உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 69
உங்களின் தமிழ் அறிவு
எப்படி? பகுதி 69
வணக்கம் வாசக நண்பர்களே!
சென்ற வாரம் இடைச்சொல் குறித்து அறிந்து கொண்டோம் இந்த வாரம் நாம் பார்க்க
இருப்பது ஒப்புமையாக்கம்.
ஒப்புமையாக்கம் என்பது ஆங்கிலத்தில் Anology
எனப்படும். ஒன்றைப்போல செய்தல் ஒப்புமையாக்கம் எனலாம். இமிடேசன் என்று சொல்கிறோம்
அல்லவா அதுவே ஒப்புமை. ஒப்புமையாக்கம் மொழி வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது.
உதாரணமாக நான்கு கால்களை
உடைய இருக்கையை நாற்காலி என்கிறோம். இதைக் கொண்டு மூன்று கால்களை உடைய இருக்கையை
முக்காலி என்கிறோம். இது பெயர்ச்சொல் ஒப்புமையாக்கம்.
இதே போல் தொழில்பெயர்களை
ஆடுவதை ஆடல் என்றும் பாடுவதை பாடல் என்றும் சொல்கிறோம். வினைச்சொற்களில் ஆண்பால்
சொற்களை படித்தனன் என்பதை படித்தான். நடித்தனன் என்பதை நடித்தான் என்றும் ஒப்புமை
செய்கின்றோம்.
இதேபோன்று பெண்பால்
வினைச்சொற்களை ஓடினள் என்பதை ஓடினாள் என்றும் தேடினள் என்பதை தேடினாள் என
உருவாக்குகின்றோம். இப்படி ஒப்புமைப் படுத்தி சொற்களை உருவாக்கும் போது சில சமயம்
தவறாகவும் ஆகிவிடுவது உண்டு. அது தவறான ஒப்புமையாக்கமாகும்.
ஒருவன் என்ற ஆண்பால்
சொல்லுக்கு ஒருத்தி என்பதே சரியான பெண்பால் ஒப்புமையாக்க சொல்லாகும். ஒருவள் என்று
ஒப்புமை செய்யப்பட்டால் அது தவறு.
சிறுவன் – சிறுமி என்பது
சரி, சிறுவள் என்பது தவறு
இளைஞன் என்பதற்கு இளைஞி
என்று ஒப்புமைப் படுத்த படுகிறது. அது தவறாகும். இதற்கான ஒப்புமையாக்கச்சொல்
இல்லை.
வாலிபன் –வாலிபி என்பதும்
தவறாகும்.
நண்பன் – நண்பி என்பதும்
தவறாகும்.
மாணவன் –மாணவி என்பதும்
தவறு. மாணவள் அல்லது மாணாக்கி என்பதே
சரியான சொல்லாகும்.
பக்தன் – பக்தை என்பது
தவறாகும்.
வல்லவன் – வல்லவி என்பதும்
தவறாகும்.
இதேபோன்று வினைச்சொற்களில்
பயணித்தனர் என்பது
தவறாகும். பயணம் செய்தனர் என்பதே சரியானது.
புன்னகைத்தனர் என்பது
தவறு. புன்னகை செய்தனர் என்பது சரி.
முயற்சித்தனர் என்பது
தவறு. முயற்சி செய்தனர் என்பதே சரி.
இலக்கணப்படி
பெயர்ச்சொற்களில் இருந்து வினைச்சொற்கள் உருவாகாது.
இதே போல கரடு முரடு என்பது தவறு, கரடு முருடு என்பதே
சரி.
தட்பவெட்பம் என்பது தவறு
தட்ப வெப்பம் என்பதே சரி.
கோர்வை என்பது தவறு. கோவை
என்பதே சரி.
பதட்டம் என்பது தவறு
பதற்றம் என்பதே சரியானது.
சிகப்பு தவறு- சிவப்பு
சரியானது.
இவைகள் என்பது தவறு. இவை
என்பதே சரி.
வேண்டாம் என்பது தவறு.
வேண்டா என்பதே சரி.
இப்படி தவறான
ஒப்புமையாக்கம் செய்யப்பட்டு எழுதுவதால் பொருளே மாறிவிடும் அபாயமும்
ஒழுங்கின்மையும் ஏற்படும். முடிந்தவரை சொற்களை பிழையின்றி எழுதப் பழகுவோம்.
இனிக்கும் இலக்கியம்!
அகநானூறு.
திணை: முல்லை
துறை: வினைமுற்றிய தலைவன்
பாகற்கு உரைத்தது
பாடியவர்: மதுரை….
மல்லனார்.
“பசைபடு பச்சை நெய்தோய்த்
தன்ன
சேய்உயர் சினைய மாச்சிறைப்
பறவை
பகல்உறை முதுமரம் புலம்பப்
போகி
முகைவாய் திறந்த நகைவாய்
முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக்
கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும்
தண்பதக் காலை
வரினும் வாரார் ஆயினும்
ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி’
எனத்தன்
பல்இதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப
அருந்துயர் உடையள் இவள்’
என விரும்பிப்
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல்ஆர் புரவி, வல்விரைந்து,
பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!
முடிந்தன்று அம்மநாம்
முன்னிய வினையே!
விளக்கம்:
பசையுடைய தோலை நெய்யில் தோய்த்தாற்போன்ற கரிய நிறம் கொண்ட வவ்வால் பகல்பொழுதில்
தான் தங்கியிருந்த உயர்ந்த கிளைகளையுடைய முதிய மரம் தனித்திட அகன்று போகும்;
கொடியின் மீது அரும்புகள் மலர்ந்து ஒளி பொருந்திய முல்லை மலர்கள் மணமகளின்
கூந்தலைப் போன்று மணந்து வண்டின் கூட்டத்தைப் பிற இடங்களுக்கு செல்ல விடாமல்
தடுக்கும் குளிர்ந்த கார் காலம். இந்த கார் காலத்தில்
தோழியே!
நம் தலைவர் இங்கு வரினும் வாராது இருப்பினும் அவர் சென்றுள்ள இடமே அவர்க்கு இனியது
போலும்! அவர் வாழ்க! எனச் சொல்லி தன் தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்ணின் உள்
பகுதியெல்லாம் சிவக்க பொறுத்தற்கரிய துன்பத்தை உடையவள் ஆனாள் தலைவி என்று பாணன்
வந்து விரும்பி தூது கூறுகின்றான்.
தேர்ப்பாகனே!
நாம் நினைத்து வந்த வேலையும் முடிந்தது.
எனவே நீயும் புல்லை தின்று முடித்த குதிரையைப் பூட்டி நீண்ட தேரை விரைவாக
செலுத்துவாயாக! என்கிறான் தலைவன்.
கார்காலம்
முடிந்தும் தலைவர் வராது போக அவர் வந்தாலும் வராவிட்டாலும் வாழ்க! அவர் இடமே
அவர்க்கு இனியது போல என்று தன் கண் சிவக்க வருந்திய தலைவி பாணனை தூது அனுப்பினாள்.
தூது கேட்ட தலைவன் தன் தேர்ப்பாகனை விரைந்து தேரைப் பூட்டுமாறு கூறியது பாடலாக
அமைந்துள்ளது.
வவ்வால்
பறவைக்கும் முல்லை மலர்க்கும் கூறப்பட்ட உவமைகள் என்னே அழகு! அது போல தலைவியின்
சிவந்த கண்ணுக்கு செந்தாமரை மலரை ஒப்புமை செய்தது மிக அழகு!
மீண்டும்
அடுத்த பகுதியில் சந்திப்போம்!
உங்களின்
கருத்துக்களை பின்னூட்டங்களாக நிரப்பி ஊக்கம் அளியுங்கள்! நன்றி!
நல்ல விளக்கவுரை நண்பரே....
ReplyDeleteஅருமை நண்பரே அருமை
ReplyDeleteநன்றி
பயன் உள்ள பதிவு சகோ ...
ReplyDelete