பயிரை மேயும் வேலிகள்!
குழந்தையின் உடல் அனலாய் கொதிப்பதைக் கண்டு கனகத்திற்கு கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! சமையல்கூட செய்யாமல் குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். வேலைக்குச் சென்ற அவள் புருஷன் இன்னும் வீடு திரும்பவில்லை! அவன் ஓர் கூலித் தொழிலாளி. இந்த வேலை என்று இல்லை! எது கிடைக்கிறதோ செய்வான். கிடைக்கும் காசில் குடித்துவிட்டுத் திரும்புவான்.
“பாவிமனுஷன்! இன்னிக்காவது குடிக்காம வரணும்! முருகா! நீதான் அந்த ஆளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்!” கனகத்தின் வேண்டுதலை முருகன் நிறைவேற்றவில்லை! அப்போது உள்ளே நுழைந்த கனகத்தின் புருஷன் சபாபதிக்கு முன் சாராயநெடி உள்ளே நுழைந்து கனகத்தை ஆத்திரப்படச் செய்தது.
“ ஏய்யா! உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா! குடும்பத்து மேல அக்கறை இருக்கா! பொழுதன்னைக்கும் சம்பாதிக்கிறதை இப்படி குடிச்சியே அழிக்கிறியே! இங்க புள்ள ஜுரத்துல கிடந்து தவிக்குது! உனக்கு சரக்கு கேட்குதா?” என்று வெடித்தாள் கனகம்.
சபாபதி அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், “ஏய் புள்ளை! சோறு போடு! இன்னிக்கு என்ன ஆக்கினே! கறி மீன் ஏதாவது செஞ்சியா?” என்றான்.
“ யோவ்! நான் என்னா பேசறேன்! நீ பாட்டுக்கு சோறு போடச்சொல்றே! புள்ளை பச்ச தண்ணி குடிக்காம ஜுரத்துல இருக்குதுன்றேன்!”
“அது கிடக்குதும்மே! எனக்கு பசிக்குது! சோறு போடு!”
“ சோறு ஆக்கலை!”
“ என்னது சோறு ஆக்கலையா! அப்ப வீட்டுல என்னத்தை ........புடுங்கிட்டு இருந்தே! புருஷன்காரன் பகல் முழுக்க வேலை செஞ்சிட்டு ஊட்டுக்கு வந்தா ஒரு புடி சோறு வக்கணையா ஆக்கி போட முடியுதாடி உன்னால...!”
“ யோவ்! நீ என்னாத்தை சம்பாரிச்சு கொண்டுவந்துகொட்டிட்டேன்னு
அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கே! சம்பாதிக்கற எல்லாத்தையும் பொழுதன்னைக்கும் குடிச்சுப்புட்டு
இங்க வந்து அதிகாரம் பண்றே வக்கில்லாத புருஷா!”
” என்னடி சொன்னே?”
கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
“ யோவ்! பெத்த
குழந்தை மூணுநாளா கண்ணை தொறக்காம கிடக்குது! அத ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியாம
நான் அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்! உனக்கு அது தெரியுதாய்யா! பெரிசா சோறு கேட்டு
அடிக்க வந்துட்டே!”
ஆமாம்! ஊரு உலகத்துல
இல்லாத புள்ளை! இவதான் பெத்தா! எப்ப வந்தாலும் சோத்தை போடாம ஒரே பொலம்பல்! போங்கடி
நீயும் உன் மவனும்! செத்து தொலைங்க! நான் நிம்மதியா இருப்பேன்! கத்திவிட்டு வெளியேறினான் சபாபதி.
அட துப்புக்கெட்ட மனுசா! கொஞ்சமாவது இரக்கம் இருக்குதா
பாரு! என்று புலம்பிய கனகம் பண்ணையாரை பார்த்து
உதவி கேட்டுவரலாம் என்று முடிவு செய்தாள்.
பண்ணையாரின் வீட்டில் எடுபிடி வேலைக்கு சபாபதிதான்
அவளை சேர்த்துவிட்டிருந்தான். இரண்டு நாட்களாக மகனுக்கு ஜுரம் என்று போகவில்லை! இன்று
போய் ஏதாவது பணம் வாங்கி மகனை ஆஸ்பத்திரியில் காட்டிவரலாம் என்று நினைத்தாள்.
“ அய்யா!”
“யாரு கனகமா? என்னம்மா
ரெண்டுநாளா வரலை! இப்பத்தான் அட்ரஸ் கண்டுபிடிச்சி வர்றியா?”
இல்லே அய்யா! பச்ச
புள்ளை ஜுரத்துல தவிக்குதுங்கய்யா! அதான் வர முடியலை! ஒரு ரெண்டுநாளு பொறுத்துக்கங்க
ஐயா! வேலைக்கு வந்திடறேன்!”
“சரிசரி! அதைச் சொல்லத்தான் வந்தியா! நான் என்னமோ
வேலை செய்ய வந்திருக்கேன்னு உனக்காக நிறைய வேலைங்க ஒதுக்கி வச்சிருக்கேன்!”
”அய்யா….” இழுத்தாள் கனகம்.
“என்னம்மா!
அதான் சொல்லிட்டேனே! ரெண்டு நாள் பொறுத்துதான் வா!”
”அதில்லை ஐயா!”
“எதில்லை?”
“அய்யா
கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணா எம் புள்ளைய
ஆஸ்பத்திரியிலே காட்டிருவேன்!”
“ ஏம்மா! கவர்மெண்ட்
ஆஸ்பத்திரியிலே இப்பல்லாம் பணம் கேக்கறாங்களா
என்னா? உன்னை மாதிரி ஏழைபாழைங்க என்ன பண்ணுவீங்க பாவம்? ”கேலியாக பேசினார் பண்ணையார்.
“ஐயா! இது விஷ ஜுரமாம் தனியார் ஆஸ்பத்திரிக்கு டவுனுக்கு
கொண்டுபோகனும்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே சொல்லிட்டாங்க!”
“அப்ப நிறைய
பணம் செலவாகுமே!”
“நீங்க கொஞ்சம் கடனா கொடுத்து உதவுனா…”
ஏம்மா! நான் யாருக்கும்
அடமானம் இல்லாம கடன் கொடுக்க மாட்டேனே! ஏளனமாக சொன்ன பண்ணையாரின் கண்கள் அவளின் அங்கங்களை
மேய்ந்தன. கனகம் கூசிப்போனாள்.
“ஐயா! என் சம்பளத்துல கழிச்சிக்குங்க! நான் வேலை செஞ்சு
அடைச்சிடறேன்!”
”தோ பாருடா! உன் புருஷன் முன் பணம் வாங்கிட்டுதான்
உன்னை வேலைக்கே சேர்த்து விட்டிருக்கான். அது கழியவே இன்னும் பல மாசம் ஆகுமே!”
“அடமானம் எதுவும் இல்லீங்களே ஐயா!”
“தோ பாரு கனகம்! எதுக்கு வெட்டியா பேசி இழுத்துக்கிட்டு!
நீ மட்டும் சம்மதி! உன்னை மட்டுமல்லே உன் குடும்பத்தையே வச்சு காப்பாத்தறேன்! சரின்னு
ஒரு வார்த்தை சொல்லு உன் மவனை இப்பவே டவுன் ஆஸ்பத்திரியிலே சேர்த்துடறேன்! உன் குடிசை
வீட்டை கோபுரமா மாத்திடறேன்!”
ச்சீ! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்! அடுத்தவன் பொண்டாட்டியை எப்படி இப்படி வாய் கூசாமா
கேட்க முடியுது? அடுத்தவன் பொண்டாட்டியை பெண்டாள கூப்பிடறியே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம?
உனக்கெல்லாம் எதுக்குய்யா வெள்ளைச் சட்டை! காறி உமிழ்ந்த கனகம் வேகமாக வெளியேறினாள்.
அவள் வீடு திரும்பிய சமயம் சபாபதி திரும்பிவிட்டிருந்தான்.
குழந்தை ஜுரவேகத்தில் அனத்திக் கொண்டிருக்க, “எங்கடி போயி மேய்ஞ்சிட்டு வரே நாயே!”
என்றான்
யோவ்! நீ ஒழுங்கா இருந்தா! குடிக்காம புருஷனா நடந்துக்கிட்டா
இப்படி கண்ட நாய் என்னை கேள்வி கேக்குமா? பண்ணையார் வீட்டில் நடந்ததை கூறினாள் கனகம்.
“ ஏண்டி! ஒத்துக்கறதுதானே! வேலை செய்யாமலேயே நாள்
முழுக்க குடிப்பனே! உக்காந்து சோறு துண்ணுவனே!”
“ ஏய்யா! நான் உன் பொண்டாட்டி! அது நினைப்பு இருக்கா?”
“அதனாலதான்
உன்னை போகச் சொல்றேன்!”
கனகத்திற்கு பேரதிர்ச்சியாக
இருந்தது. ”சே! வெக்கம் கெட்ட மனுஷா! பொண்டாட்டியை
அடுத்தவன் கிட்ட விட்டு சம்பாதிக்க நினைக்கறியே உனக்கு மானம் இருக்கா? அறிவு மழுங்கி
போயிருச்சா? உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி? நீ கட்டுன தாலி என் கழுத்துல இருக்கறதே
அசிங்கம்! அதைஅடகு வைக்க கூட
நான் தயங்கினேன் ! ஆனா நீ பொண்டாட்டியையே அடகு வெக்க துணிஞ்சிட்டியே! ”
“ என்னாடி! ஓவரா பேசிக்கிட்டு போறே?” கையை ஓங்கிவந்தான்
சபாபதி.
அவனது கையை மடக்கிய கனகம், யோவ்! நிறுத்துய்யா! நீயெல்லாம் ஒரு புருஷன்! உன் கூட வாழறதைவிட வாழாவெட்டியா
இருந்துட்டு போறேன்! இனி அடிக்கற வேலை வெச்சுக்காதே! நீ கட்டுன தாலியை வித்து பையனுக்கு
வைத்தியம் பார்க்க போறேன்! இதையும் உன்கிட்ட
அறுத்து போட்டுருவேன்! ஆனா ரோஷம் கெட்ட நீ அதையும் குடிச்சு அழிச்சிருவே! அதனால அதைச்
செய்யலை!
“உன் கூட
வாழ்ந்த நாளுக்கு கூலியா அதை எடுத்துக்கிறேன்! இனிமே உன் கூட வாழறதைவிட நாலு வீட்டுல
பத்து பாத்திரம் தேச்சி பொழச்சுக்கறேன்! பாதுகாப்பா இருக்க வேண்டிய வேலியே ஆடாக மாறி பயிரை மேயறபோது பயிர்கள் மத்த ஆடுகளுக்கு
பயப்பட வேண்டியதே இல்லை!”
உங்களை மாதிரி வேலிகளின் பாதுகாப்பில் இருப்பதை
விட ஆடுங்களோட போறாடி வாழறதே மேல்! போ! போ குடிச்சு குடிச்சு சாகு! இப்பவே நான் பொட்டை
அழிச்சுக்கறேன்! என்ற கனகம் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறுகையில் வானத்தில் ஓர்
இடிமுழக்கம் கேட்டது போல் இருந்தது.
டிஸ்கி} நான் நடத்திய
கையெழுத்து பத்திரிக்கை தேன் சிட்டில் 99ல் எழுதிய கதை! சிறுமாற்றங்களுடன் இங்கு பதிவு
செய்கின்றேன்.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இதற்கும் மேல் அந்த ஆள் திருந்தவும் போவதில்லை... எடுத்த முடிவு சரியான முடிவு...
ReplyDeleteஅருமையான சிறுகதை .. முடிவு சூப்பர்
ReplyDeleteசரியான முடிவு... திருந்தாத ஜென்மங்கள்...
ReplyDeleteஅருமையான கதை.
முடிவு மிகவும் சரியே! திருந்தாத ஜென்மங்களுடன் இருந்த வாழ்வைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொள்வதை விட இது நல்ல முடிவு...
ReplyDeleteசாது மிரண்டால்....
ReplyDeleteநல்ல கதை நல்லமுடிவு
ReplyDeleteஎல்லோரும் இந்த முடிவை எடுக்காமல் இருப்பதால்தான் , குடிகாரர்கள் திருந்தவில்லை !
ReplyDeleteசரியான முடிவு. இப்படி தைரியமான பெண்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்க வேண்டும்.
ReplyDelete