கடியாரம் கட்டிய நாட்கள்!

 கடியாரம் கட்டிய நாட்கள்!

   காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் கடியாரங்களுக்கும் விலக்கல்ல! 

 முன்பெல்லாம் எல்லோர் கைகளிலும் அணி செய்த அழகான கைக் கடியாரங்கள் இப்போது காட்சிப்பொருளாக மாறிவிட்டன. அலைபேசியில் கடிகாரம் வந்தபின் கைக்கடிகாரங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. ஆனாலும் பெண்களுக்காக டிசைன் டிசைனாக  வளையல் மாதிரி சில கடிகாரங்களை ஒரு கடிகாரக் கடையில் கண்டேன். ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த டைம்பீஸ் தன் ஓட்டத்தை நிறுத்தி ஓய்வு பெற்றதைப் போல  கைக் கடிகாரங்களும் ஓய்வு பெற்றுவிடுமா என்று தெரியவில்லை.

   ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கைக் கடிகாரங்களில் இருந்து கத்தி, லேசர், மைக்ரோபோன் எல்லாம் கிடைக்கும்.  ஒரு முப்பது வருடங்கள் முன்பு டிஜிடல் கைக் கடிகாரங்கள் புழக்கத்துக்கு வந்து முள் கடிகாரங்களை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளியது. சாவி கொடுக்க வேண்டியதில்லை! சின்ன குழந்தைகள் கூட எளிதாக மணி பார்க்கலாம், துல்லியமாக மணி நிமிடம், செகண்ட் அனைத்தும் அறியலாம் என்ற வசதி  முள் கைக்கடிகாரங்களை பின்னுக்குத் தள்ளி இந்த வகை கடிகாரங்கள் மீது மக்களை மோகத்தில் ஆழ்த்தியது.

       என் சின்ன வயதில் எனக்கு கைக்கடிகாரங்கள் மீது கொள்ளை ஆசை! வீட்டில் வறுமை நிலை என்பதால் பொம்மைக் கடிகாரங்கள் கூட வாங்கித்தர யோசிப்பார்கள். ஜவ்வு மிட்டாய் காரன் கடிகாரம் போல செய்து கட்டிவிடுவான். அதை வாங்கிக் கொடு என்று கேட்டால் உடம்புக்கு நல்லதில்லை என்று சொல்லிவிடுவார்கள். அந்த கடிகாரம் கட்டிய பசங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.

  பக்கத்து ஊர் முருகன் கோயில் திருவிழாவில் கடைவீதி போடுவார்கள். அங்கே கடைகளில் பொம்மை கடிகாரங்கள் இருக்கும். கலர் கலராய் மின்னும் அதன் கண்ணாடியில் விதவிதமான உருவங்கள் மாறும். நேரம் மட்டும் மாறாது. அந்த கடிகாரத்தின் விலை ஒரு ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஒரு ரூபாய் செலவு செய்ய யோசிப்போம்.

      எங்காவது வெளியில் கூட்டிச் சென்றால் பெட்டிக் கடையில் தொங்கும் கடிகாரங்களை காட்டி வாங்கித் தரச் சொல்வேன். அப்பா மறுப்பார். அது வேண்டாம் அப்புறம் வாங்கிக்கலாம் என்பார். மனம் ஒடிந்து போகும். எப்படியோ நாலாவது படிக்கையில் ஓர் பொம்மைக் கடிகாரம் வாங்கி கட்டி அதை அக்குவேறாக பிரித்தும் பார்த்து என் ஆசையைத் தணித்துக் கொண்டேன்.

     ஏழாவது படிக்கையில் முருகர் கோயிலில் அர்ச்சகர் வேலை செய்து ஒரு நாற்பது ரூபாய் சம்பாதித்தேன். அந்த சமயத்தில் அது பெரும் தொகை! ஒருநாளில் அவ்வளவு தொகை சம்பாதிப்பது பெரியவர்களால் கூட முடியாது. சின்ன பையன் சம்பாதித்துவிட்டானே! என்று சொன்னார்கள். அந்த காசை எடுத்துவந்து அப்பாவின் நண்பர் திரு கண்ணனிடம் கொடுத்து வாட்ச் வாங்கி வரச் சொன்னேன்.

   அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர். வாரம் ஒரு முறை அப்பாவைபார்க்க ஊருக்கு வருவார். அவர் மறு வாரம் வருகையில் டிஜிட்டல் வாட்ச் ஒன்று வாங்கி வந்தார் மெட்டல் பட்டையுடன். நாற்பது ரூபாய் வாட்ச் என் கையில் ஆசையாக அணிந்து கொண்டேன். அதில் அலாரமும் செட் செய்யலாம். அதில் வினாடி செட் செய்து பெரும்பேட்டில் இருந்து ஊர் செல்லும்வரை எத்தனை வினாடி ஆகின்றது என்று கணக்கிடுவேன். இத்தனை நிமிடத்தில் இவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்று நானாக போட்டி வைத்து நடப்பேன். சுமார் ஓர் மூன்று அல்லது நான்கு மாதம் ஓடிய வாட்ச் நின்று போய்விட்டது.

     ஊருக்கு வந்து அப்பாவிடம் கொடுத்தேன். செல் போட்டுவர எடுத்துச்சென்றார் அப்பாவின் நண்பர். பின்னர் வாட்ச் வரவில்லை!  ஓடாது என்று சொல்லிவிட்டார் வருத்தமாகிவிட்டது. பின்னர் மீண்டும் வாட்ச் வாங்கும் ஆசை பெருகிவிட்டது. ஆனால் பணம்தான் சேர்க்க முடியவில்லை! காலம் என்னை ஆசானூரில் இருந்து நத்தம் கொண்டுவந்து சேர்த்தது.  அந்த சமயத்தில் அப்பாவிற்கு அவரது நண்பர் ஓரு சிட்டிசன் வாட்ச் பரிசளித்தார். கோல்ட் கலர். டிஜிட்டல் கிடையாது. முள் வைத்தது. ஆனால் செல் போடவேண்டும். அவ்வளவு அழகாக இருக்கும் அது. அப்பா கழட்டி வைக்கும் சமயம் எடுத்து கட்டிப் பார்ப்பதுண்டு. அந்த வாட்சின் அழகில் மயங்கிய நண்பர் ஒருவர் அதை விலைக்கு கேட்க அப்பா கொடுக்க மறுத்துவிட்டார். நீண்ட நாள் உழைத்தது அது.

  அதன் பிறகு பத்தாவது படிக்கையில் மீண்டும் டிஜிட்டல் வாட்ச் வாங்கினேன். முப்பது ரூபாய் விலையில். அது மிகவும் நன்றாக உழைத்தது. பேட்டரி மட்டும் அவ்வப்போது மாற்றுவேன். கல்லூரி முதலாண்டு படிக்கையில் அதற்கும் முடிவு வந்தது. மீண்டும் ஓர் டிஜிட்டல் வாட்ச் அது இரண்டு வருடம் ஓடியது. இந்த வாட்ச்  டூ இன் ஒன் வாட்சாக இருந்தது. இரண்டு டைம் காட்டும். 24 மணி நேர முறை ஒன்று. 12 மணி நேர முறை ஒன்று.

   97ம் வருடம் என்று நினைவு. முதன் முதலாக சாவி கொடுத்து ஓடும் ஓர் கைக் கடிகாரம் வாங்கினேன். எச். எம்.டி வாட்ச். முன்னூறு ரூபாய் விலையில் என்று நினைவு. அது நீண்ட நாள் உழைத்தது. பத்து வருடங்கள். சில சர்வீஸ் மட்டும் செய்ததாய் நினைவு.  2007ல் டைமெக்ஸ் வாட்ச் வாங்கினேன் அதுவும் விலை குறைவுதான் 450 ரூபாய். இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் பின் இரண்டு வாட்ச்கள் வாங்கினேன். டைமெக்ஸ் வாங்கும் முன் ஓர் சிட்டிசன் வாட்ச் வெறும் 100 ரூபாய் கொடுத்து 2000த் தில் வாங்கினேன். கறுப்பு டயல் கொண்ட அது சமர்த்தாய் உழைத்தது ஐந்து வருடங்களுக்கும் மேலாய்.

    இப்படி வாட்ச் வாங்க முடியாது தவித்து பின்னர் வாட்ச் வாங்கி அணிந்து அனுபவித்த பின் நடுவில் வாட்ச் ஆசை விட்டுப் போனது. அலைபேசியிலேயே மணிபார்த்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அது சவுகர்யமாக படவில்லை.  அதனால் மீண்டும் கடிகாரம் அணியத் தொடங்கினேன். சோனி தயாரிப்பு ஒன்று அணிந்து கொண்டேன். இப்போதுவரை நன்றாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இன்று அவசர கதியில் புறப்படுகையில் வாட்ச் அணிய மறந்துவிட்டேன்.

   அப்போது சிந்தித்த போது இந்த பதிவு தோன்றியது. எழுதி உங்களை மொக்கைப் போட்டுவிட்டேன்.  இப்போது எல்லா பொருட்களிலும் வாட்ச் வந்து வாட்ச் புல்லாக இருக்கிறது உலகம். ஆனால் வாட்ச் அணிந்த கைகள் இப்போது வாட்ச் இல்லாமல் அழகிழந்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.  எல்லாம் ஒரு மாயைதான்!

டிஸ்கி} நேற்றே எழுதி பதிவிட முடியாமல் போன பதிவு. கணிணி கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. வலைச்சர பதிவுகள் இன்று கொஞ்சம் தாமதமாய் வெளிவரும். பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

  1. என்னதான் கைபேசி இருந்தாலும், வாட்ச் போட்டு பழக்கமான பின், போடாமல் இருக்க முடியாது...

    ReplyDelete
  2. முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன் முதன் முதலாய் கடிகாரம்கட்டிய நினைவுகள் வருகின்றன நண்பரே நன்றி

    ReplyDelete
  3. பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. கிட்டத்தட்ட பலரும் இவ்வாறான அனுபவங்களைப் பெற்றிருப்பர்.

    ReplyDelete
  4. வணக்கம்,
    என் கடிகார நினைவையும் எழுப்பியது உம் பதிவு,
    அருமை, வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பழைய நினைவுகளை மீட்டெடுத்த பதிவு....எங்கள் அனுபவமும் இப்படித்தான்....

    ReplyDelete
  6. நல்ல பதிவு!
    நானும் அப்படிதான் மொபைல் வந்தப்பின் வாட்ச் கட்டுவதை நிறுத்திவிட்டேன்.

    ReplyDelete
  7. நானும் முன்பு எல்லாம் வாட்ச் இல்லாமல் போகமாட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் விட்டு விட்டேன். கட்டாமலும் இருக்க முடியும் என்று.

    இப்போது கட்டினாலும், கட்ட மறந்தாலும் ஒன்னும் தோன்றுவது இல்லை. செல் அல்லது யாரிடமாவது கேட்டுக் கொள்வது என ஆகிவிட்டது.

    ReplyDelete
  8. I read Tamil very very slowly, but I read your post with great interest. I can't write in Tamil though. I enjoyed reading your post about your interaction with different kinds of watches. I am a watch enthusiast myself and am fond of HMT mechanical (hand winding) watches. Please find out what happened to your HMT watch. My first HMT watch (HMT Vijay) purchased in 1983 is still running and my father's HMT Pilot purchased sometime in the 1970s is also still functioning.

    I understand that many people prefer not to wear watches these days because they can see time on their mobile phones, but wearing a good watch has its own charm and elegance.

    ReplyDelete
  9. எனக்கு எப்போதும் கடிகாரம் கையில் இருக்க வேண்டும்...
    ஏனோ தெரியவில்லை சில நாட்களாக கடிகாரம் கட்டுவதை நிறுத்திவிட்டேன்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. Watch your W ords
    Watch your A ction
    Watch your T hought
    Watch your C harecter
    Watch your H eartt ......sathya sai baba

    ReplyDelete
  11. கடியாரம்& கடிகாரம் ஆகிய சொற்களுக்கிடையே வேறுபாடு என்ன?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2