உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 21

சென்ற வாரம் சிற்றிலக்கியங்களின் வகைகளை பார்த்தோம். இந்த வாரம் பார்க்க போவது உவமையைப் பற்றி மான்போல கண்கள், துள்ளிவிளையாடும் மீன்போல அவள் பேச்சு தேனாய் இனித்தது என்று பிறரை சிறப்பித்து பேசுகிறோம் அல்லவா ? இவைதான் உவமைகள். ஒரு பொருளை சிறப்பித்துக் கூற அதைவிட சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிட்டு பேசுதல் உவமித்தல் எனப்படும். உவமித்து பேசுவதால் பேச்சு எளிமையாக அடுத்தவருக்கு புரியும். கேட்பவருக்கு இனிமையாக இருக்கும்.
    சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும்.உவமானம் என்றும் அதைக் கூறுவர். தமிழ் தேன்போல இனிமையானது.
     இதில் தேன் என்பது உவமை தமிழ் என்பது உவமானம் இடையில் வரும் போல என்பது உவம உருபு ஆகும்.
  இவ்வாறு உவமைக்கும் உவமானத்திற்கும் இடையே வரும் உருபுக்கள் உவம உருபுக்கள் எனப்படும். குறிப்பிடத்தக்க சில உவம உருபுகள் போல, புரைய, ஒப்ப, உறழ, அன்ன ஆகியனவாகும்.
உவமை விரியுவமை, தொகையுவமை என இருவகைப்படும்.
விரியுவமை: உவமை, உவமேயம் ஆகிய இரண்டினைப் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை எனப்படும். இது உவமைத்தொடர் என்றும் அழைக்கப்படும்.
  எடுத்துக் காட்டாக  மீன் போன்ற கண்கள் என்ற தொடரை எடுத்துக் கொண்டால்  மீன் என்பது உவமை. கண்கள் உவமேயம். போன்ற என்ற உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளது இதனால் விரியுவமை எனப்படுகிறது.
   தொகையுவமை: உவமை உவமேயம் இரண்டினுக்கும் இடையே உவம உருபு மறைந்து வந்தால் அது தொகையுவமை எனப்படும். இது உவமைத்தொகை என்றும் அழைக்கப்படும்.
  எடுத்துக் காட்டாக  கயல்விழி என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.  கயல் என்பது உவமை,விழி என்பது உவமானம் இடையே உவம உருபுகள் கலக்க வில்லை! ஆனாலும் கயலையொத்த விழி என்ற பொருளை தருவதால் இது  உவமைத்தொகை ஆயிற்று.
      அடுத்த பகுதியில் உவமையை உருவகமாக மாற்றுவதை பார்க்கலாம். இப்போது இலக்கியசுவையில் நுழைவோம்.
   அகநானூறு பாடல் ஒன்றை பார்ப்போம்!
  பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
  சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
  பகலுறை முதுமரம் புலம்பப் போகி
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை
வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு
இனிதுகொல் வாழி தோழி யெனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப
அருந்துய ருடையள் அவளென விரும்பிப்
பாணன் வந்தனன் தூதே; நீயும்
புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ
முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே
                          மதுரை...மள்ளனார்.

முல்லைப் பூவூம் வண்டினத்தை விட்டு பிரிந்து செல்லாது தடுத்துக் கொண்டிருக்கும் வசந்த காலத்தே தலைவனாவன் தலைவியை  வவ்வாலானது எவ்வாறு பகலில் தங்கியிருந்த மரத்தை தனியே வாடவிட்டு இரவானதும் பிரிந்து செல்லுமோ அதுபோல தன் வேலையின் பொருட்டு பிரிந்து வந்துள்ளான். பிரிந்து சென்ற தலைவனை எதிர்பார்த்து தலைவி வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள். அவளது துயரை போக்க நாம் விரைந்து ஊர் சேரவேண்டும். ஆகவே தேர்ப்பாகனே! விரைந்து தேரை செலுத்துவாயாக!  என்று தலைவன் கூறுகிறான்.
       இதில் வந்துள்ள உவமைகள் உவமேயங்கள் எவ்வளவு அழகாக உள்ளன.
பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன: ஒட்டும் பசைபோன்ற ஈரமுடைய நெய்யிலே தோய்த்தது போன்ற மாச்சிறை பறவை கரிய இறகுகளை உடைய வவ்வால்.  வவ்வாலை எவ்வளவு அழகாக காட்சிப் படுத்தியுள்ளார் கவிஞர்.  படிக்க படிக்க இனிக்கும் இந்த இலக்கியங்களை இனிவரும் பகுதிகளில் சிறிது சிறிதாக சுவைப்போம்.
   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ரசிக்க வைக்கும் விளக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எளிய அருமையான விளக்கம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!