சசிக்குமாரை “மாமா”ன்னு கூப்பிடும் நடிகை! கதம்பசோறு! பகுதி 20

கதம்ப சோறு பகுதி 20
  
கெஜ்ரிவால் கூத்துக்கள்!
      அர்விந்த் கெஜ்ரிவால்! அன்னா-ஹசாரே போராட்டங்களில் உறுதுணையாக இருந்து பின்னர் கட்சி துவக்கி ஒருவழியாக டெல்லி முதலமைச்சராகவும் மாறிவிட்டார். ஷங்கரின் முதல்வன் பட ஹீரோ போல காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார் இவர். இவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! தினமும் மக்களை சந்தித்து மனுக்களை வாங்குவேன் என்றார். முதல்நாளே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு பாதுகாப்பு குளறுபடி என்று குழப்பங்கள். இனி இப்படி பட்ட நிகழ்ச்சி கிடையாது என்று பல்டி அடித்தார். அடுத்து டெல்லி போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்று ஒரு முற்றுகைப் போராட்டம் அறிவித்து அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒருமாதம் அவகாசம் கேட்டார் டெல்லியை சீர்த்திருத்த. இதோ முடிந்துவிட்டது. டெல்லி ஒன்றும் மாறியதாக தெரியவில்லை! கெஜ்ரிவால்தான் தேர்ந்தெடுத்த அரசியல்வாதியாக மாறிவிட்டார். அரசியல் அவ்வளவு பலம் வாய்ந்தது! என்ன செய்ய?

கலைஞர்-அழகிரி கலாட்டா!
   இதைப்பற்றி நேற்றே ஒரு பதிவிட்டேன். இன்றும் கொஞ்சம் கொசுறு. திருவிளையாடல் காலத்தில் இருந்தே பிள்ளைகளுக்குள் தகறாரு இருந்துதான் வருகிறது. அழகிரியின் விசுவாசிகளின் பீஸை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி இப்போது அவரையும் பிடுங்கி வைத்துள்ளார் கலைஞர்.வளர்த்துவிட்டவரும் அவரே! இப்போது வெட்டிவிட்டவரும் அவரே! தேமுதிக காங்கிரஸ் பக்கமோ பி.ஜே.பி பக்கமோ சாய்ந்திடாமல் இருக்க இப்படி ஒரு செக் வைத்தார் கருணா. ஆனால் அண்ணியார் பிரேமலதாவின் கணக்கு வேறுமாதிரி இருக்கு. கருணாநிதியின் இந்த கபட நாடகத்திற்கெல்லாம் ஏமாறமாட்டோம் என்று சொல்லுகிறார் அவர். ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக கொஞ்சம் நாவடக்கம் தேவை! அழகிரியிடம் அது இல்லை! அவர் வெட்டிக்கொண்ட குழிதான் ரவுடியிசம்! அதில் வீழ்ந்துவிட்டு இப்போது குய்யோ முறையோ என்று முறையிடுகிறார் பாவம்.

பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளவேண்டுமா?

    2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அறிவித்து உள்ளது ரிசர்வ்வங்கி. கருப்பு பணத்தை வெளிக்கொணரவரும் முயற்சி இது என்று இது சொல்லப்பட்டாலும் பிரபல பொருளாதார நிபுணர்கள் இதனால் எல்லாம் கருப்பு பணம் கட்டுக்குள் வராது என்று சொல்லுகிறார்கள். முதலில் இது குறித்து மக்கள் பீதி அடையத் தேவை இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கி இது குறித்து அறிவித்த பின்னர் தங்கத்தில் முதலீடு அதிகம் செய்கின்றனராம். தங்கத்தின் தேவையும் விலையும் வேறு அதிகரித்துப் போகிறது. இன்று பஸ்சில் போகும் போது எப்.எம்.மில் ஒரு விசயம் சொன்னார்கள். இனி குறைந்த பட்சம் 10 ஐநூறு ரூபாய் தாள்களோ, அல்லது 10 ஆயிரம் ரூபாய் தாள்களோ வங்கியில் செலுத்தினாலோ எடுத்தாலோ ஏதோ சான்று தரவேண்டுமாம். அந்த சமயம் பார்த்து ஹார்ன் அடித்து தொலைத்ததால் காதில் விழவில்லை! இனி எந்த சாமான்யனும் இது போன்ற நிபந்தனைகள் விதித்தால் வங்கி பக்கம் செல்லமாட்டான். இதுபோன்ற நிபந்தனைகள் கருப்புப்பணத்தை அதிகரிக்கத்தான் செய்யும் என்பது என் கருத்து.

அந்தமான் படகுவிபத்து!

    விபத்துக்கள் ஆண்டுதோறும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விழிப்புணர்வுதான் இல்லை. ஹெல்மெட் போடாததால் மரணம்! என்ற செய்திகள் நாள்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்! ஆனால் யாரும்கேட்பது இல்லை. அலட்சியம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்! ம்! பார்த்துக்கொள்ளலாம்! சமாளித்துக்கொள்ளலாம்! என்ற போக்கு விபத்துக்களுக்கு காரணம் ஆகிறது. கண்கூடாக இதை பார்த்தாலும் யாரும் திருந்துவதாக இல்லை! அந்தமானில் நடந்த படகு விபத்தும் அலட்சியத்தால் நிகழ்ந்தது என முதற்கட்ட தகவல் கூறுகிறது. சுற்றுலா சென்றவர்கள் 32 பேர் தங்கள் கனவுகளுடன் கடலில் மூழ்கிவிட்டார்கள். காஞ்சிபுரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இதெல்லாம்! அப்புறம் எல்லாம் மறந்துவிடும். மீண்டும் ஒரு படகு விபத்து நடக்கும்போது எங்கெல்லாம் எப்போதெல்லாம் இது நடந்தது என்று ஊடகங்கள் புள்ளிவிபரங்கள் சொல்லும். பட்டும் திருந்தவில்லை என்றால் அப்புறம் அவன் எப்படி அறிவுள்ள மனிதன்?

90 வயதில் 60வயது பாட்டியை மணந்த தாத்தா!

   ஏ. எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப்போராட்டவீரர். 90 வயதுக்காரர். அவரது மனைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. மணப்பெண் ராதாவிற்கு வயது 60 அவரது தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெற்றோர் இறந்துவிட தனிமரமாக வசித்துவந்தார் ராதா. அங்கன் வாடி உதவியாளராக பணிசெய்துவந்தார் ராதா. ராதாகிருஷ்ணனுக்கு மாநில மத்திய அரசு ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப்பின் அந்த ஊதியம் ஏழைப்பெண் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி ஆதரவில்லாத இந்த பெண்ணை மணந்துகொண்டுள்ளார். சட்டரீதியாக  சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த திருமணம் நடைபெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்கு பிறந்த வாரிசுகள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லையாம். வித்தியாசமான மனிதர்தான் இல்லையா?




தோற்றுப்போன தோனியின் படை!
     தென் ஆப்ரிக்காவில் அடிவாங்கி வந்த கையோடு நியுசிலாந்து சென்று அங்கும் பலத்த அடியோடு திரும்ப காத்திருக்கிறது தோனியின் படை! ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகார்தவான், ரோகித் சர்மா துவக்க ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை! மாற்றி யோசிக்க தயங்கும் தோனியின் தலைமைப் பண்பும் உதவிக்குவரவில்லை! நான்கு போட்டிகளில் ஒன்றை கஷ்டப்பட்டு டை செய்துவிட்டு மற்றதில் மண்ணைக் கவ்வி விட்டார்கள். கடைசி போட்டியிலாவது வென்றால் ஆறுதல் கிடைக்கலாம். தொடர்ந்து சொதப்பிவரும் இஷாந்த்சர்மா, ரெய்னா போன்றோருக்கு தொடர் வாய்ப்புக்கள் வழங்கி வீணடித்து வருகிறார். யுவராஜ், சச்சின்,டிராவிட், ஜாகிர் போன்றோர் இல்லாதது வெளிநாட்டு பிட்சுகளில் ஆடும்போது நன்கு தெரிந்தது. கவுதம் கம்பீர் இல்லாத குறை தொடக்க ஆட்டத்தில் தடுமாறும் தவான் –சர்மா ஜோடியால் நன்கு புலப்பட்டது. தனது முதலிடத்தையும் இழந்துவிட்டது. விளையாட்டில் இது சகஜம் என்றாலும் இன்னும் இந்திய கிரிக்கெட் மேம்பட வேண்டியது அவசியம்.

வாவ்ரிங்கா!
     ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாவ்ரிங்கா நடாலை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார். தனது 31 வது க்ராண்ட்ஸ்லாம் போட்டியில் இதை வென்று சாதித்துள்ளார் வாவ்ரிங்கா! சென்னை ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று சாதித்தவர் இவர். இதன் மூலம் இவரது நீண்டகால கனவு நிறைவேறியது. கடின முயற்சியும் உழைப்பும் ஒருநாள் பலனை கொடுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வாவ்ரிங்கா.

சசிக்குமாரை  “மாமா”ன்னு கூப்பிடும் அனன்யா!
     சசிகுமாரின் நாடோடிகள் படம் மூலம் தமிழில் அடையாளம் காணப்பட்டவர் அனன்யா. கேரளத்து நாயகியான இவர் தமிழில் இது வரை நான்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தில் அருமையாக நடித்திருப்பார். இன்னும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவில்லையாம். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல கேரக்டர்கள் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் இவருக்கு ஆசையாம். படத்தில் நடிக்க இவர் ஹோம் ஒர்க் எதுவும் செய்வதில்லையாம். இயக்குனர் சொல்லிக் கொடுப்பதை திரும்ப செய்வாராம். அதனால்தான் என் நடிப்பு இயல்பாக இருக்கிறது என்கிறார்.  நாடோடிகள் படத்தில் சசிக்குமாரை மாமா என்று கூப்பிடுவேன். அதனால் இப்பவும் அவரை மாமா என்றே கூப்பிடுகிறேன். நல்ல நட்போடு இருப்பவர் சசி. மலையாலத்தில் இசை ஆல்பம் பாடி இருக்கிறேன், படத்திலும் பாடி இருக்கிறேன். தமிழிலும் வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன் என்கிறார்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வெந்தயக்கீரை, கொத்துமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக்கொண்டு குளித்தால் தலைமுடி பட்டுப்போல மின்னும்.

பாகற்காயை நறுக்கி காயவைத்து தூளாக்கிக் கொண்டு ஒரு டீஸ்பூன் தூளுடன் ஒரு டம்ளர் வெந்நீர் கலந்து குடித்துவர அல்சர் விரைவில் குணமாகும்.

கையில் புண்ணோ, காயமோ இருக்கும் சமயம் நாய், பூனை, கிளி போன்ற செல்ல பிராணிகளை தூர வைக்கவும். அதை தூக்கி கொஞ்சுவதை தவிர்க்கவும். பிராணிகள் கீறினாலோ நக்கினாலோ நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.

தினைமாவு என்பது உடலுக்கு வலுசேர்க்கும் ஐயிட்டம்.  தினையை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வறுத்து மாவாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், சிறிதளவு ஏலக்காய்ப்பொடி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உடலுக்கு வலுசேர்க்கும் அற்புத ஸ்வீட் இது. வெல்லம் சர்க்கரையை தவிர்த்து வெறும் தேன் மட்டும் கலந்தும் செய்யலாம்.


6 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு முறைக்கு அரைமாத்திரைகளாக நான்குமுறை பாரசிடமால் மாத்திரைகள் பயன்படுத்தலாம். இதுவே 9 முதல் 15 வயதுவரை உள்ளவர்கள் எனில் ஒரு மாத்திரையாக பயன்படுத்தவேண்டும்.

தேனில் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் இல்லவே இல்லை!

இந்தியன்டா!

   ஒருநாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய்சிங் மஹாராஜா அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் வலம் வந்தார். அங்கே ரோல்ஸ்ராய் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார்.
   அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி வெளியே போகச் சொல்லிவிட்டார். மனமுடைந்த மகாராஜா தன் விடுதி அறைக்கு வந்தார். தன் வேலையாட்களை அழைத்து காட்சியகத்திற்கு சென்று ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை விருப்பம் தெரிவித்தார் என்று கூறிவரச்செய்தார். சிறிது நேரம் கழித்து தன் ராஜ உடையில் கம்பீரமாக காட்சியகத்திற்கு சென்றார். அங்கு இவருக்கு சிவப்பு கம்பளவரவேற்பும் மரியாதையும் கிடைத்தது.  அங்குள்ள ஆறு கார்களையும் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக் கொண்டார்.
   மன்னர் இந்தியா வந்ததும் அந்த ஆறு கார்களையும் மாநகராட்சித் துறைக்கு அனுப்பி, அவற்றை ஊரை சுத்தப்படுத்தவும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு சரிய ஆரம்பித்தது. ஐரோப்பா, அமெரிக்காவில் இந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்த்தனர் பிறர். இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரைத்தான் நீ வைத்திருக்கிறாயா? என்று கேலி செய்தனர்.
  உடனே அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியும் தவறை உணர்ந்ததாகவும் குப்பை அள்ளுவதை நிறுத்தும்படியும் மன்னருக்கு தந்தி அனுப்பியது. அதோடு மன்னருக்கு பரிசாக ஆறு கார்களை பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பியது.
 சரியான பாடம் புகட்டிய மகராஜா குப்பை அள்ளுவதை நிறுத்தி அந்த கார்களை வேறு விசயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டார்.

(படித்ததில் பிடித்தது)



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அந்தமான் படகுவிபத்து வருத்தப்படும் சம்பவம்...

    டிப்ஸ் பயனுள்ளவை... நன்றி...

    படித்ததில் பிடித்தது top...!

    ReplyDelete
  2. புலியென பாய்ந்து மின்னல் வேகத்தில் கமெண்ட் செய்தமைக்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  3. I don't know such good things are available in the net. I accidentally got this page.

    ReplyDelete
  4. படித்ததில் பிடித்தது மிகவும் அருமை. எனக்கு இந்த கதை அரசல்புரசலாக தான் தெரியும். இன்று தங்களின் இந்த பதிவால் நன்றாக தெரிந்து கொள்ளமுடிந்தது.

    அந்தமான் படகு விபத்து மிகவும் கோரம்.

    ReplyDelete
  5. நல்ல கதம்பம். அந்தமான் படகு விபத்து - மிக கோரம்..... தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2