களைகட்டிய பதிவர் திருவிழாவும்! ஆதினத்தின் அடுத்த வாரிசும்! கதம்பசோறு!

கதம்ப சோறு!

வாரா வாரம் புதன் கிழமைகளில் இந்த பகுதியினை எழுதிவந்தேன்! கணிணி சதி செய்தமையால் இரண்டு வாரங்களாக எழுத முடியவில்லை! மீண்டும் இன்று முதல் கதம்ப சோறு படைக்க உள்ளேன்.


பதிவர் சந்திப்பு: இரண்டாவது ஆண்டாக சென்னையில் பதிவர் சந்திப்பு மிக பிரமாதமாக நடந்தேறியது. என்ன ஒன்று சென்னையின் வெயில் தான் பதிவர்களை பெரிதும் கடுப்பேற்றியது. கர்ச்சீப்பும் கையுமாக அனைவரும் இருந்தனர். காலை கலந்து கொள்ள முடியவில்லை! மாலையில் புத்தகவெளியீடு குறும்படம், கோவை ஆவி குழுவினரின் பாடல்,மயிலனின் கவிதை என விழா களை கட்டியது. நிறைய பெண் பதிவர்களும் உற்சாகமாக விழாவில் கலந்துகொண்டதும், பதிவர்களும் பொறுப்புணர்ந்து அவர்களிடம் மரியாதையாக பழகியதும் ஆண் பதிவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுக்களை தவிடு பொடியாக்கிவிட்டது. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த பல பதிவர்களை சந்தித்தேன். சென்னை பித்தன், கவிதைவீதி, தென்றல் சசிகலா, சேட்டைக்காரன், உள்ளிட்டோரிடம் உரையாட முடியவில்லை! நிறைய பேரில் சதிஷ் செல்லதுரையை பார்த்தும் அவரா என்று அடையாளம் தெரியாமல் பேசவில்லை! முதல் முறை இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டதால் சிறு தயக்கமும் இருந்தது. அடுத்த சந்திப்பில் இது நீங்கும் என்று நினைக்கிறேன். மதுரையில் நடத்த டி.டியும், ரமணி ஐயாவும் முனைந்து கொண்டிருந்தனர்.இறுதியில் ஈரோட்டில் நடக்கும் என்று சுரேகா அறிவித்தார். எங்கு நடந்தாலும் இன்னும் சிறப்பாக அருமையாக இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறட்டும் என்பதே என் ஆசை!

விலை குறையும் மருந்துகள்!

    உயிர் காக்கும் மருந்துகள் விசயத்தில் நம் அரசு நடந்து கொள்ளும் விதம் சரியில்லை! பல மருந்து கடைகளில், தடைசெய்யப்பட்ட மருந்துகள், காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதுடன் ஒரே மருந்துக்கு வெவ்வேறு பிராண்ட் நேமில் வெவ்வேறு விலை! மருத்துவர்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய கம்பெனியின் மருந்துகளை பரிந்துரை செய்வார்கள்.
   இந்த நிலையில்தான் மத்திய அரசு மருந்து விலைகளில் கட்டுப்பாட்டை அறிவித்து உள்ளது. வரும் வாரங்களில் சுமார் 350 முக்கிய மருந்துகளின் விலையில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மருந்து தயாரிப்பில் இருக்கும் பல்வேறு குளறுபடிகளை கலைய இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
  இந்த கட்டுப்பாட்டிற்கு சில முன்னனி மருந்து நிறுவனங்களும், மருந்து விற்பனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனராம்.சிப்லா, சன்பார்மா போன்ற நிறுவனங்கள் இந்த கட்டுப்பாட்டை எதிர்த்து இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுள்ளன. ஓமிஸ்,நோல்வடெக்ஸ், டோனக்ட் டி.ஜி, செலிகான் எக்ஸ்.எல் போன்ற மருந்துகள் விலை கணிசமாக குறைந்து உள்ளது.

ஆட்டோக்கட்டணம் அமலுக்கு வருமா?


    சென்னையில் தான் ஆட்டோக்கள் அடாவடி அதிகம் என்று பேசப்படுகிறது. அது உண்மையும் கூட இந்த நிலையில் கி.மீக்கு ரூ 25 என்றுதமிழக அரசு சென்னையில் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல புதிய நடைமுறைகளை அறிவித்தாலும் இது எத்தனை காலத்திற்கு என்று புரியவில்லை! சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் சொந்த ஆட்டோக்கள் இல்லை! ஆட்டோ ஓட்டுனர்கள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு என்று கட்ட வேண்டும். பெட்ரோல் விலை கண்டபடி ஏறிவிட்டது. மேஜிக், ஷேர் ஆட்டோ, என்று போட்டிகள் வேறு. சாலைகள் படுமோசமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் கட்டண அமல் சரியில்லை என்றே பல ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசும் இது சென்னைக்கு மட்டும் தான் மற்ற பகுதிகளுக்கு பிறகு கட்டணம் பரிந்துரைக்கப்படும் என்று சொல்லி உள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு புதுப்பெண்ணே! புதுப்பெண்ணே என்பது போல ஓரிரு வாரங்கள் அமலில் இருந்தாலே ஆச்சர்யம்தான்.

உடல் தானத்தால் உயிர் வாழும் இளைஞர்!
    கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் ராஜகோபால் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்டார். பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு செயலாளாராகவும் இவர் இருந்தார். இவரது கடைசி ஆசையின் படி இவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன. சென்னையில் ஒருநாள் படம் போல, நேற்று ஒரே நாளில் இவரது இதயம், கல்லீரல் கண்கள் அகற்றப்பட்டு வெவ்வேறு நபர்களுக்கு பொறுத்தப்பட்டது. தான் இறந்தாலும் நான்கு பேரை வாழ வைத்துள்ளார் இந்த இளைஞர். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது.

தெலுங்கானாவும் திருப்பதியும்!

    தெலுங்கானா பிரச்சனையில் யார் பாதிக்க பட்டார்களோ இல்லையோ திருப்பதி வெங்கடாசலபதி பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டார். கோடிக்கணக்காக குவியும் உண்டியல் வசூல் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகம் ஆந்திர பேருந்துகள் சரிவர இயங்காததால் போக்குவரத்து கழகங்களுக்கும் பெருத்த நஷ்டம். அது மட்டுமின்றி அன்றாட பணிகளுக்கு ஆந்திர எல்லையோரம் செல்லும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து சரிவர இல்லாமையால் பெரிதும் அல்லல் படுகின்றனர். மாநிலப் பிரிவினையை ஆதரித்து ஒரு கோஷ்டியும் எதிர்த்து ஒரு கோஷ்டியும் உருவாகி காங்கிரசிற்கும் தொல்லை! தேன் கூட்டை கலைத்த கதையாக ஆகிவிட்டது தெலுங்கானா. இதற்கிடையே ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக வேறு ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் அரசின் மெத்தனம் இந்த தெலுங்கானா பிரச்சனையில் தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ளமுடிகிறது.

ரூபாய் மதிப்பின் சரிவு!
    எப்போதும் இல்லாத வகையில் ரூபாயின் மதிப்பு சரிந்து போக காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசாக காட்சி தருகிறது. தங்கம் விலை கிர்ரென்று உயர காய்கறி, மளிகை பொருட்கள் மட்டுமின்றி மின்சாதன பொருட்கள் திடீரென உச்சத்திற்கு சென்று விட்டது. நண்பர் ஒருவர் செல்லில் வீடியோ ஒன்றை காண்பித்தார். அது ஏதோ இந்திசேனல் வீடியோ போல! மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் வளர்ந்து பெரிதாகும் ரூபாயை பிடிக்க  முடியாமல் ஓடுகின்றனர். தடுத்தாலும் மீறி ஓடும் ரூபாயை முட்டுக்கொடுத்து நிறுத்த பார்த்தும் அவர்களை கீழே தள்ளிவிட்டு ஓடுகிறது ரூபாய். இறுதியில் அது அதளபாதாளத்தில் போய் விழுகிறது. இருவரும் தலையில் கைவைத்து கொள்கின்றனர். அப்போது ரூபாய் மதிப்பு 59 ரூபாய் டாலருக்கெதிராக காட்டப்படுகிறது இன்றோ 67ஐ தாண்டி விட்டது. இந்த நிலையில் இந்தியா எப்படி மீளப்போகிறது என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

பிடித்த வாக்கியம்!
 மோகன் குமாரின் வெற்றிக் கோடுகளில் படித்தது.
   நடந்ததை மாற்ற கடவுளால் கூட முடியாது! சின்ன வாக்கியம்தான் உணர்த்தும் கருத்தோ உயர்வானது!

வீட்டுக்குறிப்புக்கள்!

  கீரை வாங்கும்போது இலை பெரிதாக உள்ளதாகவும் ஓட்டை இல்லாததாகவும் வாங்குவீர்கள். இவை அதிக உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போட்டு வளர்த்தவையாக இருக்கும். இலைகள் சிறுத்து சிறு ஓட்டைகள் இருந்தால் அதில் அதிகம் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டிருக்காது. இவை பக்க விளைவை ஏற்படுத்தாது.

தட்டை செய்யும் போது மாவுடன் சிறிதளவு பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.

மூட்டுத்தேய்மானம் எண்ணெய் பசைக் குறைவினால் ஏற்படுகிறது. ஷாம்பு குளியல் வந்த பிறகு எண்ணெய் ஸ்நானம் குறைந்து போனதே காரணம். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் தேய்மான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

 வெள்ளி ஆபரணங்களை ஒருநாள் முழுவதும் மோரில் ஊறவைத்து கழுவினால் புதியது போல பளிச்சிடும்.

மழைக்காலங்களில் வரும் சேற்றுப்புண்ணுக்கு உளுத்தம் மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து பூசி வர ஒருவாரத்தில் நிவாரணம் கிடைக்கும்.

வசம்பு, ரோஜா இதழ்,வெட்டிவேர், கோரைக்கிழங்கு இவற்றை100கிராம் வீதம் வாங்கி ஒரு கிலோ பச்சைப்பயிறுடன் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். குளியல் சோப்பிற்கு பதில் பயன்படுத்தினால் வியர்வை நாற்றம் வராது. சருமம் மிருதுவாகும்.


ஆதீனத்தின் வாரிசு யார்? குட்டிக்கதை!


திருக்கயிலாய பரம்பரை, செவ்வூர் ஆதீனம், சைவ சிகாமணி சம்பந்தசுவாமிகள் மரணத்தறுவாயில் இருந்தார். அவரை வழியனுப்புவதற்காக சிஷ்யர்களெல்லாம் கூடியிருந்தார்கள்.
  ஒவ்வொரு சிஷ்யனும் சம்பந்த சுவாமிகளை புகழ்ந்து பேசினார்கள். சுவாமிகளைப் போல ஆண்மையை அடக்கி கடும் விரதம் இருந்து நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழக் கூடியவனே அடுத்த பட்டத்திற்கு வர வேண்டும்.என்று ஒவ்வொரு சிஷ்யனும் பேசினான்.
  அவரைப்போல எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் யார்?
’நாந்தான்! என்று கத்தினான் சிஷ்யன் ராமாணந்த சாமி!
  இல்லை இல்லை! நாந்தான்! என்று கத்தினான் சிஷ்யன் சூடாமணி சுவாமி!
இல்லை! இல்லை! நானேதான் என்றான் சிஷ்யன் பிரம்மானந்த சுவாமி!
 உஸ்! சத்தம் போடாதீர்கள். சூடாமணி சுவாமிதான் அதற்கு லாயக்கானவன் என்றார் சாகக் கிடந்த சம்பந்த சுவாமி!
  எப்படிச் சொல்கிறீர்கள்? என்று ஓலமிட்டார்கள் மற்ற சிஷ்யர்கள்.
  அவன் தான் என் மகன்! என்று கூச்சலிட்ட சம்பந்த சுவாமிகள் ஆவி பிரிந்தது.
                கண்ணதாசனின் குட்டிக் கதைகளில் இருந்து!


 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வீட்டுக்குறிப்புக்கள் பயனுள்ளவை... கதம்பம் அருமை... குட்டிக் கதை சூப்பர்...

    தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எத்தனை எத்தனை அரிய பயனுள்ள செய்திகளைத்
    தாங்கி வருகிறது தங்கள் கதம்ப சோறு பகுதி.
    தொடர்ந்து வெளியிடுகள். நன்றி !

    ReplyDelete
  3. கலக்கல் "கத"ம்பாசோறு ...!

    ReplyDelete
  4. கதம்பச் சுவை அருமை
    சுவைத்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கதம்பம் நன்றாக இருக்கு...

    ReplyDelete
  6. கதம்பமாலை மணம் பரப்புகிறது....!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2