விவேகன் பெற்ற வாழ்வு! பாப்பா மலர்
விவேகன் பெற்ற வாழ்வு!
பாப்பா மலர்
சோமநாதபுரம் என்ற நாட்டில்
விவேகன் என்ற வாலிபன் வசித்து வந்தான், விவேகன் புத்திசாலி. கருணை உள்ளமும் வீரநெஞ்சினையும்
உடையவன். எதையும் ஆலோசனை செய்து முடிப்பவன். முடியாது என்று நினைக்காது முயற்சி செய்பவன்.
ஒரு சமயம் சோமநாத புரத்தில் அரக்கன் ஒருவன் புகுந்தான்.
அவன் ஆடு மாடுகளை கொன்று தின்றதோடு அல்லாமல் மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்தான். நாளுக்கு
நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகரித்தது. இரவில் தினமும் மக்கள் அந்த அரக்கனால் விழுங்கப்பட்டார்கள்.
அவனை கொல்ல மன்னர் பூபேந்திர வர்மன் எவ்வளவோ படைகளை அனுப்பியும் எதுவும் செய்ய முடியவில்லை!
அனைத்து படைகளையும் முறியடித்து அவர்களை அரக்கன் கொன்று தின்றுவிட்டான்.
இறுதியாக அரசர் ஒரு முடிவினை எடுத்தார். அதன்
படி அவர் அரசவையை கூட்டினார். அரசவையில் மன்னர் பூபேந்திர வர்மன் அவையோரே அந்த அரக்கனை
பல படைகள் அனுப்பியும் கொல்லவோ பிடிக்கவோ முடியவில்லை! நாளுக்கு நாள் மக்கள் படும்
துன்பம் வேதனை தருகிறது. எனவே நானே அந்த அரக்கனுடன் நேருக்கு நேர் மோத உள்ளேன் இதைப்பற்றி
தங்கள் கருத்துக்கள் யாது? குடிமக்களை காக்க முடியாது உயிர் வாழ்வதை விட அரக்கனை எதிர்த்து
வெல்வது அல்லது வீர மரணம் அடைவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்றார்.
அப்போது மந்திரி அறிவுடைநம்பி எழுந்தார். அரசே! தங்கள்
கருத்தில் நியாயம் இருந்தாலும், அதை ஏற்க கூடிய நிலையில் நாங்கள் இல்லை! அரக்கன் வலிமையுள்ளவனாக
இருக்கிறான். அவனை போரில் வெல்ல முடியாது. ஏதாவது உபாயத்தால்தான் வெல்ல முடியும். எனவே
வீணாக தாங்கள் சென்று போருக்கு அழைத்து உயிரிழப்பது அனாவசியமானது. எங்களுக்கு நாடாளும்
மன்னன் முக்கியம். அதே சமயம் பிரஜைகளை காப்பதும் உங்கள் கடமைதான். ஒன்று செய்யலாம்.
நம் ஊரில் விவேகன் என்ற வாலிபன் உள்ளான். அவனிடம் அரக்கனை அழிக்கும் வேலையை ஒப்படைக்கலாம்.
அவன் அதி புத்தி சாலி! வீரனும் கூட
அப்படியா! அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்! அப்படி
அவன் அரக்கனை அழித்தால் விலைமதிக்க முடியாத என் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து
மருமகன் ஆக்கிக் கொள்கிறேன் என்றார் அரசர்.விவேகன் அரசவைக்கு அழைக்கப்பட்டான். அரசர்
அவனிடம் அரக்கனை அழிக்கும் வேலையை ஆரம்பிக்க சொன்னார்.
விவேகன், மன்னா! தாங்கள் அளித்த இந்த வேலையை வெற்றியுடன்
முடிக்க காத்திருக்கிறேன்! எதிரியின் பலம் அறிந்து அவனுடன் மோத வேண்டும். அரக்கனை உபாயத்தால்தான்
வெல்ல வேண்டும். அவன் பலம் மிக்கவன். எனவே எனக்கு போதுமான கால அவகாசம் தர வேண்டும்.
குறைந்தது ஒருமாதகாலம் அவகாசம் தந்தால் இந்த வேலையை முடித்து தருகிறேன் என்றான். அரசனும்
சம்மதித்தான்.
முழுமுதற்கடவுளை வணங்கி புறப்பட்டான் விவேகன்.
அரக்கன் இருக்குமிடம் அவனுக்கு தெரியாது! எனவே விநாயகப் பெருமானே நீதான் அரக்கன் வசிக்குமிடத்தை
காண்பிக்க வேண்டும். அத்துடன் அவனை அழிக்கும் உபாயத்தையும் சொல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
அப்போது வாலிப வீரனே என்ற குரல் அவனை அழைத்தது.
யார்? யார் பேசியது சுற்றும் முற்றும் நோக்கினான்
விவேகன். அப்போது அந்த கோயிலில் இருந்த ஒரு தேரை அவன் முன் நின்று நான் தான் பேசினேன்
நண்பா! என்றது. விவேகன் ஆச்சர்யத்துடன், தேரையே நீ எப்படி பேசுகிறாய்? ஆச்சர்யமாக இருக்கிறதே
என்று வினவினான்.
அந்த தேரையுடன் மற்றொரு தேரையும் அங்கு வந்தது.
விவேகா! நாங்கள் ஒரு சாபத்தால் தேரைகளாக இருக்கிறோம்.நாங்கள் கந்தர்வர்கள் ஒரு முனிவர்
தவமிருக்கும் சமயம் ஓடியாடி அவர் மீது குதித்ததால் கோபம் அடைந்த அவர் எங்களை தேரைகளாக
போகும்படி சபித்து விட்டார். அந்த அரக்கனை அழிக்கும் உபாயம் எங்களுக்குத்தெரியும் நீ
எங்களுக்கு உதவி செய்தாய் என்றால் நான் உனக்கு அந்த உபாயத்தை கூறுகிறேன் என்றன.
விவேகனும்,
அன்பான தேரைகளே! அரக்கனை அழிப்பது என் லட்சியம்! அதற்கு உதவும் தங்களுக்கு கட்டாயம்
நான் உதவுவேன்! உங்களுக்கு என்ன உதவி வேண்டும் தயங்காமல் கேளுங்கள் என்றான்.
இளைஞா! ஒரு ரிஷியின் சாபத்தால் தேரைகளான எங்களுக்கு
விமோசனம் சித்தர் மலையில் உள்ள சுனையில் உள்ள நீரில் மூழ்க வேண்டும் அப்படி மூழ்கினால்
நாங்கள் பழையபடி கந்தர்வர்கள் ஆகிவிடுவோம். ஆனால் சித்தர் மலை சுனைக்கு செல்லும் வழியில்
ஒரு பெரிய மலைப்பாம்பு உள்ளது. அது எங்களை விழுங்கி விடும், எனவே எங்களால் அங்கு செல்ல
முடிய வில்லை! நீ எங்களை அங்கு அழைத்துச் சென்று சுனையில் விட வேண்டும். நாங்கள் சுய
உரு அடைந்ததும் அரக்கனை அழிக்கும் உபாயம் கூறுகிறோம் என்றன.
விவேகன் அப்படியே ஆகட்டும்! அந்த பாம்பிடம் இருந்து
உங்களை காத்து சுனையில் விடுகிறேன்! நீங்கள் இருவரும் இந்த கூடையில் அமர்ந்து கொள்ளுங்கள்
என்று ஒரு கூடையில் இருவரையும் எடுத்துக்கொண்டு சித்தர் மலை நோக்கிச் சென்றான். மூன்று
பகலும் இரவும் நடந்து சென்ற அவன் இறுதியில் சித்தர் மலையை கண்டான். மூலிகை செடிகள்
மரங்கள் நிறைந்து அடர்த்தியாக காணப்பட்ட அந்த மலையில் அவன் ஏறும் சமயம் அந்த பாம்பு
வழி மறித்தது.
கூடையை ஓரமாக வைத்துவிட்டு பாம்புடன் பயங்கரமாக
சண்டையிட்டான் விவேகன். மலைப்பாம்பு ஆதலால் அது விவேகனை பிடித்து சுருட்டி முழுங்க
நினைக்க விவேகன் தன்னுடைய குறுவாளால் குத்தி தப்பிக்க முயன்று கொண்டிருந்தான். இருவருக்குமான
போராட்டம் சில மணி நேரம் நீடிக்கையில் அந்த பாம்பு பேசியது. விவேகா! நீ ஏன் வீணாக உயிரை
விடப் போகிறாய்! நீ கொண்டு வந்திருக்கும் அந்த தேரைகளை எனக்கு உணவாக்கி விடு! நான்
உனக்கு வழி விடுகிறேன். சித்தர் மலை சுனையில் நீராடினால் உனக்கு அற்புத சக்தி கிடைக்கும்
அரக்கனை எளிதில் வென்று விடுவாய் என்றது.
விவேகன் , ஏ மலைப்பாம்பே! நான் சொன்ன சொல் தவறமாட்டேன்.
இந்த தேரைகளை சுனை நீரில் விடுவதாக வாக்களித்துள்ளேன்! நான் உனக்கு உணவாகிறேன்! இந்த
தேரைகளின் சாபம் நிவர்த்தியாக அவைகளை நீரில் மூழ்க விடு! என்றான்.
அப்படியா! அப்படியானால் உன் அரக்கனின் கொல்லும்
சபதம் என்னவாயிற்று? என்று ஏளனமாக கேட்டது பாம்பு.
அரக்கனை கொல்வதற்குத் தான் வந்தேன்! வழியில் இவர்களுக்கு
வாக்கு கொடுத்து விட்டேன்.அதை மீற முடியாது. நீ மனது வைத்தால் இரண்டையும் முடிக்கலாம்
என்றான் விவேகன்.
என்ன சொல்கிறாய்?
நீ வழி விட்டால் இவர்களுடன்
நானும் சென்று சுனையில் நீராடி சக்தி பெற்று அரக்கனை அழித்து விட்டு வந்து உனக்கு உணவாகிறேன்.
என்றான் விவேகன்.
நீ ஏமாற்ற மாட்டாய் என்பது
என்ன நிச்சயம்?
என் தாயின் மீது சத்தியம்
செய்கிறேன்! நீ மட்டும் வழிவிடு என் நாட்டு மக்களை காக்க எனக்கு ஒரு உதவியை செய்! கண்டிப்பாக
நான் திரும்பி வருவேன் என்றான்.
பாம்பும் அவனது தீரமான
பேச்சை கேட்டு மகிழ்ந்து சரி! உன்னை நம்புகிறேன் சென்று வா! என்று வழி விட்டது. விவேகன்
தேரைகளுடன் சென்று சுனையில் நீராடினான். மறுநிமிடம் புத்துணர்ச்சியை பெற்றான்.இரு கந்தர்வர்கள்
அவன் முன் தோன்றி! விவேகா உன்னால் சாப விமோசனம் அடைந்தோம்! உன் நாட்டை துன்புறுத்தும்
அரக்கன் உங்கள் நாட்டிற்கு வடதிசையில் இருக்கும் ஒரு குகையில் மறைந்து இருக்கிறான்.இதோ
புனித வாள் இதை எடுத்து சென்று அரக்கனோடு போராடு! அவன் பலம் இரவில்தான்.பகலில் அவனை
போருக்கு அழை! அவனை அழைக்கும் போது நீ அருவம் ஆகி விடுவாய்! அவனால் உன்னை காணமுடியாது.
அவன் திணறும் சமயம் அவனை வெட்டி வீழ்த்து என்று ஆசி வழங்கி சென்றனர்.
விவேகன் அங்கிருந்து கிளம்பி அரக்கன் வாழும் குகையை
அடைந்தான். பகல் சமயம் ஆதலால் அரக்கன் உறங்கிக் கொண்டிருந்தான். அரக்கனை அழைத்தான்
விவேகன். ஏய் அரக்கா! வெளியே வா! அப்பாவி மக்களை கொல்லும் அரக்கா! வா! வந்து என்னோடு
போரிடு என்றான்.
அரக்கன் எரிச்சல் அடைந்தான்! எழுந்து வெளியே வந்தான்!
யாரும் அவன் கண்களுக்குத் தென்படவில்லை! யார்! யார் அறைகூவல் விட்டது என் கண் முன்னே
வா! என்று கத்தினான்.
டேய்! அரக்கா! நான் இருப்பது
உன் கண்களுக்குத் தெரிய வில்லையா! இதோ இதோ! இங்கிருக்கிறேன்! என்று விவேகன் கூற குரல் வந்த திசையில் திரும்பினான் அரக்கன்!
அங்கே யாரும் தென்படவில்லை! இதோ இங்கிருக்கிறேன்! என்று விவேகன் மறுபுறம் அழைக்க! அரக்கன்
குழம்பினான்.
டேய் மாயாவி! மரியாதையாக என் கண்முன்னால் வந்து
விடு! உன்னை கொன்று விடுவேன் என்று உறுமினான் அரக்கன்!
முடிந்தால் என்னை கொல் பார்க்கலாம்! குரல் வந்த
திசை நோக்கி அரக்கன் திரும்பவும் ஒரு வாள் அங்கே தென்பட அதை தன் வாளால் தட்ட முயன்றான்
அரக்கன்! ஆனால் அரக்கனின் வாளை ஒரே வீச்சில் வீழ்த்திய விவேகன் அரக்கனை அடுத்த வீச்சில்
வீழ்த்தினான்!
அரக்கன் மறைந்த செய்தியை அரசனிடம் கூறினான். அரசர்
தன் மகளை மணமுடித்து தருவதாக கூறினார். மன்னா! மன்னிக்க வேண்டும் அரக்கனை அழிக்கும்
பொருட்டு ஒரு பாம்புக்கு இரையாவதாக கூறிவிட்டேன்! வாக்கை காப்பாற்ற வேண்டும் தங்கள்
மகளை மணக்க இயலாது என்றான் விவேகன்.
ஆனால் அரசமகளோ! விவேகனைத்தான் மணப்பேன்! அவருக்கு
அவர் வாக்கு எப்படி முக்கியமோ அதே போல் உங்கள் வாக்கு எனக்கு முக்கியம்! உங்கள் வாக்கை
நிறைவேற்றுங்கள் அவரோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும் என்றாள் மன்னரிடம்.
திருமணம் முடிந்ததும் பாம்பிடம்
சென்றான் விவேகன். உடன் இளவரசியும் சென்றாள்.
பாம்பே! உன் இரை வந்து விட்டேன்! என் வாக்கை காப்பாற்றி விட்டேன் என்றான் விவேகன்.
விவேக சுயநலம் அற்ற உன் வீரத்தையும் இளவரசியின்
தியாகத்தையும் நினைத்து பெருமைப்படுகிறேன்! நானும் ஒரு சாபத்தால்தான் இப்படிப் பாம்பாக இருக்கிறேன்!
சுயநலம் அற்ற ஒருவன் என் கண்ணில் படும் சமயம் நான் பழையபடி தேவனாகி விடுவேன். என்று
சொன்னதும் தாமதம் அந்த பாம்பு அழகிய கந்தர்வ வடிவம் பெற்றது.
விவேகா! நீயும் இளவரசியும் தன்னலமற்றவர்கள்! நீங்கள்
பல்லாண்டு சிறப்பாக வாழுங்கள்! என்று வாழ்த்திவிட்டு மறைந்தான் கந்தர்வன்.
அதன்பின் நாட்டிற்கு சென்ற
விவேகனும் இளவரசியும் சிறப்பாக பல்லாண்டு வாழ்ந்தனர்!
நல்ல கதை... நன்றி...
ReplyDeleteகுழந்தைகளுக்கேற்ற கதை.எங்க நிலாவுக்குச் சொல்றேன்.நன்றி சுரேஷ் !
ReplyDeleteநல்ல கதை... நன்றி
ReplyDelete