அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? நூல் விமர்சனம்
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித்
தோன்றின?
இந்த புத்தகத்தை
வாங்கி வாசித்து இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும். நண்பர் பி. கருணாகரன் அவர்களை முகநூல்
மூலம் அறிந்து நட்பு பாராட்டி அவரது இரண்டு நூல்களை வாங்கினேன் ஒன்று அவர் நிருபராய்
பணியாற்றியபோது ஏற்பட்ட பரபரப்பான அனுபவங்களை சொல்லும் காகிதப் படகில் சாகசப் பயணம்.
இப்போது இதழியல் படிக்கும் நிருபர்களாய் இருக்கும் பலருக்கும் பாடமாய் அமைய வேண்டிய
புத்தகம். மற்றொன்று அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? என்னும்
குழந்தை இலக்கியம்.
குழந்தைகளே உலகின்
முதல் விஞ்ஞானிகள் என்று எழுதி கையோப்பம் இட்டு அனுப்பி இருந்தார் பெ. கருணாகரன். அது
எவ்வளவு பெரிய உண்மை! அத்தகைய குழந்தைகளுக்கு கதை சொல்லுவது என்றால் எவ்வளவு பெரிய
விஷயம். ஆனால் அதை அவ்வளவு எளிமையாக சொல்லி முடிக்கின்றார் பெ. கருணாகரன். அரும்பு
என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த கதைகளை தொகுத்து நூலாக்கி இருக்கிறார். இதில் மற்றொரு
மகிழ்ச்சியான ஆச்சர்யமான விஷயம்.இந்த நூலில் உள்ள பதிமூன்று கதைகளுக்கும் படங்கள் வரைந்தவர்கள்
குழந்தைகளே!
நீண்ட முன்னுரையில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்
என்றும் நமது கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல் அவர்களின் கனவுகள் மெய்ப்பட ஒத்துழைக்க
வேண்டும் என்றும் அவர்களின் சிறு சிறு திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் அவர்களின் கற்பனைத்திறனை
வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கை விதையை ஊன்ற வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியர்.
இப்புத்தகத்தில் உள்ள கதைகள் குழந்தைகளுக்கு அறிவுரை
சொல்லும் கதைகளாக இல்லாமல் பேண்டசியாக மட்டும் இல்லாமல் அவர்களின் கற்பனைத்திறனை விரிவாக்கும்
வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
கதைகளின் ஊடே சமகால அறிவியலை புகுத்தியிருப்பது
அவரின் திறமையை பறை சாற்றுகின்றது.
தவளை ஒன்று காட்டில் நடக்கும் பாட்டுப்போட்டியில்
வெல்வதற்காக மற்ற விலங்குகளை ஏமாற்றி ஐஸ்கிரிம் கொடுத்து குரல் கெட்டுப்போக செய்து
பாட்டுப் போட்டியில் ஜெயிக்கிறது. பரிசும் பெறுகின்றது. ஆனால் கடவுள் சும்மா இருப்பாரா?
நீ இப்படி செய்தது தவறு என்று சொல்லி தவளையின் குரல் கர்ண கடூரமாக இருக்கும்படி சபிக்கிறார்.
அன்றுமுதல்தான் தவளையின் குரல் யாரும் கேட்க முடியாத அளவுக்கு கடூரமாக மாறிவிட்டதாம்.
என்னவொரு கற்பனை பாருங்கள்.
ஓசோன் படலம் ஓட்டையாகிவிட்டது
என்று நாமெல்லாம் புலம்புகிறோம். ஆனால் ஓர் சிறுவன் அதை தைக்க புறப்படுகின்றான் அதற்கு
உதவும் சிலந்தி, முள்ளம்பன்றி, ஒட்டகச்சிவிங்கி, மான் இவற்றை பற்றி அறிய வேண்டுமா?
உடனே புத்தகம் வாங்கி படியுங்கள் அசந்து போவீர்கள்.
புத்தகத்தின் தலைப்பான
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? அருமையான கற்பனை! மரங்களை
வெட்டி குடியிருப்புக்கள் தொழிற்சாலைகள அமைப்போருக்கு சரியான சவுக்கடி! மனிதர்களுக்கு
எதிராக மரங்கள் கடவுளிடம் வேண்டி ஓட கால்களை பெற்றுக் கொள்கின்றன. மனிதர்கள் அண்ட முடியாத
இடத்திற்கு சென்று விடுகின்றன அதுதான் இப்போதைய அமேசான் காடுகள் என்றும் மரங்கள் முன்பு
இருந்த இடம்தான் இப்போதைய சஹாரா பாலைவனம் என்றும் சொல்லி அசர வைக்கிறார்.
காட்டில் அரசாட்சியை ஒழித்து மிருகநாயகம் அமைத்த
முயலின் புத்திக் கூர்மையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வஞ்சக நரியின் வேஷம்
கலைந்து அது பயத்திலேயே இறப்பதாகட்டும் சரி கரடி சொன்ன புரட்சி தீர்ப்பாகட்டும் சரி
ஒவ்வொரு கதையும் ஓ போட வைக்கின்றது.
நிலங்களை விற்று
வீட்டுமனைகளாக்கும் வியாபாரிகளுக்கு சவுக்கடியாக உணவளிக்கும் தாயை அழிக்கலாமா என்ற
கதை உப்பு வியாபாரிக்கு பாடம் புகட்டும் கதை மிஸ்டர் பாரஸ்ட் போட்டி நடக்கும் கதை எல்லாமே
சுவாரஸ்யம்.
பொதுவாக குழந்தைகளுக்கு விலங்குகள் பேசுவது, அதன்
தந்திரம், புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது எல்லாம் மிகவும் பிடிக்கும். குழந்தைகள்
எதை ரசிக்குமோ அதை உணர்ந்து சுவைபட எழுதுவது ஓர் கலை. அந்த கலை பெ. கருணாகரன் சாருக்கு
இயல்பாக வருகின்றது. இன்னும் சில குழந்தை இலக்கியங்கள் எழுத அவர் முயற்சிக்கலாம். இவரது
இந்த நூல் பற்றி சமீபத்தில் முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார். இந்த புத்தகம்
பற்றி பெரிதாக நினைக்கவில்லை! ஆனால் அதற்கு தற்போது விருது கிடைத்துள்ளது என்று. மேலும்
பல விருதுகள் கிடைக்க வேண்டிய புத்தகம் இது.
எல்லா பள்ளிகளிலும் உங்கள் வீட்டு குழந்தைகளிடமும்
இருக்க வேண்டிய அருமையான புத்தகம்.
வெளியீடு: குன்றம்
பதிப்பகம், 73/31 பிருந்தாவனம் தெரு, மேற்குமாம்பலம், சென்னை 33. அலைபேசி:
9940010830
விலை ரூ 45.00
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமையான விமர்சனம்
ReplyDeleteஅவசியம் வாங்கி வாசிப்பேன் நண்பரே
நல்ல நூலை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. அட எனது முதல் இரு கதைகள் அரும்பு இதழில்தான் வெளிவந்தது.அதுவும் இதுவும் ஒன்றுதானா தெரியவில்லை அப்போது என் வயது 14
ReplyDeleteநல்லதொரு அறிமுகம். நன்றி சுரேஷ்.
ReplyDeleteஅருமையான புத்தகம், விமரிசனம் அதை விட அருமை! நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅருமையான விமர்சனம்...
ReplyDeleteஅட! நல்ல நூல்! அருமையான விமர்சனமும் அறிமுகத்திற்கு மிக்க நன்றி சுரேஷ்
ReplyDelete// பொதுவாக குழந்தைகளுக்கு விலங்குகள் பேசுவது, அதன் தந்திரம், புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது எல்லாம் மிகவும் பிடிக்கும். // குழந்தைகளுக்கு மட்டுமா என்ன நமக்கும்தான் நாமும் அப்போது குழந்தைகளாகி விடுகிறோம் தானே!!!!