அம்மா வாட்டரும்! பழக்க தோஷமும்! கதம்ப சோறு 5
கதம்ப சோறு
ஒரு வழியாக அத்வானியின் பிடிவாதத்தையும்
மீறி நரேந்திரமோடி பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வற்புறுத்தலால் இந்த அறிவிப்பு என்றாலும் பா.ஜ.கவில்
இவரைவிட நட்சத்திர அந்தஸ்து உள்ள தலைவர்கள் இப்போது இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும். அத்வானிக்கு வயதாகிவிட்டது. இனி பிரதமர் பதவி அவருக்கு கனவுதான்.
வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே கொஞ்ச நாள் அவரை தாஜா பண்ணி பிரதமராக இருந்து ஜென்ம
சாபல்யம் அடைந்திருக்கலாம். அப்போது கோட்டைவிட்டுவிட்டு இப்போது அழுது
புலம்புகிறார். சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால்
இப்போது பெற்றிருக்கும் சீட்டுகளை கூட பா.ஜ.க கைப்பற்றுமா என்பது கேள்விக்
குறிதான். முன்பு தீவிர இந்துத்வா! என்ற காரணத்தால் பிரதமர் பதவி வேட்பாளரில்
இருந்து அத்வானி புறந்தள்ளப்பட்டு வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால் அதே இந்துத்வா
காரணமாக இன்று மோடி பிரதமர் வேட்பாளர் ஆகியுள்ளார். இவர் நல்லவரா கெட்டவரா? என்று
ஆராய்ச்சிக்கு போனால் இருக்கிற அழுகல்களில் சுமாரான அழுகல் எதுவோ அதை
தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம்! பெரிய நிர்வாகி குஜராத்
மாநிலத்தையே சீர்திருத்தி தூக்கி நிறுத்திவிட்டார் என்றெல்லாம் இவரைப் பற்றி நிறைய
பேசுகிறார்கள். தூரத்துப் பச்சை எப்போதும் கண்ணுக்கு அழகுதான்! கிட்டே
வரும்போதுதான் உண்மை தெரியும். காங்கிரஸிற்கு நிறைய வாய்ப்புகள் தந்துவிட்ட
நிலையில் வேறு நல்ல மாற்று ஆட்சியாளர்கள் இல்லாத வகையில் சொத்தையாக இருந்தாலும்
பிஞ்சாக உள்ள இந்த கத்திரிக்காயை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்தில் பெரும்பான்மை
நடுநிலைவாதிகள் உள்ளார்கள் என்பது என் தாழ்மையான கருத்து!
ஓர் அரசு எதை செய்யக் கூடாதோ அதை செய்வதில்
தமிழக அரசுக்கு நிகர் எதுவும் இல்லை! கழக கண்மணிகளும், இரத்தத்தின் இரத்தங்களும்
மாறி மாறி ஆட்சிக்கு வந்து அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தை!
குடிப்பதை தடை செய்ய வேண்டிய அரசு குடிக்க கடைகள் திறந்து வருமானத்தை அள்ளுகிறது.
இப்போது மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீரிலும் களத்தில் குதித்து உள்ளது. பேருந்து
நிலையங்களிலும் பேருந்துகளிலும் அம்மா மினரல் வாட்டர் பத்துரூபாய் விலையில்
விற்கப்படுகிறது. மற்ற மினரல் வாட்டர்கள் இருபது ரூபாய் விற்பதால் இதற்கு ஏகப்பட்ட
கிராக்கி புகழ்ந்து வேறு பேசுகிறார்கள். உண்மையில் இது தேவையில்லாத ஒன்று
என்றுதான் நான் சொல்வேன். குடிநீர் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நல்ல
சுகாதாரமான குடிநீரை பேருந்து நிலையங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது
அரசின் கடமை. அதை வழங்காமல் தானும் ஒரு வியாபாரியாக செயல்படத்துவங்கி இருப்பது
காலத்தின் கொடுமை! கல்வி, குடிநீர், உணவு, இருப்பிடம், போன்றவைகளை கட்டமைத்து
தரவேண்டிய அரசே வியாபார நோக்கில் இறங்கிவிட்டது வேதனை! இலவசமாய் எதெல்லாம்
தரக்கூடாதோ அதெல்லாம் ஓர் அரசு தருகிறது! எதெல்லாம் தரவேண்டுமோ அதை விற்கிறது! அதை
ஒர் கூட்டம் புகழ்கிறது! இதெல்லாம் தமிழகத்தில் தான் நடக்கும்!
நாற்பது வயதை கடந்த சச்சின் தனது கடைசி
டெஸ்ட்டை இந்தியாவில் ஆட உள்ளார். இதுவரை 198 டெஸ்ட் விளையாடிய அவர் இருநூறாவது
போட்டியை தென் ஆப்ரிக்காவில் விளையாட இருந்தார். இந்திய போர்டின் அனுமதி இன்றி
தென் ஆப்ரிக்கா அட்டவனை வெளியிட்டமையால் அந்த போட்டிகளை ரத்து செய்த இந்திய
கிரிக்கெட் போர்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வருமாறு கேட்டுக் கொண்டது. சற்றே
இளைத்துப் போன வெஸ்ட் இண்டீஸ் சம்மதம் தெரிவிக்க
சச்சினின் இருநூறாவது டெஸ்ட் இந்தியாவில் நடக்க உள்ளது. இதை நடத்த மும்பை-
மற்றும் கல்கத்தா இடையே போட்டி நிலவுகிறது. சென்னையில் நடந்தால் சிறப்பாக
இருக்கும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்
காரரான சச்சினின் கிரிக்கெட் பயணம் இந்த போட்டியோடு நிறைவுறும் என்றும்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் ஆக்ரோஷமான பந்துவீச்சாலும்
நடைமுறையாலும் பரபரப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் பேசப்பட்டவர் ஸ்ரீசாந்த்.
கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர். ஐ.பி. எல் அவரையும்
விட்டு வைக்கவில்லை! போன ஐ.பி.எல் சீசனில் சூதாடியதாக பிடிபட்டவர் மீது சான்றுகள்
ருசுவானதால் அவருக்கு வாழ்நாள் தடை என்று பி.சி.சி.ஐ அறிவித்துவிட்டது. அங்கித்
சவானும் வாழ்நாள் தடை தண்டனை பெற்றார். அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும்
சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. விளையாட்டு உணர்வை
கெடுத்து பணத்தோடு விளையாடிய இவர்களுக்கு இந்த தடை கட்டாயம் வேண்டும்தான்.
ஜெத்மலானியின் வினோத வாதம்!
ராம் ஜெத்மலானி! பணத்திற்காக எப்படியும்
வாதாடும் ஓர் வக்கீல்! ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வாதாடி புகழ் பெற்றவர். இவர் தற்போது
சாமியார் ஆசாராம் பாபு விற்கு ஆதரவாக வாதாடி வருகிறார். இதில் இவர் வைத்த வாதம்
மிக கேவலமாக இருந்தது. பல பெண்கள் அமைப்புக்கள் இவரை கண்டித்து போராட்டத்தில்
குதித்துள்ளன. இது போன்ற போலி சாமியார்களுக்கு வாதாடுவதே தவறு! இந்த நிலையில் இவர்
சாமியார் மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமிக்கு ஆண்களை ஈர்க்கும் வினோத நோய்
உள்ளது! என்று வாதாடியுள்ளார் குடுகுடு ஜெத்மலானி! வயசாகிப் போனால் புத்தி
பேதலித்து போகும் போல! தனக்கு திரிநாடி சூலம் எனும் இரவில் தூங்காதிருக்கும் நோய்
உள்ளது! தன்னுடைய பெண் டாக்டர் நீனா தினமும் வந்து பரிசோதிக்க வேண்டும் என்று
கோரியுள்ளார் ஆசாராம். இது மாதிரி சாமிகளால்தான் இந்துமதமும் நல்ல சாமியார்களும்
கூட கேலிக்கு ஆளாகிறார்கள்!
கடந்த 97ல் வெங்காயம் கடுமையாக விலை
உயர்ந்து அப்போது ஆண்டவர்களை
கஷ்டப்படுத்தியது. இப்போது மீண்டும் வெங்காயம் விலை உச்சத்தில் ஏறி ஆட்சியாளர்களை
நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. டில்லியில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் என்று
விற்கிறது. சமையலுக்கு அன்றாடம் தேவையான வெங்காயத்தின் இந்த அதிகபட்ச விலை உயர்வு
சாதாரண குடிமக்களை கடுமையாக பாதித்து உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே
வெங்காய மொத்த விற்பனை சந்தை உள்ளது. அங்கு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும்
வெங்காயம் மற்ற மாநிலங்களில் அவ்வப்போது தேவைக்கேற்ப அதிகரித்து 70 முதல் 80
ரூபாய்வரை விற்கிறது இது 100 ரூபாயாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இன்னும்
பதினைந்து தினங்களில் வெங்காய விலை கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று மத்திய உணவு
அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ் நாட்டில் அம்மா வெங்காய விற்பனை
துவங்காமல் இருந்தால் சரி!
திருச்சி மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில்
வசிப்பவர் கோபாலன். வயது 65. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த 1972ல்
மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக மயிலாடுதுறையில் சேர்ந்து படிப்படியாக உயர்வு
பெற்று வணிக ஆய்வாளராக இருந்து 2006ல் பணி ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்ற
அடுத்த நாளே வழக்கம் போல அலுவலகத்திற்கு வந்த அவரைப் பார்த்து அலுவலர்கள்
வியந்தனராம். சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு இனிமேல் அரசு பென்சன்
தரப்போகிறது. அந்த பென்சனுக்காக வேலைப்
பார்க்க போகிறேன் என்று கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த அவருக்கு அதிகாரிகள்
அங்கே பணியாற்ற அனுமதி கொடுத்தனர். அவரது பணி தங்களுக்கு மிக உபயோகமாக இருப்பதாக
அலுவலகத்தினர் கூறுகின்றனர். பணியில் இருக்கும் சம்பளம் கொடுத்த அரசு ஓய்வு
பெற்றதும் பென்சன் கொடுக்கிறது. வேலை
செய்யாமல் சும்மா பெற எனக்கு மனசு ஒப்பவில்லை! அதனால் அதே வேலையை தொடர்ந்து
செய்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு வேலைக்கு வருவதில் சலிப்பில்லை. என் உடம்பில்
தெம்பு உள்ளவரை பணிக்கு வருவேன். சாகும் வரை வர ஆசைதான். அதற்கு கடவுள்தான் அருள்
புரிய வேண்டும் என்கிறார் கோபாலன். பணி நேரத்திலேயே ஒழுங்காக பணி செய்யாத அரசு
ஊழியர்களிடையே இப்படியும் ஒரு வித்தியாச மனிதர் போற்றப்பட வேண்டியவர்தானே!
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
பஜாரில் கால்குலேட்டர்
வாங்கும் போது அது சரியாக இயக்கத்தில் உள்ளதா என்று அரிய அதில் 12345679 என்ற
எண்ணை 8 ஆல் பெருக்கிப் பாருங்கள் இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல
கால்குலேட்டர் என்று அர்த்தம்! செக் பண்ணிப் பாருங்கள்!
வெயிலில் வரும் தலைவலிக்கு
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உப்பு
சேர்த்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
ரயில் டிக்கெட்டுக்களை
ரிசர்வேசன் செய்ததும் அந்த டிக்கெட்டின் பத்து இலக்க பி.என்.ஆர் நம்பரை குறித்து
வைத்துக் கொண்டால் எதிர்பாராதவிதமாக டிக்கெட் தொலைந்து போனாலும் அந்த எண்ணை கூறி
டூப்ளிகேட் டிக்கெட் வாங்க வசதியாக இருக்கும்.
செல்போனை சட்டைப்
பாக்கெட்டில் வைப்பவர்கள் அதன் முன் பகுதி வெளியில் பார்த்த மாதிரி வைத்தால்
போனில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிப்புக்களை குறைக்கலாம். பொதுவாக சட்டைப்
பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்தல் நலம்.
வெயில் பட்டு முகம்
கறுத்துவிட்டதா? சந்தனமும் தேங்காய்ப்பாலும் குழைத்து முகத்திற்கு பூச முகம்
பளபளத்து நன்றாக பளிச் சென்று இருக்கும்.
பழக்க தோஷம்!
சமையல் காரன் ஒருவன்! விதவிதமாய் ருசியாக
சமைப்பவன். ஒரு நாள் அவன் மனைவி அவனிடம் ஆசைப்பட்டு கேட்டாள். விதவிதமாய் யார்
யாருக்கோ சமைத்து போடுகிறாயே! ஒருநாள் எனக்கு சமைத்து போடேன்!
மனைவியின் ஆசைக்கு சம்மதித்த சமையல்காரன்
ஆட்டுக் கறி வாங்கி வந்து சமைக்க ஆரம்பித்தான். கறித்துண்டுகளை வெட்டிக்
கொண்டிருந்த அவன். சில கறித் துண்டுகளை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.
இதைப் பார்த்த அவன் மனைவி இந்த கறியை நாம்
சாப்பிடுவதற்குதானெ வாங்கி வந்து இருக்கிறோம்! அதில் ஏன் சில துண்டுகளை எடுத்து
மறைத்து வைக்கிறீர்கள் என்று கேட்டாள்.
தலையில் அடித்துக் கொண்ட சமையல்காரன்! பழக்க தோஷம்
மிக கொடுமையானது! நம் வீடு என்று கூட என் நினைவில் இல்லை! மறந்து போய் விட்டேன்!
என்றான்!
(படித்து ரசித்த ஒரு குட்டிக்
கதை)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அம்மா தண்ணி வியாபாரம் அநியாயம்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
aththanaiyum ...
ReplyDeletenalla pakirvu....
இப்படியும் ஒரு மனிதரா என வியக்க வைத்து
ReplyDeleteவிட்டார் திரு. கோபாலன் அவர்கள்.
அவரை மனதார வாழ்த்துவோம் நாம்.
அனைத்து பகுதிகளும் அருமை.
மக்களின் அடிப்படை தேவையான தண்ணீரையே அரசாங்கம் செய்து தராமல், அந்த தண்ணீரையே விற்பனைக்கு கொண்டு வந்த அம்மாவின் ஆட்சிக்கு ஒரு ராயல் சல்யூட்....!
ReplyDeleteகதம்பச் சோற்றின் ருசியும் மணமும்
ReplyDeleteமனம் கவர்ந்தது
குறிப்பாக கோபாலன் குறித்த தகவல்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
//மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை//
ReplyDeleteபாஸ், ஒண்ணும் கவலைப்படாதீங்க.. அது பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டது அல்ல. தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. அரசு டாஸ்மாக்கில் மிக்ஸிங்கிற்கு தண்ணீர் பற்றாக்குறையாம். அதைப் போக்க வேண்டி குடிமக்களுக்காக அரசின் உன்னதமான வெளியீடு அது.. உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே.. :-)
அந்த தண்ணிக்கு பதிலா இநத தண்ணிய குடிச்சா எல்லாருக்கும் சந்தோசம் தான்.
Deleteகதம்ப சோறு சுவையாக இருந்தது....
ReplyDeleteKasha bam super-0-super
ReplyDelete