உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40.


அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்! இந்த வலைப்பூவில் நான் எழுதிவரும் பகுதிகளில் இந்த பகுதி எனக்கு பிடித்த ஒன்று. ஆத்மார்த்தமாகவும் இதை எழுதிவருகிறேன். தமிழாசிரியர்கள் சிலரும் இந்த பகுதியை படித்து சிறப்பாக இருப்பதாக சொன்னார்கள். அதே போல் நண்பர்களும் சிறந்த பகுதி என்று சொல்லிவருகிறார்கள். இது போன்ற கருத்துக்கள் இந்தத் தொடரினை மேலும் சிறப்பாக எழுத வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தேனி போல நல்ல இலக்கண நூல்களை நாடி கற்று வருகிறேன். இந்த பகுதியை தொடங்கும் போது இலக்கணம் குறித்து எழுதுவதாக இல்லை. தமிழ் நூல்கள் குறித்தும் அதை எழுதியவர்கள் குறித்துமான ஒரு வினாவிடை போன்று ஆரம்பித்தேன். பின்னர் இலக்கணத்தில் நுழைந்து அத்துடன் இலக்கியமும் சேர்ந்து இப்போது வளர்ந்து நிற்கிறது. அதனால் இலக்கணம் முதலில் இருந்து இல்லாமல் அவ்வப்போது சிலவற்றை தந்துவருகிறேன். இன்று நாம் கற்க இருப்பது தொழில் பெயர் பற்றி.

பெயர்ச்சொல் ஆறுவகைப்படும். அதை பிறகு பார்க்கலாம். பெயரை குறிப்பது பெயர்ச்சொல் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே போல் வினையை அதாவது செயலை குறித்துவருவது  வினைச்சொல்.

ஆறுவகை பெயர்சொற்களில் தொழில் பெயரும் ஒன்று.

மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான். இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

இதில் மாதவி என்பதும் கோவலன் என்பதும் பெயர்சொற்கள்.
கண்டு, மகிழ்ந்தான், இவை இரண்டும் வினைச்சொற்கள்.
ஆடல் – இது தொழில் பெயராகும்.

தொழிலைக் குறிக்கும் பெயர் தொழில்பெயராகும். ஆடல் என்பது ஆடுதல் என்ற தொழிலை குறிப்பதனால் அது தொழில் பெயராயிற்று. சரி ஒரு சொல் தொழில் பெயர் என்று எப்படி கண்டுபிடிப்பது.

மாணவர்களுக்கு இலக்கணக் குறிப்பு எழுத இது மிகவும் உதவும். உங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும். கவனமாக படியுங்கள் இனி வருவதை.
 ஒரு வாக்கியம் அமைய முக்கியமானது பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி போன்ற பகுபத உறுப்புக்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அதில் விகுதி என்பது வாக்கியத்தின் கடைசிபகுதி.
  தொழிற்பெயர்கள் கீழ்கண்ட விகுதியினை கடைசியாக பெற்றுவரும்.  தல், அல், அம், ஐ, வை, கை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து.

வினைப்பகுதியோடு மேற்கண்ட விகுதிகள் சேர்ந்துவந்தால் அவை தொழிற்பெயராகும். உதாரணமாக

பெறுதல் = பெறு+தல், கோடல் = கோடு+அல்
ஆட்டம்+   ஆடு+ அம், வாழ்க்கை+ வாழ்+ கை
பறவை = பற+ வை , புளிப்பு  =புளி+ பு
போக்கு= போ+ கு  , வரவு  = வர+உ

தொழில் பெயர்கள் இரண்டுவகைப்படும்.

1.      முதனிலைத்தொழிற்பெயர்.
2.      முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்.
தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலைஉணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும். 
எ.கா) கபிலனுக்கு அடி விழுந்தது.

தொழில்பெயரின் முதனிலையான பகுதி திரிந்து வருவது முதனிலைத் திரிந்த தொழில்பெயராகும்.

அறிவறிந்த மக்கட்பேறு
அவனுக்கு என்ன கேடு? 
இந்த வாக்கியங்களில் பெறு, கெடு, என்னும் முதனிலைகள் பேறு, கேடு எனத்திரிந்து பெறுதல், கெடுதல் என்ற பொருளை உணர்த்துகின்றன. இவை முதனிலை திரிந்த தொழில்பெயர்களாகும்.

ஓரளவுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு முறைக்கு இருமுறை படியுங்கள் புரியும். அடுத்த வாரம் இன்னுமொரு முக்கியமான இலக்கணம் கற்கலாம்.

இனிக்கும் இலக்கியம்.


புற நானூற்றில் வாள் மங்கலம் என்பது ஒரு துறை. அரசனின் வாள் சிறப்பை புகழ்ந்து பாடுதல் வாள் மங்கலம்.  ஒளவையார் தொண்டை மான் என்பவனிடம் தூது போனார். அவனுக்கும் அதியமானுக்கும் நிகழ இருந்த போரை தவிர்ப்பது அவர் எண்ணம். அப்போது அவருக்கு தன் படைக்கல கொட்டிலை காட்டினான் தொண்டைமான். ஔவையார் அவனை புகழ்வது போல இகழ்ந்தும் அதியமானை இகழ்வது போல புகழ்ந்து ஒரு பாடலை பாடினார். அதை காண்போம்.

    இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்திக்  கோடுநுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றில மாதோ – என்றும்
    உண்டாயின் பதம்கொடுத்து
    இல்லாயின் உடன் உண்ணும்
    இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.


விளக்கம்:  இங்குள்ள படைக்கலங்கள் மயில் பீலி சூட்டப்பட்டு மாலை அணியப்பட்டு திரண்ட வலிய காம்புடன் அழகு செய்யப்பட்டு நெய்பூசப்பட்டு  அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
   ஆனால், எந்த நாளும் பொருள் இருக்குமானால் உணவை வருபவருக்கு தந்தும், இல்லாது போனால் இருப்பதை பிறருடன் பகிர்ந்து உண்ணக்கூடிய சுற்றத்தவர்களின் தலைவனான அதியமானின் கூர்மையான முனையையுடைய வேல்களான படைக்கலங்கள் பகைவரை குத்துவதால் அவற்றின் முனை மழுங்கி கொல்லனின் பட்டறையில் கூறேற்ற குறுகிய இடத்தில் அடைந்துள்ளன.

தொண்டைமானின் படைக்கலங்கள் கொட்டிலில் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. என்கிற ஔவையார் புகழ்வது போல பழிக்கிறார். அதாவது அவனது படைக்கலங்கள் போரைக் காணாதவை! போரிட்டு அறியாதவை! அதனால் தொண்டைமானும் போர்த்திறன் இல்லாதவன் என்கிறார்.
   அதியமானின் படைக்கலங்களோ கங்கும் நுனியும் முறிந்து கொல்லனின் உலைக்களத்தில் உள்ளன. என்பது பழிப்பது போல புகழ்வது ஆகும். அதாவது எப்போதும் போர் செய்வதால் அதியமானின் படைக்கலங்களை அழகுற அடுக்கிவைக்க நேரமில்லை. அவை உரு சிதைந்து கிடப்பதால் கொல்லனின் உலைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. என்று அதியமானின் போர்த்திறனை தொண்டை மானுக்கு புலப்படுத்துகிறார்.

எவ்வளவு அழகாக போரை தவிர்க்க வஞ்சப்புகழ்ச்சி அணியை பயன்படுத்தி உள்ளார் பாருங்கள்.

மீண்டும் அடுத்த பகுதியில் இன்னுமோர் சுவையான பாடலுடன் சந்திப்போம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. தொடர்ந்து எழுதி பிடிஎப் ஆக மாற்றி போட வேண்டுகின்றேன். அழகாக வந்துக்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 2. மறுபடியும் படிப்பது இனிமை...

  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. எனதினிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இலக்கணம் போர் என நினைத்தேன் ,நீங்கள் எளிமையாய் கூறும் விதம் அருமை .தொடர்கிறேன் !

  ReplyDelete
 5. மிக எளிமையாக விளக்கிப் போவது அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. "// தேனி போல நல்ல இலக்கண நூல்களை நாடி கற்று வருகிறேன்.//" - நான் உங்களின் இந்த பதிவுகளை படித்து என்னுடைய தமிழ் அறிவையும், இலக்கண அறிவையும் மேலும் தேர்ச்சி பெற்றுக்கொள்கிறேன்.

  இத்தொடரின் பழைய பதிவுகளை எல்லாம், எங்கள் தமிழ் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன் படித்துவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் முடியவில்லை. பார்ப்போம், சீக்கிரம் படித்து விடுவேன் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.
  தொடரட்டும் தங்களது, இந்த தமிழ் பணி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2