தமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63
கதம்ப சோறு!
தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்!
தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது
ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு
ஆளாளுக்கு மதுவிலக்கு என்று அறிக்கைவிட ஆரம்பித்து மீடியாக்களில் வலம் வந்தனர். ஆனால்
பாவம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்களுக்கு எல்லாம் குடிமகன்கள் கொஞ்சமும் பயப்பட்டதாகத்
தெரியவில்லை. எல்லோருக்கும் எப்படியாவது சரக்கு கிடைத்துவிடும் என்று தெரியும். அதனால்
பயப்படாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழக அரசும் டாஸ்மாக்கை மூடப்போவது போல
ஒரு பாவ்லா ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் குடிமகன்களுக்கு எந்தபாதிப்பும்
இல்லை! புதிதாக எலைட் பார்கள் திறக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தலைக்கவசம்
மீது இருக்கும் அக்கறைகூட குடிவிலக்கில் இல்லை அரசுக்கு. இரண்டுக்குமே காரணம் வருமானம்
என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மதுவிலக்கைச்சொல்லி ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக
நினைக்கிறது. குடிமக்களின் ஆதரவோடு ஜெயித்துவிடலாம் என அம்மா திமுக நினைக்கிறது. பணநாயகம்
இருக்கும் வரையில் உண்மையான ஜனநாயகத்திற்கு ஏது மதிப்பு ?
வ்யாபம் ஊழல்!
காங்கிரஸ் ஆட்சியை ஊழலாட்சி என்று சொல்லி ஆட்சிக்கு
வந்தவர்களின் ஆட்சியும் இப்போது கேலிக்கூத்து ஆகிவிட்டது. வ்யாபம் என்ற (நம்ம ஊர் டி.என்.பி,எஸி
தேர்வுத்துறை போன்றது) அமைப்பில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று பல போலிகளை உருவாக்கி
உள்ளார்கள். இந்த ஊழலில் பெரும் பங்கு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது என்று கண்டறிந்து
உள்ளார்கள். உடனே அந்த மாநில முதல்வர் பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்த
விசாரணைக் கமிஷன் அமைக்க மறுத்த முதல்வர் இறங்கி வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த ஊழல். வ்யாபத்தில் எங்கும் ஊழல்
வ்யாபித்து இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஊழல் பேர்வழிகளை சகித்துக்
கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
எம்.எஸ்.வி- அப்துல்
கலாம் மறைவு:
மெல்லிசைமன்னரின் மறைவு இசை ரசிகர்களுக்கு எல்லாம்
பேரிழப்பு என்றால் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாமின் மறைவு இளைஞர்களுக்கு மட்டும்
அல்ல தேசத்திற்கே ஓர் பேரிழப்பு. இந்த ஆண்டில் மேதைகள் பலர் மேலுலகு பயணிக்கும் ஆண்டாக
அமைந்துவிட்டது. எம்.எஸ்.வி ஏழைக்குடும்பத்தில் பிறந்து நாடகக்குழுவில் வளர்ந்து சினிமாவில்
உதவியாளராக இருந்து தன் உழைப்பினால் முன்னேறியவர். அவரும் கண்ணதாசனும் வெளிநாடு ஒன்றிற்கு
சென்ற சமயம் எதுவுமே தெரியாது தெரியாது என்று சொல்லிவந்தவர் அங்கிருந்த பியானோ ஒன்றை
பார்த்து அதில் அந்த நாட்டு இசைமேதையில் இசையை வாசிக்க எல்லோரும் வியந்து போயினராம்.பதிவர்
விசுவாசம் எழுதிய இந்த பதிவு இங்கே கண்ணதாசன் கலாய்த்தது யாரை?: அதே போல குருபக்தி தாய் சொல்லை தட்டாதவராம் எம்.எஸ்வி.
தேவரின் படம் ஒன்றுக்கு இசையமைக்க அழைத்தார்களாம். தேவர் படங்களுக்கு கே,வி மகாதேவன்
அவர்கள்தான் ஆஸ்தான இசை அமைப்பாளர். அவர் இவரின் குரு போல. அவர் இடத்தில் நீ எப்படி
வேலை செய்யலாம்? முடியாது என்று மறுத்துவிடு என்று தாய் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம்
எம்.எஸ்,வி. கடைசி வரை அவர் தேவரின் படங்களுக்கு இசை அமைக்கவே இல்லையாம். அதே போலத்தான்
முன்னாள் குடியரசுத்தலைவரும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவே வியக்கும்
ஓர் தலைவராக உருவெடுத்தவர். அணுவிஞ்ஞானியான அவர் ஜனாதிபதியாக ஆனபோதும் எளிமையையும்
நேர்மையையும் கைவிடவில்லை. இறப்பதற்கு முன்பு கூட தனக்காக காவல் பணிக்கு வந்த ஜவானை
நலம் விசாரித்து ஓய்வெடுக்கும் படி கூறியுள்ளார். தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடங்களை
கற்றுக்கொள்கிறோம்! தோல்வியை நினைத்து பயப்படக்கூடாது. அது நாம் எப்படியெல்லாம் செய்யக்
கூடாது என்பதை கற்றுக்கொடுக்கிறது என்று சொன்னவர் கலாம். இந்திய இளைஞர்களின் மாணவர்களின்
வழிகாட்டியாக திகழ்ந்தவர் கலாம். திரு இராதா கிருஷ்ணணுக்குப் பிறகு உலகமே ஒருவரின்
இறப்பிற்கு வருந்துகிறது என்றால் அது கலாம் அவர்களுக்குத்தான். இந்த சாதனையை அவர் வெறும்
பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குள் செய்ய வைத்துள்ளார். 1999க்கு முன் கலாம்
என்றால் இந்தியாவிலேயே கூட யாருக்கும் அவரைத் தெரியாது. இன்றோ அவர் எல்லோராலும் புகழப்படும்
ஓர் மாபெரும் மனிதர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. இரு மேதைகளுக்கும் எனது
கண்ணீர் அஞ்சலிகள்.
கில்லர்ஜியுடன்
ஓர் சந்திப்பு:
கடந்த வாரம் 19-7-15 ல் சென்னையில் பதிவர் கில்லர்ஜியை
புலவர்இராமானுசம் ஐயா இல்லத்தில் சந்தித்து பேசியது ஓர் இனிமையான அனுபவம். என்னுடைய
பணியின் தன்மை காரணமாக நான் வெளியில் செல்லும் சமயங்கள் குறைவு. திருமதி கீதா அவர்கள்
மெயில் அனுப்பி இந்த மாதிரி கில்லர்ஜி வருகிறார் சென்னையில் சந்திக்க வர இயலுமா? என்று
கேட்டிருந்தார். கில்லர்ஜியை மதுரை பதிவர் சந்திப்பிலேயே சந்திக்க நினைத்து இருந்தேன்.
அச்சமயம் செல்லமுடியாமல் போய்விட்டது. அந்த ஞாயிறன்றும் நிறைய பணிக்குறுக்கீடுகள்.
எல்லாவற்றையும் கடந்து செங்குன்றம் சென்று சேரும்போது மணி பத்து பதினைந்து. பத்து மணிக்கு
சந்திப்பு என்று கீதா அவர்கள் சொல்லியிருந்தார். நான் அன்று காலை போன் செய்து பதினோறு
மணிக்கு வருவதாகக்கூறி இருந்தேன். முகவரியும் வாங்கி இருந்தேன். கோடம்பாக்கம் செல்ல
நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முடியுமா? அப்போதுதான் புறப்பட்டு கொண்டிருந்த ஓர் ஏசி
பஸ்ஸில் ஏறி பதினோறு மணி வாக்கில் வடபழனியில் இறங்கி அங்கிருந்து ஓர் ஆட்டோ பிடித்து
புலவர் ஐயா வீட்டு வாசலில் இறங்கி போன் செய்தேன். கரெக்டா வந்திட்டீங்க! இதோ நான் கீழே
வரேன் என்று கீதா சொன்னார்கள். அதற்குள் நான் உள்ளே சென்று விசாரித்து ஐயா வீட்டுக்குள்
சென்றுவிட்டேன். ஐயா பதிவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். வாங்க வாங்க! என்று வரவேற்றார்.
கில்லர்ஜி வரவேற்று தம் பக்கத்தில் அமரச்சொல்ல இந்த பக்கமும் கொஞ்சம் திரும்பி பாருங்க
என்றார் ஆரூர் மூனா, மதுமதி, போலி பன்னிக்குட்டி, இராயச் செல்லப்பா, முரளிதரன், அன்பே
சிவம்,அரசன் ஆகியோரும் வந்திருந்தனர். நான்
சென்ற ஓர் அரைமணியில் அரசன், மதுமதி விடைபெற
சற்று நேரத்தில் ஸ்கூல்பையன் தன் திருமதியுடன் வந்தார். பதிவுலகம் பற்றியும்
இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு குறித்து ஒரு மணிநேரம் சுவாரஸ்யமாக சென்றது பேச்சு. வலைச்சர
சர்ச்சை குறித்தும் நூல் வெளியிடுவது குறித்தும் பேசினோம். ஒன்றரை மணிவாக்கில் விடைபெற்றோம்.
பதிவர் திரு இராயச் செல்லப்பா அவர்கள் தம் சொந்த செலவில் கில்லர்ஜி, அன்பேசிவம் மற்றும்
என்னை அழைத்துச் சென்று சரவணபவனில் விருந்து உபசரிப்பு செய்தார். மற்றவர்களையும் அவர்
அழைத்தார். அவர்கள் அருகில் வீடு என்று விடைபெற்றனர். மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும்
கழிந்தது அரைநாள் பொழுது. நான் மிகவும் எதிர்பார்த்த வாத்யார் பாலகணேஷ், அவரது சீடர்
சீனிவாசன், ஆவி, போன்றோர் வராமல் போனது கொஞ்சம் வருத்தம். இந்த சந்திப்பில் திருமதி
கீதா எனக்கொரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அது அப்புறம் சொல்கிறேன்!
யாகூப் மேனனுக்கு
கருணை தேவையா?
மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதியான யாகூப் மேனனுக்கு
கருணை வழங்கக் கூடாது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கையில் நடிகர் சல்மான் கான்
அவருக்கு ஆதரவாகப் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டு இப்போது மன்னிப்பு கோரியுள்ளார். மரண
தண்டணை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால் இப்படிப்பட்ட
தீவிரவாதிகளுக்கு அது ரத்து செய்யப்பட்டால் அப்புறம் பயம் எப்படி வரும்? இவன் ஒரு கருவிதான்!
எய்தவர்கள் இருக்க அம்பை நோவானேன் என்று கூறுகின்றார்கள். காலில் முள் குத்துகின்றது.
அந்த சமயத்திற்கு முள்ளை பிடுங்கி தூர எறிகிறோம்! அல்லது அழிக்கின்றோம். முள்ளின் விதையை
கண்டறிந்து அழிப்பது இல்லை! அதுபோலத்தான் யாகூப் மேனனும் முதலில் முள்ளை அழிப்போம்!
அப்புறம் அதற்கான வித்தை அழிப்போம். மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்வது என்பதில்
எனக்கு உடன் பாடு இல்லை! வினை விதைத்தவர்கள் கண்டிப்பாக வினை அறுத்தாக வேண்டும்.
ஸ்ரீ சாந்த் விடுதலை!
சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீ சாந்த், அங்கித்
சவான் ஆகியோர் புகாரில் தகுந்த ஆதாரம் இல்லை என்று காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டு பணபலம் பொருந்தியவர்களின் ஆட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்க
பட்டுள்ளது. சென்னை அணி, ராஜஸ்தான் அணியின் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை விசாரிக்க
மறுத்த பிசிசிஐ அன்று அவசர அவசரமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த இரண்டு வீரர்களின்
எதிர்காலம் மோசமாக பாதிக்கப்பட்டது. இன்று
இவர்கள் விடுதலை ஆனாலும் மீண்டும் அணியில் இடம் என்பது கேள்விக்குறிதான். அதே சமயம்
சென்னை- ராஜஸ்தான் வீரர்களை ஜடேஜா, பிராவோ
உள்ளிட்டவர்களை தடை செய்யாமல் அணிகளை மட்டும் தடை செய்துள்ளனர். இந்த ஐ.பி. எல் சீசன்
மிகச்சிறந்த இரண்டு அணிகள் இல்லாமல் களைகட்டப் போவது இல்லை. பேசாமல் இந்த தொடரையே ஒழித்துக்
கட்டினால் மாணவர்களின் எதிர்காலமாவது சிறக்கும்.
டிப்ஸ்! டிப்ஸ்!
டிப்ஸ்!
இலாஸ்டிக் ஆடைகளை
முழுவதுமாக இழுக்காமல் உடலுக்குத் தகுந்தவாறு இழுத்துப் போட்டால் நீண்ட நாள் உழைக்கும்.
மூட்டுவலி குணமாக
இஞ்சியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி இருக்கும் இடத்தில் பத்து போட்டு வர நாளடைவில்
வலி குணமாகும். அல்லது இஞ்சியை நேரடியாக நறுக்கி வலி உள்ள இடத்தில் தேய்க்கலாம்.
வெண்டைக்காயுடன்
நான்கு மிளகு கொஞ்சம் சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.
வெளியில் செல்கையில்
மொபைல் போனில் சிக்னல் கிடைக்காமல் அவுட் ஆப்
கவரேஜ் ஆக இருந்தால் 112 என்ற எண்ணை டயல் செய்தால் சிக்னல் கிடைத்துவிடும்.
சர்க்கரைபாகு வைத்து
பட்சணம் செய்கையில் பாகு கிளற சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது
பாகு நன்றாக வரும்.
நரம்புத்தளர்ச்சி
இருப்பின் செவ்வாழைப்பழத்தை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமடையும். இதில்
வைட்டமின் ஏ, சத்து உள்ளதால் கண், பல் எலும்பு போன்ற உறுப்புக்களை வலிமையாக்கும்.
கிச்சன் கார்னர்!
வாழைப்பூ வடை!
தேவையானவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ 1
கப், கடலைப்பருப்பு 1கப் துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தலா ½ கப் நறுக்கிய பச்சை
மிளகாய் , இஞ்சி, சிறிதளவு- எண்ணெய் சிறிதளவு, பாசிப்பருப்பு 1 மேசைக்கரண்டி, உப்பு,
மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான அளவு.
கடலைப்பருப்பு துவரம்பருப்பும் உளுந்து ஆகியவற்றை
ஒன்றாக ஊறவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். ஒன்றாக ஊறவைத்தவைகளை
அரைத்து அதில் உப்பு மஞ்சள் தூள், வாழைப்பூ பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த
பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும். இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து தட்டி,
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
படிச்சதில் பிடிச்சது!
எம்.ஐ.டி., யில் அப்துல்கலாம் பயின்று கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, என்ற தகவல் வந்தது. ஊருக்குப் போவதற்குப் பணமில்லை, பலரிடம் கேட்டுப் பார்த்தார், யாரும் பணம் தரவில்லை. இறுதியாய், எம்.ஐ.டி.,யில் அவர் முதல் வருடம் நன்றாகப் படித்ததற்காக அந்நிறுவனம் அளித்த பரிசான விலையுயர்ந்த நூலைச் சென்னையில் உள்ள மூர்மார்க்கெட்டில் இருந்த பழைய நூல்களை வாங்கும் கடையில் கண்ணீரோடு விற்பனைக்குத் தந்தார். முதல்பக்கத்தில் கலாமின் பெயர் இருந்ததைக்கண்ட கடைக்காரர்,” அன்பாகப் பரிசாகக் கல்விநிறுவனம் தந்த இந்த நூலை இப்போது விற்கவேண்டிய அவசியம் என்ன தம்பி? என்று கேட்டார்.”ராமேஸ்வரத்தில் உள்ள என் அன்புத்தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லை, அவரை உடனே நான் பார்க்கவேண்டும், என்னிடம் பேருந்துக் கட்டணத்திற்குக்கூடப் பணமில்லை அதனால்தான் எனக்குக்கிடைத்த பரிசு நூலை நான் விற்கவேண்டிய இக்கட்டான சூழல் வந்தது” என்று கலாம் கூற,அக்கடைக்காரர் கண்களில் கண்ணீர். ''தம்பி!உன் புத்தகத்தை நீ விற்கவேண்டாம்... உன் பயணச் செலவுகான பணத்தை நான் தருகிறேன், நீ ஊருக்குப் போய்வந்து நான் தந்த பணத்தைத் திரும்பத் தரலாம்.” என்று பணம் தந்து அனுப்பிவைக்கிறார். அந்தப்புத்தகக் கடைக்காரரை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நினைவுகூர்ந்து நெகிழ்வோடு நன்றிகூறினார் கலாம். வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்து நன்றி மறவாப்பண்பின் புகலிடமாய் அப்துல் கலாம் திகழ்கிறார்.
படிச்சதில் பிடித்ததில் நெகிழ்ந்தேன்...
ReplyDeleteDD அண்ணாவின் கருத்தே எனதும்
ReplyDeleteஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு தன் உயிர் தந்து உயிர் தந்தவர்.
மறைந்த மாமேதைக்கு ஏற்பட்ட சம்பவம் மனதைக் குடைந்தது.
ReplyDeleteஅவர் நினைவுகளிலிருந்து வேறேதும் எண்ணத் தோன்றவில்லை சகோ!
கதம்பச்சோறு ருசித்தேன். கலாம் பற்றிய பகிர்வு மனதில் ஆழப்பதிந்தது.
ReplyDeleteகலாம் பற்றிய செய்தி...... நெகிழ்ச்சி....
ReplyDeleteகதம்பம் நன்று.
எல்லாம் ருசித்தேன்... கலாமின் செய்தி கண்கலங்க வைத்தது.
ReplyDelete