தமிழ் கடவுளுக்கு தைப்பூசத் திருவிழா!
தைப்பூசம்!
தமிழ்
மாதங்களில் தை மாதத்திற்கு எப்போதும் ஒரு சிறப்புண்டு! தமிழர்களின் திருநாளான
பொங்கல் வரும் மாதமல்லவா? இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும் முக்கியத்துவம்
பெறுகின்றன. இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் தைப் பூசமாக கொண்டாடப்படுகிறது.
பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியுடன் இணைந்து வரும். தைப்பூச திருவிழா
சிவாலயங்களிலும் முருகர் ஆலயங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும்.
இராமலிங்க
வல்லளார் ஜோதியில் கலந்த நாளும் தைப்பூச தினமே! வடலூரில் உள்ள அவரது ஆலயத்தில்
சிறப்பாக வழிபாடுகள் நடத்தி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
சிதம்பரத்தில்
அன்னையும் சிவனும் இணைந்து நர்த்தனம் ஆடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது.
உலகம்
தோன்றிய நாளாகவும் இந்த தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.
உலகத்தில் முதலில் தோன்றியது நீர் என்று
சொல்லப்படுகிறது. உயிரிகள் அதில் இருந்துதான் தோன்றின. இதில் இருந்துதான்
பிரம்மாண்டமான இவ்வுலகம் தோன்றியது. இதை உணர்த்தும் வண்ணம் ஆலயங்களில்
தைப்பூசத்தன்று தெப்போற்சவங்கள் நடைபெறுகின்றன.
வாயு, வருணன், அக்கினி மூவரும் தங்களில் யார்
வலிமையானவர்கள் என்று பரிட்சை செய்து கொண்டனர். வாயு காற்றாய் சுழன்றடிக்க அக்கினி
தீயாய் சுட்டெரிக்க வருணன் மழையாக பொழிந்து தீயை அணைக்க முயன்றார். அப்போது
அவர்கள் இடையில் ஒரு சிறு துரும்பு தோன்றியது. மூவராலும் அந்த துரும்பை அசைக்க கூட
முடியவில்லை! அப்போது நாரதமுனிவர் அந்த துரும்புதான் உமா மகேஸ்வர சக்தி என்றும்
அதுவன்றி அணுவும் அசையாது என்றும் கூறி தைப்பூச நன்னாளில் அவர்களை வழிபட்டால்
ஆற்றல் அதிகரிக்கும் என்று அருள்பாலித்தார். அவர்களும் பூச நன்னாளில் இறைவனை
வணங்கி தம் ஆணவம் விட்டு ஆற்றல் பெற்றனர்.
தைப்பூச
தினத்தில் முருகர் ஆலயங்களில் பால்குடம், காவடி, போன்றவை எடுத்து வழிபடுவர். இந்த
தினத்தில் பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது, திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல்,
நற்காரியங்கள் செய்தல் முதலியவற்றில் ஈடுபடலாம்.
தைப்பூசத்திருவிழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது.
சிவனுக்குரிய வழிபாடாக இருந்தாலும் சிவசக்தி ஐக்கியமான முருகருக்கு வழிபாடு
செய்தல் பிற்காலத்தில் பிரசித்தி பெற்று இன்று முருகர் ஆலயங்களில் தைப்பூசம்
மிகவும் விசேசமாக கொண்டாடப்படுகிறது.
அசுரன்
ஒருவன் சிவனிடம் தான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என
வரம் பெற்றான். அவன் சிவனது தலை மேலேயே ஆணவம் கொண்டு கை வைக்க முயன்றான். சிவன்
ஒளிந்து கொண்டார்.பின்னர் அவன் பார்வதியின் தலைமீது கை வைக்க ஓடினான். அவள்
சரவணப்பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு
பொறிகளை உண்டாக்கி சரவணப்பொய்கையில் இட்டார். அதிலிருந்துதான் முருகன்
அவதரித்தார். இதனால் கந்தனை சிவசக்தி பாலன் என்று அழைப்பர். இந்த வகையில்
தைப்பூசம் முருகனுக்குரிய நாளாயிற்று.
அருணகிரி நாதரின் கந்தரலங்காரத்தில் வரும்
இந்தப்பாடலை சொல்லி முருகனை வழிபட்டால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது.
நாள் என் செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள் என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர் இருதாளும்
சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகம்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே!
இந்த வருடம் பவுர்ணமியில் பூச நட்சத்திரம்
உதிக்கவில்லை! இன்று வெள்ளியன்று உதிக்கிறது! இந்த நாள் தைப்பூசம்! இந்த நன்னாளில்
சிவன்,முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு நற்பேறு அடைவோமாக!
தைப் பூசம் அறிந்தேன் நன்றி நண்பரே
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதைப்பூசம் பற்றி மிக அழகாக விளக்கமாக பகிர்ந்த விதம் ரசிக்க வைக்கிறது. முருகன் வழிபாடு புது தெம்பவையும், அன்பையும், அருளையும் அனைவருக்கும் தரட்டும். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..
சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... விளக்கம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான தகவல்கள். நன்றி
ReplyDeleteதை பூசம் பற்றி இவ்வளோ தகவலா?
ReplyDeleteஅந்த பாலமுருகன் படம் அருமை.
பாப்பா அழகு சார் .திருஷ்டி சுத்திப்போடுங்க !
தைப்பூசம் தகவல்கள் மிக நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete