சங்கடங்கள் போக்கி பிள்ளை வரமருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்.



சங்கடங்கள் போக்கி பிள்ளை வரமருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்.



நம் இந்து தர்மத்திலே எண்ணற்ற விரதங்களும் பூஜைகளும் உண்டு.  எண்ணற்ற தெய்வங்களும் எண்ணற்ற விரதங்களும் இருந்தாலும் முழு முதல் கடவுளாம் முக்கண் கணபதிக்கு வழிபடும் விரதங்களில் இரண்டு முக்கியமானவை அதில் ஒன்று சுக்கில சதுர்த்தி விரதம். மற்றொன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்.
   நம்முடைய சங்கடங்களை நீக்கும் இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி(தேய்பிறைசதுர்த்தி) அன்று வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து  கணபதியை தொழுவோரின் கஷ்டங்கள் பனிபோல விலகும் என்பது நம்பிக்கை.
  விநாயகர் எளிமையான கடவுள், எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பத்திரங்களாலும் பூக்களாலும் அர்ச்சித்தாலும் ஏற்றுக் கொள்ள கூடியவர். வெல்லம், கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்ற பொருட்களை நிவேதனம் செய்ய மகிழ்வார். அத்தகைய கடவுளுக்கு மனம் குளிர விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறது விநாயக புராணம்.
   காவிரி நதி தீரத்தில் சகல சம்பத்துக்களும் நிறைந்த பட்டினத்தை ஆண்டு வந்த கிருத வீரியன் என்ற மன்னனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. இதனால் அவன் காட்டிற்கு சென்று கடும் தவம் மேற்கொண்டான்.கிருத வீரியனின் தந்தை தன் மகனுக்கு எதனால் பிள்ளையில்லை என்று பிரம்ம தேவனிடம் கேட்டார். அப்போது பிரும்ம தேவர்., கிருத வீரியன் முற்பிறவியில் சாம்பன் என்ற அந்தணர் வம்சத்தில் பிறந்தான்.அவனுக்கு கணேசன் என்ற மகனும் இருந்தான்.
   துன்பம் அவர்களை பீடிக்கவே வறுமையில் வாடினர். பலநாள் உணவின்றி கஷ்டப்பட்டனர். வறுமை அவர்களை வாட்டி எடுத்தது.ஒரு வேளை ஆகாரத்திற்கும் வழி இல்லாமல் போகவே சாம்பன் காட்டிற்கு சென்று வழிப்பறி செய்ய முடிவெடுத்தான். அப்போது காட்டில் பன்னிரெண்டு அந்தணர்கள் சென்று கொண்டிருந்தனர். சாம்பன் அவர்களை மடக்கி அவர்களை கொன்று அவர்கள் வைத்திருந்த பொருட்களை கவர்ந்து கொண்டு இல்லம் வந்தான்.  வீடு உட்புறம் தாழிட்டு இருக்கவே தன் மகனை மூன்று தரம் கணேசா! கணேசா! கணேசா! என்று குரல் கொடுத்து அழைத்தான். பதில் வராது போகவே கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.
   ஆனால் ஐயோ! பாவம் பலநாள் பசிக் கொடுமையினால் அவனது மகன் கணேசன் உயிர் பிரிந்து போயிருந்தது. இதைக்கண்ட சாம்பன்  இரவு முழுதும் மகன் மீது விழுந்து அழுது அவனும் இறந்தான். அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்கும் நாள். முதல் நாள் முழுவதும் அன்ன ஆகாரம் இன்றி அன்றைய தினம் உயிரை விட்டமையால் கணேசனை விண்ணுலகம் அழைத்துச் செல்ல விமானம் வந்தது. அவன் சொர்க லோகத்தை அடைந்தான். அன்றைய தினமே சாம்பனும் இறந்திருந்தாலும்  அந்தணர்களை கொன்ற ப்ரும்ம ஹத்தி சாம்பனை பீடித்துக் கொண்டது. இருப்பினும் சங்கட சதுர்த்தி அன்று மகனை கணேசா என்று மூன்று முறை அழைத்தமையால் அவனுக்கு இப்பிறவியில் அரசனாக பிறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    ஆனாலும் பிரும்ம ஹத்தி தோஷம்  தொடர்வதால் பிள்ளை பிறக்காமல் இருக்கிறது. அந்த தோஷம் நீங்க சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நிவர்த்தி ஆகி பிள்ளை பிறக்கும் என்று சொன்னார் ப்ரம்மா.

கிருத வீரியனும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிள்ளைப் பேறு பெற்றான்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறை:
மாசி மாதம் அமர பட்சத்தில்( தேய்பிறை) செவ்வாய்க் கிழமையுடன் கூடிய சதுர்த்தியில் இவ்விரதத்தை  தொடங்குவது சிறப்பு. செவ்வாய்க்கிழமையில் விரத நாள் வராமல் போகக் கூடும் எனவே மாசி மாத சங்கட ஹர சதுர்த்தியில் விரதம்  தொடங்கி ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விநாயகரை தியானித்து அவருடைய மந்திரங்களை உச்சரித்து ஜபித்து வர வேண்டும். அன்று உணவருந்த கூடாது. காலை முதல் இரவு சந்திரன் உதிக்கும் வரை உபவாசம் இருக்க வேண்டும். சந்திரன் உதித்ததும் முதலில் கணபதியையும் பின்னர் சந்திரனையும் பூஜித்து. சில அந்தணர்களுக்கு அன்னமிட்டு பின்னர் உணவருந்த வேண்டும். அன்று இரவு விழித்திருந்து கணேச புராணங்களை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வருடம் அதாவது அடுத்த மாசி மாதம் வரை இவ்விரதத்தை கடைபிடிப்பவருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இதே விரதத்தை வன்னி மரத்தடியில் இருந்து அனுஷ்டித்தால் கூன் குருடு முதலிய குறைபாடுகள் நீங்கும்
    இவ்வாறு புராணத்தில் உள்ளது.
இன்றையகாலகட்டத்தில் இவ்வாறு அனுஷ்டிக்க முடியாவிட்டாலும் சங்கட ஹர சதுர்த்தியன்று காலை முதல் இரவு சந்திரன் உதிக்கும் வரை உபவாசம் இருந்து அன்றைய தினம் விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி விரதத்தை முடிக்கலாம்.
 அவ்வாறு முழு விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் அன்று ஒரு வேளை மட்டும் குறைந்த உணவு சிற்றுண்டி  எடுத்துக் கொண்டு விநாயகர் வழிபாடு செய்து விரதத்தினை நிறைவு செய்யலாம்.
இது எதுவுமே முடியாதவர்கள் அன்றைய தினத்தில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று விநாயகரை தரிசித்தாவது வரலாம்.
இந்த பிறவி என்பது ஒரு பெருங்கடல் ! அதை நீந்தி கடக்க இறைவன் உதவி தேவை என்பது பல ஆன்றோர்கள் அனுபவத்தில் அறிந்து சொன்ன விசயம். இத்தகைய பிறவியாகிய இந்த மனுஷப் பிறவியை இறைவன் என்னும் படகில் பக்தி துடுப்பு கொண்டு கரை சேர்வோம்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்போம்! சங்கடங்கள் தவிர்ப்போம்!

Comments

  1. விளக்கமான சிறப்பு பகிர்வு....

    நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2