நிழலை விற்றவன்! பாப்பாமலர்!
நிழலை
விற்றவன்! பாப்பாமலர்!
முன்னொரு
காலத்திலே அச்சமாபுரம் என்ற ஊர்ல அசோகன் என்ற பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன்
அந்த ஊரிலேயே பெரிய மாளிகை கட்டி அதில் வசித்து வந்தான். மாளிகையைச் சுற்றி
நிறைய செடிகொடிகள் நட்டு வைச்சிருந்தான்.
அதோட மாளிகையோட வாசல்புறம் ஒரு பெரிய வேப்பமரம் நட்டு வைச்சிருந்தான். அது பரந்து
விரிந்து வளர்ந்திருந்தது.
அசோகன் பணக்காரனா இருந்தாலும் ஒருத்தருக்கும்
ஒரு நயா பைசா கூட தரமாட்டான். அவன் வீட்டுப் பக்கம் யாரும் தேவையில்லாம நடமாட
முடியாது. உள்ளே நுழையனும்னா அனுமதி வாங்கித்தான் நுழையனும் அவ்ளோ கெடுபிடி.
வருமானத்தை தினமும் பெருக்கணும். எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ
அந்தந்த வழிகளில் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவன் அசோகன். அதனால ஒருத்தரால
பிரயோசனம் இருந்தாத்தான் வீட்டுக்கே கூப்பிடுவான். அப்படிப்பட்ட ஆளு அசோகன்.
அந்த ஊருக்கு புதுசா அன்புன்னு ஒரு ஆள்
வந்தான். அவன் குதிரையில் வந்தமையால் அந்த குதிரையை வேப்பமரத்தடியில் கட்டிவிட்டு
மரத்தினடியில் படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்தான். தன்னோட உப்பரிகையில் இருந்து
இதை பார்த்துக் கொண்டிருந்த அசோகனுக்கு கோவமா வந்துது.
வேக வேகமா
கீழே இறங்கி வந்து, அன்பை பார்த்து, “ அடேய்! எழுந்திரு! இது என்னுடைய மரம்!
இங்கிருந்து அப்பால போ!” என்று விரட்டினான்.
அன்புவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ”நான்
எதற்கு இங்கிருந்து போகவேண்டும்? சிறிது நேரம் மரத்தடியில் ஓய்வாக இருந்து விட்டு
போகலாம் என்று வந்தேன்.” என்றான்.
இதைக்கேட்டதும் அசோகனுக்கு கோவம்
அதிகமாயிருச்சு. “இங்கிருந்து போகிறாயா இல்லையா? இது என் மரம். சின்ன செடியாக
வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து இவ்வளவு பெரிய மரமாக ஆக்கியுள்ளேன். மரம் எனக்கு
சொந்தம்.” என்றான்.
“ ஐயா! மரம் உங்களுடையதாகவே இருக்கட்டும்! அதை
நான் ஒன்றும் வெட்டிவிட வில்லையே! இதன் கனிகள் கூட கசக்கும். அதனால் தின்ன
முடியாது. இலைகளையும் பறிக்க மாட்டேன். சற்று நேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு
செல்கிறேனே!” என்றான் அன்பு.
“அடேய்! நான் சொல்வது உனக்கு புரியவில்லையா?
மரம் எனக்குச் சொந்தம் என்றால் அதன் கிளை, இலை, நிழல் எல்லாமே எனக்குச் சொந்தம்.
எனக்கு சொந்தமான நிழலில் நீ எப்படி இளைப்பாறலாம்? மரியாதையாக இடத்தை காலி செய்!”
”ஆக, இந்த நிழல் உங்களுக்கு சொந்தம்
அப்படித்தானே!”
“அதைத்தான்
ஐயா இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்! இன்னும் அகராதி வேறு வைத்து விளக்க
வேண்டுமா?”
“ சரி சரி! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்கள்
நிழலில் இளைப்பாறுவது தவறுதான். ஆனால்.. !”
“ என்னய்யா ஆனா ஆவன்னான்னு?”
‘ஓன்றுமில்லை! இந்த நிழலை எனக்கு விற்று
விடுங்களேன்! நான் இங்கு படுத்து இளைப்பாற விரும்புகிறேன்! நிழலை மட்டும் தான்
கேட்கிறேன்! மரத்தை அல்ல! உங்களுக்கும் பணம் கிடைக்கும். எனக்கும் நிழலில்
இளைப்பாறிய சுகம் கிடைக்கும்!”
பணம் கிடைக்கிறது என்று சொன்னவுடன் அசோகனுக்கு
மகிழ்ச்சியாகிவிட்டது. “ சரி நீ இவ்வளவு தூரம் கேட்கிறாயே என்பதால் நிழலை உனக்கு
தந்துவிடுகின்றேன்! எவ்வளவு தருவாய்?”
“ உங்கள் பொருள் நீங்களே விலை சொல்லுங்கள்!”
“சரி
நூறு வராகன் கொடுத்து இந்த நிழலைப் பெற்றுக் கொள்!”
அன்பு ஊரார் முன்னிலையில் நூறு வராகன் கொடுத்து
நிழலைக் கிரயம் பெற்றுக் கொண்டான். அதற்கான பத்திரம் எழுதி வாங்கிக்
கொண்டான். ஆகா எவ்வளவு ஏமாளி! நிழலுக்கு
நூறு வராகன் கொடுத்துள்ளான் நாம் அதிர்ஷ்ட சாலி என்று நினைத்தான் அசோகன்.
அது எவ்வளவு தவறு என்பது அடுத்த நாளே
அவனுக்குப் புரிந்தது. அன்பு தினமும் மரத்தில் நிழலில் வந்து அமர்ந்தான். சில நாள்
சென்றது. நிழல் அசோகனின் வீட்டு முற்றத்தில் விழுந்தது. உடனே அங்கு சென்று அமர
ஆரம்பித்தான் அன்பு.
சிலநாள் மாடியில்
விழுந்தது. அங்கு சென்றான். இப்படியே நிழல் எங்கெல்லாம் விழுகின்றதோ அங்கெல்லாம்
சென்று அமர்ந்து கொண்டான் அன்பு.
ஏனப்பா இப்படி என் வீட்டுக்குள் எல்லாம் வந்து
தொந்தரவு செய்கின்றாய்? என்று கேட்டபோது நிழலை விற்று விட்டீர்கள் அது எங்கு
விழுகின்றதோ அங்கு வந்து இளைப்பாறுகிறேன்! அதை நீங்கள் தடுக்க முடியாது என்று
வாதம் செய்தான் அன்பு.
இன்னும் சில நாள் சென்றதும், தன் வீட்டில்
உள்ள ஆடு மாடு குதிரைகளை ஓட்டிச் சென்று வேப்ப மர நிழல் எங்கெல்லாம் விழுகின்றதோ
அங்கெல்லாம் கட்டினான் அன்பு. அசோகனின் வீடு முழுவதும் மாட்டு சாணத்தால் நிறைந்து
போனது.
“ ஏய்! நீ என்ன செய்கின்றாய்? ஆடு மாடுகளை ஏன்
கொண்டு வந்து வீட்டில் அடைக்கிறாய்?”
“ ஐயா! நான் வீட்டில் அடைக்கவில்லை! நிழல்
எங்கு விழுகின்றதோ அங்குதான் அடைக்கின்றேன். ஏனென்றால் நான் அந்த நிழலை நூறு
வராகனுக்கு கிரயம் பெற்று இருக்கிறேன். என்றான் அன்பு. அசோகனால் பதில் பேச
முடியவில்லை.
ஒருநாள் அசோகன் ஊர் முக்கியஸ்தர்களுக்கு
விருந்தளிக்க விருந்தினர் அறையினுள் அந்த வேப்ப மரத்தின் நிழல் விழுந்தது. அங்கே
வந்து அமர்ந்து கொண்டான் அன்பு.
“ யாரப்பா நீ! அசோகன் எங்களுக்கு விருந்து அளிக்கிறார்!
இடையில் நீ யார்?” வந்திருந்த விருந்தினர்கள் கேட்க,
“ஐயா! இந்த நிழலை நூறு வராகனுக்கு எனக்கு
விற்றுவிட்டார் அசோகன். அந்த நிழல் எனக்குச் சொந்தம் அது எங்கு விழுகின்றதோ அங்கு
நான் சென்று இளைப்பாறுவேன்! என்னை தடுக்காதீர்கள்! என்றான் அன்பு.
அந்த சமயம் நிழல் விருந்தினர் மீது பட்டது. ஓடி
வந்து விருந்தினர் மேல் ஏறி நின்றான் அன்பு.
“ ஏய்! என்ன செய்கின்றாய்?” ”அய்யா நான் வாங்கிய நிழல் உங்கள் மீது
விழுந்துள்ளது. அதில் அமர்ந்து இளைப்பாறுகிறேன்!” என்றான் அன்பு.
விருந்தினர்கள் அசோகனிடத்து கோபம் கொண்டு
சென்று விட்டார்கள். அசோகனுக்குப் பெருத்த அவமானம் ஆகிவிட்டது. அன்று ஓர் பெரிய
சம்மட்டியோடு வந்தான் அன்பு. வந்தவன் நேராக மாடிப்படிகளில் ஏறி மாடியை உடைக்க
ஆரம்பித்தான்.
“ ஏய்! என்ன செய்கிறாய்? ஏன் வீட்டை
உடைக்கிறாய்?
“ அய்யா! நான் உங்கள் வீட்டை உடைக்க வில்லை!
நான் வாங்கிய நிழலை இங்கிருந்து பெயர்த்து எடுத்துச் செல்ல போகிறேன்! தயவு செய்து
என்னை தடுக்காதீர்கள்!”
அசோகனுக்கு தான் பெரிய தவறு செய்துவிட்டது
புரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் தன்னுடைய வீட்டை மட்டுமல்ல நிம்மதியும்
இழந்துவிட வேண்டியதுதான் என்று தோன்ற, அய்யா! தயவு செய்து நான் சொல்வதைக் கேள்!
நான் செய்தது தவறுதான்! நிழல் எல்லோருக்கும் பொதுவானது! அதை என்னுடையது என்று
சொந்தம் கொண்டாடியது தவறுதான்! அதோடு அதை விற்று மாபெரும் தவறு செய்துவிட்டேன்! நீ
கொடுத்த நூறு வராகனுடன் இன்னும் ஐம்பது
வராகன் சேர்த்து தந்து விடுகின்றேன்.
நிழலை திருப்பிவிடு! அந்த பத்திரத்தை ஊரார் முன்னிலையில் கிழித்தெறிந்துவிடலாம்.
இனி இப்படி
பணத்திற்காக அலைய மாட்டேன்! என்னை மன்னித்துவிடு என்றான் அசோகன்.
அன்பு புன்னகைத்தான். நண்பா! உன்னை திருத்த
வேண்டும் என்றே இவ்வாறு செய்தேன். எனக்கு கூடுதல் பணமெல்லாம் வேண்டாம். நான்
கொடுத்த பணத்தை திருப்பினால் போதும். பத்திரத்தை கிழித்து போட்டுவிடுகின்றேன்.
இனியாவது தன்னலமாக வாழாமல் கொஞ்சம் பொது நலனுடன் வாழப் பழகிக்கொள். அது போதும்
என்றான்.
நன்றி நண்பா! இனி நான் திருந்திவிட்டேன்! இந்த
மரம் மட்டுமல்ல! என் வீட்டுத் தோட்டத்தையே அனைவருக்கும் திறந்து விடுகின்றேன்.
எல்லோரும் கூடி மகிழ்ந்து விளையாடட்டும்!
என்றான் அசோகன்.
(செவிவழிக்கதை)
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
வணக்கம்.
ReplyDeleteகவிதைக்கான தலைப்பு இது.
படித்துக் கொண்டிருந்தபோதே இதை நீங்கள் எழுதினீர்களா என்று அறியும் ஆர்வம் மிகுந்தது.
செவிவழிக்கதை என்றாலும் அதை உங்கள் நடையில் விளக்கிய விதம் அருமை.
ஞாயிற்றுக்காக இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.
காத்திருக்கிறேன்.
நன்றி.
Arumai
ReplyDeleteமிகவும் அருமையான கதை...
ReplyDeleteநல்ல கதை.... வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கதை அதை அழகாகச் சொன்ன விதம் நன்று. உங்கள் பாப்பா மலர் அழகாக மலர்ந்து கொண்டிருக்கின்றது..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!
அருமையான கதை.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.
குழந்தைகளுக்கு நீங்கள் பகிரும் கதைகள் அருமை. நல்ல நீதிக் கதை வாழ்த்துகள்
ReplyDeleteகதை நன்றாக இருக்கிறது...
ReplyDeleteபொருத்தமான படங்கள்...
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படிக்க தமாஷ்!! known story, yet interesting.
ReplyDeleteநல்ல கதை சகோ. பகிர்விற்கு நன்றி
ReplyDelete