அம்பாள் அவதரித்த நாள்! ஆண்டாள் அவதரித்த நாள் திரு ஆடிப்பூரம்!

அம்பாள் அவதரித்த நாள்! ஆண்டாள்  அவதரித்த நாள் திரு ஆடிப்பூரம்!


ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றதுசில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.

நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். 'அரங்கனையே மணப்பேன்எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை நிறை வேற்றியும் காட்டியவள் அல்லவா, அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்! அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் அவள்.
அதே நேரம், நாம் நினைப்பதும் வேண்டு வதும்  உயர்வானதாக இருக்க வேண்டும், ஸ்ரீஆண்டாளின் வேண்டுதலைப் போலவே! அந்த அரங்கனே வேண்டும் என்றாள் அவள்; அதற்காகவே பக்தி செலுத்தினாள்; அந்த இறைவனுக்காகவே வாழ்க்கை நடத்தினாள். 
 ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்க ராஜ ஹரிசந்தன யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாம் அந்ந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

   விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் குலத்திலே தோன்றியவளே! ரங்கராஜனான விஷ்ணுவை மணம் செய்தவளே! பொறுமையின் வடிவமான பூமாதேவி அம்சம் கொண்டவளே!கோதை என்னும் ஆண்டாளே! உனது திருவடிகளை சரணடைகிறேன்!
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
   கோதை ஆண்டாளின் பாசுரங்கள் நம் பாவங்களை போக்கி திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக அமைந்திருக்கும் திருப்பாவை முப்பது பாடல்களை அறியாத மனிதர்களை இந்த பூமி சுமப்பது கூட வீணானதாகும்.

      ஆடிப்பூர நன்னாளில் தான் பெரியாழ்வாரின் வீட்டில் ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் தன் அளப்பரிய பக்தியால் திருமாலை கரம்பிடித்து சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள். 


தாய்மை பெண்மைக்கே உரியது! ஆகவே தாய்மை அடைந்த பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்ப்பது இந்து மரபு. பெண்களுக்கே வளைகாப்பு நடத்தும் போது உலகை காக்கும் அம்பிகைக்கு நடத்தாமல் இருக்க முடியுமா? ஆண்டாள் அவதரித்த நாளில் அம்பிகை ஆலயங்களில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்கின்றனர்.
 திருவிளக்கு பூஜை செய்து சுமங்கலிகள் தாம்பூலம் கொடுத்து அம்பாளின் ஆசியை பெறுகின்றனர்.

  ஆடிப்பூர நன்னாளில் அம்பாள் ஆலயங்களுக்கு சென்று வளையல், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு புஷ்பம் முதலியவை அம்பாளுக்கு சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர திருமண தடை விலகி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
 கன்னிப் பெண்கள் திருமணம் கைகூட ஆண்டாள் பாடிய இந்த பாசுரங்களை தினமும் பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்


555வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (1)
  
556நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (2)
  
557இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (3)
  
558நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (4)
  
559கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (5)
  
560மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்             (6)
  
561வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்             (7)
  
562இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்             (8)
  
563வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (9)
  
564குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (10)
  
565ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே             (11)
 

  ஆடிப்பூர நன்னாளில் அம்பாள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து உலகநாயகியின் அருளை பெற்றுய்யுங்கள்!


(படித்து தொகுத்தது)

Comments

  1. ஆடி பூரம்...
    அம்பிகைக்கு விஷேசம்...
    மிகச் சிறப்பான பகிர்வு....
    ஆண்டாள் பாசுரமும்...
    அருமை... அருமை...

    ReplyDelete
  2. பக்திப் பகிர்வு. நன்று.

    ReplyDelete
  3. சிறப்புப் பகிர்வு நன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2