வாசனை!
வாசனை!
காலைக்கதிரவன் சுறுசுறுப்பாய் முன்னேறி தன் செங்கதிர்களால்
சுட்டெரித்துக் கொண்டிருந்த முற்பகல் வேளை. வாசலில் ”டிங்டிங்” என்று காலிங் பெல் ஒலித்தது.
வியு பைண்டரின் வழியே பார்த்துவிட்டு “ இந்தாளுக்கு வேலையே இல்லை! மாசம் ரெண்டு தடவை
எதையாவது தூக்கிட்டு வந்துடறான்” என்று முணு முணுத்தாள் லட்சுமி.
“ என்ன லட்சுமி! யாரு! கதவைத் திறக்காம முணுமுணுத்துகிட்டு
இருக்கே! திறக்க வேண்டியதுதானே!”
“ திறக்கறேன்! திறக்கறேன்! நான் வேண்டாம்னு சொன்னா
நீங்க கேக்கவா போறீங்க! உங்க தலையிலே மிளகாய் அரைக்கறதுக்குன்னே வந்து சேருதுங்க!”
என்றபடி கதவைத்திறந்தாள் லட்சுமி.
வெளியே அறுபதை கடந்த வயதில் ஒல்லியான தேகம், நரைத்த
முடி! கண்களில் அந்தக் கால தடிமனான கண்ணாடி, தோளில் ஓரு ஜோல்னா பையோடு நின்றிருந்த
அந்த முதியவர் கைகளை கூப்பி, ”வணக்கம் அம்மா!”என்றதும் “வணக்கம் வணக்கம்!” உள்ளே வாங்க! என்றபடி விரைந்தாள் அவள்.
” வாங்க ஐயா! இப்படி உட்காருங்க! ” என்றேன் நான்.
இருக்கட்டும் தம்பி! ஏதொ உங்களை மாதிரி ஒருத்தர் ரெண்டுபேர் வாடிக்கையா
வாங்கிறதுனாலே என் பொழைப்பும் ஓடுது. என்றவர். பையில் இருந்து ஊதுபத்தி பாக்கெட் ஒன்றை
எடுத்துக் கொடுத்தார். பத்து பாக்கெட்கள் அடங்கிய ஒரு பண்டல் அது. ஐயா, இந்த முறை ரெண்டா
கொடுங்க! என்றபோது அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
சொம்பில் தண்ணீர் எடுத்து வந்த லட்சுமி, நான்
ரெண்டு பாக்கெட் வாங்குவதை பார்த்து, எதுக்குங்க
ரெண்டு பண்டல்? என்று கண்ணாலேயே கேட்டாள்.
நான் கை அமர்த்தினேன். நீரை குடித்துவிட்டு ரெண்டு பண்டல்களுக்கு இருநூறு ரூபாய்
பணம் பெற்றுக்கொண்டு ரொம்ப நன்றி தம்பி! இன்னிக்கு நீங்க ரெண்டா வாங்கிட்டதாலே எனக்கு கொஞ்சம் அலைச்சல்
கம்மி! வரேன் தம்பி! என்று விடைபெற்றார் அந்தப்பெரியவர்.
அவர் சென்றது பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்
லட்சுமி! “ என்னங்க நம்ம வீட்டுல மட்டும் பணம் செடியிலாங்க காய்க்குது! இப்படி தண்டம்
பண்றீங்க! அந்த பெரியவர் விற்கிற அந்த ஊதுவத்தில
வாசனையே வராது. அதை ஒரு பண்டல் வாங்கிறதே அதிகம். ரெண்டா வேற வாங்கறீங்க! ஒரு பண்டல் வத்தியே நமக்கு அதிகம். வாசனை இல்லேன்னு
நா வேற தனியா கடையிலே வாங்கறேன்.
அது போதாதுன்னு இப்ப ரெண்டு பண்டல் வாங்கி இருக்கீங்களே!
ஒரு ரெண்டு தடவை திருப்பி அனுப்புங்க! அப்புறம் வர மாட்டாங்க!” என்றாள்.
”இதோட நிறுத்திக்கறியா? ஒரு இருநூறு ரூபா செலவு
பண்ணா நாம ஒண்ணும் ஏழையாகிட மாட்டோம்!”
ஒரு இருநூறு ரூபா மட்டும் சும்மா வருதாங்க! ஒரு
தடவை பரவாயில்லை! மாசா மாசம் அந்தாளுக்கிட்டே ஏன் வாங்கணும்? இது போதாதுன்னு நாம யூஸ்
பண்ணவே மாட்டோம்! அந்த மாதிரி துணியிலே அவர் கொண்டுவர தலைகாணி உறை, கர்சீப், ஜட்டி,
பணியன் இதை வேற வாங்கி பீரோவிலே அடுக்கி வைக்கறீங்க!
உங்களுக்கென்னங்க வந்தது?
“ பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறீயா?”
“ அத நான் எப்படி
சொல்றது? ஆனா நீங்க செய்யறத பார்த்தா அப்படித்தான் தோணுது!” வாசனையே வராத இந்த பத்தி
பாக்கெட் வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு அனுப்பிச்சரலாம் இல்லையா? ரெண்டு பண்டல் வாங்கி அடுக்கறீங்களே!”
“ லட்சுமி! அந்த பெரியவருக்கு வயசு என்ன இருக்கும்?”
“ அறுபதுக்கு மேல இருக்கும்! அதுக்கு என்ன?”
இத்தனை வயசுக்கு மேல அவரு எதுக்கு இப்படி வீடு வீடா
போய் சம்பாதிக்கணும்.?
அது அவர் தலையெழுத்து!
”இப்படி சொல்லிட்டு
போயிடக் கூடாது! இதுவே அவர் உன் அப்பாவா இருந்தா விட்டுருவியா?”
“என் அப்பாவுக்கு
அந்த நிலைமை வராது!”
“ஒரு வேளை
வந்துருச்சுன்னா என்ன பண்ணுவே!”
“அதெப்படிங்க வரும்! என்னோட அண்ணன் இருக்கான், தம்பி
இருக்கான் பார்த்துக்க மாட்டானுங்களா?”
இந்த பெரியவருக்கு கூட ரெண்டு பசங்க இருந்தும் இப்ப
கைவிட்டுட்டானுங்க! அனாதை இல்லத்துல இருக்கார். அங்கதான் ஊதுவத்தி சுத்தறது, மெழுகுவத்தி
தயாரிக்கிறது, தலையணை உறை இதெல்லாம் செய்ய கத்து தராங்க! அதை சிலர் செய்யறாங்க! செஞ்சதை
சிலர் விற்பனை செய்யறாங்க! இந்தப் பெரியவர் அப்படி விற்பனை செய்ய வரார்.
இதே வயசுல எத்தனையோ பேர் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு
இருக்கிறதை பாத்து இருப்பே! இவர் அப்படி இல்லாம உழைச்சு சாப்பிடறார். அனாதை இல்லத்துல
கூட இலவசமா தங்கக் கூடாதுன்னு இப்படி உழைச்சு வருகின்ற காசை கட்டி தங்கி இருக்கார்.
இவரோட ஊதுவத்திலே வாசனை வரலைன்னு சொல்றே ஒத்துக்கறேன்! ஆனா உழைப்போட வாசனையை அதுல நான்
உணர்கிறேன். அதனாலதான் ரெகுலரா வாங்கிறேன்.
நம்மளை மாதிரி சிலரும் ரெகுலரா வாங்கிறாங்க! இது
அவங்க உழைப்புக்கு நாம தர்ற ஒரு சிறிய மரியாதை! இதனால அவங்களுக்கும் ஒரு சந்தோஷம்.
சினிமா, நொறுக்குத்தீனி, சைட் சீயீங்க்னு எவ்வளோவோ ஒரு மாசத்துக்கு செலவு பண்றோம்.
இப்படி ஒரு ஐநூறோ ஆயிரமோ செலவாகிறதுல தப்பு இருக்கிறதா எனக்குத் தோணலை! எனக்கு ஒரு
மனத் திருப்தியும் கிடைக்குது.
உனக்கு இந்த வத்தியோட வாசனை பிடிக்கலைன்னா ஏதாவது
கோயிலுக்குக் கொடுத்திடலாம்! ஆனா இனிமேலும் அந்தபெரியவரை தப்பா பேசாதே என்றேன்.
“ சாரிங்க! நானும் இனிமே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட
சொல்லி அந்த பெரியவர்கிட்ட ஏதாவது பொருள் வாங்கிக்க சொல்றேன். என்றாள் லட்சுமி.
நான் அர்த்தமாய் புன்னகைத்தேன்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
உழைப்பினைப் போற்றுவோம்
ReplyDeleteஅர்த்தமுள்ள பதிவு. உழைப்புக்கு மரியாதை தரும் நிலையில் நாம் உயர்கிறோம். நன்றி.
ReplyDeleteஇந்த மனம் வேண்டும்...
ReplyDeleteArumai
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஉழைப்பைப் போற்றும் உயர் கதை,
பகிர்வுக்கு நன்றி.
அருமையான கதை
ReplyDeleteஇன்னும் கிராப்ட் செய்தால்
சர்வதேச தரத்திற்கு போகலாம்
உதா
நேரிடையாக மனைவியிடம் சொல்லாமல் உணர்வது மாதிரி ஒரு காட்சி ... வாக்கியம் போதுமே..
இன்னொரு தளத்திற்கு கதை உயர்ந்துவிடும் ..
அருமையான கதை! நாங்கள் சொல்ல வந்ததை மது சொல்லி விட்டார். மற்றொன்று, கதையில் பேச்சில் பெரிய வசனம் இல்லாமல் சிறிதாக இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது...
ReplyDelete