உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 39

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 39



வணக்கம் அன்பு வாசகர்களே! தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த பகுதியை எழுதி வரும் எனக்கு பல்வேறு வகுப்பு இலக்கண புத்தகங்கள் மிகுந்த உதவியாக உள்ளன. அவற்றை என்பாணியில் தந்துவருகிறேன்! நேற்று சுபத்ரா என்பவரின் வலைப்பூவில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. தமிழ் எப்படி மூத்தமொழி என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அருமையாக விளக்கியுள்ளார் தோழி. அருமையான பதிவு அது. நீங்களும் சென்று படிக்க இதோ லிங்க்.
 அந்த கட்டுரையோடு பார்க்கும்போது நானெல்லாம் ஒரு சிறு துரும்பாகத் தான் தோன்றுகிறது.
   எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை சென்றவாரம் பார்த்தோம். அதை நினைவு கூற இங்கு
உயிர் எழுத்துக்கள் பிறந்தவிதம் அறிந்தோம். இன்று மெய் எழுத்துக்கள் பிறக்கும் விதம் அறியலாமா?


மெய்யெழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு.

க்,ங் – இவை இரண்டும் நாவினது முதற்பகுதி அண்ணத்தை தொடுவதனால் தோன்றுகின்றன.
ச்,ஞ் – இவை இரண்டும்  நடுநாக்கு நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ட்,ண் – இவை இரண்டும் நாக்கின் நுனி அண்ணத்தின் நுனியை தொடுவதினால் பிறக்கின்றன.
   (அண்ணம் என்பது மேல்வாய்ப்பகுதியை குறிக்கும்)

த்,ந்  - இவை இரண்டும் மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கின் நுனி பொருத்துவதால் தோன்றுகின்றன.

ப்,ம் – இவையிரண்டும் மேலுதடும், கீழுதடும் பொருந்துவதால் தோன்றுகிறது.
ய்- இது நாக்கின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியினை பொருத்துவதால் தோன்றுகிறது.

ர்,ழ் – இவை மேல் வாய் நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கின்றன.

ல்- இந்த எழுத்து  மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கினது ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கின்றது.

ள் – இந்த எழுத்து  மேல்வாயை நாவினது ஓரங்கள் தடித்து தடவுவதனால் பிறக்கின்றது.

வ் – இது  மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.

ற்,ன் – இவை மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் பிறக்கும் வகை அறிந்தோம்.

ஆய்த எழுத்தான ஃ தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.அதன் முயற்சிப்பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தல் ஆகும்.

பிற சார்பெழுத்துக்கள் யாவும் தத்தம் முதலெழுத்துக்கள் தோன்றுவதற்குரிய இடத்தினையும் பிறத்தற்குரிய முயற்சியையுமே தமக்குரியனவாக( காப்பிஅடித்து) கொண்டு ஒலிக்கின்றன.

(சார்பெழுத்துக்கள் என்பவை க முதல் னௌ வரை உள்ள உயிர்மெய் எழுத்துக்கள்)
 எழுத்துக்கள் எப்படி ஒலிக்கின்றன பிறக்கின்றன என்பதை அறிந்து அதன்படி முறையாக பயிற்சி செய்தால் எழுத்துக்களை பேசுவதில் பிழை வராது. நல்ல தமிழை உச்சரிக்கலாம். தமிழனாக பிறந்து நல்ல தமிழ் பேசுவது நம் கடமை அன்றோ?

இனி இலக்கியம்!


வள்ளல் குமணனிடம் பரிசில் பெற சென்றார் பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர். அப்போது இளங்குமணன் நாட்டைக் கவர்ந்து ஆண்டுவந்தான். குமணனை கொல்லவும் காத்திருந்தான். குமணன் காட்டில் மறைந்து வாழ்ந்தான். சாத்தனார் குமணனிடம் சென்றார். அங்கு குமணணை வாழ்த்தி பாடும் பாடல் இது!

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுகம் நோக்கி
நீரோடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே.

விளக்கம்:  நல்ல போரை செய்யக்கூடிய குமணனே! பலவாறு அடுக்கப்பட்ட பண்ணுதல் அமைந்த நரம்பை உடிய தோலால்போர்க்கப்பட்ட நல்ல யாழையும் மத்தளத்தையும் உடைய கூத்தரின் வறுமையை போக்கக் கூடிய குடியில் பிறந்தவனே!
   என் வீட்டில் சமைத்தல் தொழிலை மறந்துவிட்டதால் உயர்ந்த என் வீட்டுஅடுப்பில் காளான் பூத்துள்ளது. உடலை மெலியச் செய்யும் பசியால் வருந்தி தோல் சுருங்கி பால் வற்றிப்போன முலைகளை வறிதே சுவைக்கும் என் குழந்தையின் அழுதமுகத்தை பார்த்து நீரால் நிறைந்த ஈரமான இமைகளை உடையவளானாள் என் மனைவி. இந்த இருவரின் வருத்தத்தை போக்கக் கூடியவன் நீ என எண்ணி உன்னிடம் வந்தேன். என் நிலையை நீ அறிந்து கொண்டதனால் இந்த வறிய நிலையில்  உன்னை வளைத்து வற்புறுத்தியேனும் உன்னிடமிருந்து பரிசிலை பெற்றுக்கொள்ளாமல் விடமாட்டேன்  என்கிறார் சாத்தனார்.

அருமையான உவமைகள் சொல்லும் அற்புதமான பாடல் இது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றொரு சுவையான பாடலில் சந்திப்போம்!
 இதை படித்து விட்டீர்களா?


உங்களின் கருத்துக்களை பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஒவ்வொரு எழுத்தும் பிறக்கும் விளக்கமும், வாழ்த்துப் பாடல் விளக்கமும் மிகவும் அருமை... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சங்க இலக்கியப் பாடல் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சங்க இலக்கியப் பாடலும் விளக்கமும் அருமை நண்பரே

    ReplyDelete
  4. மிக மிக அருமை. தொடரட்டும் பகிர்வுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2