பேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!

பேயை விரட்டிய பெண்மணி!  பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் தட்சிணாபுரம் என்ற ஊரில் ஒரு பெண்மணி வசிச்சு வந்தாங்க. அந்தம்மாவோட புருஷனுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் செய்ய அவங்களுக்கு வசதி இல்லை. அந்த ஊர் குளக்கரையிலே ஓர் அரச மரம். அதன் அடியிலே ஒரு பிள்ளையார். தினமும் அந்த அம்மா குளத்துல குளிச்சிட்டு அந்த பிள்ளையாருக்கு நீர் எடுத்துவந்து அபிஷேகம் செஞ்சு ரெண்டு பூக்களை பறிச்சு போட்டு தன் புருஷனோட வியாதி குணமாகனும்னு கண்ணீர் மல்க வேண்டிப்பாங்க.

   ஒரு நாள் அந்த பெண்மணி அதிகாலையிலேயே குளக்கரைக்கு போயிட்டாங்க. அப்ப அந்த அரச மரத்துல இருந்த பேய் ஒண்ணு அவங்க கண்ணுக்குத் தென்படவும்  பயந்து போய் அலறினாங்க. அந்த பேய் தினமும் இவங்களை பார்த்து இவங்க நிலைமையை அறிஞ்சு வைச்சிருந்தது. அதனால, “அம்மா! என்னை பார்த்து பயப்படாதே! அரை குறையா செத்துப் போனதால இப்படி பேயா இருக்கேன்! இந்த அரச மரத்தைவிட்டு வேற இடம் போகணும்! ஆனா வேற இடம் எங்கிருக்குன்னு தெரியலை! இந்த மரத்துகிட்ட வந்து ஒருத்தன் நாயனம் வாசிக்கிறேன்னு அபஸ்வரமா வாசிச்சு என்னை கோபமடைய வைக்கிறான். அதை கேட்க சகிக்கலை! வேற நல்ல இடம் இருந்தா சொல்லு! நான் அங்க போயிக்கிறேன்! உனக்கும் உதவி செய்யறேன்!” என்றது.

   “ பேயா இருக்கிற நீ எனக்கு என்ன உதவி செய்வே?” அந்த பெண்மணி கொஞ்சம் தைரியம் வந்து கேட்க, “ ஏன் முடியாது? நீ எனக்கு ஒரு நல்ல இடத்தை காட்டு! நான் இந்த ஊர் ராஜாவோட பையனை பிடிச்சுக்கிறேன்! எந்த மந்திரவாதியாலும் என்னை விரட்ட முடியாது. நீ வந்து என்னை விரட்டறேன்னு ராஜாகிட்ட சொல்லு. நானும் உன்னை பார்த்ததும் அவனை விட்டு விலகிப் போயிடறேன்! ராஜா உனக்கு நிறைய சன்மானம் தருவாரு! அதை வைச்சு உன் புருஷனுக்கு வைத்தியம் செஞ்சு பொழைச்சிக்க!” அப்படின்னுச்சு பேய்.

 அந்த பெண்மணிக்கு இந்த டீலிங் பிடிச்சுருந்தது. சரின்னு ஒத்துகிட்டு இந்த ஊரில் இருந்து பதினைஞ்சு மைல் தொலைவில ஒரு பெரிய ஆலமரம் இருக்கு! அது உனக்கு வசதியா இருக்கும் அங்க போய் தங்கிக்க! அதுக்கு முன்னாடி ராஜா பையனை பிடிச்சுக்க நான் வந்து விரட்டறேன்னு சொன்னாங்க.

 அந்த பேய் அந்த ஊர் ராஜாவோட மகனை போய் பிடிச்சுகிச்சு. ராஜா பெரிய பெரிய மந்திரவாதிகளை எல்லாம் கூப்பிட்டு மந்திரிச்சாரு. ஒன்னும் நடக்கலை! பேயை ஓட்டறவங்களுக்கு சன்மானம் வழங்கறேன்னு அறிவிச்சாரு. யாரு வந்தும் பேய் போவேனா பாருன்னு அடம்பிடிச்சுது. அப்பத்தான் நம்ம பெண்மணி அங்க வந்து பேயை நான் ஓட்டறேன் மஹாராஜா! அப்படின்னாங்க!

   ராஜாவுக்கு நம்பிக்கை இல்லை! இருந்தாலும் எதை தின்னா பித்தம் தெளியும்கிற நினைப்புல மகனோட அறைக்கு அனுப்பி வைச்சாரு. அந்தம்மா உள்ள நுழைஞ்சதும் பேய், வந்துட்டியா? இவ்வளோ நாள் ஆச்சா நீ வந்து சேர? இந்த மந்திரவாதிகளோட வேப்ப இலை அடியெல்லாம் தாங்கிட்டு தாக்குபிடிச்சுட்டு இருந்தேன்.  இனிமே நான் அரச மரத்துக்கு போயிடறேன்! அங்க பிடிக்கலைன்னா வேற எங்கேயும் போவேன்! அங்க வந்து உன் வேலையை காட்டக் கூடாது! ராஜா கொடுக்கிற சன்மானத்தை வச்சி பொழைச்சுக்க! அப்படின்னு சொல்லிட்டு பறந்துருச்சு!

 இளவரசன் பழைய நிலைக்கு திரும்பவும் ராஜாவுக்கும் மகிழ்ச்சி! நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து அந்த பெண்மணியை வாழ்த்தி அனுப்பிச்சாரு.

  இப்படி கொஞ்ச காலம் ஓடிச்சு! இப்ப அந்த பேய் பக்கத்து நாட்டு ராஜாவோட பொண்ணை பிடிச்சிருச்சு! இந்த ராஜாவோட பையனைத்தான் அந்த பொண்ணுக்கு கட்டிக் கொடுக்கிறதா இருந்துச்சு! அந்த சமயத்துல பேய் பிடிச்சுக்கவும் அவரு நம்ம ராஜா உதவியை நாடுனாரு. ராஜாவும் பேய் ஓட்டுன பெண்மணியை கூப்பிட்டு போய் பக்கத்து நாட்டு இளவரசியை பிடிச்சு இருக்கிற பேயை விரட்டிட்டு வா!ன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

 இந்தம்மாவுக்கு தர்ம சங்கடம்! போனா பேய்கிட்ட கொடுத்த வாக்கை மீறிட்ட மாதிரி ஆகும். போகலைன்னா அரசாங்க குற்றமாயிடும். என்ன செய்யறதுன்னு யோசனை பண்ணி பக்கத்து நாட்டுக்குப் புறப்பட்டு போயிட்டாங்க! அங்க போய் இளவரசியை பார்த்தாங்க.

   இளவரசி உடம்புல இருந்த பேய், ”அந்தம்மாவை மிரட்டுச்சு! நான் தான் இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனே! ஏன் வந்தே? நீ வந்தா நான் போயிருவேனா? அப்படின்னு கேட்டுச்சு!”

 “ அய்யோ! உனக்கு உதவறதுக்குத்தான் நான் வந்தேன்! அந்த அபஸ்வர நாதஸ்வரக் காரன் நாளைக்கு உங்க முன்னாடி வந்து வாசிக்க போறானாம்! அதைக் கேள்விப் பட்டு எச்சரிக்கை பண்ணிட்டு போலாம்னு வந்தேன். நீங்க தாராளமா இந்த பொண்ணு உடம்புல இருங்க! எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை”ன்னு சொன்னாங்க!

  “ஐயையோ! அந்த நாதஸ்வரக்காரன் அபஸ்வரத்தை என்னால கேக்க முடியாது! நான் இப்பவே கிளம்பறேன்னு! கிளம்பிருச்சு பேய். அந்த ராஜாவும் மகிழ்ந்து போய் நிறைய ஆபரணங்கள் பொற்காசுகளை கொடுத்து அனுப்பி வைச்சாரு.

இப்ப அந்த பெண்மணி ஓரளவு வசதியா ஆயிட்டாங்க. கணவனும் நோயிலிருந்து விடுபட்டு நல்லா ஆயிட்டான். ஒரு வருசம் ஓடியிருக்கும். இதுவரைக்கும் குட்டி குட்டி நாடுகளோட அரசர் கூப்பிட்டு இருந்தார். ஆனா இப்போ பேரரசர் டில்லி அரசர் பெண்மணியை கூப்பிட்டு அனுப்பி இருந்தார்.

 அவரோட பொண்ணை இந்த பேய் பிடிச்சுகிட்டு இருந்துச்சாம். அதை விரட்ட இந்தம்மாவை கூப்பிட்டிருந்தார். இந்தம்மாவும் போனாங்க. இந்த முறை பேய் என்ன சொல்லப் போவுதோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு உள்ளுக்குள்ளே ஆனாலும் அதைக் காட்டிக்காம மிடுக்கா போய் நின்னாங்க.

  “ இப்ப எதுக்கு வந்தே? உனக்கு இதே வேலையா போச்சே? இங்கேயும் அந்த அபஸ்வர கலைஞன் வரப்போறானா?ன்னு கேட்டுச்சு பேய்.

   “ அவன் இனிமே வரவே மாட்டான்! அதை சொல்லத்தான் வந்தேன்!”

    “ஏன் என்ன ஆச்சு?”

    “அவன் செத்துப் போய் ஒரு மாசம் ஆகுது! இனிமே அவனால உனக்குத் தொல்லை இல்லை!”

  “அப்பாடா! நிம்மதி!”

  “ அவன் தொல்லைதான் இல்லையே! நீ ஏன் இப்படி ஒவ்வொரு ராஜாவோட பசங்களையா பாத்து பிடிச்சுக்கினு தொந்தரவு பண்றே? பேசாமா உன் பழைய அரச மரத்துக்கே போ! அங்க இருக்கிற பிள்ளையாரை கும்பிட்டா உன் பேய் உருவம் போய் முக்தியாவது கிடைக்கும் இல்லையான்னு?” அந்தம்மா கேட்கவும் பேய்க்கும் அது சரியா பட்டது.

  “நீ சொல்றது சரிதான்! ஒவ்வொரு பொண்ணுங்களையும் பிடிச்சு ஆட்டி வேண்டப்பட்டதை சாப்பிட்டு அலுத்துப் போச்சு! இன்னும் எத்தனை நாளுக்கு பேயா அலையறது! நீ சொல்ற மாதிரி பழையபடி அரசமரத்துக்கே போயிடறேன்! அந்த பிள்ளையாரு எனக்கு நல்ல கதி கொடுக்கட்டும்”னு சொல்லி அந்த பொண்ணை விட்டு கிளம்பிருச்சு!

  சக்ரவர்த்தியோட பொண்ணு குணமானதும் அவருக்கு நிறைய மகிழ்ச்சி! அள்ள அள்ள குறையாமல் பொன் பொருள்களை பரிசா கொடுக்கவும். அதை வாங்கிட்டு அந்த பெண்மணியும் அவங்க புருஷனும் சவுக்கியமா வாழ்ந்தாங்க!

(செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Comments

  1. உங்களுடைய கதைகள் சிறியவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சுவாரஸ்ய்மான
    இதுவராய் அறியாத கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல ரசனையாக இருந்தது கதை வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  4. சிறப்பான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. செம ஜாலி கதை பேய்க்கதையாக இருந்தாலும்...அட இந்தப் பேய் ரொம்ப ஜாலிப் பேயா இருக்கே!!! ரசித்தோம்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2