உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 27
சென்ற வாரம் இந்த பகுதியை
நிறுத்திவிடலாமா என்று கேட்டமைக்கு முரளிதரன், மற்றும் திண்டுக்கல் தனபாலன்,
மற்றும் சிலர் நிறுத்த வேண்டாம் தொடருங்கள் என்று சொல்லியிருந்தனர். எனக்கும் இதை
நிறுத்த வேண்டாம் அவ்வப்போது சிறு இடைவெளி விட்டுத் தொடரலாம் என்றே எண்ணம்.
இந்த தொடர் ஆரம்பித்த புதிதில் சில ஆங்கில கலைச்சொற்களுக்கு
தமிழ் சொற்கள், பிறமொழி சொற்களுக்கு தமிழ் சொற்கள் என்று பார்த்தோம். பின்னர்
இலக்கணம், இலக்கியம் என்று கொஞ்சம் ஆழமாக சென்று விட்டோம். இன்று மீண்டும் கொஞ்சம்
பின்னே வந்து ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்களை கற்க இருக்கிறோம். சரி
பகுதிக்குள் நுழைவோம்.
ஆங்கிலச் சொல் தமிழ் கலைச்சொல்
1.international law அனைத்து நாட்டுச் சட்டம்
2.constitutional law அரசியல் அமைப்புச் சட்டம்
3. supreme court உச்சநீதிமன்றம்
4.High court உயர்நீதிமன்றம்
5.Writs சட்ட ஆவணங்கள்
6.sustantive Laws உரிமைச் சட்டங்கள்
7.procedureal Laws செயற்பாட்டுமுறைசட்டங்கள்
8.Indian penal code இந்திய தண்டனைச்சட்டத்தொகுப்பு
9.criminal procedure
code
குற்றவியல்செயற்பாட்டுமுறைதொகுப்பு
10.civilprocedure code உரிமையியல்செயற்பாட்டுமுறைதொகுப்பு
11.indian evidence act இந்திய சான்று சட்டம்.
12.transfer of property
act சொத்து மாற்று சட்டம்.
13.indian succession
act இந்திய வாரிசுரிமை சட்டம்.
14.court fee stamp. நீதிமன்ற கட்டண வில்லை.
இவை அனைத்தும் சட்டம்
சம்பந்தமான கலைச்சொற்கள் பத்தாம் வகுப்பு பாடநூலில் கொடுக்கப்பட்டிருந்தது. இது போன்று
ஒவ்வொரு துறைக்கும் கலைச்சொற்கள் உள்ளன. வரும் பகுதிகளில் அதைப் பார்க்கலாம்.
இனி இனிக்கும் இலக்கியத்தில்
நுழையலாம்!
எட்டுத்தொகையும் பத்துப்
பாட்டும் சங்க இலக்கிய நூல்கள்! இதில் எட்டுத்தொகை நூலில் முதலாவதாக உள்ள நூல்
நற்றிணை ”நல்” என அடைமொழியோடு போற்றப்படும் இந்த நூல் அகத்திணை நூலாகும்.
நற்றிணை நூலை பல்வேறு காலங்களில் பல்வேறு
புலவர்கள் பாடியுள்ளனர். நற்றிணை நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனோடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புண்கண்
அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.
மிளைகிழான் நல்வேட்டனார்.
பொருள். தோழியானவள் தன்
தலைமகனுக்கு கூறியதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
உழவர்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தபின்
அகன்ற அழகிய வயல்களை மறுபடி உழுவர். அப்படி உழுதபின் பனையோலைப் பெட்டிகளில் கொண்டு
சென்ற விதைகளை அந்த ஈரமுள்ள நிலத்தில் விதைத்து விட்டு காலியான பெட்டிகளில் அங்குள்ள
நீர் நிலைகளில் வாழும் பல்வேறு வகையான மீன்களை பிடித்து அடைத்து எடுத்துச்
செல்லக்கூடிய வருவாயினை உடைய மருத நிலத்து தலைவனே!
அரசால் சிறப்பு செய்யப்பெறுதலும், யானை
தேர் குதிரை முதலிய ஊர்திகளில் அரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் சிறப்பு
கிடையாது. செல்வ சிறப்பு என்பது அவர்களின் முன்வினைப் பயனே ஆகும். தன்னிடம்
அடைக்கலம் தேடி வந்த எளிமையானவர்களை கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வம்
என்று சான்றோர் சொல்வார்கள்!
இப்படி செல்வம் என்றால் என்ன என்று தோழி
தலைவனுக்கு கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.
இதை இந்த காலத்திற்கு ஏற்றமையாக பார்க்கும்
போது, பணக்காரன் என்பது பணத்தினாலும் கௌரவத்தினாலும் வருவது அல்ல! அமைச்சர்கள்
அரசியல்வாதிகள் முன்பு பகட்டாக காரிலும் இன்னும் பிற வாகனங்களில் மிடுக்காக
செல்வது அவர்களோடு உறவாடுவது செல்வமாகாது. ஏழை எளியோர்க்கு உதவுதலே செல்வமாகும்
என்று பொருள் கொள்ளலாம்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
இன்னும் பல தகவல்களோடு சந்திக்கிறேன்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இட்டு
தெரிவியுங்கள்! நன்றி!
தமிழுக்கு சிறுதொண்டு, தொடருங்கள் சுரேஷ், தொடர்கிறோம்.
ReplyDeleteசட்டவியல் கலைச் சொற்கள் அறிந்து கொண்டோம்.
ReplyDeleteநில்லாது செல்லும் பொல்லாத செல்வத்திற்கு ஈதலே
அழகு எனவும் தெரிந்து கொண்டோம். சிறப்பு.
நல்ல விளக்கம்... தொடர்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநற்றிணைப் பாடல் மிகவும் பிடித்துள்ளது அண்ணா. செல்வத்திர்க்கான விளக்கம் என்னைக் கவர்ந்து விட்டது.
ReplyDeleteஅழகான பதிவு.
மிக்க நன்றி!நல்ல எளிமையான விளக்கம்
ReplyDelete