பொரியரிசி கல்யாணம்!

பொரியரிசி கல்யாணம்!

தமிழ்நாட்டு நாடோடி இலக்கியங்களுக்கு வயது இல்லை! செவி வழிக்கதையாக பாட்டியும் தாத்தாவும் அவர்கள் கற்பனை கலந்து எடுத்துவிடும் கதைகள் அனைத்துமே சுவையாக இருக்கும். சிறுவயதில் என்னுடைய பாட்டி சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. அமரர். கி.வா.ஜ.தொகுத்த குழந்தை உலகம் என்னும் நூலிலும் இது உள்ளது. எதேச்சையாக படித்தபோது இதை பகிர்ந்து கொள்ள தோன்றியது. பகிர்ந்துள்ளேன் இனி கதைக்குள் செல்வோம்.

    ஒரே ஒரு பொரியரிசி கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதாம். அது தன்னைத் தானே அலங்கரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டது. உருண்டு திரண்டு புஷ்டியாகவும் வெளுப்பாகவும் இருக்கும் தனக்கு அழகான புருஷன் வேனுமென்று எண்ணியது. தான் அழகியாக இருக்கும் போது அழகில்லாத  புருஷனுக்கு வாழ்க்கைப்படலாமா? ஊர் முழுவதும் தேடித் தானே புருஷனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று புறப்பட்டது. அதற்கு தாயும் இல்லை! தகப்பனும் இல்லை!

            சின்ன சின்ன கையும் காலும் அசைய அது ஊரைச் சுற்ற புறப்பட்டது: யாரோ ராஜா சண்டையில் வெற்றி அடைந்து ஊருக்குத்திரும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய யானை, குதிரை, ஒட்டகம் முதலிய படைகளும் வந்தன. பொரியரிசி வந்து கொண்டிருந்தபோது எதிரே அரசனின் யானை ஒன்று வந்தது.பொரியரிசி விசுக் விசுக்கென்று நடந்துவந்த அழகைப் பார்த்த யானை வியந்து போய்
   “ஏ பொரியரிசி, பொரியரிசி எங்கே இவ்வளவு உற்சாகமாய் புறப்பட்டாய்?” என்று கேட்டது. உடனே பொரியரிசி “ நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள போகிறேன். அதற்காக மாப்பிள்ளை தேடுகிறேன்” என்று சொல்லியது.

  “அப்படியானால் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்!” என்று யானை கேட்டது.

  பொரியரிசி நிமிர்ந்து யானையை மேலும் கீழும் பார்த்தது.யானை சந்தோஷத்தால் தன் காதுகளை அசைத்தது. அந்த காதுகள் முறத்தைப்போல இருந்தன. “ஐயையோ! இதைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால் இந்த முறம் இரண்டும் நம்மை புடைத்துவிடுமே!” என்று பொரியரிசிக்கு பயம் வந்து விட்டது.

  “ஊஹூம்! நான் மாட்டேன் உனக்கு காது நன்றாக இல்லை! மடங்கியிருக்கிறது!” என்று சொல்லி வேகமாக போகத்தொடங்கியது
எதிரே ஒரு குதிரை வந்தது. அதுவும் பொரியரிசியைப்பார்த்து, “பொரியரிசி,பொரியரிசி, எங்கே புறப்பட்டாய்? என்று கேட்டது.
  கல்யாணம் செய்து கொள்ள எண்ணியிருக்கிறேன்! அதற்காக மாப்பிள்ளையை தேடிப் போகிறேன் என்றது பொரியரிசி.

 “அப்படியா! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்! என்னுடைய கம்பீரமான நடை வேறு யாரிடமு இருக்கிறது? என்று சொல்லிக்கொண்டே, நாலு தடவை டக் டக் கென்று குறுக்கும் நெடுக்கும் நடந்து காட்டியது.

   அது நடக்கும்பொழுது பொரியரிசிக்கு உலக்கையின் ஞாபகம் வந்துவிட்டது. “ஐயோ! இதன் காலுக்கடியில் நாம் அகப்பட்டுக் கொண்டால் நம்மை பொடியாக்கிவிடுமே! என்று பயப்பட்டது.

   ஊஹும்! நீ அசிங்கமான பிராணி! குந்தம் தள்ளி! என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமெடுத்தது.

 கொஞ்ச தூரத்தில் ஒரு ஒட்டகம் வந்தது. அது பொரியரிசியை பார்த்து “வெள்ளை நிற அழகியே! பொரியரிசிப்பெண்ணே! எங்கே புறப்பட்டாய்! என்றது.

 “ஒட்டகமாமா! ஒட்டகமாமா! ஒரு மாப்பிள்ளை தேடிதான் நானும் புறப்பட்டேன்! என்றது பொரியரிசி!”

   “என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்! என்முதுகில் ஏறி ஒய்யாரமாய் ஊர்வலம் நீ வரலாம்” என்றது ஒட்டகம்.

   உடம்பெல்லாம் கோணலான ஒட்டகத்தை பார்க்கவே பிடிக்க வில்லை பொரியரிசிக்கு “ஐயே! உன்னையும் எவளாவது கல்யாணம் பண்ணிக் கொள்வாளா? உடம்பெல்லாம் எத்தனை கோணல் மாட்டேன் மாட்டேன்!” என்று வேகமாக ஓடியது பொரியரிசி.

            கொஞ்சதூரத்தில் ஒரு கழுதை வரவும் அது பொரியரிசியை பார்த்து  உருண்டுதிரண்ட பொரியரிசியே ஊர்வலமாக எங்கே புறப்பட்டாய்?என்றது.
 பொரியரிசியும்  கழுதை மாமா! கணவனை தேடி புறப்பட்டேன்! என்றது.
 “என்னைப் பார்! என் வெள்ளி மூக்கைப் பார்! உன் அழகுக்கும் என் அழகுக்கும் தான் பொருத்தமாக இருக்கும் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?”என்று கொண்ணாரம் போட்டு குதித்ததுகழுதை.சந்தோஷத்தால் பின்னங்காலால் உதைத்து தள்ளியது.

   அதைப்பார்த்த பொரியரிசி, ‘ஐயையோ! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டால் நீ காலால் உதைத்தே கொன்று விடுவாய்! மாட்டேன் என்று சொல்லி ஓடியது.

 சிறிது தூரம் போன பிறகு சிட்டுக்குருவி ஒன்று தத்தி தத்தி நடந்து வந்து சின்னஞ்சிறிய பொரியரிசியே! நீ எங்கு போகிறாய்? என்றுகேட்டது.
 சிட்டுக்குருவி சிட்டுகுருவி நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாப்பிள்ளை தேடிப்போகிறேன் என்றது பொரியரிசி!

  சிட்டுக்குருவி சிரித்துக் கொண்டெ! வெள்ளை வெள்ளைப் பெண்ணரசி, வேடிக்கையான பொரியரிசி. என்னைக் கட்டிக் கொள்ளடி நீ  என்று கேட்டது.
   சே! சே! நீ சின்னஞ்சிறு குருவி  உனக்கும் எனக்கும் ஈடு போதாது! என்று அதையும் மறுத்துவிட்டது சென்றது பொரியரிசி.

  அப்போது அங்கே அழகான கொண்டை பளபளக்க காலும் சிறகும் மினுமினுக்க ஒரு சேவல் கோழி ஒய்யாரமாக நடை போட்டு வந்தது. அது வரும்போதே பொரியரிசி அதைப்பார்த்து, “ஆஹா! என்ன அழகு! என்ன அழகு! என்று ஆசை கொண்டது. அந்த சேவல் பொரியரிசியை பார்த்து பொரியரிசிக் குட்டி நீ புறப்பட்டது எங்கே என்றது.

   பொரியரிசிக்கு வெட்கம் வந்து விட்டது. உடம்பெல்லாம் வியர்க்க நாணி, “கண்ணாளா! சிங்காரா! கல்யாணம் பண்ணிக்கொள்ள வேணும்” என்றது.

  “மாப்பிள்ளை எங்கே?” என்று சேவல் கேட்கவும் “ஆண்டவன் கொண்டுவந்து விட்டான் அருமையான மாப்பிள்ளை அந்த மாப்பிள்ளை நீர்தாம்!” என்றது.

 சேவலும் அப்படியா! என்னையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறாய்? அப்படியானால் என் எதிரே வா! என்று அழைத்தது.

 பொரியரிசிக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை! நாணிக் கோணி நடை போட்டு சேவல் முன் வந்து நின்றது. சேவலோ கொஞ்ச நேரம் அந்த அழகை ரசித்துவிட்டு “லபக்” என்று பொரியரிசியை கொத்தி விழுங்கிவிட்டது.

     பொரியரிசி அதன் தொண்டைக்குள் போகும் போது, ஆனையும் குதிரையும் ஒட்டகத்தையும் மற்றவற்றையும் பரிகாசம் பண்ணிவிட்டு வந்தோம். கடைசியில் இப்படி முடிந்ததே என் விதி! என்று வருத்தப்பட்டது.

 ஆனை மடக்குச் செவி என்றேனே என்றேனே
 குதிரை குந்தம் தள்ளி என்றேனே என்றேனே
ஒட்டகம் ஒருகோணலோ என்றேனே என்றேனே
கழுதை கால் எறிவாய் என்றேனே என்றேனே
குருவி சிட்டுக் குருவி என்றேனே என்றேனே
கோழிக்கு வாழ்க்கைப்பட்டு உயிரைக் கொடுத்தேனே!

 என்று வருத்தப்பட்டுக் கொண்டு கோழியின் வயிற்றுக்குள் போய்விட்டது.

( செவி வழி நாட்டுப்புற இலக்கியம்)

(மீள்பதிவு)

சங்கடஹர சதுர்த்தி கோவில் பணியில் பிஸி! நாளை பதிவு எழுத முடியுமா என்று தெரியவில்லை! இன்றும் வேலை அதிகமானதால் குழந்தைகள் ஏமாறாமல் இருக்க இந்த மீள்பதிவு. பெரியவர்களும்தான்!

Comments

  1. அருமையான கதை. ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பொரியரிசி கல்யாணம் நல்லா இருக்கே... :)

    ReplyDelete
  3. பொரியரிசியின் நிலையை (கதையை)நினைத்து வருந்தினேன்.

    ReplyDelete
  4. பொரியரசி கல்யாணம் அருமை. இதுவரை கேட்டதே இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2