நான் சந்தித்த புயல்கள்!
நான் சந்தித்த புயல்கள்!
கடந்த இரண்டு நாட்களாக ஒரே
புயல் பற்றிய பேச்சுத்தான். சென்னையை தாக்க போகிறது. கல்பாக்கத்திற்கு பாதிப்பு வருமா
என்று ஒரே அலசல்கள். தானே புயல் ஆடிய தாண்டவத்தின் பாதிப்பினால் அரசும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகி
நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. ஆனால் என்னை பொறுத்தவரை இந்த புயல் ஒன்றும் பெரிது
இல்லை!
இந்த 38 வயதில் இதைவிட பெரிய புயல்களை நான் சந்தித்து
இருக்கிறேன். அந்த புயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த புயல் வெறும் குட்டிப்புயல்தான்.
இதற்குத்தான் இத்தனை பம்மாத்தா? என்று சிந்திக்க வைத்தாலும் கூட நேற்றுமாலை வீசிய காற்றும்
மரங்கள் ஆடிய பேயாட்டமும் கொஞ்சம் பயமுறுத்தியே வைத்தன.
எது எப்படியோ மின் பற்றாக்குறை நிலவும் இந்த சமயத்தில்
இந்த புயலினால் பல மாவட்டங்களில் குறைந்தது 20 முதல் 30 மணி நேரங்கள் தொடர்ச்சியாக
மின் தடை. ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டாலே அரசையும்
மின் வாரியத்தையும் திட்டித் தீர்க்கும் மக்கள் இரண்டு நாட்களாக வாயே திறக்க வில்லை!
யாரைக் கேட்டாலும் புயல் மழை அடிக்குதுல்ல! அவங்களும்
பாவம் என்ன செய்வாங்க? வயரையெல்லாம் கட்டி போஸ்டுங்க்களை நிமித்தி கரண்ட் விடனும்ல!
நேரம் ஆகத்தான் செய்யும் என்று ஆதரவான பேச்சையே பேசினார்கள். பல கிராமங்கள் குடிநீர்
இன்றி தவித்த போதும் மின்சாரத்தை குறை கூறவில்லை.
அரசாங்கத்தின் நடவடிக்கையும் சொல்லி கொள்வது போல
சிறப்பாகவே இருந்தது. என்ன ஒன்று வழக்கம் போல காற்றுக்கு மரங்கள் இரையாகின. முறையாக
கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி பாதுகாத்து இருந்தால் பல மரங்களை காப்பாற்றி இருக்கலாம்.
அதை தவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாவிட்டாலும் பாராட்டும் படித் தான்
இருந்தன.
சரி நான் சந்தித்த புயல்களை பார்ப்போமா? அப்போது
எனக்கு பதினோறு வயது அல்லது 12 இருக்கும் ஆண்டு 1984 அல்லது 1985 ஆக இருக்கும் என்று
நினைக்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு புயல் ஒரு
வாரம் வீசியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்து புயலாக மாறிய அது தமிழ்
நாட்டில் கரையேற வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அந்த புயல் காற்றால் தமிழகமெங்கும்
நல்ல மழை. வீடுகள் இடிந்தன. நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அப்போது எங்கள் வீடும் ஒரு பகுதி
இடிந்து போய் இருநூற்று ஐம்பது ரூபாய் நிவாரணம் கிடைத்தது. அதில் பத்தோ இருபதோ லஞ்சம்
போக மீதி பணத்தில் கொஞ்ச நாள் ஜீவனம் செய்தோம். அப்படி ஒரு கஷ்ட காலம் அது.
அந்த புயலின் போது நான் ஆசான பூதூரில் தாத்தா
வீட்டில் தங்கி படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் மாலைப் பொழுதில் பள்ளியில் இருந்த
சமயம் மழை பிடித்துக் கொள்ள வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் காலையிலும்
மழை தொடர்ந்தது. இருந்தாலும் என் மாமா விட வில்லை. பள்ளிக்கு கிளம்பு என்று அனுப்பி
விட்டார்கள். அப்போது இப்போது இருப்பது போல
ரெயின் கோட் குடை எல்லாம் வாங்கும் வசதி குறைவு மழையில் இருந்து காத்துக் கொள்ள பனை
ஓலையால் முடையப் பட்ட ஜம்மாங்க் கொடை என்று ஒன்று இருக்கும் அதைக் கொடுத்து பள்ளிக்கு
கிளம்ப சொன்னார்கள்.
புத்தக
சுமையை தோளில் சுமந்து அந்த ஜம்மாங்குடையை போர்த்திக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.
அதுவே மிக கனமாக இருக்கும். என்னோடு சில நண்பர்கள் அதே மாதிரி ஜம்மாங்கொடையோடு பள்ளிக்கு
வந்தார்கள். ஆசான பூதூரிலிருந்து வயல் வரப்பின் ஊடே பெரும்பேடு வரவேண்டும் அங்குதான் நான் படித்த பள்ளி
இருந்தது. வழியில் ஏரியும் மடுவும் உண்டு. மழையால் வயல்கள் முழுகி குளமாய் காட்சி தர
அதில் நடந்து பள்ளிக்கு வந்தேன். பள்ளியும் செயல் பட்டது. மதியத்திற்கு மேல் மழை வலுக்கவும்
லீவ் விட்டு விட அதே ஜம்மாங்குடை போர்த்திக் கொண்டு வீடு வந்தோம்.
அதற்கு பின்னர் மழைக்கு ஓய்வே இல்லை விடாமல் கொட்டித்தீர்த்தது.
ஆசானபூதூரில் எங்கள் வீடு ஓட்டு வீடு மிக நீளமாக இருந்தாலும் மழைக்கு எல்லா இடங்களிலும்
ஒழுகி வீடே நீராக காட்சி அளித்தது. கயிற்று கட்டில் களில் அமர்ந்து உணவுகளை உண்டோம்
ஈரவிறகில் அடுப்பு ஊதி சுவையாக சமைத்து கொடுப்பார் எங்கள் பாட்டி. மழைவிடாமல் பொழிய இப்போது போல கரண்ட் வசதியும் அப்போது
எங்களுக்கு இல்லை.
இருக்கும் ஒரே ரேடியோவில் அரை மணிக்கொரு தரம்
வானிலை அறிக்கை கேட்பார் எங்கள் மாமா. அக்கம்
பக்கத்து வீட்டினரும் எங்கள் வீட்டில் வந்துதான் புயல் பற்றி விபரம் அறிந்து செல்வர்.
விடாமல் பெய்த மழையில் அந்த ஊர் ஏரி நிரம்பி உடைந்து விட்டது. பக்கத்து ஊர் பெரும்பேடு
ஏரியும் உடைந்து போக வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து தடைப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக்காக
பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஊருக்கு
அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. கோவிலில் இருந்த வில்வ மரம் சாய்ந்து விட்டது. குளம்
நிரம்பி வழிந்தது. அன்றைய இரவை நாங்கள் கோயிலில் கழிக்க வேண்டி இருந்தது. எப்படியோ
நான்கு நாட்கள் விடாமல் கொட்டித் தீர்த்த மழை கொஞ்சம் தணியவும் வி. ஏ. ஓ வந்து ஊரை பார்வையிட்டு நிவாரணங்களுக்கு எழுதிச் சென்றார்.
மாமாவும் பொன்னேரி சென்று வீட்டுக்குத் தேவையான
பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். போய் வந்த அவர் கூறிய செய்திகள் எங்களுக்கு மிகவும் ஆர்வத்தை ஊட்டின. ஏரி உடைந்து பாதை அறுபட்டு கிடந்ததால் போக்குவரத்திற்கு வழியில்
கம்பு நட்டு அதை பிடித்தபடி பாதுகாப்பாக போய் வந்ததாக கூறினார். எப்படியோ ஒரு வாரம்
ஸ்கூல் போகாமல் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு
விளையாடி அந்த புயலை சமாளித்தோம்.
இதற்கடுத்த புயல் நான் நத்தம்
வந்த பின் 87-88ல் வீசியதாக நினைவு. இப்போதும் எங்கள் வீட்டு சுவர்
ஒன்று இடிந்து விழுந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கொட்டிய மழையில் எங்கள்
ஊர் ஏரி நிரம்பி வழிய உடைத்துக் கொண்டது. அந்த ஏரியை ஆக்ரமித்து விவசாயம் செய்த பக்கத்து
ஊர்க்காரர்கள் வெட்டி விட்டார்கள்.
அந்த ஏரியின் ஓடை எங்கள் வீட்டுக்கு எதிரில் தான்
செல்லும் அப்போது 8ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன். ஓடை நிலங்களாக
மாறிவிட்டிருக்க வெள்ளம் புரண்டு ஓட பயிர்கள் முழுகின. வீட்டைச் சுற்றி தண்ணீர்.
இங்கு எனது தந்தை ரேடியோவில் வானிலை அறிக்கை கேட்டு
புயலைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டு திண்ணையில் அவரது நண்பர்கள்
கூடுவார்கள். அவர்களோடு அரட்டை ஓடும் தண்ணீரில்
விளையாட்டு. பரமபதம் விளையாடல் என அந்த மழை நாட்கள் கடந்து போனது. ஊரையே வெள்ளம் சூழ்ந்து
கொண்டது . எல்லையம்மன் சிலை என்று ஒரு நடுகல் எங்கள் தெருவில் இருக்கும் அந்த சிலை
முக்கால் பாகம் முழுங்கி விட்டது. அந்த சிலை முழுகினால் ஊரே முழுகிவிடும் என்று ஒரே
புரளி. விடாமல் இன்னும் ஒரு நாள் பெய்தால்
ஊரே அடித்து சென்று விடும் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அன்றைய இரவே மழை நின்றது.
ஊரே பெரு மூச்சு விட்டது. ஓடையை ஆக்ரமித்து பயிர் செய்த ஒருவர் பயிர் முழுகிவிட்டதே
என்று தற்கொலை செய்து கொண்டார்.
விளையாட்டு பிள்ளைகளாக திரிந்த நாங்கள் பயிர்
முழுகி கிடக்கிறதே என்று வருந்தாமல் அந்த ஓடையில் குளித்து மகிழ்ந்தோம். பலநாட்கள்
ஓடையில் தண்ணீர் செல்லும். அதில் துணி துவைத்துக் கொள்வார்கள் பெரியவர்கள். அந்த ஓடை எங்கள் ஊருக்கு வரும் வழியில் ஆமைப்பள்ளம்
என்னுமிடத்தில் சாலையை கடக்கும். மழை வெள்ளம் வந்தால் அந்த சாலையில் குறைந்தது பத்து
நாட்கள் தண்ணீர் தேங்கும். நல்ல மழையில் தொடையளவு
நீர் வரும்.
மழைவிட்டபின் முழங்காலளவு தண்ணீர் இருக்கும். அந்த
தண்ணீரில் இறங்கி நடந்து பள்ளிக்கு செல்வதில் ஒரு குஷி. வண்டிகளையும் டிராக்டர். சைக்கிள்
போன்றவைகளை இங்கு கொண்டு வந்து கழுவுவார்கள். எப்படியும் ஐப்பசி கார்த்திகையில் அதிக
நாட்கள் மழை பொழிவதால் இந்த மாதங்களில் இந்த ஓடையும் வெள்ளமும் ஒரு மாதத்திற்கு இருக்கும்.
இந்த ஓடையில் விளையாடுவதற்கு எனவே பிள்ளைகள் பள்ளிக்கு
வருவார்கள் பள்ளி விட்டதும் விளையாடி முடித்து நிதானமாக வீடு வருவர். சிலர் இந்த ஓடையில்
வலை விரித்து மீன் பிடிப்பர்.
இப்படி இரண்டு மூன்று நாட்கள் விடாது பெய்து ஓடை நிரப்பிய இன்னொரு மழை அம்மாவின் ஆட்சியில்
இரண்டாவது முறை ஆட்சியில் 2005ல் பெய்தது.
அப்போது இதே போல் வெள்ளம் வர நிவாரணமாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இதை வாங்க
முண்டியடித்து சிலர் இறந்தும் போனார்கள். அந்த
வெள்ளத்தின் போதும் இப்படி ஏரி குளங்கள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்து பாதித்தது.
அதற்கப்புறம் அந்த அளவிற்கு மழையும் பொழிய வில்லை புயலும் வீசவில்லை!
ஏனெனில் எங்கள் ஊரில் வெள்ளம்
பெருக்கெடுக்கவில்லை! ஆமைப்பள்ளம் நிரம்ப வில்லை!
சுவையான நினைவுகளை கிளறிய
நீலம் புயலுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன்!
மலரும் நினைவுகள் .
ReplyDeleteபசுமையான நினைவுகள் என்று சொன்னாலும், புயலின் கோரம் புரிகிறது
ReplyDeleteநினைவுகளை அழகாக
ReplyDeleteநேரடியாகப் பார்ப்பது போல்
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நான் சந்தித்த புயல்களையும் நினைவு கூர வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteநான் முதன் முதலாக கண்ட புயில் இது தான் சென்னையில் தங்கள் பதிவில்
ReplyDeleteஇன்னும் விளக்கமாக புரிந்தேன்
ஒரு படம் பார்த்ததுபோல் இருந்தது.. அனுபவங்களை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. காட்சிகள் கண்முன் நின்றது... ஒவ்வொரு பத்திக்கும் ஒரு வாக்கிய இடைவெளி விடப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் நண்பரே..
ReplyDelete