தித்திக்கும் தமிழ்! பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

தித்திக்கும் தமிழ்! பகுதி 15  மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

இன்று அவசர யுகம்! பொருளீட்ட கடல் கடந்து பறக்கிறார்கள். விமானங்கள், நவீன சொகுசு கப்பல்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள் என எத்தனையோ போக்குவரத்துச்சாதனங்கள் மலிந்துவிட்டன. அதே போல தொலைதொடர்பு சாதனங்களும் மிகுந்துவிட்டன. எங்கிருந்தாலும் அலைபேசி மூலம் தொலைக்காட்சி உரையாடல் செய்ய முடிகின்றது. தொழில்நுட்பம் பெருகிய இக்காலத்தில் பிரிவு என்பது ஒரு பெரிய வலியாக இருக்க முடியாது. அருகில் இல்லை என்ற வருத்தம் இருக்கும். நினைவுகள் அழுத்தும் ஆனால் உடனே அலைபேசியில் பேசி நம் மனதிற்கு பிரியமானவரிடம் உரையாடி ஆறுதல் காண முடியும்.

சங்க காலத்தில் அவ்வாறு கிடையாது. தலைவன் தலைவியை பிரிந்து சென்றால் திரும்பி வரும் காலம் வரை எந்த ஒரு செய்தி பரிமாற்றமும் கிடையாது. அப்படியே இருந்தால் தூதஞ்சல் மட்டுமே! தலைவி இப்படி தலைவன் வருகை இன்மையால் வாடியிருக்க அவளுக்கு நல்ல அறிகுறிகள் காட்டி தலைவன் விரைவில் திரும்பிவந்துவிடுவான் என்று நம்பிக்கை ஊட்டுவாள் தோழி. இத்தகைய காட்சிகளை அகநானூற்றில் அழகாக காட்சி படுத்தியுள்ளனர் பழந்தமிழ் புலவர்கள்.
இந்த தலைவனின் அன்பைப் பாருங்கள்! இப்படியொரு காதலனை கணவனாகக் கொண்ட அந்த தலைவி புண்ணியம் செய்தவள் அல்லவா? இதோ பாடல்! குறுங்குடி மருதனார் எத்தனை அழகாக இந்த பாடலை இயற்றியுள்ளார் பாருங்கள்!

  ''முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே."


பணியின் நிமித்தமாக வெளியூர் கிளம்புகின்றான் தலைவன். கிளம்புகையில் தலைவி சோகமாகின்றாள். உங்களை பிரிந்து எப்படி இருப்பேன் என அவள் கேட்கையில் கார்காலத்தின் தொடக்கத்தில் உன்னிடத்தே இருப்பேன்! அதுவரை பொறுத்திரு! என்று சொல்லிச் செல்கின்றான்.

தலைவியோ தலைவன் திரும்பவில்லையே என்று தனது மெல்லிய உடல் மேலும் மெலிய பிரிவாற்றாமையினால் வருந்தினாள். அப்போது தோழி தலைவியைத் தேற்றுகின்றாள்.

இதோ கார்காலம் தோன்றிவிட்டது! நம் தலைவர் இப்பொழுதுவந்துவிடுவார் என்று அவள் தலைவன் வருகையை இவ்வாறு கண் முன்னே நிறுத்துகின்றாள். ஆராய்ந்து எடுக்கப்பட்ட வளையல்களை அணிந்த தலைவியே!

முல்லைக்கொடிகள் நிறைந்திருக்கும் வனத்தில் கொடிகளில் கூர்மையான வாசம் மிகுந்த மொட்டுக்கள் தோன்றுகின்றன. தோன்றா மரம் அரும்புகளுடன் விரிய கொன்றைமரத்தின் இலைகள் பசுமை பூக்க அதன் மொட்டுக்கள் மெல்லிய இதழ்களை விரிக்கின்றன.

இத்தகைய வனத்திலே இரும்பை முறுக்கிவிட்டது போன்ற இருபுறமும் நீள கரிய பெரிய கொம்புள்ள ஆண் மான்கள் பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களில் தேங்கியுள்ள நீரை அருந்தி மகிழ்ச்சியினால் துள்ளிக் குதிக்கின்றன.

இத்தனை நாட்கள் கோடையில் நீர் இன்றி தவித்த உலகம் தன் வருத்தம் நீக்க மேகக்கூட்டம் மின்னலுடன் தோன்றி தன்னுடைய நீரை சொறிந்தமையால் அழகிய கார்காலம் உதித்தது. முல்லை நிலமான இந்த கானகம் அழகாக விளங்குகின்றது. இந்த காலத்தே திரும்பி வருவேன் என்று நம் தலைவர் உரைத்த கார்காலம் துவங்கிவிட்டது.

வளைந்த தலையாட்டத்தினால் கொய்த  பிடரி மயிரினை உடைய குதிரைகளின் கடிவாளமானது நெகிழ குதிரைகள் விரைவாக ஓடுகின்றது. பூ பூத்த சோலையின் நடுவே தலைவனின் இந்த ரதமானது தலைவியின் பிரிவுத்துயரை போக்க விரைந்து கொண்டிருக்கின்றது. அப்போது கொன்றை மலர்களில் யாழின் நரம்புகள் ஒலித்தாற்போல ஓர் இனிமையான இசையை ஒலித்துக்கொண்டு வண்டுகள் தம் துணையுடன் தேனருந்திக் கொண்டு இருக்கின்றன.

இந்த காட்சியைக் கண்டதும் தலைவனுக்குள்ளே காதல் உணர்வு மேலிட தம் இரதத்தில் உள்ள மணியோசைகள் அந்த வண்டுகளின் காதலைப் பிரித்துவிடுமே என்று வருந்துகின்றான். உடனே தலைவன்  குதிரையின் கழுத்தில் உள்ள மணியின் நாவை இழுத்துக் கட்டுகின்றான். தம்மைப் போல வண்டுகள் பிரிவுத்துயர் அடைய வேண்டாம் என்ற அன்பில் அவன் இதனைச் செய்து முடித்தான்.

இத்தகைய அருள் சுரக்கும் குணமுடைய தலைவன், சிறிய மலைகளை உடைய நாடன், ஆரவாரிக்கும் ஓசையுடைய விழாவினை எடுக்கும் உறையூர்க்கு கிழக்கில் உள்ள நீண்ட பெரிய மலையில் பூத்த காந்தள் மலரைப் போன்ற உன் சிறந்த அழகினை எண்ணி உன் நினைவாக உன் பெண்மை நலம் பேணி தன் வினை முடித்து விரைந்து வருகின்றான் என்கின்றாள் தோழி.

எத்தனை அழகான உவமைகள்! எத்தனை எத்தனைச் செய்திகள் இதில்! உறந்தை என்று விளிக்கப்படுவது உறையூர். குன்றம் என்று குறிக்கப்படுவது சிராப்பள்ளி மலை குணாது என்றால் கிழக்கில் உறையூருக்கு கிழக்கே சிராப்பள்ளி மலையில் பூக்கும் காந்தள் மலரின் நறுமணத்தோடு தலைவியின் பேரின்பம் ஒப்பிடப்படுகின்றது.


இந்தப்பாடலை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் எனது தமிழாசிரியர் திரு முருகேசன் அவர்கள் விளக்கியது அத்துணை சிறப்பாக இருந்தது. அவர் விளக்கம் இன்று நினைவில் இல்லாத போதும் தலைவன் வண்டுகள் பிரியுமே என்று மணிநாவை கட்டிய காட்சியை விவரித்தமை இன்னும் நினைவில் நிற்கின்றது.  இதை அப்படியே ஓர் சிறுகதையாக எழுதலாம் என்றும் ஓர் ஆசை உள்ளது. அப்படி பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்தப் பகுதி அப்படி இல்லாமல் பாடல் விளக்கமாக எழுதுவதால் இப்படி பதிவிட்டேன்.

இந்தப்பாடலை எனக்கு எளிதாகத் தேடிக் கொடுத்த ஊமைக்கனவுகள் ஆசான் திரு விஜி அவர்களுக்கும் தேடலை நினைவுகூற வைத்த பாலமகி பக்கங்கள் பேராசிரியை மகேஸ்வரிபாலசந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு அழகிய பாடல் விளக்கத்துடன் சந்திப்போம்! நன்றி!



Comments

  1. வணக்கம்
    ஐயா
    பாடலும் விளக்கமும் தனிச் சிறப்பு...ஐயா. பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுரேஷ் ! நீங்கள் கொடுத்து வைத்தவர்! இது போன்ற பாடல் உங்களுக்குத் தமிழ் பாடநூலில் இருந்தமைக்கு.

    அழகிய பாடல்! உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது. தொடருங்கள் தித்திக்கும் தமிழை! நாங்களும் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றோம்.

    பல காலம் மறந்திருந்த நல்ல தமிழை (பள்ளி, கல்லூரி காலங்களில் தமிழை மனதில் நேசித்துக் கற்போம் நாங்கள்...) இப்போது சகோ விஜு, சகோதரி பாலமகி, தங்கள் வாயிலாக மீண்டும் உயிரிப்பித்துக் கொள்கின்றோம்.

    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரி க்ரேஸ் உட்பட...அவர்களைக் குறிப்பிட மறந்துவிட்டோம்...

      Delete
  3. அருமையான பாடல் மற்றும் விளக்கம். ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  4. சங்கத்தமிழை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம் தளீர்,
    நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்,
    என் தளத்தைத் தங்கள் பதிவில் பல தடவை பல காரணங்கள் கொண்டு,,,,,,, அறிமுகப்படுத்திவிட்டீர்கள், நன்றி,,,,,,,,,,,,,
    தஙகள் விளக்கம் அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  6. பாடல் விளக்கம் அருமை...

    ReplyDelete
  7. காட்சிகளை மனத்திரையில் விரிக்கும் படியான அருமையான விளக்கம்.

    ஆரம்ப ஒப்பீடு அருமையான உண்மை ! உலகம் மிகவும் சுருங்கிவிட்ட இன்று தூர தேசம் சென்றவர் பற்றிய துயரங்களெல்லாம் சில மணித்துளிகள்தான் !

    இலவசமாகவே இருக்குதே வாட்ஸாப் !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html#comment-form
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  8. ரசிக்கவைக்கும் அழகான அகநானூற்றுப் பாடலும் அதற்கான எளிய விளக்கமும் தந்து எழுத்தால் காட்சிப்படுத்தியமை நன்று. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  9. சங்க காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். பாடலும் விளக்கமும் அருமை. நண்பர்களை ஒப்புநோக்கிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்.

    முதலில் மிக வருந்துகிறேன்.

    இவ்விடுகையைத் தவற விட்டமைக்கு.

    இறுதியில் என் பெயரையும் சேர்த்துவிட்டீர்கள்.

    ஒரு வகுப்பில் உங்கள் முருகேசன் ஐயா பாடம் நடத்திக்கொண்டிருக்க, நீங்கள் மாணவராய் அமர்ந்திருக்கும் காட்சி என் கண்முன் வந்தது.

    :)

    இப்பாடல் என் நினைவில் இருக்கக் காரணம் வேறானது.

    அதைக்குறித்து இதே பாடலைப் பற்றிய என் பதிவில் சொல்கிறேன்.


    நன்றி.

    ReplyDelete
  11. பாடலையும் அதற்கான விளக்கத்தையும் ஓர் ஓவியமாகத் தீட்டிவிட்டீர்கள். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  12. Miga arumaiyana nadai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2