தித்திக்கும் தமிழ்! பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்! கடுக வா! முத்துசாமி!

தித்திக்கும் தமிழ்!  பகுதி 16


பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டே தனி! அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களைக் கூட சேர்த்து எழுதி பொருள்பட கவிபாடி அசத்தி விடுவார்கள். தலைவன் வரக்காணோம் என்று தலைவி பிரிவுத்துயரில் இருக்கின்றாள். பிரிவுத்துயரம் எத்தனை சோகமானது.
 அத்தனை சோகம் கொண்ட தலைவி எப்படி பாடுகின்றாள் பாருங்கள்!

 பலசரக்குப் பைஎடுத்தான் வேள்; ராய புரியாள்
    பயந்தேன்என் றாள்; ‘அரிசி வசம்போ’ என்று அழுதாள்;
மலர்சூடன் சாம்பிராணி யானேன்என் றாள் நீ
    வரக்காணம் என்று அழுதுஇ துவரைஎதிர் பார்த்தாள்
அலைகடலை வைகின்றாள்; ‘என்னமாய், அக்கா
  யான்பிழைப்பேன்?” என்றாள் பேச் சுக்குமதி மதுர,
கலமுத்து சாமிசீர் அகம் இளகன் பாக்கு;
  கடுகவா! இதில்வெகு சகாயமுண்டு குணமே!

முதல் வாசிப்பில் ஒன்றும் புரியாது அல்லவா? பலசரக்கு அரிசி சூடம், சாம்பிராணி என்று ஏதோ மளிகைக் கடை வஸ்துக்களை பட்டியல் இட்டு இருக்கிறாரே என்று தோன்றும்.

   ஆனந்தம் என்ற படத்தில் மளிகைக்கடைகாரர் காதலிக்கு எழுதிய கடிதம்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் எழுதியது கவிதை அல்ல! நகைச்சுவை! இதோ இந்தப் புலவரும் அப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை அல்ல கவிதை மிளிர்கின்றது.

  அழகிய சொக்கநாதம் பிள்ளை என்றொரு புலவர், இவரை ஆதரித்த வள்ளல்  முத்துசாமி வள்ளல். இந்த முத்துசாமி வள்ளலை வைத்து ஓர் தூது கவி இயற்றி இருக்கிறார் சொக்க நாதம் பிள்ளை.

   முத்துசாமி வள்ளலை நினைத்து பிரிவாற்றாமையால் வாடும் தலைவி எவ்வாறெல்லாம் வாடுகின்றாள்! அவளை வந்து விரைவில் பார்ப்பாயாக! என்று சொல்கின்றார் கவிஞர்.

  பல சரக்கு பை எடுத்தான்: மன்மதன் தன் பல அம்புகள் கொண்ட அம்புறாத் துணியை எடுத்தான்.

ராயபுரியாள் பயந்தேன் என்றாள்: ராயபுரி என்னும் ஊரில் வாழ்பவள் பயந்தேன் என்று சொன்னாள்.

அரிசி வசம்போ என்று அழுதாள்” : அரியே! சிவசம்போ எனச் சொல்லி அழுதாள்

மலர் சூடன் சாம்பிராணியானேன் என்றாள்: மலர் சூடமாட்டேன்! நான் இறக்கும் நிலையில் உள்ள பிராணியாக ஆனேன் என்றாள்.

வரக்காணோம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்: வள்ளல் வருவார் என்று இதுவரை எதிர்பார்த்து வராமையால்அழுகின்றாள்.

அலைகடலை வைகின்றாள்:  அலைஉடைய கடலை திட்டுகின்றாள்
என்னமாய் அக்கா யான் பிழைப்பேன்? என்றாள்:  தமக்கையே! நான் எவ்வாறு உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள்.

பேச்சுக்கு மதி மதுர கலமுத்து சாமி சீர் அகம் இளகன் பாக்கு; இனிக்க இனிக்க பேசும் அகன்ற மார்பினை உடைய முத்துசாமி வள்ளல்  உள்ளம் இளகி என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்கிறாள்.

கடுகவா! இதில் வெகு சகாயமுண்டு குணமே!

  ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து சேர்வாயாக! அது மிக்க உதவியாக இருக்கும் நன்மை ஏற்படும்.

  முத்துசாமி வள்ளலை நினைத்து ஏங்கும் ஓரு பெண்ணை தலைவியாக வைத்து இந்தப்பாடல் புனையப்பட்டுள்ளது.  இந்த பெண்ணின் மீது மன்மதன் தன் அம்புகளை வீசி விட அவள் அஞ்சிப்போய் “ அரியே! சிவ சம்போ! என்று அழுது கிடக்கின்றாள். மலர் சூடேன், என்றவள் சாகும் நிலையில் உள்ள பிராணி போல் வதங்கி  முத்துசாமி வள்ளலை எதிர்பார்த்து காத்திருந்தாள். அலைகடல் போல் அவள் உள்ளம் பொங்க, கடலை வசை பாடுகின்றாள். அலைகடலில் வாழும் லஷ்மிதேவியைப் பார்த்து அக்கா நான் எப்படி உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள். இனிக்க இனிக்க பேசி மகிழ்விக்கும் பரந்த மார்பினை உடைய முத்துசாமி வள்ளல் உள்ளம் இளகி வந்து என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்று கேட்கின்றாள். ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து இந்த பெண்ணின் சோகம் தீர்ப்பாயாக! அது மிக்க நன்மை பயக்கும் என்று சொல்கின்றார் புலவர்.

இதை அப்படியே வறுமையில் வாடிய புலவர் வள்ளலின் முகம் காணத் தவிப்பது போலக் கூட உணரலாம் அல்லவா?


மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் மீண்டுமொரு பாடலுடன் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

  1. ஆகா...! ஒவ்வொரு வரியும் இனிமை...

    ReplyDelete
  2. நல்லதொரு பாடல். அப்படியே வாசித்தால் மளிகைப் பொருள் தென்படும். பிரித்துப் படித்து வாசித்தால் பொருள் அறிய முடிகின்றது....

    தங்கள் விளக்கமும் நன்று சுரேஷ்! இப்படி நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆம் தமிழ் தித்திக்கும் தமிழ்தான்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. நல்ல கவிதை, அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  4. பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டு கண்டு ரசித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  5. அருமையோ அருமை சகோதரரே!
    வியந்து நிற்கின்றேன்! அருமையான விளக்கம்!

    நல்ல பதிவும் பகிர்வும்! மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  6. அருமை.... இதுவரை படித்திராத பாடல். பொருள் விளக்கத்துடன் தந்ததால் புரிந்து கொள்ள முடிந்தது.

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  7. ஆஹாபாடலும் விளக்கம் அருமை அருமை சகோ வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. ஆகா! வெகுவாய் கவர்ந்தது மனதை. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  9. செமையான பணி தோழர்
    தொடருங்கள்

    ReplyDelete
  10. பாடலும் பொருள் கூறிய விதமும் ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2