என் வாழ்வில் 2013 அறுசுவை நிகழ்வுகள்!

நண்பர் மேலையூர் ராஜா அவர்கள் 2013ல் நடந்த மகிழ்ச்சியான கசப்பான நிகழ்வுகளை எழுதி என்னையும் சிலரையும் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த சமயத்தில் தொடர முடியவில்லை. மற்றவர்கள் எழுதினார்களா என்றும் தெரியவில்லை! நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது. படுத்து கிடந்தபோது ராஜா அழைத்தது நினைவுக்கு வந்தது. உடனே கணிணியை தட்ட ஆரம்பித்துவிட்டேன். ராஜா தொடர்பதிவாக கேட்டிருந்தாலும் அதற்கான அவகாசம் முடிந்து விட்டமையால் மற்றவர்களை தொடருமாறு துன்புறுத்த மாட்டேன்.

2013 பொதுவாக ஐரோப்பியர்களிடையே 13 என்ற எண் துரதிருஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியர்களை பொறுத்தவரை 8 என்ற எண் துரதிருஷ்டமாக சொல்வார்கள். எந்த வருடமானாலும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்துதான் இருக்கும். ஒரேயடியாக இன்பமோ அல்லது துன்பமோ யாருக்கும் இருக்காது. அறுசுவை போல இதை தொகுத்து உள்ளேன்.

முதல் சுவை இனிப்பு:

    2013 ல் என் வலைப்பூ நிறைய பேருக்குத்தெரிய ஆரம்பித்தது. பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த  திரு,திண்டுக்கல் தனபாலன் அவர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்வூட்டியது. மேலும் சந்திப்பில் திரு ரமணிஐயா, கோவை ஆவி, கோவைநேரம் ஜீவா, ராஜா மேலையூர்,முரளிதரன், கவியாழி, குடந்தை சரவணன், அரசன், சீனு போன்றோரிடம் கொஞ்ச நேரமே அளவளாவினாலும் மகிழ்ச்சி தந்த ஒரு நிகழ்வு.
  பரம்பரையாக பூஜை செய்து வரும் எங்கள் கோயிலில் காரிய சித்தி கணபதிக்கு புதிய ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்வித்தது மற்றொரு மகிழ்ச்சியான விசயம். குடும்ப உறுப்பினர்களோடு குலதெய்வ ஆலயங்களுக்குச் சென்று வந்தது.தாத்தா ஊரான மாநெல்லூர் சென்றுவந்தது.  என் இரண்டாவது மகள் போதனாவின் காதணிவிழா நடத்தியது. நான் எழுதிய எங்கள் ஊர் ஆலயம் பற்றிய கட்டுரை மாலை மலரில் வெளியானது.  நாமக்கல் ஆஞ்சநேயர்,கொடுமுடி சிவன், திருப்பராய்த்துறை இறைவனை தரிசனம் செய்தது,கொஞ்சம் கூடுதலாக உழைத்து வருவாய் பெருக்கிக் கொண்டது போன்றவை மகிழ்ச்சியான விஷயங்கள்.

புளிப்பு: சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று நரி சொன்னது போல 12 வருடங்கள் நடத்திவிட்டு இடையில் நிறுத்தியிருந்த டியுசன் தொழிலை ஆரம்பித்து மூன்றே மாதத்தில் நிறுத்திவிட்டது புளிப்பான விசயம் ஆகிவிட்டது. மாணவர்களின் நடத்தையும் பழக்கமும் கெட்டுப்போனதோடு என்னுடைய நேரமும் ஒத்துழைக்காததால் இந்த டியுசன் நின்று போனது.

கசப்பு: இந்த ஆண்டின் மிக கசப்பான விஷயம் என்றால் இதுதான். என் தங்கையின் கணவர் அவளோடு சரியாக குடும்பம் நடத்தாமல் 12 வருடங்களாக துன்புறுத்திவந்தார். நாடாறுமாதம் காடாறுமாதம் என அவள் இங்கும் அங்கும் மாறிமாறி வசித்துவந்தாள். வாழ்க்கைப்பிரச்சனையாயிற்றே சரியாகிவிடும் என்று பொறுத்து இருந்தேன். இந்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் தகறாரு ஏற்பட நான் தலையிட்டு அவளை என் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டேன். இது என் குடும்பத்தார் அனைவருக்குமே கசப்பான ஒன்று. இனி அவள் வாழ்க்கையை அவள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி அவளை சுயமாக தன் காலில் நிற்க வேண்டிய அவசியங்களை கூறி அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறேன்.

துவர்ப்பு:  துவர்ப்பான விசயம் என்னவென்றால் இந்த ஆண்டு எல்லோருக்கும் பிடித்தது போன்ற பிலாக்கோ மேனியா! எனக்கும் பிடித்ததுதான். ஓய்வு நேரம் நிறைய பிலாக் எழுதுவதும் படிப்பதுமாய் செலவழித்துவிட்டேன். அலேக்ஸா ரேங்க்! தினம் என்ன எழுதுவது அப்படி இப்படி என்று யோசித்து நிறைய நேரம் செலவிட்டு விட்டேன். அதனால் என்ன பிரயோசனம் நிறைய ,முகம் தெரியா நட்புக்களை சம்பாதித்தேன். அது ஒன்றுதான் உபயோகமானது. சில நல்லவிசயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதே சமயம் பதிவு எழுதாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரி ஒரு அடிக்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அது இந்த ஆண்டு இறுதியில் சரியானது.

இதுவும் துவர்ப்பான விஷயமே! இதை எழுதலாமா வேண்டாமா என்றே எழுதுகிறேன். என்னுடைய டியுசன் முன்னாள் மாணவன் ஒருவன் முன்னாள் மாணவியை மணந்து கொண்டான். இருவரும் உறவினர்கள் முறை என்பதால் வயது பார்க்காமல் திருமணம் நடந்தது. அந்த பெண் ஒரு வருடம் குடும்பம் நடத்தியவள் இந்த ஆண்டில் ஒரு நாள் வேறொருவனுடன் சென்றுவிட்டாள். அங்காவது சுகப்பட்டால் என்றால் இல்லை. அவனும் நகை பணம் பிடுங்கிக் கொண்டு துரத்திவிட மீண்டும் கணவனை நாடிவந்தாள். கணவனும் சேர்க்க மறுக்க இப்போது எங்கோ காப்பகத்தில்! என்னிடம் படித்த மாணவர்களுக்கு நான் கற்பித்த முக்கிய பாடம் ஒழுக்கம். இதனாலேயே மாணவர்கள் பலர் என்னிடம் பயில வரமாட்டார்கள். என் மாணவி ஒருத்தி ஒழுக்கம் தவறிவிட்டாள் என்றது எனக்கு துவர்ப்பான விசயமே!

கார்ப்பு:  இது கொஞ்சம் காரமான விசயமாக இருக்க வேண்டும் போல! சின்ன வயதில் கோபக்காரனாக இருந்தாலும் வயதாக வயதாக ஒரு பக்குவம் வந்து விடுகிறது. பெரும்பாலும் எதற்கும் கோபப்படுவது இல்லை. இந்த வருடம் நான் கோபப்பட்டது என் தங்கை விசயத்தில் தான். அனைத்து தவறுகளையும் அவரே செய்துவிட்டு என் தங்கை மீது குற்றச்ச்சாட்டுக்களை என் தங்கை கணவர் வைத்தபோது அது போனாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! பொங்கி எழுந்துவிட்டேன். பின்னர் தங்கையையும் என்னுடன் அழைத்துவந்துவிட அவர்கள் சமாதானத்திற்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை! பிறகு வந்த நான் என் தந்தையிடம் இவர்களை எல்லாம் ஏன் வீட்டிற்குள்  அழைத்தாய்? என்று கேட்டேன். இது கடந்த ஆண்டின் உச்ச பட்ச கோப நிலை!


உப்பு: எத்தனைதான் இருந்தாலும் உப்பில்லாத சாப்பாடு சுவைக்காது. வாழ்விலும் உப்புச்சுவை இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆண்டு இறுதியில் என் மாமியார் இறந்தபோது வருத்தமாக இருந்தது. வயதானவர்தான் ஆனாலும் வெகுளித்தனமாவர், அந்தகாலத்து மனுஷி! தன் கடைசி மகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அந்த கடைசிமகள்தான் என் மனைவி. தாய் இறந்த செய்தியை என் மைத்துனன் சொல்லியும் அதை என் மனைவியிடம் சொல்லாமல் சீரியஸ் என்று சொல்லி காரில் இங்கிருந்து இரவில் பயணம் செய்து விடியலில் கரூர் சென்று இறுதி சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு திரும்பினேன். என் சொந்த தாத்தா பாட்டி இறந்தபோது வராத கண்ணீர் அங்கு சில சமயம் எட்டிப்பார்த்தது. ஒரு வாரம் முன் எண்பதாவது பிறந்தநாளை கணவருடன் கொண்டாடியவர்! அப்போது சென்றிருந்தால் உயிருடன் பார்த்திருக்கலாம். முடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் மேலிட்டது. என் சம வயது நண்பன் சந்திரமவுலி சீமந்தம் ஆன அன்றே சாலை விபத்தில் இறந்து போனது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று.

நினைவில் நின்றவைகளை எழுதி கொஞ்சம் பாரம் இறக்கிக் கொண்டேன். நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. இறபுகள்தான் உப்பா...?
  ஒ....கண்ணீரின் சுவை உப்பு என்பதாலா...?

  ReplyDelete
 2. அறுசுவைகளோடு தங்களது வாழ்கையில் சென்ற ஆண்டு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டீர்கள்.
  இந்த ஆண்டு உங்களது அறுசுவையில் இனிப்பு அதிகமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஆகா...ஆகா...

  நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. மனம் திறந்து ஆத்மார்த்தமாக
  தங்கள் உள்ளக் கிடக்கையை
  ஒளிமறைவின்றி பதிவாக்கித் தந்தது
  பதிவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள தூய அன்புக்கு
  நல்ல உதாரணமாக இருக்கிறது

  பதிவர் சந்திப்பில் தங்களுடன் கழித்த அந்த
  அற்புத நிமிடங்கள் மனதிற்குள் வந்து போனது

  இப்புத்தாண்டில் காரமும் கசப்பும் குறைந்து இனிப்பு நிறையச்
  சேர்ந்து தங்கள் வாழ்வை சுவையுள்ளதாக்க
  அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 5. அறுசுவைகளுடன் உங்கள் கடந்த வருடத்தை திரும்பிப் பார்த்தது அழகு.. வாழ்வில் ஏற்பட்ட உவர்ப்பு துவர்ப்பு கசப்பு விரைவில் நீங்க ஆண்டவனை பிராத்திக்கிறேன் சார்

  ReplyDelete
 6. சென்ற வருடத்தினை சிறப்பாக திருப்பி பார்த்தமை நன்று.

  கசப்பு நடக்காமல் இருக்கட்டும்....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2