முல்லைப்பெரியாறும்! ஜல்லிக்கட்டும்! பந்தயமும்! கதம்ப சோறு! பகுதி 35

கதம்ப சோறு பகுதி  பகுதி 35


முல்லைப்பெரியாறு:

     ஒரு வழியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் இதை வரவேற்றாலும் முக்கியமான இரண்டு திராவிடக் கட்சிகள் இந்த தீர்ப்புக்கு நாங்கள்தான் காரணம். அவர் ஆட்சியில் இருந்தபோது ஒரு ---- யும் புடுங்கவில்லை! என்று அறிக்கை விட்டு இதிலும் அரசியல் நடத்தின. ஒரு மாநிலத்தின் பொதுப் பிரச்சனை என்று வரும்போது அனைத்து கட்சிகளும் சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து ஒன்றிணைந்து போராடவேண்டும். ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். பங்காளிச்சண்டை போல அடித்துக் கொண்டால் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகத்தான் முடியும். இதை நம்மவர்கள் உணர்ந்தபாடில்லை. அதே சமயம் கேரளாவில் இந்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து கட்சிகளும் முழு அடைப்பு போராட்டம் நடத்திக் காட்டின. உள்ளுக்குள் அவர்கள் அடித்துக் கொண்டாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வர். இந்த புத்தி நம்மவர்களுக்கு இல்லை. கேரள அரசு அடுத்த முட்டுக்கட்டை போடும் முன் தமிழகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அணையின் உயரத்தை அதிகரித்து விவசாயிகள் வாழ்க்கையில் பால் வார்த்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம்.
   
ஜல்லிக்கட்டுக்கு தடை!

    முல்லைப் பெரியார் விசயத்தில் நல்ல தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து தமிழர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது உச்சநீதிமன்றம்.
    தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு.இதில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வெளிநாடுகளில் கூட இந்த மாதிரி காளை அடக்கும் போட்டிகள் நடப்பதுண்டு. அங்கு கம்பு, ஈட்டி போன்றவை கொண்டு மாடுகளை அடக்குவர். ஆனால் தமிழகத்தில் எந்த ஆயுதங்களும் இன்றி வீரம் மிக்க இளைஞர்கள் காளைகள் மீது தாவி அதன் திமிலையும் கொம்பையும் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் செல்வர். குறிப்பிட்ட நேரம் அவர் அந்த காளை மீது இருந்துவிட்டால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இதில் முரட்டுக்காளைகள் இளைஞர்களை கொம்பால் கிழித்து குதறிவிடும். காளைகளை விட கலந்து கொள்பவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். இப்படி இருக்கையில் மிருகவதை என்று கூறி இதை தடை செய்திருப்பது வருந்தற்குரியது. அப்படி வதை என்றால் நாட்டில் அசைவப் பொருட்கள் எதையும் விற்பனை செய்ய முடியாது. உண்ணவும் முடியாது. ஏன் மாட்டின் பால் கறப்பது கூட மிருகவதைதானே! தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முறைப்படுத்தி ஜல்லிக் கட்டை தொடர்வதுதான் சிறப்பாக இருக்கும். இது போன்ற தமிழர்களின் உணர்வுகளோடு நீதிமன்றங்கள் விளையாடுவது சிறப்பாக இல்லை.

தேர்வு பயத்தில் தோற்றவர்கள்:

     வருடாவருடம் தேர்வு முடிவுகள் வருகையில் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. வருடம் முழுவதும் படித்தும் தேர்வில் கோட்டைவிட்டு வாழ்க்கையிலும் தோல்வி பயத்தில் கோட்டைவிடுகின்றனர். இந்த வருடமும் இந்த தற்கொலைகளை படித்த போது நமது கல்வி முறையின் மீதும் பெற்றோர்கள் மீதும் கோபம் வந்தது. மதிப்பெண் ஒன்றே குறியாக இருக்கும் தனியார் பள்ளிகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. இது ஒன்றும் உன் வாழ்க்கையை தீர்மானிக்க போவதில்லை! இதில் தோற்றாலும் இன்னும் இருக்கிறது வாய்ப்பு. ஆனால் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுதான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று பயமுறுத்துவதால் வருகிறது இந்த தற்கொலை முடிவு. மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களை கேலி பேசும் சமூகமும் எப்போது திருந்தும் என்று தெரியவில்லை. இந்த வார வாரமலரில் இதுபற்றி ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. சிறப்பான ஒரு சிறுகதை. மாணவர்களே தோற்று விட்டோம் என்று தற்கொலை முடிவை எடுத்து வாழ்க்கையில் தோற்றுப்போகாதீர்கள். உங்களுக்கான வாய்ப்பு எங்கேனும் ஒளிந்து இருக்கும். அதைத் தேடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

டீ.வீ கார்னர்:

    இந்த பகுதிக்கு எதையாவது எழுத வேண்டுமே என்று இப்போது சில சமயம் தொலைக்காட்சி பக்கம் அமர்கிறேன். இந்த ஞாயிறன்று இரவில் ஜெயா மூவியில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. ஏவி.எம் தயாரிப்பில் வெளிவந்த முதல் இடம் என்ற படம். கதை நன்றாகத்தான் இருந்தது. விதார்த் மிகச்சிறப்பாகவே நடித்து இருந்தார். கவிதா நாயர் என்ற ஹீரோயினும் நன்றாகவே நடிக்கிறார். தமிழ் திரை உலகம் இவரை கவனித்ததா தெரியவில்லை.மற்றவர்களும் சளைக்கவில்லை.பாடல்களும் ரசிக்கும் படி இருந்தன. ஆனால் இந்த படம் திரையில் எத்தனை நாள் ஓடியதோ தெரியவில்லை. இப்படி ஒரு படம் வந்தது என்று எனக்கு தெரிந்ததே டீவியில் ஒளிபரப்பான போதுதான். சந்தர்ப்ப வசத்தால் ரவுடியான ஒருவன், ஸ்டேசனில் இருக்கும் ரவுடி லிஸ்ட்டை பார்த்து அதில் முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவன் ஆசை நிறைவேறியதா? இடையில் அவனுக்கு பஸ் கண்டக்டர் மகளோடு காதல்! அந்த காதல் நிறைவேறியதா? என்பதுதான் கதை. இந்த சின்ன ஒன் லைனை சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர். வாழ்த்துக்கள்.

 படித்த புத்தகம்:

    விஜயா பதிப்பகம் வெளியிட்ட நாட்டு மருத்துவம் என்ற நூல் எழுதியவர் முனைவர் ந. சந்திரன். கிராம மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையை மையப்படுத்தி நோய்களுக்கு அவர்கள் செய்யும் நாட்டு வைத்தியங்களை பற்றியும். அந்த மருத்துவ அனுபவங்களையும் தேனி மாவட்ட மக்களோடு களப்பணியில் ஈடுபட்டு சேகரித்து எழுதியுள்ளார் ஆசிரியர். மொத்தம் ஏழு அத்தியாயங்களில் நாட்டு மருத்துவம் என்றால் என்ன? அதில் மகளிர், குழந்தையர், ஆடவர், பொது மருத்துவம், கால்நடை மருத்துவம் என்ற தனித்தனியாக பிரித்து அலசுகிறது நூல்.  நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு எளிமையான நாட்டு மருத்துவ குறிப்புக்களை தருகிறார் நூலாசிரியர். பல மூலிகைகளை படம் பிடித்து காட்டியுள்ளார். நம்பிக்கை மருத்துவம் என்ற தலைப்பில் பில்லி சூனியம் ஏவல் குறித்தும், கண்ணேறு குறித்தும் விளக்கி அதற்கு செய்யப்படும் வைத்தியங்களையும் பட்டியலிட்டுள்ளார். பூசாரிகள் கட்டும் தாயத்து எந்திரம் போன்றவற்றையும் படங்களோடு விளக்கியுள்ளார். எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு நூல்.
  நாட்டு மருத்துவம், எழுதியவர். முனைவர் ந. சந்திரன்.
  வெளியீடு: விஜயா பதிப்பகம், 20 ராஜவீதி, கோவை. தொலைபேசி 0422 2394614, 2382614.
  விலை: ரூபாய் 80.00 பக்கங்கள் 189.

கிச்சன் கார்னர்:
   ரவா பூரி

 தேவையான பொருட்கள்:  ரவை 1 கப், மைதா 1 கப் , பால், உப்பு தேவையான அளவு. வெண்ணெய் 1 டீஸ்பூன், எண்ணெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு.
   செய்முறை: ரவையும் மைதாவும் சேர்த்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து கைவிரலால் நன்கு பிசைந்து பின் சிறிது உப்பு பால் சேர்த்து நன்கு பிசையவும். கெட்டியாக பிசையவும்.  மாவு உருட்டி தட்டினால் விள்ளாமல் இருக்க வேண்டும். அதுவே பதம். பின்னர் உருண்டையாக்கி பூரி இட்டு பொறிக்கவும். எண்ணெயில் போட்டதும் சிறிது தூக்கி விடவும். ஒருபுறம் வெந்து பொன்நிறமாக வந்ததும் எடுக்கவும்.
     ரவா பூரி மொறு மொறுவென்று சாப்பிட ரெடி.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


சாதம் வடித்த கஞ்சியில் சூடான ரசம், சீரகத்தூள் சேர்த்து குடித்தால் வயிற்று பொருமல் அடங்கும். சுவையான சூப் அருந்தியது போல் இருக்கும்.

துளசி, இஞ்சி கலந்த சாற்றுடன் தேங்காய்ப்பால் சிறிது சேர்த்து மூன்று வேளை குடிக்க ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்குவடிதல் உடனே நின்று விடும்.

ஸ்வெட்டர்களை துவைக்கும் போது ஷாம்பு போட்ட நீரில் ஊற வைத்து துவைத்தால் பளிச்சிடுவதோடு கரையில்லாமல் நல்ல மணமும் வீசும்.

சின்ன வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மூன்று மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து பிறகு நறுக்கினால் கண்ணில் எரிச்சல் வராது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஒரு வாழைப்பழத்தை உரித்து ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்த சீரகத்தை தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வர ஆனந்தமான தூக்கம் வரும்.

இலுப்ப கரண்டியில் நெய்விட்டு உருகியவுடன் சில மிளகுகளை பொடி செய்து அதில் போட்டு பொரித்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.

இவர்களை அறிந்து கொள்வோம்!


  கணவரை இழந்த பெண்களை இந்த சமூகம் புறந்தள்ளும் வேளையில் அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் வாழ்வாதாரம் தந்து உயரத்தில் வைக்கிறது வெளிச்சம் அமைப்பு. அதைப் பற்றி அறிய இங்கு.   வெளிச்சம் அமைப்பு

படிச்சதில் பிடிச்சது!

   ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும்போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார். “கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவதுதான் இவனது பலவீனம்.”
  அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தை பார்த்துவிட்டு, பந்தயம் கட்டுவது கெட்டப்பழக்கம். எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?” என்று கேட்டார். அவனோ, “ எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போது கூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்” என்றான்.
   “எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்றுவிட்டாய். நீயே பார்” என்று கூறிய அவர் தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார். மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.
   புதிய அதிகாரி பழைய அதிகாரிக்கு கடிதம் எழுதினார். ‘அவனுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்டமாட்டான்” என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.
  உடனே பதில் வந்தது. “நீங்கள்தான் தோற்றுப் போய் விட்டீர்கள். புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையை கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அவன் அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்”.
   இந்த அதிகாரி நொந்து போனார்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல மணத்தோடும் ருசியோடும் பரிமாறப்பட்ட தொகுப்பு! நன்று! வாழ்த்துக்கள் சுரேஷ் சார்!

    ReplyDelete
  2. வழக்கம் போல் டிப்ஸ் அருமை.

    பந்தயக் கதை சூப்பர்.

    ReplyDelete
  3. கதம்ப சோறு நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
  4. கதம்ப சோறு பகிர்வுக்கு நன்றி
    படித்ததில் பிடித்தது ரசித்தேன்

    ReplyDelete
  5. பந்தயக் கதை சூப்பர்.

    கதம்ப சோறு வழமை போல நன்றாக இருந்தது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!