முன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்!

முன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்!

புரட்டாசி மாத அமாவாசை தினத்திற்கு முன் வரும் பவுர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை கழித்த பிரதமை வரை வரும் 15 தினங்கள்( சில சமயம் 16 தினங்கள்) மஹாளய பட்சம் எனப்படும். நம்மை விட்டு பிரிந்த பிதுர்கள், முன்னோர்கள் ஆத்மா இந்த பதினைந்து தினங்களிலும் நமது இல்லம் வந்து தங்கும் என்பது நம்பிக்கை! இந்த தினங்களில் பிதுர்களுக்கு உரிய தர்ப்பணங்கள், தானங்கள் செய்து வழிபடுவதால் நம் பிதுர் தோஷங்கள் நீங்குவதோடு வீட்டில் சுபிட்சமும் நிலவும்.
    பொதுவாக மாதம் தோறும் அமாவாசை தினத்திலும் மாதப்பிறப்பிலும், தட்சிணாயினம், உத்தராயினம் புண்ய காலத்திலும் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிதுர்களுக்கு வருடத்தில் ஷண்ணவதி எனும் 96 வகையான தர்ப்பணங்களை வருடம் முழுவதும் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் இதனால் திருப்தி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
     இன்றைய இயந்திர உலகில் உயிரோடு இருக்கும் பெற்றோர்களையே சரிவர கவனிப்பது இல்லை! இறந்த பிறகு எங்கு கவனிக்கிறோம். இறுதிச் சடங்கு செய்வதோடு காரியம் முடிந்து விடுகிறது என்று கைதட்டி சென்றுவிடுகிறார்கள். இதனால் பிதுர்கள் கோபம் உண்டாகி குடும்பத்தில் குழப்பம், பிள்ளைப்பேறு இன்மை, குறையுள்ள பிள்ளை பிறப்பது, பணக்கஷ்டம், நிம்மதியின்மை போன்ற கஷ்டங்களை கொடுக்கிறார்கள். இவையே ஜாதகத்தில் பிதுர் தோஷம் என்றும் சொல்லப்பட்டு அதற்கான பரிகாரங்கள் செய்யச் சொல்லுவார்கள்.
    இத்தகைய பிதுர் தோஷத்தை மிக சுலபமாக போக்கிக் கொள்ள வழி ஒன்று உள்ளது. அதுதான் மஹாளய பட்ச தர்ப்பணம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை பிரதமை வரை 15 தினங்கள் தினம் தோறும் ஒரு பொழுது இருந்து பிதுர்களை நினைத்து அவர் பெயர் கூறி தர்ப்பணங்கள் செய்து வரின் பிதுர் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
   பிதுர்கள் எனும் நம் முன்னோர்கள் இந்த பதினைந்து தினங்களில் கூட்டமாக பூமிக்கு வந்துவிடுகின்றனர். தங்கள் சந்ததியினர் தங்களை நினைத்து பார்க்கின்றனரா? என்று அவர்கள் நமது இல்லங்களில் வந்து சோதிக்கின்றனர். இந்த பதினைந்து தினங்களில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது மிகவும் மகிழ்ந்து திருப்தி அடைந்து நமக்கு நன்மை செய்கின்றனர்.
    இதற்கெல்லாம் நிறைய செலவு ஆகுமே! என்று நினைக்க வேண்டாம்! எனக்கு நேரமே இல்லை! இதில் எங்கு தர்ப்பணம் செய்வது என்று ஒதுக்க வேண்டாம். நம் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வது நமது கடமை! கடமையை ஒழுங்காக செய்யாவிடில் தண்டணை அனுபவித்தே தீர வேண்டும். சில ஆயிரங்களோ சில நூறோ முன்னோர்களுக்காக செலவழிப்பதால் ஒன்றும் குறைந்து விடப்போவது இல்லை! சொல்லப்போனால் இதனால் பிதுர்களின் ஆசிர்வாதம் கிடைத்து நல்ல வளமே கிடைக்கும்.

    தர்ப்பணம் என்றால் என்ன?
       பிதுர்களை திருப்தி படுத்த செய்வது தர்பணம் ஆகும். உயிரை விட்டு ஆத்மாவாக இருக்கும் முன்னோர்களுக்கு தீராத தாகமும் பசியும் இருக்கும். பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் தாகத்தை தணிக்க எள் ஜலம் விடுவதுதான் தர்ப்பணம். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வது, காக்கைக்கு சோறிடுவது போன்றவை அவர்களின் பசியை போக்கும்.
     அவரவர் வசதிப்படியும், முறைப்படியும் தர்ப்பணம் செய்யலாம். அந்தணர்களை அழைத்து தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம்.  முடியாதவர்கள் நதிக்கரைகள், குளக்கரைகளுக்கு சென்று அங்கே இருக்கும் அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடிய வில்லை எனில் நம் முன்னோர்கள் பெயரைச் சொல்லி சிறு எள்ளை நீரில் சேர்த்து விடலாம். ஒரு பிடி எள்ளை (100கிராம்) தானமாக வழங்கலாம். அல்லது முன்னோர்களை நினைத்து பசுவை வலம் வந்து வணங்கலாம்.
    இதுவும் முடியாது என்பவர்கள் வெட்ட வெளியில் நின்று சூரிய நமஸ்காரம் செய்து முன்னோர்களை நினைத்து வணங்கலாம். மஹாளய பட்ச பதினைந்து தினங்களிலும் இவ்வாறு செய்ய வேண்டும் இயலாதவர்கள், தன் பெற்றோர்களின் திதி, மஹாபரணி, அமாவாசை, அஷ்டமி, சதுர்தசி, பிரதமை போன்ற தினங்களில் செய்யலாம். இதெல்லாம் முடியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றாவது தர்ப்பணம் செய்து வழிபடலாம்.
   இந்த பதினைந்து தினங்களில் செய்யும் தர்ப்பணங்களுக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.
முதல் நாள் பிரதமை பணம் சேரும்
இரண்டாம் நாள் துவிதியை  ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
மூன்றாம் நாள் திரிதியை   நினைத்தது நிறைவேறும்
4ம் நாள் சதுர்த்தி  பகைவரிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் பஞ்சமி    வீடு நிலம் வாங்குதல்
6ம் நாள் சஷ்டி  புகழ் கிடைத்தல்
7ம் நாள் சப்தமி   சிறந்த பதவி கிடைத்தல்
8ம் நாள்  அஷ்டமி  அறிவாற்றல் கிடைத்தல்
9ம் நாள் நவமி    சிறந்த வாழ்க்கைத்துணை, கிடைக்கும்
10 நாள்  தசமி    நீண்ட நாள் ஆசை  நிறைவேறுதல்
11 ம் நாள்  ஏகாதசி     படிப்பு விளையாட்டு, கலை வளர்ச்சி
 12ம் நாள்  துவாதசி     தங்க நகை சேர்தல்
13ம் நாள்   திரயோதசி    தீர்க்காயுள், ஆரோக்கியம், விவசாய அபிவிருத்தி
14ம் நாள் சதுர்தசி      பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை
15ம் நாள் அமாவாசை    முன் சொன்ன அனைத்து பலன்களும் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

ச்ரார்த்தம் என்றால் சிரத்தையோடு செய்வது என்பது பொருள்! நம் பிதுர்களுக்கு திருப்தி உண்டாக சிரத்தையோடு இதை செய்ய வேண்டும். இந்த மஹாளய பட்சத்தில் நம் பிதுர்களின் திதியன்று தர்ப்பணத்தோடு சிரார்த்தமும் வசதி உள்ளவர்கள் செய்யலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 22 கி மீ தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது இங்கிருந்து பிரியும் சாலையில் கூத்தனூர் சென்று அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். இங்கு இராம பிரான் பூஜித்த பிதுர் லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மஹாளய பட்சத்தில் தரிசித்து வழிபடுவது சிறப்பு.

   இராமேஸ்வரம், தனுஷ் கோடி, போன்ற புண்ணிய தலங்களை வழிபடுதல் சிறப்பு.
திருவள்ளூர் வீரராகவர் சுவாமியை தரிசிப்பதும் அங்குள்ள குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வதும் சிறப்பு ஆகும்.
 இத்தகைய நல்ல பலன்கள் அளிக்கும் மஹாளய பட்ச விரதத்தை அனுஷ்டித்து பிதுர்களின் ஆசி பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. மிக மிக அருமையானத் தகவல்களை விரிவாக வழங்கிடும்
    ஓர் சிறந்த தளம் உங்கள் தளம் என்றால் அது
    மிகையாகாது.

    ReplyDelete
  2. விரிவான விளக்கங்கள்... தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தகவல் .
    பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள் நன்றி நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2