உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 37

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 37


வணக்கம் வாசகர்களே! நண்பர்களே! இந்த பகுதிக்கு சிறப்பான ஆதரவளித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள். கற்றது கைமண் அளவு! நான் கற்றதை, கற்றுக் கொண்டு இருப்பதை இந்த பகுதி வாயிலாக உங்களுக்கு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற சில பகுதிகளாக வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்களை பற்றி விரிவாக பார்த்தோம். இந்த வாரம் வழூஉச் சொற்கள் திருத்தம் பற்றி படிக்க இருக்கிறோம்.

   அது என்ன வழூ உச்சொல்? நாம் அன்றாடம் பேசும் வழக்கிற்கும் எழுதும் வழக்கிற்கும் வேறுபாடு உண்டு. உதாரணமாக முந்தின நாள் என்பதை முந்தாநேத்து என்போம். இப்படி பேச்சுவழக்கில் பேசுவதை அப்படியே எழுதக்கூடாது. அதை திருத்தி எழுத வேண்டும். அப்படி சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம். இரண்டு வாரங்களாக கொஞ்சம் கடினமான இலக்கணம் படித்தோம் இன்று கொஞ்சம் லேசான பாடம் இது.


    வழூஉச் சொல்                   திருத்தம்

1. ஊரணி                           ஊருணி
2. உசிர்                             உயிர்
3.ஒருவள்                           ஒருத்தி
4. கடக்கால்                          கடைக்கால்
5.குடக்கூலி                         குடிக்கூலி
6. முயற்சித்தார்                     முயன்றார்
7.வண்ணாத்திப்பூச்சி              வண்ணத்துப்பூச்சி
8.வென்னீர்                         வெந்நீர்
9. எண்ணை                        எண்ணெய்
10. சிகப்பு                         சிவப்பு
11. தாவாரம்                      தாழ்வாரம்
12. புண்ணாக்கு                   பிண்ணாக்கு
13.கோர்வை                      கோவை
14. வலதுபக்கம்                   வலப்பக்கம்
15. பேரன்                        பெயரன்
16. பேத்தி                        பெயர்த்தி
17.தலகாணி                      தலையணை
18. வேர்வை                      வியர்வை
19. சீயக்காய்                      சிகைக்காய்
20  சுவற்றில்                      சுவரில்
21 கண்ணாலம்                    கல்யாணம்
22. முழித்தான்                     விழித்தான்
23.ஆத்தங்கரை                     ஆற்றங்கரை
24.பாவக்காய்                      பாகற்காய்
25. இரும்பல்                      இருமல்

பேச்சுவழக்கில் பேசுவது தவிர சில சொற்களை எழுதும் போதும் தவறாக எழுதி விடுகின்றோம். அதை தவிர்க்க இந்த பயிற்சி உதவும்.

இனி இலக்கிய சுவைக்கு செல்வோம்.


இலக்கிய சுவையில் என்றுமே சிலேடைக்கு தனி மதிப்பு உண்டு. சிலேடையில் இரு வகை உண்டு. செம்மொழிச் சிலேடை மற்றும் பிரிமொழிச் சிலேடை. இப்போது நாம் பார்க்க இருக்கும் பாடல் செம்மொழி சிலேடை வகையை சார்ந்தது. ஒரு சொல் பிரிபடாமல் நின்று பல பொருளை தந்தால் அது செம்மொழி சிலேடை எனப்படும். இலக்கியத்திலும் இலக்கணம் அறிந்து கொண்டு விட்டோம்.
இனி பாடல்

வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் – வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.

இதன் பொருள் புரிகிறதா?
   வஞ்சி மாநகரை சேர்ந்தவன் வஞ்சிக்க மாட்டேன் என்று சொன்னான். வஞ்சி மாநகரை சேர்ந்தவன் வஞ்சிக்க மாட்டான் என்று நம்பினேன். ஆனால் வஞ்சி நகரை சேர்ந்தவனோ வஞ்சிக்க மாட்டேன் என்று சொல்லி சொல்லி வஞ்சித்துவிட்டான். எப்படி? பெண்கள் எப்படி வஞ்சிப்பார்களோ அப்படி அந்த வஞ்சிநகரை சேர்ந்த அரசன் வஞ்சித்து விட்டான்.

இந்த பாடலில் வஞ்சியேன் என்ற சொல் வஞ்சி நகரை சேர்ந்தவன் என்ற பொருளையும் வஞ்சிக்க மாட்டான் என்ற பொருளையும் தருகிறது. வஞ்சியான் என்ற சொல்லும் அதே பொருளை தருகிறது. இன்னொரு வஞ்சி என்ற சொல் பெண்ணை குறிக்கிறது. இப்படி ஒரே சொல் பிரிபடாமல் பல பொருளை தருமானால் அது செம்மொழி சிலேடை.

இதை எழுதியவர் பெயர் நான் படித்த புத்தகத்தில் கிடைக்க வில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இதற்கு இன்னும் அருமையாக பொருள் உரைப்பவர்கள் உரைக்கலாம்.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!

உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இட்டு குறை நிறைகளை தெரிவியுங்கள். இது இந்த தொடர் செம்மை அடைய உதவும். மிக்க நன்றி!




Comments

  1. அருமையான செய்யுள். வழக்கில் இருக்கும் பல சொற்களின் சரியான சொல் தந்தமை நன்று.

    ReplyDelete
  2. அண்ணேன்...அந்த வழுவு தமிழில் ...அதாவது பேச்சு தமிழில் எழுத வேண்டியதை எழுத வில்லை என்றால் எழுத்து சுவராசியமாக இருப்பதில்லை என்பது என் கருத்து...........சரியா?

    ReplyDelete
  3. செம்மொழி சிலேடை விளக்கம் மிகவும் அருமை... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் சொற்களில் உள்ள வித்தியாசத்தை உணர்த்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2