பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!

பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும், மக்களும் கட்டுவித்து வழிபட்டு வருகின்றனர். அதில் பலவித உருவங்களில் சுவாமியும் அம்பாளும் தரிசித்து இருப்பீர்கள்.

    திருவள்ளூர் அருகே புட்லூரில் காணக்கிடைக்காத ஓர் அதிசயமாக புற்று வடிவில் அம்மன் அருள்பாலிக்கின்றாள். அந்த புற்று ஓர் கர்ப்பிணி பெண் தலைசாய்ந்து படுத்திருப்பது போல காட்சி தருவதும். இங்கு தொடர்ந்து  ஒன்பது வாரங்கள் வருகை புரிந்து வழிபடுவோருக்கு  பிள்ளை வரம் கிடைப்பதும் அதிசயத்தக்க ஆச்சர்யங்கள் மட்டுமல்ல அம்பாளின் கருணையை உணர்த்தும் நேரடி காட்சிகள் ஆகும்.

சென்னையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த புற்று மாரியம்மன் ஆலயமான அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே ராமாபுரம் புட்லூரில் பூங்காவனத்தாள் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.

  இந்த ஆலயத்தின் வரலாறு ஓர் கதையாக சொல்லப்படுகின்றது. மேல்மலையனூரில் இருந்து சிவனும் பார்வதியும் காடுமேடு கடந்து இடுப்பில் குடையை இடுக்கி சூலத்தை தனியாகக் கொண்டு உலா வந்த போது இந்த தலத்திற்கு வருகின்றனர். அப்போது இது மா, வேம்பு,இலுப்பை மரங்கள் சூழ்ந்து குளிர்ச்சியாக இருக்க இளைப்பாற அமர்கின்றனர். அப்போது அம்மைக்கு தாகம் எடுக்க அப்பன் தண்ணீர் கொண்டு வரச்சென்றார்.

   சிவன் கூவம் நதிக்கு சென்று தண்ணீர் எடுத்துவருகையில் வெள்ளம் கரைபுரள வருவதில் தாமதம் ஆகியுள்ளது. பார்வதி தேவி சிவன் வராது போகவே அப்படியே மல்லாந்த நிலையில் படுத்துவிட்டார். அப்படியே புற்றாக உருவெடுத்துவிட்டார். சிவனும் அம்பாள் அருகில் அமர்ந்து விட்டார். இதனால் அம்மன் சன்னதி எதிரே சிம்ம வாகனத்திற்கு பதில் நந்திவாகனம் அமையப் பெற்றுள்ளது.

   இந்த இடத்தில் பிறிதொரு காலத்தில் விவசாயி ஒருவர் விவசாயப்பணிக்காக ஏர் ஓட்டிய சமயம் புற்றினில் ஏர் பட்டு இரத்தம் பீறிட்டு அடித்துள்ளது. விவசாயி பயந்து மூர்ச்சையாகிவிட்டார். அன்றிரவு அவர் கனவில் அம்மன் தோன்றி நான் இங்கு புற்றுவடிவமாக அமர்ந்துள்ளேன். எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். விவசாயியும் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார்.

  தலை, கை, கால்கள், மார்பு இவைகளுடன் நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே மண்ணில் இயற்கையாக தோன்றியுள்ளாள்.  இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள் பூங்காவனத்தம்மன்.

இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால் அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள். எதிரில் நந்தியும் அருகில் தாண்டவராயன் என்னும் நாமத்துடன் நடராஜரும் உற்சவ நாயகியும் காட்சி தருகின்றனர்.

  ஆலயப்பிரகாரத்தில் தல விருட்சம் வேப்ப மரம், அதன் அருகில் மற்றுமோர் புற்று. இங்கு பால் ஊற்றி மஞ்சள் சார்த்தி வழிபடுகின்றனர். இந்த மரத்தில் பெண்கள் தங்கள் முந்தானையில் இருந்து துணியை கிழித்து சார்த்தி தங்கள் வேண்டுதலை வேண்டி சுற்றி வருகின்றனர்.

  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜைப்பொருட்களுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று முதலில் அரசமர விநாயகரை 11 முறை சுற்றி வழிபட்டு புற்று அம்மனை வழிபட்டு அம்மன் காலடியில் மண்டியிட்டு மனமுருக வேண்டுகின்றனர். அப்போது கோயில் பூஜாரி அம்மன் திருவடியில் வைத்த எலுமிச்சை பழத்தை  உருட்டி விடுவார். அதை மண்டியிட்ட நிலையில் புடவை முந்தானையை விரித்து பிடித்து கீழே விழுந்துவிடாதபடி பிடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தல விருட்சமான வேம்பு இலையை கொடுப்பார். அதையும் எடுத்துக்கொண்டு வந்து மஹா மண்டபத்தில் அமர்ந்து வேப்ப இலையுடன் எலுமிச்சை கனியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 இவ்வாறு ஒன்பது வாரம் ஒரே கிழமையில் சென்று வழிபட்டு முதல் வாரத்தில் முந்தானையை கிழித்து தொட்டில் கட்டி நாகாத்தம்மன் வேப்ப மரத்தில் கட்டி வழிபட வேண்டும். இப்படி செய்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.

இதே போல பதினோறு வாரங்கள் வழிபட திருமண பாக்கியம் கை கூடுகின்றது. இது தவிர புடவை சார்த்தி வழிபாடும். சிவராத்திரி மயானக் கொள்ளை வழிபாடும் விஷேசமானது.

அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.

நடை திறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அமாவாசை தினங்களில் : காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை
ஆடிமாதங்களில் ஐந்துவாரங்கள் கூழ் வார்க்கப்படுகின்றது.

பஸ் ரூட்: சென்னை ஆவடியில் இருந்து டி16 திருவள்ளூர் செல்லும் பேருந்து.
அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து  தடம் எண் 572
பிராட்வேயில் இருந்து தடம் எண் 571. கோயம்பேட்டில் இருந்து தடம் எண் 72 ஏ.
இறங்குமிடம் ராமாபுரம். காக்களூருக்கு முந்தைய நிறுத்துமிடம்.

அதிசயமான புட்லூர் புற்று மாரியம்மனை வழிபடுவோம்! அம்மன் அருள் பெறுவொமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அம்மனை தரிசித்தோம் உங்களது பதிவின் வழியாக. இதுவரை இக்கோயில் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. வாய்ப்பு கிட்டும்போது செல்வேன். நன்றி.

  ReplyDelete
 2. இதுவரை சென்றதில்லை... திருவள்ளூர் புட்லூர் புற்று மாரியம்மன் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம்

  இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  ReplyDelete
 4. அருமையான தகவல்..புட்லூர் சென்ரிஉக்கின்ரோம்...ஆனால் தகவல்கள் உங்கல் மூல்யமாக...நன்றி...

  ReplyDelete
 5. அம்மனின் அருள் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2