“நிறைவு”

 “நிறைவு”


பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. இருக்கும் முப்பது மாணவ மாணவிகள் பள்ளிச்சீருடையில் வந்திருக்க கொடிமரத்தில் கொடி தயாராக கட்டிவைக்கப்பட்டு இருந்தது. கீழே டேபிளில் காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்களின் படங்கள் மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வண்ணக்காகிதங்கள் பள்ளியைச் சுற்றி ஒட்டப்பட்டு பள்ளியே விழாக் கோலத்தில் இருந்தது.
    அது ஒரு சிறிய கிராமத்தின் துவக்கப்பள்ளி! நான் அதன் தலைமை ஆசிரியை! ஒரு காலத்தில் 200 மாணவர்களுக்கு மேல் படித்தனராம் அந்த பள்ளியில் நான் மாற்றலாகி இந்த பள்ளிக்கு வந்தபோது 40 பேரே இருந்தனர். ஆங்கிலவழிக்கல்விமோகமும் கான்வெண்ட் பள்ளிகளின் கவர்ச்சியும் மக்களை சுண்டி இழுக்க பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையே இல்லை. நாளுக்கு நாள் இருப்பவர்களும் டி.சி கேட்க இந்த வருடம் அப்படி இப்படி அலைந்து பிடித்து மாணவர்களை சேர்த்தேன்.

   அதில் இரண்டு பழங்குடி இன மாணவர்களும் உண்டு. அருகில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் அவர்களின் பெற்றோர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் பேசி அந்த மாணவர்களை சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எப்படியோ என் முயற்சியால் பிள்ளைகளை சேர்த்து முடித்து இந்த கல்வி ஆண்டை காப்பாற்றி ஆகிவிட்டது என்ற நிலையில் தான் அந்த சங்கடம் உருவாகியது.
   அடடே! நேரம் 9 ஐ நெருங்கிவிட்டதே! கிராமத்தலைவர் இன்னும் வரவில்லையே! கொடி ஏற்ற வேண்டுமே? போனை எடுத்து அவர் எண்ணுக்கு அழுத்தவும் அவரது வண்டி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
  ஒரு காலத்தில் வாத்தியார் உத்தியோகம் என்றால் அதன் மதிப்பே தனி! வேலையும் குறைவு! ராஜபோகம்தான்! நிறைய லீவு! கோடை விடுமுறை என்று எல்லாவற்றையும் அனுபவித்தார்கள் அன்றைய வாத்தியார்கள்! ஆனால் இன்றோ நிலைமையோ வேறு.
    நிறையத் தொல்லைகள்! நிறைய சங்கடங்கள்! அதுவும் தலைமை ஆசிரியர் பணி இருக்கிறதே! அது மகா கஷ்டம்! சக ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அலுவலகத்திலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஊரிலும் பெயர் எடுக்க வேண்டும். அரசு புதிது புதிதாக போடும் உத்தரவுகளை நிறைவேற்றி ஆகவேண்டும். முன்பை விட சம்பளம் அதிகம்தான்! ஆனால் பணிச்சுமையும் கூடிவிட்டது.
   முன்பு ஏதோ வந்தோம்! கொடி ஏற்றினோம் மிட்டாய் கொடுத்தோம் என்று போய் விடுவார்கள்! இன்று விழா எடுத்து போட்டோ எடுத்து பரிசு கொடுத்து நிறைய வேலைகள். இதற்கு ஊர் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் இதையெல்லாம் உணராது கூப்பிடும்போது அதுக்கென்ன டீச்சர்! வந்துடறோம்! என்பார்கள். ஆனால் வரமாட்டார்கள்! நாலு தடவை போன் செய்து நினைவு படுத்தி அவர்களை அழைத்து வந்து பேசச் சொன்னால் ஐயையோ! டீச்சர்! நானாவது பேசறதாவது! நீங்களே ஏதாவது பேசி முடிச்சிருங்க! நமக்கு ஒண்ணும் தெரியாது! என்பார்கள்.

   இதெல்லாம் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும் இன்றைய டீச்சர்களுக்கு. எப்படியோ தலைவர் வந்தார் கொடியேற்றினார். பசங்களுக்கு பரிசு கொடுத்தார். “ அப்ப நான் வரட்டுமா மேடம்?” என்றபோது சார்! ஒரு நிமிஷம்! என்றேன்.
   “என்ன டீச்சர்!”
 “முனுசாமி, தெய்வ நாயகி!  ரெண்டு பேரும் இங்க வாங்க!”
  “இவங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணுமா டீச்சர்?” தலைவர் கேட்டார்.
   “சார்! உங்களுக்கே தெரியும்! இவங்க ரெண்டுபேரும் பழங்குடி இனத்தவரோட பசங்க! இவங்க பெற்றோர் ரைஸ்மில்ல வேலை பாக்கிறாங்க!”
   “அடடே! ஆமாம்! ஆமாம்! படிக்காத குழந்தைகளே இருக்கக் கூடாது! எல்லாரையும் பள்ளிக்கூடத்துல சேர்க்கணும்னு சொல்லி இவங்களை சேர்த்தீங்க இல்லே! நினைவுக்கு வந்துருச்சு!”
   “ஆமாம் சார்! ஆனா இவங்க படிப்புக்கு தடை வந்துடுச்சு!”
“ஏன்? சரியா படிக்க மாட்டேங்கிறாங்களா?”
  “ரெண்டுபேருமே நல்லா படிக்கிறாங்க சார்! ஆனா இவங்க அப்பா அம்மா இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச மில்லுக்காரங்க கிட்ட ஏதோ கடன் வாங்கிட்டாங்களாம்! அதை கொடுக்காம நம்ம ஊர் மில்லுல வந்து சேர்ந்துட்டாங்க! இப்ப அந்த மில்லுக்காரங்க பணத்தை கொடு! இல்ல அங்க வந்து வேலை செய்யுன்னு சொல்றாங்களாம்!”
     “நியாயம்தானேம்மா! பணத்தை வாங்கிட்டு ஏமாத்தலாமா?”
“ என்ன சார் பேசறீங்க? இவங்க கிட்ட ஏதோ கொஞ்சம் பணத்தை கொடுத்து கொத்தடிமை மாதிரி நடத்தறாங்க! அவங்களுக்கு போய் பேசறீங்க?”
  “ இந்த கொத்தடிமை அது இதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா! நான் அந்தகாலத்து மனுசன்! ஒருத்தருக்கிட்ட கை நீட்டி பணத்தை வாங்கிட்டு வேலை செய்யறேன்னு ஒத்துக்கிட்டா செஞ்சுதான் ஆகனும்! இது தர்மம்! அம்புட்டுதான் எனக்குத் தெரியும்!”
    “இருக்கட்டும் சார்! ஆனா இந்த பசங்களோட படிப்பு கெட்டுப் போவதே?”
   “ அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதும்மா! ஏதோ பசங்களை சேர்க்கணும்னு சொன்னீங்க! நம்ம கண்ணுல பட்டுது! கொண்டு வந்து சேர்த்தேன்! அவ்வளவுதான்!”
   “ நீங்க அந்த மில்லு ஓனர்கிட்ட பேசி…”
   “இல்ல டீச்சரம்மா! இது நம்ம வேலை இல்லை! மன்னிச்சுக்குங்க!”
   தலைவர் கும்பிட்டு விட்டு கிளம்பி விட்டார்.
  அந்த இரண்டு மாணவர்களின் எதிர்காலம் கண் முன் வந்து நின்றது. ஏற்கனவே இரண்டு வருடங்கள் வீணடித்துவிட்டனர். இப்போது பள்ளியில் சேர்த்து ஓரளவு எழுதப் பழகி உள்ளனர். மீண்டும் பழைய இடத்திற்கு சென்றால் படிக்க முடியுமா? பள்ளியில் சேர்ப்பார்களா கேள்விக்குறிதான்.
   முனுசாமியும் தெய்வநாயகியும் அருகில் வந்து அழ ஆரம்பித்தார்கள்.  “மிஸ் எங்களை மறுபடியும் பழைய மில்லுக்கு கூட்டிட்டு போயிருவாங்களா?”
    “ அங்க போயும் அருகே உள்ள ஸ்கூல்ல படிக்கலாம்பா!”
   “ அந்த மில் ஓனர் விட மாட்டாரு மிஸ்! முன்னேயே அப்படித்தானே எங்களையும் வேலை வாங்கினாரு! நாங்கள்லாம் படிக்க கூடாதா மிஸ்!” முனுசாமி கண் கலங்கியபடியே கேட்டான்.
   பதில் சொல்ல முடியவில்லை!  வீடு திரும்பும் போது ரைஸ் மில்லில் அவர்களின் பெற்றோரை சந்தித்தேன்.
    “பழைய மில் ஓனருக்கு நீங்க எவ்ளோ பாக்கி?”
  “பாக்கி எதுவும் இல்லேம்மா! எல்லாத்தையும் வேலை செஞ்சு கழிச்சிட்டுத்தான் வந்தோம்! ஆனா அஞ்சாயிரம் தரனும்! அப்படின்னு பொய் கணக்கு எழுதி மிரட்டுறாரு!”
   “இந்த ஓனரு என்ன சொல்றாரு?”
 “இவரு ஏற்கனவே நிறைய கொடுத்திட்டாரு மேடம்! இப்ப மில்லு வேற சரியா போகலை!  அதனாலே முன்பணம் கொடுக்கத் தயங்கறாரு!”

   “நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா? முதலாளி இப்ப இருக்காரா?”
   அந்த முதலாளியிடம் பேசியதில் மில் இப்போது நட்டத்தில் போய் கொண்டிருப்பதாகவும் ஏற்கனவே இவர்களுக்கு தந்த பணத்திற்கே இன்னும் இவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கு! இன்னும் எதுவும் தர தற்போது முடியாது என்றும் சொல்லிவிட்டார்.
  “கொஞ்சம் உதவினா ரெண்டு பசங்களோட கல்வி கெடாம இருக்கும்!” நான் சொல்ல
   “ அந்த ரெண்டு பசங்களை வேலைக்கு சேர்க்காம பள்ளிக்கோடத்துக்கு நான் அனுப்பறதே பெரிய உதவிதான்!” என்றார்.
   “ சின்ன பசங்களை வேலைக்கு வெக்கறது சட்டப்படி தப்பு!”
 “இருக்கட்டுமே! எவன் சட்டப்படி நடக்கறான்! எல்லாம் பணம்தான்!” எனக்கு இப்ப இருக்கிற பணக்கஷ்டத்துக்கு இவங்களுக்கு உதவ வாய்ப்பு இல்லை! இந்த ரெண்டு பேரு படிச்சு அப்படி என்னத்தை கிழிக்க போறாங்க? ஏன் உங்க நேரத்தை வீணாக்கிட்டு இருக்கீங்க? போயி வேலையை பாருங்க!” என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டார்.
   வீட்டிற்கு சென்றதும் கூட அந்த பையன் முனுசாமி அழுதபடி கேட்டதே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு ஐயாயிரம் ரூபாய்! இருந்தால் போதும். இந்த வருடம் அவன் படித்து முடித்துவிடுவான்.  ஆனால் யாரும் உதவ மாட்டேன் என்கிறார்களே!
    ஏன் நீ உதவக் கூடாதா? என்றது மனசாட்சி.
ஆசிரியைதான்! கை நிறைய சம்பளம் வாங்குகிறேன் தான்! என் பணம் தான்! ஆனாலும்  அதில் நான் உரிமை கொண்டாட முடியுமா? கணவரிடம் கேட்க வேண்டும். அவர் சம்மதிக்க வேண்டும்? வீட்டுச் செலவுகள் ஆயிரம் இருக்கிறது. இந்த மாத பட்ஜெட்டில் துண்டு விழும். எப்படி? எப்படி?
    கணவரிடம் கேட்டால் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார். உனக்கு எதுக்கு இவ்ளோ அக்கறை? என்பார்.
 பள்ளியில் ஸ்டெந்த் குறைகிறது? என்றால் உன் சம்பளமா குறையப் போகிறது என்பார். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது?
    பலவாறு மனம் அலைபாய்ந்தது? “நாங்கள்லாம் படிக்க கூடாதா டீச்சர்?” அந்த மாணவனின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது இரவு முழுதும்.

    மறுநாள் பள்ளிக்கு செல்லும் போது ரைஸ் மில்லில் அந்த பையனின் பெற்றோரை சந்தித்து எடுத்துச் சென்ற ஐயாயிரம் ரூபாயை கொடுத்தேன். இதை பழைய முதலாளிக்கு கொடுத்திருங்க! உங்க பசங்க ஸ்கூலுக்கு வரட்டும்!  என்றேன்.
   “டீச்சர்! இதை எப்படி நாங்க திருப்பி….”
  “திருப்பித் தரமுடியாதுன்னு தெரியும்! ஏதோ என்னால முடிஞ்ச உதவி!”
  அவர்கள் நம்ப முடியமால் பார்த்துக் கொண்டிருக்க இந்த ரூபாய்க்காக வீட்டில் நடக்க போகும் போரை நினைத்து ஒரு பயம் எழும்பினாலும் அன்று சீருடையில் முனுசாமியும் தெய்வநாயகியும் பள்ளிக்குள் நுழையும் போது ஒரு நிறைவு என்னுள் எழுந்தது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சுரேஷ்! கை கொடுங்க பாஸ்! அருமையான நடை...பயிலும் ...கதை! உங்கள் "நிறைவு" னால் மனம் "நிறைந்தது"!!

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. டீச்சரால் ரெண்டு குழந்தைகளுக்கு கை கொடுக்க முடிந்தது சந்தோசம்தான் ...பெற்றோர்களுக்கு பிள்ளைகள் படிப்பில் விழிப்புணர்ச்சி உண்டாக்குவது மிக மிக முக்கியம் !அது வந்தால் மட்டுமே பிள்ளைகள் படிப்பைத் தொடர முடியும் !

    ReplyDelete
  3. மனம் நெகிழ்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் சுரேஸ்.

    இது கதை என்றாலும் இதுபோல் சம்பவங்கள் பல இடங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அரசுதான் இதற்க்கு வழிவகை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. சிறப்பாக நகருகிறது
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2