தீபாவளி! சில தகவல்கள்!


தீபாவளி! சில தகவல்கள்!

நரக சதுர்தசியன்று லஷ்மி கங்கை நீரிலும் எண்ணெயிலும் இருப்பாள். கங்கை இல்லாத ஊர்களில் எந்த இடத்தில் எண்ணெய் தேய்த்து அன்று நீராடினாலும் கங்கா ஸ்நானம் செய்த புண்ணியம் வருகிறது என்று துலா மகாத்மியம் கூறுகிறது.
  தீபாவளி ஸ்நானம் அருணோதய காலத்தில் பண்ண வேண்டும். சூரியன் அடி வானத்தில் தெரிவதற்கு ஒரு முகூர்த்த காலத்துக்கு முந்தியே சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத்தான் அருணோதய காலம் என்பது.
  ஒரு மூகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம். தீபாவளி அன்று சூரியோதயத்திற்கு ஒரு முகூர்த்தத்திற்கு முந்தியே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். விடிவதற்கு முன் எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராத்திரி இரண்டுமணி,  மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வது தவறு.
    ஐப்பசி மாதத்து திரயோதசி, சதுர்தசி, அமாவாசை, சுக்கில பிரதமை ஆகிய நான்கு நாட்கள் தீபாவளியோடு தொடர்புடையது. அமாவாசையும் பிரதமையும் முக்கியமாக கொண்டு வடநாட்டாரும். திரயோதசியும் சதுர்தசியையும் முதன்மையாக கொண்டு தென்னகத்தாரும் தீபாவளி கொண்டாடுவர்.
  அஞ்ஞானத்தின் வடிவான நரகாசூரனை திருமால் அழித்ததால் நரகசதுர்தசி அன்று தீபாவளி ஆயிற்று என்பது புராண வரலாறு.
 பிரகலாதனுடைய பேரன் மகாபலி முடிசூட்டிய நாளே தீபாவளி என்றும் அந்தாளில் ஒளியூட்டப்பெறும் தீபமே யமதீபம் என்றும் வாமண புராணம் கூறுகிறது.
  குப்த அரசர்களுள் சிறந்த சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரியணை ஏறிய நாளும் தீபாவளியே! விக்ரம சகாப்தம் தீபாவளியில் தொடங்குகிறது.
ஜைனப் பெருந்தலைவர் வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம் என்னும் வீடு பேறு அடைந்த நாளும் இதுவே!
 சீக்கிய குருநானக் பூதவுடல் துறந்ததும் குரு கோவிந்தர் முகமதியருக்கு எதிராக போர் புரிய கல்சா என்னும் சமய அமைப்பை நிறுவியதும் தீபாவளியன்றே!
  ஆரிய சமாஜ இயக்குனர் சுவாமி தயானந்த சரஸ்வதி பூவுலகு நீங்கியதும் தீபாவளி நாளே!
மண்ணுலகம் நீத்த முன்னோர்கல் விண்ணுலகம் செல்லாது நரகம் போயிருந்தால் அல்லது பிதிர் லோகத்தில் தங்கியிருந்தால் அவர்கள் ஆண்டுக்கொருமுறை பூவுலகம் வருவார்கள் என்றும் அவர்களுக்கு பிண்டமும் தர்ப்பணமும் அளிக்க வேண்டும் என்றும் தரும நூல்கள் கூறுகின்றன. தீபாவளிக்கு வைதீக வியாக்கியானம் இதுவே!
 இராவண வதம் செய்து மீண்ட இராமன் அயோத்தியை அடைந்தபோது பதினான்கு ஆண்டுகள் துயருற்றிருந்த மக்கள் இரவில் விளக்குகளை ஏற்றி ஆனந்தமாக விழா கொண்டாடினார்கள் இதுவே தீபாவளி என்ற கருத்தும் சிலர் கூறுகின்றனர்.
காமசூக்திரத்தில் தீபாவளியை ‘கூராத்திரி’ என்றும் பாகவத புராணத்தில் “தீபாவளிகா” காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் என்ற நூல்களில் “கூராத்திரி என்றும் அழைத்ததாக கூறப்படுகிறது. வடமொழி நூல்களில் “ வாசக்திரிய கவுமுதி” “த்ருத்யத்வம்” என்றும் நாகநந்தம் என்னும் நூலில் “ தீபபிரதிபனுஸ்தவம்” என்றும் நீலமேகம் என்னும் நூலில் “ தீபோத்ஸவம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது தீபாவளி.

இவ்வாறு பல நம்பிக்கைகள் இருந்தாலும் பாரத நாட்டுமக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சிறப்புக்கு எடுத்துக்காட்டாக தீபாவளி விளங்குகிறது.
 நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2