பூஜைக்கேற்ற பூவெது?

பூஜைக்கேற்ற பூவெது? எது?


பிள்ளையார் கோயிலில் காலசந்தி பூஜை முடித்து தீப ஆராதனை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் குருக்கள். அப்போது ஒரு பெண்மணி கையில் கொஞ்சம் புஷ்பசரத்தோடு வந்து சாமி! இதை விநாயகருக்கு சார்த்திருங்கோ! என்று தந்தார். குருக்கள் அந்த பூவை வாங்கி பார்த்துவிட்டு எடுத்துச் சென்றவர் விநாயகர் மீது சார்த்தாமல் அருகில் இருந்த கூடையில் போட்டுவிட்டார். ஆரத்தி மட்டும் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துவந்தார்.
     பிரசாதம் தரும்போது அந்த பெண்மணி சாமி! நான் கொடுத்த பூவை பிள்ளையாருக்கு சார்த்தாம கீழே போட்டுட்டீங்களே! ஏன் சாமி இப்படி பண்றீங்க? நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு கடவுளுக்குன்னு வாங்கி தரோம்! அதை சரியா நீங்க சமர்ப்பிக்காம இப்படி எங்க மனசை நோகடிக்கிறீங்களே! என்று வருத்தமுடன் கேட்டார்.
      குருக்கள், அம்மா தப்பா எடுத்துக்காதீங்க! இன்னின்ன சுவாமிக்கு இன்னின்ன பூ தான் உகந்ததுன்னு இருக்கு! நீங்க கட்டிவந்த பூவில துளசி கலந்து இருந்தது துளசி விநாயகருக்கு சார்த்தக் கூடாது.நீங்க தெரியாம வாங்கி வந்து இருக்கலாம்! ஆனா தெரிஞ்சே அதை நான் எப்படி சார்த்தறது! அதான் பூவை கூடையிலே போட்டுட்டேன்! அது வேற சன்னிதிக்கு அப்புறமா போயிரும். என்றார்.
    அப்படியா சாமி! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். இந்த புஷ்பங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்! எந்தெந்த பூ சாமிக்கு உகந்தது.எந்த பூ ஆகாதுன்னு தெரிஞ்சா அதன்படி நடப்போம் இல்லையா என்றார் அந்த பெண்மணி.
    சொல்லலாம்மா! ஆனா இப்ப கோவில்ல நிறைய கூட்டம்! கொஞ்சம் அப்படி வெயிட் பண்ணுங்க! தரிசனார்த்திகளை கவனிச்சுட்டு அப்புறம் நிதானமா வந்து சொல்றேன்! என்று குருக்கள் சொல்லவும், பரவாயில்லை சுவாமி! நீங்க நிதானமா வாங்க! நான் கோயில் பிரகாரம் வலம் வந்துட்டு காத்துட்டு இருக்கேன்! என்று நகர்ந்தார் அந்த பெண்மணி.

       ஒரு அரைமணி நேரம் கழித்து கூட்டம் குறைந்ததும் குருக்கள் வெளியே வந்தார். பரவாயில்லையே! உங்களுக்கு பக்தியோட ஆர்வமும் இருக்கு! நல்லதை தெரிஞ்சிக்க நாழியானாலும் பரவாயில்லைன்னு காத்துட்டு இருந்தேளே! ரொம்ப சந்தோஷம்! வாங்க இப்படி உட்காந்து பேசுவோம் என்று மண்டபத்தில் அமர்ந்தார்.
     பொதுவா பூஜைக்கு புஷ்பங்களை கடையில வாங்கி வருவதே மத்திமம்தான். நம்முடைய வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்கள்தான் பூஜைக்கு மிகவும் சிறந்தது. அழுகிய, பழைய புஷ்பங்களை சுவாமிக்கு சார்த்த கூடாது. அன்னன்னிக்கு பூத்த பூக்களை சுவாமிக்கு அர்ப்பணிக்கணும். சிவனுக்கு தாழம்பூவும் அம்பாளுக்கு அருகம்புல்லும் விநாயகருக்கு துளசியும் சூரியனுக்கு வில்வமும் விஷ்ணுவிற்கு எருக்கம் பூ ஊமத்தையும் உதவாது. முருகருக்கு செவ்வரளிப் பூ மிகவும் விசேஷம். சிவனுக்கு வில்வம் கொன்றை பூ விசேஷம். பாரிஜாத பூ விஷ்ணுவிற்கு விசேஷம். அம்பாளுக்கு மல்லிகைப்பூ செம்பருத்தி போன்றவை விசேஷமானது.
    வில்வபத்திரத்தை பூஜித்தபின் கழுவி மீண்டும் அர்ச்சிக்கலாம் இதே மாதிரி ஐந்துநாட்கள்வரை வில்வம் அர்ச்சிக்கலாம். சுவர்ண புஷ்பம் எனப்படும் தங்க அரளியை மூன்று நாட்களும் துளசியை பத்து நாளும் மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம். இவைகளுக்கு பழசு என்ற தோஷம் இல்லை.
    எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை,பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டு பூக்களும் அஷ்ட புஷ்பங்கள் என்று வழங்கப்படும். புஷ்பங்களை கிள்ளி கிள்ளியோ இதழ் இதழாக பிய்த்தோ பூஜை செய்யக் கூடாது. இப்படி பூஜை செய்தால் தரித்திரம் ஏற்படும்.

    குளித்து முடித்து ஈர ஆடை களைந்து புதிய உலர்ந்த ஆடை அணிந்து புஷ்பங்களை பறிக்க வேண்டும். குளிக்காமல் பூ பறிக்க கூடாது. பூக்களை நமது ஆடையில் பறிக்க கூடாது. அதற்கென உள்ள பூக்குடலையில் பறிக்க வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வாடிய புஷ்பம், புழு அரித்தது, முகர்ந்து பார்த்தது, முடியுடன் சேர்ந்த புஷ்பம் ஆகியவை பூஜைக்கு உதவாது.

   திங்கள் கிழமையில் வில்வம் பறிக்க கூடாது. பிரதோஷ வேளையிலும் பறிக்க கூடாது. வில்வங்களை தளம் தளமாக அர்ச்சிக்க வேண்டும் துளசியையும் இவ்வாறே தளம்தளமாக அர்ச்சித்தல் வேண்டும். பல நாமாக்களை சொல்லி ஒரு பூவினால் அர்ச்சிக்கலாம் தவறு இல்லை.  தாமரைப்பூவில் சரஸ்வதியும் அரளிப்பூவில் பிரம்மாவும் வன்னிபத்திரத்தில் அக்னியும் வில்வத்தில் சிவனும் இருப்பதாக ஐதீகம்.
   வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகமானவை! சிவந்த புஷ்பங்கள் ரஜச குணம் கொண்டவை கருநிற புஷ்பங்கள் தாமச குணம் கொண்டவை, மஞ்சள் நிறமுள்ளவை மிச்ரம் குணம் உள்ளவை. வில்வபத்திரத்தில் சத்வம்,ரஜஸ் தாமஸ் என்ற முக்குணம் உள்ளது. இந்த ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகி சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாதிருக்க கூடாது.
     விநாயகருக்கு வெள்ளெருக்கு,அருகு, வன்னி போன்ற பத்திரங்கள் புஷ்பங்கள் உகந்தவை! தூய்மையாக தும்பை பூ செலுத்தியும் வழிபடலாம்.
   புஷ்பங்களை பத்தி இன்னும் நிறைய இருக்கு! இப்போ இதுவரைக்கும் போதும்! இன்னொரு சமயம் இன்னும் சொல்றேன்! நாழியாறது! நடை சாத்தனும்! அடுத்த முறை நான் சொன்னா மாதிரி நல்ல முறையில பூ கொண்டு வாம்மா! என்று கிளம்பினார் குருக்கள்!
   சரிங்க சாமி! முயற்சி பண்றேன்! என்று அந்த பெண்மணியும் கிளம்பினார்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வழிபாட்டுக்கு முன்னர் சிந்தித்து செயல் பட..நல்ல தகவல்கள் ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விரிவான விளக்கம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள். பூஜை செய்யும் பூக்களில் இவ்வளவு விஷயங்களா?

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள் அடங்கிய நல்லதோர் ஆன்மீகப் பதிவு.
    மிக்க நன்றி .

    ReplyDelete
  5. பூஜை செய்யும் பூக்களில் இவ்வளவு விஷயங்களா? நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!