ஆடிப்பெருக்கு! ஆடி அமாவாசை! குருபெயர்ச்சி!
ஆடிப்பெருக்கு!
ஆடி அமாவாசை! குருபெயர்ச்சி!
ஆடிமாதம் என்றாலே
கொண்டாட்டம்தான்! வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாதான்.
கூழ் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், தீ மிதி திருவிழா, புஷ்ப அலங்காரம் என்று வீதிக்கு
வீதி அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பாள்.
இந்த வருடம் நூறாண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு,
ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி ஆகியவை ஒன்று சேர்ந்து வருகின்றது. முப்பெரும் விழாவாக
ஒரே நாளில் இப்படி அமைவது அபூர்வம்.
ஆடிப்பெருக்கை காவிரிக் கரையோர மக்கள் வெகு விமரிசையாக
கொண்டாடுவார்கள். காவிரி, பொருணை, பெண்ணை நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மூவாறு
பதினெட்டு என்று ஆடிப்பெருக்காக வர்ணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆடிமாதம் விதை விதைக்கவும் விவசாயத்திற்கும்
ஏற்ற மாதம் ஆகும். இந்த மாதத்தில் பதினெட்டாம் நாள் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும்.
நதிகளை கடவுளாக வழிபடும் இந்துமதத்தினர் இந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராடி மகிழ்ந்து
நதிக்கரைகளில் சித்ராண்ணங்கள் சமைத்து நதிக்கு சமர்ப்பித்து மஞ்சள், குங்குமம், வஸ்திரம்,
புஷ்பம் போன்றவைகளை நதியில் சமர்ப்பித்து நதிக்கு நன்றி கூறும் நன்னாள் இந்த ஆடி பதினெட்டு,
குறிப்பாக சுமங்கலிகளும், புதுமணத் தம்பதிகளும் கொண்டாடும் விழா ஆகும்.
காவிரி நதி ஸ்ரீ இரங்கநாதரின் சகோதரியாக கருதப்படுவதால்
ஸ்ரீரங்கத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஸ்ரீஇரங்கம் அம்மா மண்டபத்தில்
ஸ்ரீஇரங்கநாதர் எழுந்தருளி சேவை சாதிப்பார்.அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும்
அவர் கொண்டுவரும் சீர் காவிரி அன்னைக்கு சமர்ப்பிக்கப்படும். நதிக்கரையோரம் வசிக்காதவர்கள்
வீட்டில் ஒரு செம்பு குடம் அல்லது சொம்பில் நீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள், மற்றும்
வாசனாதி திரவியங்கள் பன்னீர், இலவங்கம், பச்சைக்கற்பூரம் போன்றவை போட்டு புண்ணிய நதிகளான
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி நர்மதை போன்றவைகளை மனதில் நினைத்து வழிபட்டு
தூப தீப ஆராதனைகள் நைவேத்தியம் செய்து பிரசாதம்,
தாம்பூலம் சுமங்கலிகளுக்கு வழங்கலாம். சுமங்கலிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம்.
ஆடி அமாவாசை!
கடன்களில் பொல்லாதது பிதுர்க் கடன். பிதுர்களின்
சாபம் வம்சத்தை குலைத்துவிடும். குலம் நசித்து போகும் என்று பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்தவர்கள் ஒருவருடத்தில் 96 நாட்கள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும்.
இது ஷண்ணவதி தர்ப்பணம் என்று சொல்லப்படுகிறது. முடியாதவர்கள் மாதம் தோறும் அமாவாசை
தினத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும்.
அமாவாசையில்
தட்சிணாயன புண்ய காலமான ஆடி அமாவாசையும் உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசையும் மிகுந்த
முக்கியத்துவம் வாய்ந்தது. மாதம் தோறும் தர்ப்பணம் செய்யாதவர்கள் இந்த இரண்டு தினங்களிலாவது
தர்ப்பணம் செய்வது பிதுர் தோஷத்தை போக்கும்.
ஸ்ரீஇரங்கம் அம்மா
மண்டபம் படித்துறை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், பவானி கூடுதுறை, தேவிப்பட்டினம்,
செதலப்பதி,திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை
போன்றவை தர்ப்பணம் செய்ய ஏற்ற புண்ணியத் தலங்கள் ஆகும். இங்கு முன்னோர்களுக்கு
தர்ப்பணம் செய்து வழிபட அவர்களின் பூரண ஆசி கிடைக்கும். பிதுர் தோஷம் விலகும்.
குருபெயர்ச்சி!
வாக்கியப் பஞ்ஞாங்கப் படி நாளை காலை 9.24க்கு குரு
சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்
வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன்
ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும்
குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது.
குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால்
ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.
குருபகவானின் அதி தேவதை சுப்ரமண்யர்.
திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடுவது நன்மை தரும்.
குருபெயர்ச்சி
வழிபாடு குரு தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பொதுவாக குருபெயர்ச்சி அன்று
தட்சிணா மூர்த்திக்கு வழிபாடு செய்து வழிபடுகின்றார்கள். குரு ஒரு கிரகம். நவகிரகங்களில்
ஒன்று. தட்சிணா மூர்த்தி மோன குரு. இவர் பெயர்ச்சி அடைவது கிடையாது. தட்சிணா மூர்த்தி
தென்முக கடவுள். இவர் உலகுக்கெல்லாம் குரு.
குருபெயர்ச்சியன்று இவரை வழிபடுவது ஏன் என்று புரியாத புதிர்.
குருபெயர்ச்சி அன்று, நவகிரகங்களில் குருபகவானுக்கு
அபிஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் வஸ்திரம் சார்த்தி
கடலை சுண்டல் நிவேதனம் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து தம்முடைய ராசி, நட்சத்திரம்
சொல்லி பரிகாரம் செய்து கொள்ள அர்ச்சணை செய்து கொள்ள வேண்டும்.
தட்சிணா மூர்த்தி வழிபாடு கல்வியில் சிறக்கவே
உதவும். கிரகப் பெயர்ச்சிக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து.
மூன்று முக்கிய
நிகழ்வுகள் நாளை ஆன்மீக உலகில் நடைபெறுகின்றன. நூறாண்டுகள் கழித்து நடக்கும் இந்த நிகழ்வில்
ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்ய வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்.
நல்ல தகவல்கள்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.
ReplyDelete