எறும்புகளின் கோபம்! பாப்பா மலர்!
எறும்புகளின்
கோபம்! பாப்பா மலர்!
வெகு
காலத்துக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு கணவன்
மனைவி வாழ்ந்து வந்தாங்க! அவங்களுக்கு மூணு கொழந்தைங்க. மூணுபேரும் ஆண் பிள்ளைங்க.
மூத்தவனும் கடைசி பிள்ளையும் நல்லா இருந்தாங்க. நடுப்பிள்ளைக்கு மட்டும் கண்ணு
தெரியாது.
இந்த பையன் மட்டும் கண்ணு தெரியாத பையனா
பொறந்துருச்சேன்னு புருஷனும் மனைவியும் கவலைப்பட்டு கவலைப்பட்டு அவங்களும் நோயில
விழுந்துட்டாங்க. இனி பிழைக்க மாட்டோம்னு அவங்களுக்கு தோணவும் தங்களுடைய காடு
கரையெல்லாம் நடு மகன் பேர்ல எழுதி வைச்சாங்க. அப்புறம் மூத்தவனையும் இளையவனையும்
கூப்பிட்டு சில புத்திமதி சொன்னாங்க.
“ பிள்ளைங்களா! உங்களோட பிறந்தவன் கண்ணு
தெரியாதவனா இருக்கான். அதனால அவன் பேருக்கு நாங்க சொத்து எல்லாத்தையும்
எழுதிட்டோம். இந்த சேதி ஊராருக்குத் தெரிஞ்சா அவனை ஏமாத்தி எல்லாத்தையும்
பிடுங்கிகிட்டு ஊரவிட்டு விரட்டிருவாங்க. அதனால ரகசியமா அவன் பேருல எழுதி இருக்கோம்.
நீங்க ரெண்டுபேரும் அதுல வர்ற வருமானத்தை எல்லாம் எடுத்துக்குங்க, ஆனா அவன் வயித்துக்கு கஞ்சி ஊத்தி துணிமணி
எடுத்துக் கொடுங்க. அவன் காலத்துக்கு அப்புறம் நீங்க சொத்தை பிரிச்சுக்கிட்டு
சுகமா இருங்க!” அப்படின்னு சொன்னாங்க.
இதைக்கேட்டதும் ரெண்டு மகன்களுக்கும் கோவம்
வந்துச்சு! நமக்கு ஒண்ணும் இல்லாம குருட்டு பையனுக்கு எல்லாம் எழுதிட்டாங்களே!
இன்னும் கொஞ்ச நாள்ள சாகப்போற இவங்க கிட்ட சண்டை போடவேண்டாம். அப்புறம்
பார்த்துக்கலாம்னு சரிம்மா! சரிப்பா!
நீங்க சொல்றபடியே நடந்துக்கிறோம்னு சொல்லிட்டாங்க.
கொஞ்ச நாள்ள அந்த கணவன் மனைவி ரெண்டு பேரும்
இறந்து போயிட்டாங்க. சொத்து எழுதி வச்ச விவரம் அப்பா- அம்மா அண்ணன் –
தம்பிக்கிட்டே பேசுனது எதுவும் நடுப்பையனுக்கு தெரியாது. அவன் பாட்டுக்கு எப்பவும் போல மூத்தவன் வீட்டுல
சாப்பிட்டுக்கிட்டு இருந்தான்.
ஒருநாள் அவங்க அண்ணன், “டேய்! இனிமே முப்பது
நாள் இங்கேயும் முப்பது நாள் தம்பி வீட்டிலேயும் சாப்பிட்டு தங்கிக்க என்று
சொன்னான். நடுப்பையனும் அதை ஒத்துக்கிட்டு தம்பி வீட்டுக்கு போய் தங்கினான்.
இவன் வேலையே செய்யாம மூணு வேளையும் கஞ்சி
குடிக்கிறது அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் எரிச்சலா இருந்துச்சு. “ இவனும் நம்ம ரெண்டு பேரைப் போல ஒரே தாய்
வயித்துல பொறந்தவன் தானே! நாம மட்டும் உழைக்கணும் இவன் உட்காந்து திங்கணுமா?” அப்படின்னு
பேசிக்கிட்டாங்க. அப்புறமா நடுப்பையனுக்கு
களத்துமேட்டில காவல் வேலையைக் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க.
மூத்தவன்
ஒருநாள் களத்துல சோளத்தட்டையை காயப்போட்டு, “கண்ணு தெரியாதுன்னு சொல்லாம ஒழுங்கா காவல்
பாரு! ஒரு குருவி காக்கா வந்து கொத்திக்கொண்டு போகாம நல்லா காவல் காக்கணும் தெரியுதா? சாக்கு போக்கு
சொல்ல கூடாது. அப்படி சொன்னியோ துரத்திவிட்டுருவோம்”னு சொன்னாங்க!
நடுப்பையனும், அண்ணனும் தம்பியும் எத்தனை
நாளைக்குத்தான் நம்ம உட்கார வைச்சு தண்டக் கஞ்சி ஊத்துவாங்க! அவங்க சொல்ற வேலையை
செஞ்சி கவுரவமா சாப்பிடலாம்னு விசுவாசமா காவல் காத்துக்கிட்டு நிக்கான். ஒரு பெரிய
கம்பை தரையில தட்டிக்கிட்டு “சூ! சூ!” என்று கத்திகிட்டு அவன் காவல் காக்கையில்
ஒரு காக்கா குருவியும் கிட்ட நெருங்கலை!
சாயங்காலம் ஆச்சி. மூத்தவன் வந்து சோளக்களத்தை
பார்த்து அசந்து போயிட்டான். ஒரு சோளம் கூட குறையலையே! கண்ணு தெரியாட்டியும் நல்லா
காவல் காக்கிறானே! எந்த சாக்குச் சொல்லி இவனை விரட்டறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சான்.
கொஞ்சநேரத்துல அவன் தம்பியும் வந்தான்.
அப்போ களத்தோட
ஈசான்ய மூலையிலே ஒரு ஏழெட்டு எறும்புங்க சோளத்தை தூக்கிக்கிட்டு வரிசையா
போய்க்கிட்டு இருந்துச்சுங்க! அதை பார்த்ததும் அண்ணனுக்கும் தம்பிக்கும் இதான்
சாக்குன்னு தோணுச்சு.
‘நீ காவல் இருக்கிற லட்சணம் இது தானாடா?
சோளத்தை எல்லாம் எறும்புங்க தூக்கிட்டு போவ விட்டுட்டு என்னத்தை பெரிசா காவல்
காக்கிறே? அதுங்க இப்படி திருடிக்கிட்டு போச்சுன்னு களமே காலியாயிடும் போல இருக்க!
காலையில் இருந்து எவ்வளோ சோளம் போச்சோ? தெரியலையே! அதுங்க எடுத்துக்கிட்டு போன
சோளத்தை கொண்டுவந்தாத் தான் இனிமே உனக்கு
கஞ்சி ஊத்துவோம். இல்லாட்டா இனி வீட்டுப் பக்கமே வராதேன்னு” சொல்லி விரட்டி
விட்டுட்டாங்க!
நடுப்பையன் பாவம்! என்ன செய்யறதுன்னே தெரியலை!
செத்துப்போன அப்பா அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே நடந்தான். நடந்தான் அப்படி
நடந்தான். வழியிலே ஓர் எறும்பு புத்துக்கிட்ட வந்து உக்காந்து அழுதுகிட்டே
இருந்தான். அந்த புத்துல இருந்து வர்ற
எறும்புகளும் போற எறும்புகளும் இவன் அழுதுகிட்டே இருக்கிறதை பார்த்து
அரண்மணைக்குள்ள போய் ராணி எறும்புகிட்ட சொல்லுச்சுங்க! “ ரெண்டு கண்ணும் இல்லாத
ஒருத்தன் நம்ம புத்து வாசல்ல உக்காந்து அழுதுகிட்டு இருக்கான்” என்று கவலையா சொல்லிச்சுங்க.
உடனே ராணி எறும்பு பல்லாக்கிலே ஏறி உக்காந்துகிட்டு
வெளியே வந்துச்சு. நடுப்பையன் கிட்ட ஏம்பா நீ இங்க வந்து உட்காந்து அழுதுகிட்டு
இருக்கே?ன்னு கேட்டுச்சு .
தாங்க முடியாத சோகத்துல இருந்த நடுப்பையன்,
தன்னோட கதையை அழுதுகிட்டே சொல்லி, உங்க எறும்புப் படைங்க சோளத்தை எடுத்துட்டு வந்ததாலே எனக்கு சோறு போட
மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லி ’ஓ’ன்னு அழ ஆரம்பிச்சான்.
இதைக் கேட்டதும் ராணி எறும்புக்கு வந்துச்சே
கோவம்! “ பூமித்தாய் தர்ற இரையை பொறுக்கி
சாப்பிடற எங்களை காரணம் காட்டி கண்ணு தெரியாத உனக்கு இவ்ளோ கொடுமைய
பண்ணிட்டாங்களே உன் அண்ணன் தம்பிங்க!
மனுஷங்களான அவங்களை சும்மா விடக்கூடாது.”
“ எறும்புகளா! இனிமே நீங்க தீனிக்கு காடு
மேடுன்னு அலையாதீங்க! மனுஷங்க இருப்பிடத்துக்கே போய் அவங்க திங்கறது எல்லாம்
தின்னுக்கிட்டு அவங்க கூடவே குடியிருக்கணும். ஏதாவது இடைஞ்சல் பண்ணுனாங்கன்னா
சும்மா விடாதீங்க எல்லோரும் சேர்ந்து கடிச்சு வைங்க. இதனால நாம செத்தாலும்
பரவாயில்லை! அநீதி இழைச்ச அவங்களுக்கு தண்டணை கொடுத்த திருப்தியோடு செத்துப்
போங்க!” அப்படின்னு கட்டளை போட்டது.
அதனாலதான் அதுவரைக்கும் காடு கரையில இரை
பொறுக்கி தின்னுக்கிட்டிருந்த எறும்புங்க மனுஷங்களோட வீடுகள்ல நுழைய ஆரம்பிச்சுது.
நம்ம வீட்டு பண்டம் எல்லாத்தையும் சுவைச்சு ருசி பார்த்துக்கிட்டு இருக்குது.
அதோட அந்த ராணி எறும்பு கண்ணுத் தெரியாத அந்த
அப்பாவியை தன்னோட புத்துக்கு கீழே கூட்டிப் போய் வச்சுக்கிச்சாம். பூமிக்கு கீழே
அவன் சுகமா வாழ ஏற்பாடு பண்ணுச்சாம்.
அதுக்காகத்தான் இன்னும் இந்த எறும்புகள்ளாம்
பூமிக்கு கீழே இரையை எடுத்துக்கிட்டு போவுதாம். நீங்களும் போய் பார்த்தீங்கன்னா
அந்த கண்ணு தெரியாத தம்பி அங்க வாழறதை பார்க்கலாம்.
(செவிவழிக்
கதை)
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
கண்ணு தெரியாத தம்பி பூமிக்குள்ள இருக்கான் என்று சொல்லும் கதை அருமை... செவி வழிக் கதையாக இருந்தாலும் சிறப்பாக எழுதியிருக்கீங்க...
ReplyDeleteநல்ல கதை... அருமை...
ReplyDeleteசெவிவழிக்கதைக்கு ஒரு வடிவம் கொடுத்து பகிர்ந்துள்ள விதம் அருமை.
ReplyDeleteசில நாட்களாக வலையின் பக்கம் வர இயலாத நிலை
ReplyDeleteஅதனால் வலைச் சரத்திதினை வாசிக்க இயவவில்லை நண்பரே
இதோ வருகிறேன்
இதை அச்சிட்டு மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன்
ReplyDeleteநன்றி
செமை கதை சாமி
கதை அருமை சுரேஷ்! நீங்கள் எழுதியவிதம் ஆஹா! வாழ்த்துகள்! அடி பின்னுறீங்க !!!
ReplyDelete