மரண தண்டனைக்கு மரண அடியும்! நஸ்ரியாவின் திருமணமும்! கதம்ப சோறு பகுதி 19

கதம்ப சோறு பகுதி 19

வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேருக்கு மரணதண்டனை ஆயுள் தண்டணையாக குறைப்பு:


    சந்தன வீரப்பன் கூட்டாளிகள் மாதேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் பேர் உட்பட 15 மரணதண்டனை குற்றவாளிகளின் தண்டணையினை ஆயுள் தண்டணையாக குறைத்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கருணை மனு மீது பரிசீலிக்க காலம் தாழ்த்தியதாலும் மனநலபாதிப்பு காரணமாகவும் மரணதண்டனை ஆயுள் தண்டணையாக குறைக்கப்பட்டுள்ளது. மரண தண்டணையை எதிர்த்துவரும் ஆர்வலர்களிடையே இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதே போல் ராஜீவ் கொலை வழக்கிலும் பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் ஆயுள் தண்டணையாக குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. என்னைப் பொருத்தவரையும் தண்டணை என்பது குற்றவாளிகளை திருத்தக்கூடியதாக இருக்க வேண்டும். கொடிய பயங்கரவாதிகளுக்கு வேண்டுமானால் தூக்குத்தண்டணை கொடுக்கலாம். சந்தர்ப்பவசத்தால் திசைமாறி பின்னர் அதற்காக வருத்தப்படும் சிலருக்கு ஆயுள் தண்டணையே அதிகபட்ச தண்டணையாக இருக்க முடியும். இந்திய சட்டங்கள் கொஞ்சம் மாறவேண்டிய கால கட்டம் இது.

சசிதரூர் சுனந்தா புஷ்கர்!

   எனது கணவருக்கும் பாகிஸ்தான் பெண் நிருபருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சுனந்தா புஷ்கர் அறிவித்த சில தினத்தில் ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்தார். முதலில் உடலில் காயங்கள் இருந்தது என்றார்கள். மருந்துகள் ஓவர் டோஸ் என்றார்கள். தூக்கமாத்திரை சாப்பிட்டுவிட்டார் என்கிறார்கள் தினம் ஒரு தகவல்கள் புதிது புதிதாய் கிளம்புகின்றன. சசிதரூர் ஐ.நாவில் வேலைபார்த்தவர். ஐ.நா தலைமை செயலராக வரும் வாய்ப்பும் ஒருகாலத்தில் இருந்ததாக கேள்விப்பட்டேன். கேடுகெட்ட கட்சியில் இணைந்து ஒரு முறைபதவி இழந்து மீண்டும் பதவியை சம்பாதித்துக் கொண்டபோதும் துரதிருஷ்டம் அவரை விடவில்லை! சுனந்தா மரணம் பற்றிய செய்திகள் இன்னும் கொஞ்சநாளில் மறக்கடிக்கப்படலாம்! அதே சமயம் பாகிஸ்தான் உளவுத்துறையோடு இவருக்கு என்ன சம்பந்தம்? சுனந்தா சொன்னது உண்மையாக இருக்குமானால் மத்திய அரசை நாம் எவ்வளவு தூரம் நம்புவது?

சென்னைக்கு வருகிறது சோலார் ஆட்டோ!

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மாற்று தொழில்நுட்பத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மாறிவருகின்றன. அதே சமயம் பெட்ரோல்,டீசல் விலையும் உச்சிக்கு செல்வதால் எலக்ட்ரானிக் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோக்கள் சென்னையில் இயக்கப்பட உள்ளன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த ஆட்டோக்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இந்த வகை ஆட்டோக்களை மின்சாரம் அல்லது சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு தடவை சார்ஜ் செய்ய ஆறுமணிநேரம் ஆகும். இப்படி செய்தால் குறைந்தபட்சம் 100 கி.மீ வரை ஓடும். இந்த ஆட்டோவின் விலை 1.45 லட்சம். பி.அண்ட் பி எனர்ஜி சொல்யூசன் நிறுவனம் இந்தவகை ஆட்டோக்களை தயாரித்து விற்பனைக்கு வைக்கிறது. முதல்கட்டமாக பத்து ஆட்டோக்களை சென்னையில் அடுத்தமாதம் முதல் இயங்க உள்ளது. ஆறு பேர்வரை இதில் பயணிக்கலாம்.

முயலை வென்ற ஆமை!

     சீனாவில் நடந்த வீட்டுப்பிராணிகளுக்கான பனிச்சறுக்கு விளையாட்டில் முயலை வென்று ஆமை சாதித்துள்ளது. சீனாவில் ஹீனன் மாகாணத்தில் கடந்தவாரம் நடைபெற்றது செல்லப்பிராணிகளுக்கான பனிச்சறுக்குப்போட்டி. இதில் 40 செல்லப்பிராணிகள் தங்கள் எஜமானர்களுடன் கலந்து கொண்டது. பனிச்சறுக்குப் போட்டியில் எப்படி செல்வது என்று உரிமையாளர்கள் தங்கள் பிராணிகளுக்கு பயிற்சி அளித்தனர். குளிர்காலத்தில் உறங்கும் தன்மை கொண்ட ஆமை அதன் உரிமையாளர் அளித்த உற்சாகத்தில்  முதலிடத்தில் வந்தது. தாவி ஓடியதால் விதி மீறிய முயல் தோல்வியை தழுவியது.

ஊட்டியை மிரட்டும் புலி!


  ஊட்டி அருகே நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அருகில் சில கிராமங்களில் புகுந்த புலி ஒன்று இரண்டு பெண்கள் உட்பட மூவரை கொன்றுவிட்டது. இதையடுத்து கடந்த ஒருவாரமாக புலியை முதுமலை வனக்காப்பக அதிகாரிகள்300 பேர் உட்பட கிராமமக்கள் போலீசார் என 500 பேர் தேடிவருகின்றனர். இந்த புலி முதுமலையை சேர்ந்தது என்று கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை. காடுகள் அழிக்கப்படுவதும் விலங்குகளுக்கான வனப்பரப்புகள் குறைந்து வருவதுமே புலிகள் மட்டுமில்லாது எந்த வனவிலங்கும் ஊருக்குள் நுழைய காரணம் ஆகும். புலியை தேடி பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் வரை அந்த கிராமமக்களிடையே பீதி இருக்கும்.  கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் என்ற ஒரு நோய் புலி, சிறுத்தை,சிங்கம் போன்றவற்றை தாக்கும்போது மனிதர்களை நெருங்கி வந்து தாக்குதலில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த நோய் பரவாமல் இருக்க புலிகள் காப்பகங்களை ஒட்டியுள்ள பகுதிகள் அதன் வெளிப்பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த நோய் புலியை பீடித்திருக்குமோ என்ற சந்தேகமும் வனத்துறையினருக்கு உள்ளது.விரைவில் புலி பிடிபட்டால் ஒழிய மக்களின் கிலி அடங்காது.

மணிசங்கர் அய்யரின் தரமற்ற பேச்சு!

   பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் மோடியை டீ வியாபாரி என்று கேவலமாக தரமற்ற முறையில் விமரிசித்த மணிசங்கர் அய்யருக்கு அவரது கட்சியிலும் கூட்டணிக்கட்சியிலுமே எதிர்ப்பு பரவி உள்ளது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாகரீகமாக எதிர்ப்பை தெரிவிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். ஒருவரின் தொழிலையோ, குலத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவது தவறு. டீ வியாபாரி என்று அய்யர் விமரிசித்துள்ளது அவரது கீழ்த்தனமான புத்தியையே காட்டுகிறது. மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கானவர் இல்லை என்பது அவரது நிர்வாகத்தை வைத்து முடிவு செய்யவேண்டுமே தவிர அவரது தொழிலை வைத்து அல்ல. முதலில் அவர் ஒரு டீ வியாபாரியாக இருந்து இன்று குஜராத் முதல்வராகி பிரதமர் வேட்பாளராக உறுவெடுத்து உள்ளது அவரது உழைப்பினையே காட்டுகிறது. காங்கிரஸ் இவரை இப்படியெல்லாம் விமரிசித்து இன்னும் தாழ்ந்து போகிறது. இன்னும் ஒரு கொசுறு செய்தி கூகூள் தேடலில் உலகின் மோசமான ஊழல் நிறைந்த கட்சி என்று தேடினால் முதலிடத்தில் காங்கிரஸ் கட்சியைத்தான் காட்டுகிறது! சூப்பருல்ல!

47 ஆண்டுகளை கடந்த அண்ணா நகர் டவர்!

     சென்னை அண்ணா நகர் டவர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் அமைந்துள்ளது. 138 அடி உயர கோபுரம் உடையது இந்த டவர். இந்தநகரின் மையப்பகுதியில் 15.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது விஸ்வேஸ்வரய்யா பூங்கா. மரங்கள் குளம், நிறைய பூச்செடிகள் என பசுமை விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அமைந்துள்ள டவர் 1968 ஆம் ஆண்டில் ஜனவரி 21 ம் தேதி திறக்கப்பட்டது. இப்போது 46 ஆண்டுகளை கடந்து 47 ஆவது ஆண்டில் அடியெடுத்டு வைத்துள்ளது. இந்த அழகான டவர்.  இந்த கோபுரத்தின் உச்சியில் நின்றால் மரங்கள் நிறைந்த அண்ணா நகரை முழுமையாக ரசித்துப்பார்க்க முடியும்.

நஸ்ரியாவுக்கு திருமணம்!

    பதிவர் கோவை ஆவியின் கனவுக் கன்னிக்கு கல்யாணம் ஆகப்போகிறது. தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நஸ்ரியா நசீம். ராஜாராணி, நையாண்டி, போன்ற படங்களில் நடித்துள்ள இவருக்கும் பிரபல மலையாள பட இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில் என்பவருக்கும் இடையே  எல் பார் லவ் என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்துள்ளது. இரு வீட்டினரும் இந்த காதலுக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக பாசில் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கிருந்தாலும் வாழ்க!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

கால் குடைச்சலால் அவதியா? அடிக்கடி மிளகு ஜீரகப் பொடி சாதம் சாப்பிட்டு வந்தால் குடைச்சல் குறைந்து போகும்.

ஸ்கெட்ச் பேனா ஒன்று மட்டும் வாங்குவதாக இருந்தால் மற்ற எல்லா நிறங்களைவிட  வாடாமல்லி கலரும், பச்சைக்கலரும்  நீடித்து வரும். டார்க்காகவும் இருக்கும்.

சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள்தூள் போட்டு தெளிந்ததும் உப்பு, சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.

ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சி தடவி வந்தால் குணமாகும்.

மாதவிலக்கு வயிற்றுவலிக்கு சிறிதளவு படிகாரத்துடன் ஏழு மிளகைச் சேர்த்து பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கால்பாகமாக ஆகும் வரை காய்ச்சி ஆறவைத்து அருந்தினால் வயிற்றுவலி குணமாகும்.


என்னை குருடனாக்கு!

 ஒரு கழைக்கூத்தாடி தன் பரிவாரங்களுடன் ஒரு கழுதை, குரங்கு, நாய் இவற்றுடன் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். அது புனித ரம்ஜான் இரவு. ஒரு மண்டபத்தில் தங்கினர். ஒரு இரவு வானத்தில் ஒளி மண்டலம். இந்த நேரத்தில் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை. நாய், குரங்கு, கழுதை மூன்றும் தங்கள் கோரிக்கையை வேண்டிக்கொண்டபின் எஜமானனை எழுப்பின.
  எஜமானன் நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்? நீங்கள் கேட்டதையே நானும் கேட்டுவிடக்கூடாதே! என்று மூன்றிடமும் கேட்டான்.
  என்னை பேரரசர் ஆக்கிவிடும்படி கேட்டேன் என்றது கழுதை!
நான் தலைச்சிறந்த மதகுருவாக மாறவேண்டும் என்று கேட்டேன் என்றது குரங்கு.
நான் இந்நாட்டின் தலைமை அமைச்சராக வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றது நாய்.
மூன்றின் கோரிக்கைகளையும் கேட்ட கழைக்கூத்தாடி  வேண்டிக்கொண்டான்.
   ஆண்டவனே! என்னைக் குருடனாக்கிவிடு! இவர்கள் கோலொச்சும் அரசாங்கத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

                     (சிறுவர்களுக்கான ஒருநிமிடக் கதைகள் என்ற நூலில் படித்தது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. செய்தி விமர்சனமும் குட்டிக் கதையும் அருமை
    சுவாரஸ்யமான பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குற்றவாளிகள் திருந்தினால் சரி... சோலார் ஆட்டோ தேவையான ஒன்று தான்... டிப்ஸ்களுக்கு நன்றி... ஒருநிமிடக் கதை அருமை...

    ReplyDelete
  3. இத்தனை நல்ல விசயங்களை மொத்தமாக கொடுத்தால் எதனை பாராட்டுவது... இந்தியா விரைவில் தூக்கு தண்டனைகள் இல்லாத நாடாக மலர வேண்டும்.... குட்டிக் கதை சில பல உண்மைகளை சொல்லி செல்கிறது

    ReplyDelete
  4. தங்களின் டிப்ஸ் எல்லாம் அருமை. ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் , தனியாக டிப்ஸ் என்று போட்டால் என்னை மாதிரி ஆட்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  5. கதம்பம்..... மிக அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2