ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!
ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!
சென்னை செங்குன்றத்தில் இருந்து கல்கத்தா
செல்லும் ஜி.என்.டி சாலையில் பதினைந்து
கி.மீ சென்றால் பஞ்ஜேஷ்டி என்ற ஊரை அடையலாம். அகத்திய மாமுனிவர் ஐந்து யாகங்கள்
செய்த தலம் பஞ்ஜேஷ்டி. இஷ்டி என்றால் யாகம் பஞ்சம் என்றால் ஐந்து. பஞ்ச இஷ்டி
பஞ்ஜேஷ்டி எனப்பெயர் பெற்றது. இந்த ஊரில் இருந்து மேற்கே பிரியும் மண் சாலையில்
மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய வயல்கள் நிறைந்த நத்தம் கிராமம். இந்த
கிராமத்தில் தென்மேற்கு மூலையில்
அமைந்துள்ளது ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ
திருவாலீஸ்வரர் ஆலயம்.
நத்தம் என்று இப்போது வழங்கப்படும் இந்த
கிராமத்தின் பழைய பெயர் எகணப்பாக்கம். இது இந்த ஊர் போரியம்மன் கோயிலில் கிடைத்த
கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.இராஜராஜ சோழ பெருவளத்தான் காலத்திய கல்வெட்டு அது.
இதன் மூலம் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்டது என்று அறிய
முடிகிறது.
எகணன் என்றால் பிரம்மா. பாக்கம் என்பது
கடற்கரை அருகே உள்ள கிராமங்களை குறிக்கும். கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கம்
இதற்கு உதாரணம் ஆகும். இந்த ஊரில் இருந்து 20 கி.மீ தொலைவில் பழவேற்காடு கடற்கரை
உள்ளது.
இந்த ஆலயத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன்
தெற்கு நோக்கி காட்சி தருகிறாள் அன்னை ஆனந்தவல்லி. தெற்கு வாயில் உள்ள தலங்கள்
பரிகாரத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தென் திசை எமனுக்கு உரியது. எமனுடைய
திசையில் அம்பிகை வீற்றிருக்கிறாள். எமன் வாயில் நுழைந்தவனை காப்பாற்றி அபயம்
தருகிறாள் என்பது ஐதீகம்.
ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பாள் இங்கு
முக்கண்களுடன் காலில் சதங்கை அணிந்து நாட்டிய கோலத்தில் காட்சி தருகின்றாள். பிரம்மனுக்கு
இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிய கோலத்தில் காட்சி தந்தமையால் ஆனந்தவல்லி என்ற நாமத்துடன்
நாட்டியநாயகியாக விளங்குகின்றாள். இந்த அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சகஸ்ரநாம
அர்ச்சனை செய்து வழிபட கலைத்துறையில் சிறக்கலாம் என்பது சிறப்பு.
தன்னுடைய பக்தன் ஒருவனை ராகு சர்ப்ப வடிவில்
சென்று தாக்க முற்பட அவன் அம்மனை சரணடைகிறான். அம்பாள் ராகுவை தடுக்க ராகுவான
சர்ப்பம் அம்பாளை தீண்டிவிடுகிறது. அம்பாள் மூர்ச்சை அடைகிறாள். சக்தியின்றி உலகம்
ஸ்தம்பிக்கையில் ஈசன் நெல்லிவனம் சென்று அங்கு உறையும் தம்மை வழிபடச் சொல்கிறார்.
அம்பிகை நெல்லிவனம் வந்து ஈசனைவழிபட ஈசன் அம்பாளின் உடலில் இருந்த விஷத்தன்மையை
நீக்கி அருள் பாலிக்கிறார். நஞ்சுண்ட சிவனது லிங்கத்திருமேனி கருமை நிறமானது.
இதனால் இங்குள்ள சிவலிங்கம் எண்ணெய் காப்பு இல்லாத போது கருமையாக காட்சியளிக்கும்
பால் அபிஷேகத்தின் போது பால் கருநீலமாக வழியும். ராகு- கேது- சர்ப்ப தோஷங்கள் இந்த
இறைவனையும்- இறைவியையும் பால் அபிஷேகம் செய்து வழிபட விலகும்.
இத்தகு சிறப்புவாய்ந்த இந்த ஆலயம்
கவனிப்பாரற்று இருந்தது. கடந்த 2012ல் கிராமமக்கள் முயற்சி செய்து கும்பாபிஷேகம்
செய்தனர். அதனுடைய இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருகின்ற 4-1-2014
அன்று ஆலயத்தின் வருஷாபிஷேக தினத்தில் காலை 8.30 மணி முதல் விசேஷ ஹோமங்கள்
நடைபெற்று சிறப்பு அபிஷேகங்கள் கலசாபிஷேகம் முதலியவை மதியம் 1.மணிவரை நடைபெற
உள்ளது.
மாலை 6.மணிக்கு ஆனந்த வல்லி அம்பிகைக்கு விசேஷ
அலங்காரம் செய்விக்கப்பட்டு அன்னப்பாவாடை என்னும் படையல் நிவேதனம் செய்யப்படும்.
அன்னப்பாவாடை என்பது அன்னத்தால் படையல்
செய்வது. இதில் சாதம், சர்க்கரைபொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம்,
பருப்பு, பழவகைகள், இளநீர் ஆகியவற்றை படையல் செய்வது ஆகும்.
இதில் சர்க்கரை பொங்கலின் மீது குளம் மாதிரி செய்து அதில் நல்ல சுத்தமான நெய்யை காய்ச்சி ஊற்றி நெய்க்குளம்
செய்வார்கள். இதில் அம்மனது திருவுருவம் காட்சியளிக்கும்.
இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை
என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த
பலனை தரும். அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும் என்பது பழமொழி. சுத்தமான அன்னம் என்பது என்ன? பாலீஷ் செய்யப்பட்ட அரிசி அல்ல! சுத்தமான முறையில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சாதம் ஆகும்.உடை வெள்ளையாக இருப்பதால் பயனில்லை! உள்ளம் வெள்ளையாக இருக்கவேண்டும். அரிசி என்பதில் அரியும் சிவனும் இருப்பதாக கூறுவார்கள். அரிசியின் வடிவமும் லிங்க ஸ்வரூபம் தான். மற்றொருவகையில் சாளக்கிரம வடிவமாகவும் நோக்கினால் விஷ்ணு அரிசியில் உறைகிறார். அரிசியை இறைக்கக் கூடாது என்பார்கள். அன்னம் பரப்ரம்ம சொரூபம் என்பார்கள். ஐப்பசி பவுர்ணமியில் ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் அன்னம் என்பது உணவு. இந்த உணவை தரும் அன்னபூரணி வடிவினள் அன்னை. அத்தகைய அன்னைக்கு நன்றிக்கடனாக அன்னப்பாவாடை என்னும் படையல் செய்து வழிபடுவது நம் மரபு. ஜீவராசிகளுக்கு படியளக்கும் பரப்பிரம்ம சொரூபிணியான அன்னைக்கு ஆண்டில் ஒரு நாள் இப்படி அன்னப்பாவாடை என்னும் படையல் வழிபாடு செய்து போற்றுதல் தொன்று தொட்டுவரும் நம் நன்றியுணர்ச்சியினை வெளிப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
இந்த அருமையான படையல் நிவேதனம் தென்னகத்தில்
பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும்
நடப்பது வழக்கம். வடதமிழகத்தில் இந்த ஆலயத்தை தவிர்த்து எனக்குத்தெரிந்து எங்கும் நடப்பதாக தெரியவில்லை.
இந்த அன்னப்பாவாடை நிகழ்ச்சி ஸ்ரீ ஆனந்த
வல்லி அம்பிகைக்கு மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டு 4-2-2014 அன்று மாலை 6 மணியளவில்
நடைபெற உள்ளது.
பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல்
கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறப்பான நிகழ்ச்சியில்
பங்கு கொண்டு அம்மனின் அருள் பெற்றுய்யுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அன்னை ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பாள் கோயிலுக்கு சென்றதில்லை... விளக்கமான சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteஆனந்த வல்லி கோவிலைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. அந்த அம்மன் அருள் இருந்தால் ஏதாவது ஒரு ஆண்டில் இந்த அன்னப்பாவாடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்.... ஒருமுறை தில்லி கோவில் ஒன்றில் இப்படி அன்னப்பாவாடை சார்த்தியதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நெய்க்குளம் பார்த்ததாக நினைவில்லை....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.