என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?

என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?


அலுவலகத்தில் இருந்து    அதிகப்படியான வேலைகளினால் டென்சனாக வீடு திரும்பினான் மகேஷ். அவனது செல்ல மகள் வித்யா வழக்கம் போல ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். மனைவி ஹேமா கலந்து வந்து கொடுத்த காபியை உறிஞ்சியபடியே, ம்ம்! அப்புறம் என்ன விஷேசம்? என்றான் இதுவரை ஊரில் இல்லாத மாதிரி.

  ”என்னங்க நீங்க புதுசா கேட்கறீங்க? விஷேசம் அது இதுன்னு! நீங்களும் இங்கேதானே இருக்கீங்க? உங்களுக்குத் தெரியாத விஷேசம் என்ன இருக்கப் போவுது?”

    “அதுவும் சரிதான்! ஆனாலும் காலையில் எழுந்தா உடனே ஆபீஸ் போயிடறேன்! திரும்ப வர ரொம்ப லேட் ஆயிருது! எப்பவும் ஆபிஸே கதின்னு மூழ்கிடறேனா? வீட்ல என்ன நடக்குதுன்னு கூடத் தெரிய மாட்டேங்குது!”

    “நாளைக்கு நம்ம வித்யாவோட ஸ்கூல்ல கல்ச்சுரல் புரோகிராம் இருக்குங்க! சாயந்தரம் ஆறு மணிக்கு நம்ம பொண்ணு கூட பாரதியார் வேஷம் போடப் போறா ஆபிஸ்ல இருந்து அப்படியே வாங்களேன்!”
 “ என்னால எப்படி வர முடியும் ஹேமா! ஆபிஸ் அவர்ஸ் முடிஞ்சப்புறமும் நிறைய வேலைங்க இருக்கு! எல்லா வேலையையும் என் தலையில கட்டிட்டு மேனேஜர் ஹாயாக் கிளம்பிடுவார்! நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு வர லேட்டாயிருதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன்! நாளைக்கு வீக் எண்ட் வேற சான்ஸே இல்லை!” என்றான் .
   இதைக்கேட்டுக் கொண்டிருந்த வித்யாவின் முகம் சுண்டிப்போனது.
 “அப்ப! நம்ம வித்யாவை  சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களாம்! அதைக் கேட்க கூட நீங்க வரமாட்டீங்களா?”

     “இது எப்போ நடந்தது? குழந்தைகளை எப்படி நடத்தனும்னு தெரியாத அவங்க எப்படி டீச்சர் ஆனாங்க?”

   ”இதை என் கிட்டே கேட்டா எப்படி? வந்து அவங்க கிட்டே கேளுங்க!”
  ”கட்டாயம் இதுக்காவது பர்மிஷன் போட்டுட்டு வரேன்! நல்லா நாக்கை பிடுங்கிக்கறமாதிரி நாலு கேள்வி கேட்காம விட மாட்டேன்! பிஞ்சு குழந்தையை எதுக்காக அடிக்கிறாங்க அவங்க? சரியா பதில் சொல்லாம போகட்டும் பிரின்ஸ்பால் வரை போவேன். அப்புறம் சி.இ.ஒ கூட எனக்குத் தெரிஞ்சவர்தான் அவர்கிட்டேயும் ஒரு கம்ப்ளைண்ட் கொடுப்பேன்.”

  ”இதெல்லாம் இங்க பேசி ஒரு பிரயோசனமும் இல்லே! அங்க நீங்க வந்து கேட்டாத்தானே! நீங்க எப்பவாது ஒரு முறை அப்படி எட்டி பார்த்திருப்பீங்களா? அப்ப அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்? என்னை மாதிரி லேடீஸ்கிட்ட எதாவது சால்ஜாப்பு சொல்லி விட்டுடறாங்க!”
   “ எங்கேம்மா முடியுது! நாளைக்கு கட்டாயம் வரேன்! என் புள்ளையை அடிச்ச அந்த மிஸ்ஸை சும்மா விடமாட்டேன்! ஆமா! நீ அந்த மிஸ்ஸை எதுவும் கேக்கலையா? சும்மாவா வந்தே!”
   “கேட்டேனே! நான் சும்மா தட்டித்தான் கொடுத்தேன்! அடிக்கலைன்னு சொல்றாங்க!”
  அதைக்கேட்டுட்டு நீ சும்மா வந்துட்டியாக்கும்! நாளைக்கு வச்சிக்கறேன் கச்சேரி!.

   மறுநாள் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வித்யாவின் பள்ளியில் இருந்தான் மகேஷ். பாரதியார் வேஷம் போட்டுக்கொண்டிருந்த வித்யா ஓடி வந்து  ஹை அப்பா! என்று கட்டிக்கொண்டாள். “ நல்ல வேளை! நீங்க வராம போயிடப்போறிங்கன்னு பயந்துட்டு இருந்தேன்!” என்றாள் ஹேமா.

   “ அதெப்படி வராம போயிருவேன்! என் புள்ளையை அடிச்சு இருக்காங்க! அவங்களை சும்மா விடுவேனா?” எங்க அந்த மிஸ் வா! ஹெட்மிஸ்டரஸ் கிட்ட போய் சொல்லுவோம்.

  அதெல்லாம் வேணாம்! அதோ புள்ளைகளுக்கு வேஷம் போட்டு விட்டுட்டு இருக்காங்களே! அவங்கதான் சுஜா மிஸ்! நேரடியாவா பாத்து கேட்டுரலாம் வாங்க!”

    ”அந்த அறையினுள் நுழையும் போதே! அடடே வித்யா அம்மாவா? வாங்கம்மா! வாங்க சார்! வித்யாவை ஸ்கூல்ல சேத்து விடும்போது பார்த்தது! இப்பவாது வந்தீங்களே!” சுஜா மிஸ் வரவேற்க

  முகத்தில் இல்லாத கோபத்தை வரவைத்துக் கொண்டான் மகேஷ். “ அதெல்லாம் இருக்கட்டும் மிஸ்! நீங்க எப்படி என் பொண்ணை அடிக்கலாம்? நீங்க எல்லாம் பி. எட் ல என்னத்தை படிச்சு கிழிச்சீங்க! சைல்ட் சைக்காலஜி தெரியுமா? சின்ன குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாத உங்களைப் போய் டீச்சரா போட்டு இருக்காங்களே! நீங்க இதுக்கு பதில் சொல்லியே ஆகனும். இல்லேனா.. ஹெட்மிஸ் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணுவேன். சி.இ. ஓ கூட எனக்கு தெரிஞ்சவர்தான் அவர்கிட்டே கூட இந்த விஷயத்தை கொண்டு போவேன்…” படபடவென்று பொரிந்தான்.

   “ ரிலாக்ஸ் மிஸ்டர் மகேஷ்! கூல்டவுன்! நான் உங்க பொண்ணை அடிச்சேன்! ஆமா முதுகுல லேசா தட்டிக் கொடுத்தேன்! இல்லேங்கலியே!”
   “பார்த்தீங்களா? நீங்களே ஒத்துக்கிட்டீங்க.. ஒரு சின்ன குழந்தையை எப்படி நீங்க அடிக்கலாம்?”

  இருங்க மிஸ்டர் மகேஷ்! நான் நடந்ததை சொல்லிடறேன்! அப்புறம் நீங்க என்ன செய்யணுமோ செய்துக்கங்க!  உங்களுக்கு இவ ஒரு குழந்தைதான்! எங்களுக்கு இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைங்க இருக்காங்க! எது செய்தாலும் அவங்க நல்லதுக்குத்தான் செய்வோம்! நேத்து என்ன நடந்தது தெரியுமா?

   இன்னிக்கு கல்சுரல் உங்க பொண்ணுதான் ஹைலைட்! பாரதியார் வேஷம் போட்டு அவ பேசப்போற டயலாக் அவ்ளோ அழகா இருக்கும்! திடீர்னு நான் புரோகிராம்ல கலந்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாள். அழறா.. ஏன்? கேட்டா பதிலே வரலை!

   பதிலை வரவழைக்கிறதுக்கு நான் எவ்வளவு பட்டிருப்பேன் தெரியுமா? கடைசியா அவ என்ன சொன்னா தெரியுமா? நான் என்ன வேஷம் போட்டு என்ன பிரயோசனம்? எங்க அப்பா வந்து பார்க்க மாட்டாரே! ஆபீஸ் இருக்குன்னு சொல்லிருவாரே! அப்படின்னு ஓன்னு அழறா…

    அப்பா கண்டிப்பா வருவாருன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா… மிஸ் இதுவரைக்கும் அவர் எந்த புரோகிராமாவது வந்து இருக்காரா? புரோகிரஸ் கார்ட்ல கூட அம்மாத்தானே கையெழுத்து போடறாங்க! பேரண்ட்ஸ் மீட்டுக்கு கூட வந்தது இல்லே! வீட்ல நான் என்ன பண்றேன்னு கூட பார்க்க அவருக்கு நேரம் இல்லே! அவர் வரமாட்டார்னு அழறா.

      அப்புறமா அவளை சமாதானப் படுத்தி நாளைக்கு கண்டிப்பா அப்பா வருவார்னு சொல்லி நடிக்க ப்ராக்டீஸ் கொடுத்தேன். உங்க வொய்ப் வந்தப்ப நடந்ததை சொல்லி ஒரு டிராமா போட்டு நான் அடிச்சுதா சொல்லி உங்களை இங்க வரவழைக்க வேண்டியதாப் போச்சு!

   எப்பவுமே ஆபிஸ் ஆபீஸ்னு இருக்காதீங்க சார்! எனக்கு சைக்காலஜி பத்தி சொன்ன உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை! இந்த வயசுல பசங்க நிறைய எதிர்பார்ப்பாங்க! அப்பா அம்மா கிட்ட இருந்து ஒரு சின்ன ஊக்கம், உற்சாகமூட்டும் பேச்சு! ஆறுதல் வார்த்தை இதெல்லாம் கிடைக்காதான்னு ஏங்குவாங்க! அவங்களுக்காகவும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்க! அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கங்க! உங்க பாசம் நேசம் கிடைக்காம வித்யா ரொம்பவும் ஏங்கிப் போயிருக்கா! இது அப்படியே தொடர்ந்தா அவங்க மனசு பாதிக்கும். அப்புறம் அதுவே பெரிய வியாதியா மாறிடும். அலுவலக டென்சனை அங்கேயே விட்டுடுங்க! வீட்டுக்கு வந்தா பசங்க கூட கொஞ்சம் விளையாடுங்க! அவங்க ஸ்கூல்ல என்ன நடந்துதுன்னு கொஞ்சம் விசாரியுங்க!  அப்புறம் பாருங்க அவங்க கிட்ட நடக்கிற மாறுதல்களை!”

   ரொம்ப சமாதானப் படுத்தியும் நடிக்க மறுத்த உங்க பொண்ணை சின்னதா ஒரு தட்டு தட்டி என்கரேஜ் பண்ணி நடிக்க வைக்க வேண்டியதாப் போச்சு! அதுக்கு சாரி கேட்டுக்கறேன்! இனிமே நீங்க எந்த கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா இருந்தாலும் கொடுங்க! நான் ஹேண்ட்ல் பண்ணிக்கறேன்!” சுஜா மிஸ் சொல்லி முடிக்க மகேஷ் தலை கவிழ்ந்தான்.

   முதல் முறையாக தன் தவறை உணர்ந்தான். இத்தனை நாள் குழந்தையை கவனிக்காமல் அது பாசத்திற்கு ஏங்கியதை கவனிக்காமல் அலுவலகமே கதியென இருந்துவிட்டது அவனை குத்தியது.

  “ ஸாரி மிஸ்! என் கண்ணை திறந்துவிட்டிருக்கீங்க! ஐயம் எக்ஸ்டீரிம்லி சாரி! இனிமே என் பொண்ணுக்காகவும் நேரத்தை ஒதுக்குவேன்! இன்னிக்கு என் பொண்ணோட புரோக்ராமை பார்த்துட்டுதான் மறுவேலை!  என்றான் தெளிந்தவனாக.
  
டிஸ்கி} இந்த தொடர் பதிவுக்கு எனக்கு அழைப்பில்லை! அழையா விருந்தாளியாக கலந்துகொள்ள முடிவு செய்து யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாக சிந்தித்து அசத்திவிட்டார்கள். இன்று காலையில் திடிரென உதித்த ஓர் பொறி இந்த கதையை உருவாக்கிவிட்டது. அவசரகதியில் உருவாக்கம்! இன்று இதுவரை பதிவு எழுதாமையாமையால் அதை அப்படியே பதிவிடுகிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Comments

 1. சூப்பர் சுரேஷ் . இன்னொரு வித்தியாசமான கோணம் . ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள்
  ஸ்கூல் பையன் இந்தக் கதையை அனுபவமாகத் தான் எழுதி இருந்தார். அவர் யாரையும் தொடர சொல்லவில்லை.அதனை நானாகத்தான் முதலில் தொடர்ந்தேன். நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதனைப் படித்த மதுரைத் தமிழன் ஒரு சிலருக்கு அழைப்பு விடுத்தார். உண்மையில் இது தொடர்பதிவாக தொடங்கப் பட்டது அல்ல.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்! தொடர் பதிவாக இல்லாவிட்டாலும் பலரையும் தொடர வைத்த ஒரு பதிவாகி பதிவுலகை மீண்டும் சுறுசுறுப்பாக்கிய ஒர் பெருமையை கார்த்திக் சரவணன் பெறுகின்றார்.

   Delete
 2. :) இது வித்தியாசமா இருக்கு ...//அலுவலகமே கதியென இருந்த//பல பொறுப்பற்ற பெற்றோருக்கு குட்டு வச்சிருக்கீங்க ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ! பல குழந்தைகள் இப்படி பாசத்திற்கு ஏங்குவதை பார்த்து இருக்கிறேன்! அது திடிரென்று பொறி தட்டி இந்த கதை உருவாகிவிட்டது! நன்றி!

   Delete
 3. நன்றாக இருக்கிறது சகோ. தற்சமயம் பல இல்லங்களில் குழந்தைகள் அப்பாவிற்காக ஏங்குகிறார்கள் தான். அருமை அருமை... திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை அசத்தல்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. நானும் இந்த கதையை இப்படி எழுதுவேன் என்று காலைவரை சிந்திக்கவே இல்லை! திடீரென்று ஓர் பொறி தட்டி இந்த பதிவு.

   Delete
 4. பல குழந்தைகள்... முக்கியமாக பெண் குழந்தைகள் மிகவும் எதிர்ப்பார்ப்பது அப்பாவை... அருமை...

  நாடகம் + திருப்பம் பலே...

  ReplyDelete
 5. அருமையான கதை... வித்தியாசமான பார்வை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அட இன்னும் இந்த சுற்று இன்னும் முடியலையா ஹா ஹா ....
  இதுவும் நன்னா இருக்கே பேஷ் பேஷ் !வாழத்துக்கள் ..!

  ReplyDelete
 7. சூப்பர் மிக அழகாகச் சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள். முடிவு தெரிந்துவிட்டது...மகேஷ் வரமுடியாது என்று சொல்லவும்.....அவன் மனைவி அப்ப அடிச்சதக் கேட்கக் கூட வரமாட்டீங்களானு கேட்டதுமே ட்ராமானு தெரிஞ்சுருச்சு.....ஹஹஹ் வித்தியாசமான பார்வையைச் சொல்லி இருக்கின்றீர்கள்....

  பாராட்டுகள், வாழ்த்துகள்....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2