துரத்தும் நிழல்! பகுதி 1
துரத்தும் நிழல்! பகுதி 1
அன்று தை கிருத்திகை தினம்!
ஆண்டார்குப்பம் முருகர் ஆலயத்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. அந்த
பகுதியில் அது பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத்தலம். சுற்றுவட்டார மக்களின்
கவலைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார் அந்த பால முருகன்.
வைத்தியநாத குருக்கள் வரும் சேவார்த்திகளின்
தேங்காய் பழத்தட்டுக்களை வாங்கி அர்ச்சணை செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை! 30ஐ கூடத்தொடாத வயது. குள்ளமான உருவம்
ஒல்லியான தேகம். பிராமணர்களில் சற்று வித்தியாசமாக கருப்பு தேகம்! மந்திரம்
மட்டும் கணீர் என ஒலித்தது அவரது வாயிலிருந்து. அந்த கோவிலில் கிருத்திகை தோறும்
சென்று பணியாற்றுவதால் மக்கள் அவரிடம் நல்ல அபிமானம் வைத்திருந்தனர்.
மற்ற குருக்கள்கள் இருந்த போதும் அவரிடம்
தேடிவந்து அர்ச்சனை செய்துகொண்டு போயினர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம்
முடிந்து இருந்தது. இளம் மனைவி கைக்குழந்தையோடு வீட்டில் காத்திருப்பாள்
இரவாகிவிட்டது. வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உதித்த போது மணி
இரவு 9ஐ கடந்து விட்டிருந்தது.
அவரது வீடான பாக்கம் செல்ல அங்கிருந்து ஏழு
கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இந்த கதை நடக்கும் சமயத்தில் வாகன வசதிகள் குறைவு.
இந்த காலமென்றால் நொடிக்கு ஒரு பேருந்து கிடைக்கும். அன்று மணிக்கொரு பேருந்து
வருவதே அபூர்வம். அதுவும் வைத்தியநாதனின் ஊரோ ஓர் குக்கிராமம். அங்கு செல்ல பஸ்
ஏதும் கிடையாது.
முருகன் கோயில் தலைமை குருக்கள் வைத்திய
நாதனுக்கு ஒரு வகையில் சொந்தம் தான். இவருடைய அத்தையை அவர் மணந்து இருந்தார்.
வைத்திய நாதன் அவரிடம் சென்று மாமா! போயிட்டு வரென்! ஆத்துல அவ தனியா இருப்பா!
என்றார்.
தலைமை குருக்களும் சரி! பத்திரமா பாத்து
போயிட்டுவாடா! சைக்கிள்ள டைனமோ
இருக்கோல்லியோ? என்றார்.
அதெல்லாம் இருக்கு மாமா! நீங்க
கவலைப்படாதேங்கோ! நான் பத்திரமா போய் சேர்ந்துருவேன்! என்று அந்த முன்னிரவில் சைக்கிளை தள்ளிக் கொண்டு கொஞ்சம் இருள் கவிந்த அந்த
சாலையில் இருந்து வெளிச்சம் வந்த பகுதிக்கு வந்து ஏறி மிதிக்க ஆரம்பித்தார்
வைத்திய நாதன்.
குழந்தைக்கு இரண்டு நாளாய் பால் இல்லை!
வீட்டில் மளிகைப் பொருட்களும் தீர்ந்து போயிருந்தன. ஆத்துக்காரிக்கு ஒரு புடவை
எடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. பல கவலைகள் அவரை சூழ்ந்து கொண்டாலும் இன்றைய
கிருத்திகை வருமானம் அதற்கு ஒரு தீர்வாய் இருக்கும் என்ற மகிழ்ச்சியும் அவரை
சூழ்ந்தது. சைக்கிளை விரைந்து அழுத்தி மிதித்தார் வைத்திய நாதன்.
சுமார் ஒரு அரை மணி நேரத்தில் பாக்கம்
கிராமத்தில் தனது வீட்டிற்கு வந்து விட்டார் குருக்கள். அவரது சைக்கிள் என்றும்
அவரை கைவிட்டதில்லை! விரைவாக வந்து விட்டவர். கோயில் வாசலில் படுத்திருந்த கருப்பு
நாய் அவரை அடையாளம் கண்டு வாலாட்டியது.
திண்ணையில் அவரது மனைவிக்கு துணையாக வந்து
படுத்துக் கொள்ளும் பொன்னம்மா கிழவி படுத்துக் கிடந்தாள். அரவம் கேட்டதும்
விழித்துக் கொண்டு சாமீ! வந்துட்டீங்களா! இவ்ளோ நேரம் அயிரம்மா!
முழிச்சிக்கிட்டுதான் இருந்துச்சு! இன்னும் வரலியே கவலைப்பட்டுக்கினு இருந்துச்சு!
இப்பத்தான் படுத்துச்சு! அவள் சொல்லி முடிக்கவும் வாசல் கதவு திறக்கவும் சரியாக
இருந்தது.
என்னங்க! வந்துட்டீங்களா! இவ்ளோ நேரம்
ஆயிருச்சே! இந்தாங்க தீர்த்தம்! குடிச்சுட்டு காலை அலம்பிண்டு உள்ளே வாங்க! குருக்களின் மனைவி ஹேமாவதி தண்ணீர் செம்பை
நீட்டினாள்.
என்ன ஹேமா! நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே! ஆள்
ரொம்ப டல்லடிச்சு போயிருக்கே!
அது ஒண்ணும் இல்லீங்க! இன்னிக்கு
மத்தியானத்தில இருந்து ரெண்டு காலும் அப்படியே வீங்கி கிடக்குங்க! நடக்க
முடியலை! பூரான் ஏதாவது
குத்தியிருக்குமோன்னு வசம்பு கூட அரைச்சு போட்டேன்! ஒண்ணும் பிரயோசனப் படலை! காலை
அசைக்க முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு!
எங்கே! காட்டு!
அவள் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே புடவையை
சற்றே உயர்த்திக் காட்டினாள். இரண்டு பாதங்களும் வீங்கி அந்த வீக்கம் முட்டி வரை
பரவியிருந்தது. அந்த இரவின் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்தில் ஒரு
கிலி தெரிந்தது.
என்னம்மா? என்றான் வைத்தி
இல்ல! திடீர்னு எனக்கு இப்படி கால்
வீங்கிருச்சே! நான் உங்களையும் பொண்ணையும் விட்டுட்டு போயிருவேனோன்னு பயமா
இருக்குங்க!
அடச் சீ பைத்தியம்! இது சாதாரணமான கால்
வீக்கம்! நீர் கோர்த்து இருக்கலாம்! இல்ல பூச்சிக் கடியா இருக்கலாம்! நாளைக்கு
ஹாஸ்பிடலுக்கு போனா சரியாயிரும்! ஆமா! நீ சாப்பிட்டியா?
நீங்க வராம நான் என்னிக்கு சாப்பிட்டு
இருக்கேன்!
சரி! எலையை போடு! இல்ல வேணாம் நானே போய்
எடுத்துண்டு வரேன்! நீ சிரமப்பட வேண்டாம்!
சமையல் கட்டுக்குள் நுழைந்த வைத்திய நாதன்
இருவருக்கும் இலையும் போட்டுவிட்டு மனைவியை மெல்ல அழைத்துச் சென்று அமர வைத்தான்.
இருவரும் அன்றைய இரவு உணவை உண்ண
ஆரம்பித்தார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்
அவர்களின் நிழலும் இரவு உணவை உண்டுகொண்டிருந்தது. அந்த நிழல் அவர்களை துரத்த
போகிறது என்பதை அவர்கள் அறிந்தார்கள் இல்லை!
துரத்தும்(1)
டிஸ்கி: பேய்கள் ஓய்வதில்லை
எழுதிய பின் ஒரு நீண்டகால ஓய்வுக்குப்பின் இந்த தொடரை எழுதுகிறேன்! இதிலும்
அமானுஷ்யம் கலந்திருக்கும். இதற்கான கரு ஒரு மூன்று மாதத்திற்கு முன் உதித்து
விட்ட போதும் சரியான தலைப்பு உதிக்கவில்லை! என்னென்னமோ யோசித்து இன்று திடீரென
தோன்றியது இந்த தலைப்பு. ஊழ்வினை தான் கதையின் முக்கிய கரு! அதனால் இந்த தலைப்பு
பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்! உங்கள் கருத்துக்களை ஆவலோடு
எதிர்பார்க்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல துவக்கம்.
ReplyDeleteசுவாரஸ்யமாகச் செல்லும் போலுள்ளது.
தொடரவும். தொடர்கிறோம்.
சிறப்பாய் தொடருங்கள்
ReplyDelete