சாமியாடி!
சாமியாடி!
ஊரில் தீமிதி திருவிழா களை கட்டி இருந்தது. தீ பாஞ்ச அம்மனுக்கு நெருப்பு என்றாலே ஒரே கோலாகலம்தான்! பத்து நாள் திருவிழா வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த ஞாயிறில் முடியும். இது இல்லாமல் ஊரில் இன்னொரு அம்மனுக்கும் நெருப்பு உற்சவம் நடக்கும். இருந்தாலும் இந்த தீப்பாய்ந்த அம்மனுக்கு நடக்கும் உற்சவம் என்றாலே எப்போதும் பெரிய பட்ஜெட், பெரிய கோலாகலம்தான்.
முன்பெல்லாம் இந்த விழா ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் நடக்குமாம். உழைப்பதற்கு இலவசமாய் மனிதர்கள் இருந்தார்கள் விலைவாசி குறைவு. அதிக ஆடம்பரம் இல்லை! இதனால் விழா நடத்த முடிந்தது. இப்போது நாலு வருசத்துக்கோ அஞ்சு வருசத்துக்கோ ஒரு முறை நெருப்பு உற்சவம் நடக்கிறது. இது பூசாரிக்கு வருத்தம்தான். நெருப்பு என்றால் அவரும் களத்தில் இறங்கத்தான் வேண்டும் ஆனாலும் வருமானம் குறையாது. சாமிக்கு பலியிடும் பலியாடுகளில் பங்கு என்று அவருக்கு குறைவிருக்காது.
இதோ இந்த வருடமும் திருவிழா தொடங்கிவிட்டது. முன்பைவிட ஏக அமர்க்களம்! ஊரெல்லாம் மின்விளக்குகள்! ஓயாத ரேடியோ வானவேடிக்கைகள் என்று கலகலத்தாலும் எல்லோர் முகத்திலும் ஒரு கவலை ஓடியது. அது ஊர் கிராம தெய்வம் யார் மீதும் வந்திறங்கவில்லை என்பதுதான்.
இதுபோன்ற நெருப்பு உற்சவங்களில் முதல் மரியாதை சாமியாடிகளுக்குத்தான். ஊரில் இருக்கும் பல தெய்வங்கள் சாமியாடிகள் மீது இறங்கும். அவர்கள் வழி நடத்தலில் பூஜாரியும் இணைந்து கொள்ள தைரியமாக பூக்குழி என்னும் நெருப்புக் குழியில் இறங்குவார்கள்.
ஒரு காலத்தில் இந்த சாமியாடிகளுக்கு இருந்த மவுசு இப்போதும் குறையவில்லை! கோவில் வாசலில் ஈரத்துணியுடன் நிறுத்தி பூஜாரியும் வர்ணிப்பவனும் சேர்ந்து உடுக்கை அடித்து வர்ணித்து வர்ணித்து சாமி வரவழைப்பார்கள். தாரை தப்பட்டையும் முழங்கும். தப்பட்டையும் உடுக்கை சத்தமும் தாள லயத்தில் அங்கே சில புது சாமிகளும் உருவெடுக்கும்.
அது எப்போதோ தூக்கிட்டு செத்த பாஞ்சாலியோ மருந்து குடித்த நாகனோ யாருடைய ஆவியோ யார் மீதோ புகுந்துகொண்டு நான் தான் முனுசாமி…! என்று குரல் வெடித்து கத்தும். எலுமிச்சம் பழம் கொடு! கோழியைக் கொண்டாடா! என்று அதிகாரம் தூள் பறக்கும்.
இது சாமியா ஆசாமியா? என்று பூஜாரி கண்டுகொள்வான். அவனுக்குத் துளி சந்தேகம் வந்தாலும் அடுத்த நொடி வேப்ப மிளாரால் விளாசி விடுவான்! சில சமயம் சாட்டையும் சுழற்றுவான். அப்புறம் அந்த பேய் அண்டார்டிக்கா தேசத்திற்குத்தான் ஓட வேண்டும். அப்படி விரட்டுவான் பூஜாரி.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் பல கிராம தெய்வங்கள் யார் மீதும் இறங்க வில்லை! வழக்கமான சாமியாடிகள் மறைந்துவிட புது சாமியாடிகளை தேர்ந்தெடுக்க கிராமதேவி கோவில் முன் பொங்கல் வைத்து உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏற்கனவே சாமியாடியவர்கள் வம்சத்தவர்களை குளிக்கவைத்து ஈர ஆடையுடனும் வெறும் வயிற்றுடனும்(விரதமாம்) நிற்க வைத்து உடுக்கை அடிக்கிறார்கள் அடிக்கிறார்கள் ஒரு மணி நேரமாகியும் யார்மீதும் சாமி இறங்கவில்லை! பூஜாரிக்கு கைதான் வலித்து போனது. அடித்து அடித்து விரல்கள் நொந்த நிலையில் பம்பை அடிப்பவர்கள், தப்ப்ட்டை காரர்கள் அப்படியே நழுவி டாஸ்மாக் சரக்கை கொஞ்சம் ஊத்திக்கொண்டு புது தெம்புடன் மீண்டும் அடிக்க ஆரம்பித்தார்கள்.
இப்போதும் நேரம்தான் கடந்ததே தவிர யார் மீதும் சாமி இறங்கவில்லை! பூஜாரி நொந்து நூலாகிப்போன சமயம் அது நேர்ந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த காளப்பன் அப்படியே குதித்து குதித்து வந்து சாமி முன் நின்றான். ம்ம்ம்… என்று உறுமினான்.
“யாருடா நீ? என்ன வேணும்!” பூஜாரி முழங்க!
தன் கையை ஒரு சுழற்று சுழற்றினான் காளப்பன். “என்னையாடா யாருன்னு கேக்கறே! நான் உனக்கு படியளக்கிற தெய்வம்டா! தீப்பாய்ஞ்சவளையே உனக்கு தெரியலையாடா? எதுக்குடா என்னை வரவச்சே?” காளப்பன் ஆடிக்கொண்டே கேட்க
அனைவருக்கும் ஆச்சர்யம்.
இத்தனை பேர் விரதமிருந்து சாமி முன் நிற்க குடிகாரன், ஊரில் ஏமாந்தவர்களிடம் திருடுபவன் இவன் மேலா இந்த அம்மன் இறங்க வேண்டும்.
“ஏம் தாயி! நீ இவன் மேல இறங்கன? இங்க உங்க பக்தர்கள் இத்தனை பேரு இருக்கும் போது?” பூசாரி முடிக்குமுன் கத்தினான் காளப்பன். தப்பு தப்பு மாரியாத்தா!
என்னையே கேள்வி கேக்குறியாடா? எனக்கு தெரியும்டா! யார்மேல இறங்கனும்னு! எங்கேடா சேவல்? கொண்டா!.. ஊங்காரத்தில் அதிர்ந்து போனான் பூஜாரி. ஏற்கனவே வாங்கிய அடி இன்னும் எதையும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை!
அடுத்த நொடி! தாயி! தப்புதான்! கேட்டது தப்புதான்! என்று சாஷ்டாங்கமாக காலில் விழுந்தவன் சேவலை கொண்டாங்க! என்று சேவலை வாங்கி காளப்பனின் கையில் கொடுத்தான்.
அதை வாங்கி கழுத்தை அப்படியே கடித்து இரத்தத்தை அப்படியே உறிஞ்சினான் காளப்பன். பராசக்தி! ஓம் சக்தி! பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க பூஜாரி தாயே பூக்குழி இறங்கறோம்! கூட இருந்து வழிநடத்தனும் தாயே! என்றான் பூஜாரி பவ்யமாக!
ஆகட்டும்டா! நல்லா நடக்கும்! கூட இருக்கறேன்! என்று தண்ணி கொடு! கற்பூரம் என்று கை நீட்டி எரிந்த கற்பூரத்தை அப்படியே விழுங்கி மயங்கினான் காளப்பன்.
அவ்வளவுதான்! உடனே காளப்பன் மேல் சாமி வந்த செய்தி ஊரெல்லாம் பரவ அவனுக்கும் காப்புக் கட்டி மஞ்சத்துணி உடுத்தி குமாரி மக்களோடு நிறுத்தி விட்டார்கள்.
பத்து நாட்கள் குமாரி மக்கள் வீட்டில் தங்க மாட்டார்கள் கிராம தேவி கோவிலில்தான் படுக்கை! சாமியாடிகள் கூட இருப்பார்கள் அப்படி படுக்கும் போது இளவட்டங்கள் ஏதாவது சேட்டை பண்ணினால் சாமிகளுக்கு கோபம் வந்துவிடும்! அப்படியே ஓர் ஊங்காரம்! சப்த நாடியும அடங்கிப் போகும். சில சமயம் வேப்ப மிளாரால் விளாசிவிடும்! குமாரி மக்கள் விழுந்தடித்து ஓடுவார்கள்.
தீப்பாஞ்சம்மனுக்கு காப்பு கட்டி ஒருவாரம் ஓடிவிட்டது. ஊரின் பெரிய தலைகள் எல்லாம் காப்பு கட்டி இருந்தார்கள் பத்து வருடங்களுக்கு பிறகு நடக்கும் உற்சவம் அல்லவா? ஊர் தலைவரும் கூட காப்புக் கட்டி இருந்தார். இன்னும் மூன்றே நாளில் நெருப்பில் இறங்க வேண்டும். அன்றைய இரவு நள்ளிரவை கடந்திருக்கும்.
திடீரென காளப்பன் மேல் சாமி இறங்கிவிட்டது! ஒரே ஊங்காரம்! தூங்கிக் கொண்டிருந்த அனைத்து குமாரிமக்களும் அடித்துப் பிடித்து எழுந்தார்கள். அரைகுறை தூக்கத்தில் இருந்த தலைவர், ஏதோ ஞாபகத்தில், என்னடா காளப்பா! என்னடா கலாட்டா என்று கேட்டதுதான் தாமதம், காளப்பனின் விழிகள் சிவந்தன. கண்கள் தெரித்து விழுந்துவிடுவதைப்போல பிதுங்கி வந்தன. மீண்டும் ஓர் ஆக்ரோஷம்! அடுத்த நொடி கையில் இருந்த பிரம்பால் விளாச ஆரம்பித்தான்.
“ஐயோ அம்மா! தாயே! தெரியாம…” என்ற தலைவரின் எந்த பேச்சும் எடுபட வில்லை. பத்து நிமிடங்கள்! தலைவர் முதுகு வீங்கிப்போனது பட்டையாய் பட்டையாய் தழும்புகள்! அம்மா! தாயே மன்னிச்சுடு! என்று காலில் விழுந்தவுடன் தான் அமைதியானான் காளப்பன்.
அடுத்த நொடி அப்படியே மயங்கி விழுந்தான். அப்புறம் தலைவருக்கு மருத்துவ உதவி செய்து எப்படியோ தீ மிதித்தார்கள். காளப்பன் மேல் சாமி வந்தாலே ஒரே பதட்டம்தான்! யாரை அடித்துவிடுமோ என்று? தலைவரையே புரட்டி புரட்டி எடுத்துவிட்டது! என்றெல்லாம் ஊரில் ரொம்பநாள் பேசிக்கொண்டார்கள்.
“அடே காளப்பா! அப்படியே தலைவனையே விளாசிட்டியேப்பா!”
“காளப்பன் மேல ஆத்தா இறங்கினா கோவம் அப்படிவரும்! பெரிய மனுசன் சின்னமனுசன்னு பார்க்காது! தப்பு செஞ்சவனுக்கு தடியாலே தண்டனை கொடுக்கும்! நம்ம தலைவரையே புரட்டி போட்டுருச்சுன்னா பாரேன்!”
“தீப்பாஞ்ச அம்மனே அப்படியே ஆக்ரோஷமா இறங்கிருச்சு நம்ம காளப்பன் மேலே!”
ஊரெல்லாம் இப்போது காளப்பன் பேச்சுதான்! அதுவரை திருட்டு காளப்பனாக இருந்தவன் இன்னிக்கு சாமியாடி காளப்பன் ஆகிப்போனான். எல்லோருக்கும் அவன் மேல் ஓர் புது மரியாதை வர ஆரம்பித்து இருந்தது.
யாருக்குத் தெரியும்? காளப்பன், தன் மீது குற்றம் சுமத்தி தன் சொத்துக்களை அபகரித்துக் கொண்ட ஊர்த் தலைவனை பழிவாங்கவே அப்படி சாமியாடியாக நடித்தான் என்று! அந்த அம்மனுக்கும் அவனுக்கும் மட்டும்தான்!
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஸூப்பர். என்ன வர்ணனை? ரசித்தேன்.
ReplyDeleteநல்லதுக்காக என நினைத்து தவறில்லை என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்வோம்.
ReplyDeleteஅருமை! செம கதை சுரேஷ். ரொம்ப நல்லா எழுதறீங்க சுரேஷ்.
ReplyDeleteஅருமை. சாமியாடியாக இருக்கும்போது தலைவனை ஒரு கை பார்க்க முடிந்ததே.
ReplyDelete'எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் பல கிராம தெய்வங்கள் யார் மீதும் இறங்க வில்லை'-- இந்த இடத்திலிருந்து ஒரே விறு விறு தான். 'கிளுக்' சிரிப்பு கதையோடு இழைந்து வருதல் ஒரு வரம்!
ReplyDeleteகடைசி பாராவில் ஒரு காரணம் காட்டி கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்..
நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் வருகை தந்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி ஐயா!
Delete