களிப்பில்லாத பொங்கல்!

களிப்பில்லாத பொங்கல்!


பொங்கல் இப்போதெல்லாம் களிப்பில்லா பொங்கலாகிவிட்டது. பொங்கல் விழா மட்டும் அல்ல! சர்க்கரை பொங்கல் கூடத்தான். எதன் அருமையும் அது கிட்டாத போதுதான் தெரியும் சுமார் 30 வருடங்களுக்கு முன் என் தாத்தா-பாட்டி வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கோயில் விசேஷங்களுக்கு பிரசாதம் சர்க்கரை பொங்கல் மட்டும் செய்ய மாட்டார்கள். தயிர்சாதம், புளிசாதம், லெமன் ரைஸ், மிளகு பொங்கல், என வெரைட்டியாக இருக்கும். ஆனால் இதெல்லாம் ஒரே நாளில் இருக்காது. ஒரு விசேசத்துக்கு ஒன்று. அதனால் சர்க்கரை பொங்கல் என்ற சுற்று வர ஒரு ஆறுமாதம் ஆகும்.
      சாமிக்கு நிவேதனம் செய்து வருபவர்களுக்கு கொடுத்து மீந்த பொங்கல் கொஞ்சம்தான் இருக்கும். அதை சாப்பிட நிறைய ஆவலாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கிடைக்காதா? என்ற போது குண்டான் காலியாகி இருக்கும். சுவையும் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றாலும் சர்க்கரைபொங்கல் கிடைக்க இன்னும் நிறைய மாதங்கள் காத்திருக்க வேண்டுமே என்று தோன்றும்.

    அங்கிருந்து புலம் பெயர்ந்து சொந்த ஊர் நத்தம் வந்தபின் எங்கள் ஊர் கோயிலில் எந்த விசேசம் என்றாலும் சர்க்கரை பொங்கல்தான். மாதம் ஒரு பண்டிகை வரும். அதற்கும் சர்க்கரை பொங்கல்தான். சர்க்கரை பொங்கல் தின்று தின்று சலித்துப் போய்விட்டது. இங்கு அங்கை விட சுவையும் அதிகம் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் சர்க்கரைப் பொங்கல் சலித்துவிட்டது. ஆரம்ப நாட்களில் இங்கும் கிடைக்காது. கொஞ்சம்தான் கிடைக்கும். அப்போது வெல்லம் குறைவாக போட்டிருப்பார்கள் நெய் ஊற்றமாட்டார்கள் டால்டாதான்! ஆனால் இப்போது கொஞ்சம் வசதி வந்து நெய்யும் முந்திரியும் திராட்சையும் மிதக்க சர்க்கரை பொங்கல் செய்தாலும் 1\4 கிலோ செய்தால் கூட மீந்துவிடுகிறது.
      அதே போல்தான் பொங்கல் பண்டிகையும்! இந்த பண்டிகைகள் அனைத்தும் சிறுவர்களுக்குத்தான்! அரை டவுசர் போட்டு ஆடிப்பாடி கொண்டாடிய பொங்கல்கள் இப்போது இல்லை! இயந்திரத்தனமாக சென்று கொண்டிருக்கிறது இன்றைய பொங்கல். சின்ன வயதில்பொங்கல் என்றால் அவ்வளவு மகிழ்ச்சி! வீடுகளை ஒழித்து ஒட்டடை அடித்து பெருக்கி சுண்ணாம்பு அடித்து இதற்கெல்லாம் சகோதர சகோதரிகளுடன் நண்பர்களும் சேர்ந்து உதவுவார்கள். ஒரு வாரம் ஜாலியாக பொழுது போகும்.
   போகி கொளுத்த என்று உதவாத பொருட்களை குவித்து வைத்து, போகியன்று விடிகாலையில்  அப்பா எழுப்ப, எழுந்து போகி கொளுத்தி மகிழ்ந்து, குளிர்காய்ந்துவிட்டு அம்மா எண்ணெய் தேய்த்து விட குளித்து விடுமுறை என்பதால் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டோ ப்ரெண்ட்ஸ்களுடன் விளையாடிவிட்டோ வர மதியம் ஆகிவிடும். மதியம் பாயசம் வடையுடன் சாப்பாடு. பின்பு மீண்டும் விளையாட்டு.
   மறுநாள் பொங்கலுக்கு தயார் ஆகி விடுவோம். குளித்து முடித்து புது துணி அணிந்து சாமிகும்பிட்டு சாப்பிட்டுவிட்டு அரட்டை கச்சேரி நடக்கும். அப்புறம் தூர்தர்ஷன் வந்து சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பித்து வைத்தது. அதை பார்த்துக்கொண்டு பொழுது போகும். சில பொங்கலுக்கு புது துணி வாங்க கூட காசிருக்காது. பழைய துணியோடே பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும். ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

    பொங்கலுக்கு துணி வாங்க குடும்பத்தோடு ஜவுளிக்கடைக்கு செல்வதே ஒரு மகிழ்ச்சி! கிராமத்தில் இருந்து கொஞ்சம் டவுனுக்கு செல்வது என்றால் அலாதியான சுகம்தானே! ஜவுளிக்கடையில் விதவிதமான துணிகளை பார்க்கும் போது மனம் ஏங்கும்! அப்பாவின் பட்ஜெட்டோ இடிக்கும். நம்மை சமாதானப்படுத்தி அவர் வாங்கித்தரும் துணிகளை மகிழ்வோடு வாங்கிக்கொண்டு வரும் அந்தபடலம் ஒரு சுகானுபவம்!
    பொங்கல் வைத்து அன்று முழுவதும்பலகாரங்களை சுவைத்துக் கொண்டும் கரும்பை சீவி கடித்து துப்பிக் கொண்டு நண்பர்களோடு விளையாடி கழித்த பொங்கல்கள் களிப்படைய வைத்த பொங்கல்கள். மாட்டுப்பொங்கலன்று மாடுவிரட்டை ரசித்து காணும் பொங்கலன்று நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்ட தினங்கள்! இதெல்லாம் சிறுவர்களுக்குத்தான்! அரை டவுசர் பசங்களுக்குத்தான் பொங்கல் ஜாலி பொங்கல்!
  இதோ இன்றும் பொங்கல் கழிந்து விட்டது! வழக்கம் போல ஒரு தினமாக! காய்ச்சல் வேறு! இருந்தாலும் பணி விடவில்லை! வழக்கம் போல எல்லாம் நடைபெற்றுவிட்டது! பொங்கலும் கொண்டாடிவிட்டாலும் பழைய களிப்பில்லை! அதே சமயம் என்னுடைய இரண்டு பெண்களுக்கும் ஜாலி கொண்டாட்டம்தான்! புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டு அவர்கள் செய்த லூட்டி அருமை! மாவுக்கோலங்களை களைத்து இளையவள் போதனா பூசிக்கொண்டு செய்த ரகளை ரசிக்க வைத்தது.
   நமக்கு களிப்பில்லாவிட்டாலும்! நமது குழந்தைகள் களிப்படைய பொங்கல்பூத்துக் கொண்டுதான் இருக்கிறது! குழந்தைகளிடம் நமது குழந்தைத்தனத்தை கண்டு ரசித்துக் கொண்டாடுவோம் இனிய பொங்கலை!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

டிஸ்கி} என்னமோ தோணிச்சு! பதிவாக்கி விட்டேன்! பொங்கல் விழாவுல மொக்கை போட்டுட்டதா யாரும் கோவிச்சுக்க வேணாம்!  வழக்கமான பகுதி கதம்பசோறு அடுத்தவாரம் வெளிவரும்.





Comments

  1. சுவையும் அதிகம் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு //ஆனால் பானையில் பொங்கல் செய்தால் நச்சும் இருக்காது என சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. அற்புதமான சிறப்புப் பதிவு
    படித்துக் களித்தேன்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ம்... அந்தக்காலமே வேறு... உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  4. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  6. பொங்கல் வாழ்த்துகள் நண்பா!

    ReplyDelete
  7. பொங்கல் நல்வாழ்த்துகள்......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2