உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 38

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 38



வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் வழூஉச் சொல் குறித்து பார்த்தோம். அதற்கு பின்னூட்டம் இட்ட நண்பர் திரு பரிதி முத்துராசன் அவர்கள். இப்படி வழுவாக எழுதும்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.
      உண்மைதான்! புனைவு, சிறுகதை போன்றவை எழுதும்போது இப்படி கொச்சையாக வழூஉவாக எழுதலாம் தவறில்லை! ஆனால் கட்டுரை, இலக்கியம் போன்றவை படைக்கும்போது நல்ல தமிழை எழுதுவதே தமிழுக்கு செய்யும் மரியாதை ஆகும் என்பது என் கருத்து. இந்த வாரம் நாம் எழுத்து பிறக்கும் இடங்களை காணப்போகிறோம்.

எந்த மொழியானாலும் எழுத்துக்கள் இல்லையேல் மொழி இல்லை என்பது உறுதி. வரிவடிவமான எழுத்துக்கள் பிறக்க காரணமானவை ஒலி அணுக்கள். மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்று சொல்கிறது நன்னூல்.

உயிருள்ள உடம்பினுள் எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றை பொருந்தி உதடு,நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) ஆகிய இவ்வுறுப்புக்களின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாக பிறக்கின்றன.

எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப்பிறப்பு என இருவகையாக பிரிக்கலாம்.
இடப்பிறப்பு:
    எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு என்பர்.
முயற்சிப்பிறப்பு:
      உதடு முதலான உறுப்புக்களின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை முயற்சிப்பிறப்பு என்பர்.

உயிர் பன்னிரண்டும்,மெய் பதினெட்டும் முதலெழுத்துக்கள் என்று அழைக்கப்படும். மெய் எழுத்துக்களை ஒலிக்கும் போது மூன்றுவிதமான ஒலிகளை நாம் கேட்போம். அவை வல்லினஒலி, மெல்லினஒலி, இடையின ஒலி என்று வழங்கப்படுகிறது.
 இந்த ஒலிகள் வேறுபட காரணம் அவை பிறக்கும் இடங்களின் மாறுபாடே காரணமாகும். ஒலி  எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்கு துணை செய்யும் உறுப்புக்களை ஒலிப்பு முனைகள் என்றும் சொல்வர்.

முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு:
 1.பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தில் இருந்து பிறக்கின்றன.
2. மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கில் இருந்து பிறக்கின்றன.
3. வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பில் இருந்து பிறக்கின்றன.

முதலெழுத்துக்களின் முயற்சிப்பிறப்பு:

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு:
     அ,ஆ இவ்விரண்டும் வாயைத்திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

இ,ஈ,எ,ஏ,ஐ, ஆகிய ஐந்து எழுத்தும் வாயைத்திறப்பதோடு மேல்வாய்பல்லை நாவிளம்பு தொடுவதால் தோன்றுகின்றன.

உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய ஐந்து எழுத்தும் உதடுகளை குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

அடுத்து மெய்யெழுத்துக்களின் பிறப்பினை பார்க்க அடுத்தவாரம் வரை பொறுத்திருங்கள் வாசகர்களே! இவ்வாறு எழுத்து பிறக்கும் இடங்களை அறிந்து உச்சரித்தால் உச்சரிப்புப்பிழை ஏற்படாது. தமிழை தமிழாக பேச முடியும். முயற்சித்து பாருங்கள்.

இனிக்கும் இலக்கியம்:

   சீட்டுக்கவி:  சீட்டுக்கவி என்பது அரசர், கொடையாளர்களுக்கு புலவர்கள் தாம் விரும்பும் பொருளை பெறவேண்டி, ஓலைச்சீட்டில் கவிதை எழுதி அனுப்பி வேண்டுதல் ஆகும். இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்ற வேறுபெயர்களும் உண்டு.


காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர் வடுகநாதரின் பிள்ளை அந்தகக்கவி வீரராகவர். பிறவியிலேயே கண்பார்வை இழந்த இவர், கேள்வியறிவாலேயே கல்விபயின்று மனதிலேயே எழுதிப்படித்தவர். இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் புகழ்ந்து பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றை பரிசாக பெற்று  திரும்பிய இவர் புகழ் எங்கும் பரவியது.

      ஏடாயிரங் கோடி எழுதாது தன்மனத்(து)
          எழுதிப் படித்த விரகன்.
       இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிவீர
           ராகவன் விடுக்கும் ஓலை

      சேடாதி பன்சிரமமைத்திடும் புகழ்பெற்ற
          திரிபதகை  குல சேகரன்
       தென்பாலை சேலம் புரந்துதா கந்தீர்த்த
          செழியனெதிர்  கொண்டு காண்க.

       பாடத கந்தருவம், எறியாத கந்துகம்,
          பத்திகோ ணாத  கோணம்,
       பறவாத கொக்கனற் பண்ணாத கோடை, வெம்
          படையில் தொடாத குந்தம்

       சூடாத பாடலம், பூவாத மாவொடு,
            தொடுத்து  முடியாத சடிலம்
        சொன்னசொற் சொல்லாத கிள்ளையொன் றெங்கும்
              துதிக்கவர    விடல் வேண்டுமே.

விளக்கம்:  கணக்கற்ற நூல்களை கையினால் சுவடியில் எழுதாது தன் மனத்தால் எழுதி அவற்றை தெளிவாக கற்ற திறமையுடையவனும், இமயம் முதல் சேது வரை இந்த திருநாட்டில் தனக்கு நிகர் எவருமிலாத கவிஞனாகிய வீரராகவன் விடுக்கும் ஓலை.
  ஆயிரம் தலைகளையுடையவன் ஆதிசேடன், அவன் கேட்டு இன்புற்று மெய்மறந்து தலையசைக்குமாறு செய்யும் கலைக்கு இருப்பிடமான குலசேகரன். அவன் கங்கர் குலத்தில் உதித்து தெற்கில் உள்ள பாலக்காடு முதல் சேலம் வரை நாட்டு மக்களின் குறை தீர்த்து நலம் செய்தவன்.இத்தகு பெருமையுடைய செழியதரையன் இவ்வோலையை பெற்று பிரித்து காண்பானாக.

பாட்டிசைக்காத கந்தருவம்(இசை) எறியமுடியாத கந்துகம்(பந்து) கூர்மை மழுங்காத கோணம்( வாட்படை) பறக்காத கொக்கு, அனல் வீசாத கோடைவெயில்,  கொடிய படைக்கலம் போன்று பிடியாத குந்தம்( சூலம்) அணியாத பாடலம்( பாதிரிப்பூ) பூவாத மா(மாமரம்) மலர்மாலை அணியாத சடிலம்( சடை) சொல்லியதை திருப்பிச் சொல்லாத கிள்ளை(கிளி) ஒன்றனை காண்போர் எல்லாம் புகழுமாறு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கோடை,குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை, இவை எல்லாம் குதிரையை குறிக்கும் வெவ்வேறு பெயர்கள். ஒவ்வொரு சொல்லும் தனித்த பொருளை தந்தாலும் இவை அனைத்தும் அடைநீக்கி பார்க்கின் குதிரையை உணர்த்தும். ஆகவே குதிரை ஒன்றை வழங்குமாறு கேட்டுள்ளார் கவி. இதில் இருந்து வீரராகவரின் சொல் ஆட்சி நன்றாக விளங்குகிறது அல்லவா?

தொடர்ந்து பயணிப்போம்.

உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. தெரியாத புரியாத எழுத்தெல்லாம் தெரிவித்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. இலக்கிய விளக்கம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. முதலில் இந்த பதிவுக்கு நன்றிகள்.

    நான் ஒரு சில எழுத்துக்களை மட்டும் என்னிடம் பயிலும் மாணவர்களிடம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன் (வார இறுதி தமிழ் பள்ளிக்கூடத்தில்). இப்பொழுது மேல்நிலை வகுப்புகளுக்குத்தான் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    இந்த பதிவையும், இனி வரும் அடுத்த பதிவையும் என்னுடைய சக ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கச் சொல்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2