப்பா வெற்றிலை மடித்து போட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அங்கே பதட்டமாக இருவர் வந்தனர். சாமிஜி! சாமிஜி! நீங்கதான் காப்பாத்தனும் கீழே புள்ளை தவியா தவிக்குது நீங்க உடனே வரனும் என்றனர்.
  என்ன விசயம்?
என்னமோ தெரியலை சாமி! குழந்தைக்கு திடீர் திடீர்னு அலறுது! ஒரே அழுகை நீங்க வந்து கொஞ்சம் மந்திரிக்கணும்.
  கண்டிப்பா வரேன்! முகேஷ்! நீ கதவை சாத்திக்கிட்டு தூங்கு! நான் கீழே போயிட்டு வந்துடறேன். சந்திரன் உனக்கு துணையா இருப்பான் சந்திரன் எங்கே? சந்திரா!
   இல்ல சித்தப்பா! அவர் சாப்பிட்டதுமே கிளம்பிட்டார்! காலையிலே ஏதோ சவாரி இருக்குன்னு சொல்லிகிட்டு இருந்தார்.நான் தான் அனுப்பி வைச்சிட்டேன்.
  சரி! உனக்கு துணையா இருப்பான்னு பார்த்தேன்! உனக்கு ஒரு பயமும் இல்லே! இது என் கட்டுப்பாட்டில் இருக்கிற இடம் நீ தைரியமா தூங்கு! நான் வந்திடறேன் சொன்னவர் கிளம்பிவிட்டார்

அதுக்கென்ன சித்தப்பா! நான் இருக்கறேன் நீங்க போயிட்டு வாங்க! என்று தைரியமாக சொல்லிவிட்டாலும் அந்த இடத்தின் அமைதி அவனுக்கு என்னவோ போலிருந்தது. நகரம் என்றில்லாவிட்டாலும் புறநகர் போலிருந்த பஞ்செட்டிக்கும் அந்த குஹாத்ரி மலைக்கும் ஏக வித்தியாசங்கள். அவன் இருந்த இடம் தவிர சுற்றிலும் ஒரே இருட்டு! ஏதோ பறவைகள் கத்தும் ஒலி! தூரத்தில் தெரியும் மின்விளக்குகள்! வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் இதை தவிர வேறோன்றும் இல்லை!
  சித்தப்பா சென்ற சில மணி நேரங்கள் உறக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனான். சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணி இருக்கும் அவனது காலை பிடித்து யாரோ இழுத்தார்கள்!
  யா.. யாரு! ஏன் இழுக்கறே! என் காலை விடு! கத்தி காலை உதற முயற்சித்தான்.முடியவில்லை!
கண்களை திறக்க முடியவில்லை! காலை உதறமுடியவில்லை! வாயில் பேச்சு எழவில்லை! ஐயோ சித்தப்பா காப்பாத்துங்க! கத்தினான்! காற்றுதான் வந்தது!
                                     மிரட்டும்(15)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. நன்றாகவே மிரட்டுகிறது...

  ReplyDelete
 2. நல்லா தான் கதையை எழுதி இருக்கீங்க......பாராட்டுக்கள்....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 3. சார் பயங்கரம், நீங்க இந்த தொடரில் எழுதியதை எல்லாம் சினிமாகாரங்க சுட்டிருக்காங்களே அதை நீங்க கண்டுக்கவே இல்லையா ?

  ரத்தினசபாபதி
  உதவி இயக்குனர்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2