கவிதைத் தேன்!
 காதல் மயக்கம்
குட்டிபோட்ட 
பூனையாய்
உன்னைச்சுற்றி
வந்தபோது
அதட்டி அதட்டி
விரட்டினாய்!
எட்ட முடியாத
நிலவோ என்று
விலகினால்
நெருங்கி நெருங்கி
வருகிறாய்!
கட்டிபோட முடிய வில்லை
உன் நினைவுகளை
தட்டிக்கழிக்க 
நினைத்தாலும்
எட்டிப்பார்க்கின்றன
எண்ணங்கள்!
கடலிலே மூழ்கியவனும் 
காதலிலே மூழ்கியவனும் 
மீள்வதெப்படி?
மழை!
    கவிஞர் சிகாமணி, தமிழாசிரியர்.அரசு மேனிலைப்பள்ளி சோழவரம்.
வானம் சிந்தும் 
கண்ணீர் துளிகள்!
தாகம் தீர்க்கும் 
அமுதத் தாரைகள்!
பாணம் காணம் 
தானம் செய்யும்
மோனம் இசைக்கும் 
மோனைப்பெண்ணே!
இறைவன் நீயே!
இதயம்நீயே!
உறைவாய் அணுவில் 
உயிராய் தாயே!
குடிநீர் உணவாய்
குவலயம் காக்கும்
முடிநீர் போல
முன்னேற்றம் தருவாய்!
எல்லா சக்தி 
எழுச்சி வடிவம் 
வெல்ல உன்னை
உலகில் இல்லை!
நீ மட்டும்...!
சூரியனுக்குப் பயந்து மேகங்கள்
கூடாதிருக்கிறதா?
நிலவுக்கு பயந்து நட்சத்திரங்கள்
முளைக்காதிருக்கிறதா?
பாம்பிற்கு பயந்து தவளைகள்
பாடாதிருக்கிறதா?
காக்கைக்கு பயந்து குயில்கள்
கூவாதிருக்கிறதா?
பூனைக்கு பயந்து எலிகள்
இரை தேடாதிருக்கிறதா?
இடிக்கு பயந்து மரங்கள்
வளராதிருக்கிறதா?
இருளுக்கு பயந்து ஒளி
வீசாமல் இருக்கிறதா?
வண்டிற்கு பயந்து பூக்கள்
மலராதிருக்கிறதா?
ஆனால் ஏன் நண்பா நீ
மட்டும் தோல்விகளுக்கு
பயந்து முயற்சி செய்யாமலிருக்கிறாய்?
 


 
 
Comments
Post a Comment