மனைவிக்கு பயந்த ஓபாமா! கதம்ப சோறு! பகுதி 6
கதம்ப சோறு பகுதி 6
மொள்ளமாரி அரசியல்வாதிகளுக்கு
முகம் இழக்கும் சட்டம்:
தண்டணை பெறும் எம்.எல்.ஏ. மற்றும்
எம்.பிக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சுப்ரீம் கோர்ட் ஓர்
உத்தரவை பிறப்பித்தது. கிரிமினல் வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டு
தண்டணை விதிக்கப்பட்ட எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படவேண்டும்.
தண்டணை அறிவிக்கப்பட்டதுமே அவர்களின் பதவியை பறிக்கலாம். குற்றப்பின்னணி
உடையவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்பிரிவு8,
துணைப்பிரிவு 4 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பிறப்பித்தது. பொறுக்குமா நம்ம மொள்ள மாரிகளுக்கு! இந்த உத்தரவு அவர்களின்
அடிவயிற்றை கலக்க இந்த உத்தரவை செல்லாதது ஆக்க துரிதமாக பணிகள் நடந்தன. இதனால்
குற்ற பின்னணி உள்ள அரசியல்வாதிகளை காப்பாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டத்தை தயாரித்து
மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது. அவர்களும் ஒப்புதல் அளித்துவிட்டார்கள்
எல்லோரும் கூட்டு களவாணி பயலுவதானே! இப்போது இந்த சட்டம் ஜனாதிபதியின்
ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் தந்துவிடுவார் பின்னே??
அதுக்குத்தானே அவர் ஜனாதிபதி ஆகியுள்ளார். இந்த புதிய சட்டத்தினால் கிரிமினல்
வழக்குகளில் தண்டணை பெற்ற பிரதிநிதிகள்
தங்கள் தண்டணையை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்திருந்தால் அவர்களை
பதவி நீக்கம் செய்ய முடியாது. தண்டணையை எதிர்த்து தடை உத்தரவு பெற்றிருந்தாலும்
பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் ஜாலியாக சபைக்கு வந்து போகலாம். சம்பளம்
மட்டும் கிடைக்காது! அதான் கிம்பளம் நிறைய வருமே! அது போதாதா? எப்படி போகுது
பாருங்க நம்ம நாட்டோட நிலைமை!
ஒரு புள்ளி விவரம்
தெரிஞ்சுக்குங்க! லோக்சபாவில் உள்ள 543 எம்பிக்களில் 162 பேர் மீது பல்வேறு
கோர்ட்டுக்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன.
இந்த 162 பேரில் 76 பேர் மீது
கடுமையான குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள சட்டசபை
உறுப்பினர்கள்4032 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த லட்சணத்தில் சிறையில்
இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
திருத்தத்திற்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டாராம்!
எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!
அமெரிக்க ஜனாதிபதியா
இருந்தாலும் வீட்டுல பூனைதான்!
வெளியே சமுகத்தில் பெரிய பந்தாவாக பலரை
மிரட்டி வேலை வாங்கும் சிலர் வீட்டுல பூனையாக இருப்பார்கள். இந்த வகையில் நம்ம
ஒபாமாவும் விதிவிலக்கு அல்ல! அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாலும் ஐயா செல்வாக்கு
எல்லாம் வெளியிலதானாம். வீட்டுல அம்மா தர்பார்தான் நடக்குமாம்.
மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிப்பதை விட்டு
விட்டதாக பராக் ஒபாமா தெரிவித்து உள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்சபை கூட்டத்தில்
ஐ.நா அதிகாரி ஒருவர் சிகரெட் வேண்டுமா என்று கேட்டபோதுதான் இதை தெரிவித்துள்ளார் ஒபாமா.
நான் ஆறு ஆண்டுகளாக சிகரெட் பிடிப்பது இல்லை!
மனைவிக்கு பயந்து புகைபிடிப்பதை விட்டுவிட்டேன்! என்று தயக்கமின்றி கூறியுள்ளார்.
அதிபரான புதிதில் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்தார். இது செய்தியாக வர இது என்
தந்தையிடம் இருந்து தொடர்ந்த பழக்கம் என்றார் ஒபாமா.
ஒபாமாவின் மனைவி மிச்சல் உடல் பருமனை
குறைக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்து உடல் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த விஷயத்தில்
நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் ஒபாமா புகைப்பழக்கத்தை
கைவிட்டுள்ளார்.
நம்மூர் அரசியல்வாதிகளை நினைச்சு
பெருமூச்சுத்தான் விட்டுக்கணும்!
இலங்கை தேர்தலில் தமிழ்
அமைப்பு வெற்றி!
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு
மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது.
அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி விக்ணேஷ்வரன்
மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை
இந்த அமைப்பு கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை தமிழர்கள் பட்டாசு வெடித்து
கொண்டாடினர்.
தமிழர்களுக்கு உரிய அதிகாரம் சட்ட ரீதியாக
கிடைக்க விரும்பும் விக்னேஷ்வரனின் முயற்சிகள் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் இந்த எழுச்சி ராஜபக்ஷேவிற்கு
பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. நீண்ட நாளுக்குப் பின் தமிழர்களுக்கு கிடைத்துள்ள
இந்த வெற்றி நீடித்து அவர்கள் வாழ்வை இனிக்க செய்ய வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
மலிவு விலை அங்காடிகள்!
தமிழகத்தை பிடித்த இந்த தொற்று நோய்
டில்லியையும் தாக்கியுள்ளது. டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் டில்லியில் சில
இடங்களில் மலிவு விலை நடமாடும் அங்காடிகளை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில்
விலைவாசியை கட்டுப்படுத்த இந்த மாதிரி உருப்படியில்லாத விசயங்களில் நேரத்தை
செலவிட்டு மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதில் அம்மாவுக்கு நிகர் யாரும்
கிடையாது. சில மாதங்களுக்கு முன் காய்கறி விலைகள் உச்சத்தில் இருந்த போது சில
மலிவு விலை காய்கறி கடைகளை திறப்பதாக கூறி அது கானல் நீராகிவிட்டது. அந்த கடைகளில்
இப்போது விற்பனை இல்லை! பல இடங்களில் அந்தகடைகள் பரவவும் இல்லை! சீப் பப்ளிசிட்டி
பிரியரான ஷீலா தீக்ஷித்தும் இந்த மாதிரி காய்கறி கடைகளை டில்லியில் சில இடங்களில்
திறந்துள்ளார். இதனால் மக்களுக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை! விலைவாசி
எதனால் உயர்கிறது! அதை அறிந்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் தானே
வியாபாரத்தில் இறங்கும் இந்த மாதிரி கேவலமான ஐடியாக்களை எந்த சிகாமணிகள்
அம்மணிகளுக்கு வழங்கினரோ தெரியவில்லை! பாவம் மக்கள்!
15வதுமனைவியை தேர்வு செய்த
சுவாசிலாந்து மன்னர்!
பெண்ணுரிமை இயக்கங்கள் எவ்வளவோ போராடியும்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேலாடையின்றி பெண்களை நிற்க வைத்து தன்னுடைய
பதினைந்தாவது மனைவியை தேர்வு செய்துள்ளார் சுவாசிலாந்து மன்னர் எம்ஸ்வாட்டி வயது
45.
இந்த நாட்டு பாரம்பர்யப்படி மன்னராக
பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும். மன்னர்
புதிய மனைவியை தேர்வு செய்வதற்காக நாணல் புல் திருவிழா நடக்கிறது. இந்த
திருவிழாவில் நூற்றுக்கணக்கான கன்னிப் பெண்கள் மேலாடை அணியாமல் நாணல் புற்களை
ஏந்தி மன்னர் முன் நடனமாடி அணிவகுத்துச் செல்வர். அதில் ஒருவரை மன்னர் தேர்வு
செய்து அந்த பெண்ணின் தலையில் சிவப்பு இறகை செருகி மனைவியாக்கி கொள்வார். இந்த
செயலுக்கு எதிர்கட்சிகளும் பெண்ணுரிமை அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்
கண்டுகொள்ளவில்லை மன்னர். இதுவரை 14 மனைவிகள் மூலம் 24 குழந்தைகள் அவருக்கு
உள்ளனர். இவரது செக்ஸ் தொல்லை தாளாமல் மூன்று மனைவிகள் ஓடிவிட்டனராம். இருந்தும் சளைக்காமல்
15வது மனைவியை தேர்வு செய்துள்ளார் மன்னர்.
ஆன் லைனில் வாக்காளர் பெயர்
சேர்ப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி
தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை! இணையதளம் மூலம் ஆன் லைனில் பெயர்
சேர்த்துக் கொள்ளலாம். இந்த நடைமுறையை இரண்டு ஆண்டுகளாக தமிழகம் அமல் படுத்தியும்
மக்களிடையே ஆர்வம் குறைவாக இருந்தது. இதற்கு காரணம் பெரும்பாலான வீடுகளில் இணைய தள
வசதி இல்லாதது காரணமாக இருந்தது.
இந்த குறையை போக்க நாட்டில் முதல் முறையாக 944
இணையதள மையங்களுடன் தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில்
இந்த மையங்களில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.இதற்கு அடையாள அட்டை எதுவும்
தேவையில்லை! வாக்காளர் சரிபார்ப்புக்கு அதிகாரிகள் வரும்போது சான்று காட்டினால்
போதுமானது. சென்னையில் 84 இணையதள பயிற்சியாளர்களுக்கு மாநாகராட்சி கட்டிடத்தில்
பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆன் – லைனில் விண்ணப்பித்த 40 நாட்களில் அடையாள அட்டை
வழங்கப்படும்.
பார்வையற்றோர் போராட்டமும்
அம்மாவின் பாரமுகமும்!
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னையில் பார்வையற்றோர் போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில்
குதித்துள்ள இவர்களை அரசு நடத்தும் விதம் சரியானதாக இல்லை! மாற்றுத் திறனாளிகளான
இவர்களின் குறைகளை சற்றும் செவி கொடுக்காமல் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி
அப்புறப் படுத்துவதிலேயே அரசு குறியாக உள்ளது. இந்த பிரச்சனையில் முதல்வரும்
கண்டும் காணாமலும் உள்ளார்.இந்த போராட்டத்தினால் பொது மக்களும்
பாதிக்கப்படுகின்றனர். கொஞ்சமாவது இரக்கம் காட்டி இவர்களின் சில குறைகளை அரசு
நிவர்த்தி செய்து இருக்கலாம்! இதெல்லாம் அம்மாவுக்கு நினைவு இல்லை! சினிமா
நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டார். என்ன செய்வது? விழியிழந்தோர் வழி
தெரியாது தவிக்கின்றனர்!
டிப்ஸ்! டிப்ஸ்!
குழந்தை வளர்ப்பு பற்றி
பெண்கள் மலரில் நித்யா குணசேகரன் எழுதி இருந்த சில தகவல்களை பகிர்கிறேன்!
வீட்டில் அனைவரும் விரும்பும் உணவைத்
தேர்ந்தெடுத்து அவற்றில் குழந்தைகள் விரும்பாத ஓரிரு உணவையும் சேர்த்துவிடுங்கள்
இதனால் அவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள். அதே நேரம்
அவர்களுக்கு பிடிக்காத உணவை சாப்பிட கட்டாயப்படுத்த கூடாது.
குழந்தைகள் உணவுடன் விளையாட
ஆரம்பித்தால் சத்தம் போடாமல் தட்டை எடுத்து விட வேண்டும்.
உணவு உண்ணும் நேரத்தை கல
கலப்பாக வைத்திருக்க குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஊட்டவோ சாப்பிடவோ
வைக்க வேண்டும்.
உணவு நேரங்களை ஒட்டி
நொறுக்குத்தீனிகள், பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நல்ல பசி
ஏற்பட்டு சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு பிடித்த உணவு
வகைகளில் குறைந்தது ஒரு வகையாவது அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.
உணவுக்கு பதிலாக பால் என்னும்
பழக்கத்தை மாற்ற வேண்டும். இது நல்ல உணவுப் பழக்கம் இல்லை! அதை தவிர்க்க வேண்டும்.
ஓநாயிடம் கற்ற பாடம்!
குட்டிக்கதை!
ஒரு காட்டில் சிங்கம், ஓநாய், நரி
மூன்றும் நண்பர்களாக இருந்தன. வேட்டையில்
எது கிடைத்தாலும் மூவரும் பங்கிட்டுக்
கொள்வது என்று முடிவு செய்தன. மூவரும் ஒன்றாக வேட்டைக்குச் சென்றன. மான்
ஒன்றை அடித்துக் கொன்றது சிங்கம். ஓநாயே
இந்த மானை மூன்று பங்காக பிரி என்றது சிங்கம்.
மூன்று சமமான பங்குகளாக பிரித்தது ஓநாய்.
இதைப்பார்த்து கோபம் கொண்டு
ஓநாய் மீது பாய்ந்தது சிங்கம், நீயும் நானும் சமமா? என்ன பங்கு பிரித்து
வைத்திருக்கிறாய் நீ? என்று ஓநாயைக் கொன்று போட்டது.
இப்போது நரியிடம் பாகம் பிரிக்க சொன்னது.
நரி சிறு துண்டு இறைச்சியை
மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை சிங்கத்திடம் தந்தது. மகிழ்ச்சி அடைந்த சிங்கம்,
நரியே! இந்த அளவு நியாயமாக பங்கிடும் முறையை நீ எங்கு கற்றாய்? என்று கேட்டது.
சற்று முன் தான் ஓநாயிடம் கற்றேன் நண்பா!
வலிமை உள்ளவர் பக்கமே நியாயம் உள்ளது என்ற பெரிய பாடத்தை இறந்து போன இந்த ஓநாய்
தான் கற்றுக் கொடுத்தது என்றது நரி பணிவாக!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
டிப்ஸ்கள் உட்பட கதம்பம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன் DD
கதம்ப சோறு நல்ல ருசி.
ReplyDelete