உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 67

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 67


அன்பார்ந்த வாசகர்களே! வணக்கம். சென்றவாரம் உள்ளுறை உவமம் பற்றிப் படித்தோம். ஒரு செய்யுளை படிக்கும்போது அதனின் இலக்கணமும் பொருளும் அறிந்து படிக்கையில் நமக்கு திருப்தி கிடைக்கிறது. உணவை எப்படி ருசித்து உண்கிறோமோ அப்படி ஒரு செய்யுளை ரசித்து படிக்க வேண்டும். அதற்கு தேவையானவை கொஞ்சம் இலக்கண அறிவு. உள்ளுறை உவமம் பற்றி தெரிந்துகொள்ள இங்கு: உள்ளுறை உவமம்

  சற்றேறக்குறைய உள்ளுறை உவமமும் பிறிது மொழிதல் அணியும் ஒருவாரே அமைந்திருக்கும். ஆனால் உள்ளுறை உவமம் அகப்பொருள் பாட்டுக்களில் கருப்பொருட்களை கொண்டுமட்டுமே வரும். பிறிது மொழிதல் அணியோ புறப்பாடல்களில் எல்லாப் பொருட்களிலும் வரும். உள்ளுறை உவமம் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்று ஐந்து வகைப்படும். இதை அறிந்துகொண்ட பிறகு செய்யுளில் இன்னும் ஒன்று உள்ளது. அது இறைச்சி. இது உண்ணும் இறைச்சி அல்ல.

செய்யுளில் உள்ளுறை உவமத்தை மீறி மறைந்து வரும் ஒரு பொருள் இறைச்சிப்பொருள் எனப்படும்.

இறைச்சி: உள்ளுறை உவமத்தைப் போலவே அகப்பாடல்களில் தெய்வம் ஒழித்த ஏனைய கருப்பொருட்களில் வரும். உள்ளுறையில் உவமானம் மட்டும் கூறப்பட்டு அதிலிருந்து உவமேயப் பொருளை எடுத்துக் கொள்வோம். உள்ளுறை அதோடு முடிந்து போகும். ஆனால் இதற்கு மேலும் அதனோடு தொடர்புடைய ஒரு பொருள் தங்கி இருக்கும். அப்பொருளை குறிப்பாக உணரவல்லார் உணருவர். அதுவே “இறைச்சி” எனப்படும்.

   ‘இறு’ என்ற பகுதியின் அடியாக பிறந்தது இறைச்சி என்னும் சொல். தங்குதல் என்னும் பொருளை உடையது. உள்ளுறைக்கும் அப்பால் தங்கி இருக்கின்ற ஒரு பொருள் இறைச்சி ஆகும்

எடுத்துக் காட்டு:
   “பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
   நின்கிளை மருங்கிற் சேறி யாயின்
  அம்மலைக்  கிழவோர்க்கு உரைமதி இம்மலைக்
  கானக் குறவர் மடமகள்
  ஏனல் காவல் ஆயினள் எனவே”
என்ற நற்றிணைப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடலின் பொருள்:  கிளியே! பலாவாயா காய்களை காய்கின்ற பலா மரங்கள் நிறைந்த சாரலையுடைய அவர் நாட்டின் கண் உள்ள நின் சுற்றத்திடம் செல்லுவாயின், அம்மலைக்கு உரியவரிடம், இம்மலை குறவருடைய இளமகள் திணைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாள் என்பதைக் கூறுவாயாக  என சொல்லி அனுப்புகிறாள் தலைவி.

பலா மரங்கள் புதிய காய்களை காய்க்கத்தொடங்குவது போல தலைவியின் வாழ்க்கையிலும் புதிய வாழ்க்கை தொடங்கப் போகிறது என்பது உள்ளுறை ஆகும்.

இதற்கு அப்பாலும் இதில் ஒரு பொருள் நிறைந்து இருக்கின்றது அது தலைவியைக் கைவிட்ட கொடுமையை உடையவருடைய சாரலாய் இருந்தும் அச்சாரலில் உள்ள பலாமரங்கள் பிறர்க்கு பயன்படுமாறு காய்க்கின்றன இஃது வியப்பாக இருக்கிறது என்பது ஒரு பொருள்.
பலாமரங்கள் காய்ப்பதைப் கொண்டு அவன் அன்புடையவன், அவளை விரைவில் மணந்துகொள்வான் என்ற கருத்துப் பெறப்படுகின்றது. இவ்வாறு உள்ளுறைக்கு பின்னும் ஓர் கருத்து பெறப்படுவது இறைச்சிப் பொருள் எனப்படும்.

இதுபோன்ற இலக்கணங்கள் பல செய்யுள்களை படித்து அறியும்போது தெளிவாக விளங்கும். நூலகங்களில் உள்ள இலக்கியங்களை தேடி எடுத்து படித்து பாருங்கள்! தமிழின் அருமை புரியும்.
இலக்கியச்சுவை!

நற்றிணை


திணை: குறிஞ்சி

துறை: இரவுக்குறி மறுத்தது.

பாடியவர்: நல்வேட்டனார்

        நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
     பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
     தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
     யாணர் வைப்பின், கானம் என்னாய்;
     களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
     ஒளிறு வான்  பளிங்கொடு செம் பொன் மின்னும்
     கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
     கரா அம் பேணாய்; இரவரின்,
     வாழேன் – ஐய! – மை கூர் பனியே!

விளக்கம்: ஐய!, நெடிய  தண்ணிய சந்தன மரத்தின் கிளைகளிலே பசிய நிறம் பொருந்திய இலையையுடைய நறிய தமாலக் கொடி சுற்றியிருக்கும். இனிய தேன் எடுப்பவர் அதை வளைத்து அறுத்துக்  கொண்டு செல்வர். அப்படிப்பட்ட கானகத்தில் யானைகள் தம்முள் போர் செய்தமையால் ஏற்பட்ட பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழமான கரைகளை உடைய ஆற்றில் வெள்ளிபோன்று மின்னும் பளிங்கு கற்களும் சிவந்த பொன்னும் மின்னும். அந்த ஆற்றில் உள்ள கரிய பாறைகளில் நீர்ச்சுழிகளில் ஓடும் முதலைகள் சுற்றித் திரியும். இவற்றையெல்லாம் கருதாமல், பேணாமல் நீ இரவில் இங்கு வந்தால் யான் இனி உயிர் வாழ மாட்டேன். இருள் நிரம்பிய பனிக்காலத்தில் தனித்தும் வாழமாட்டேன்.

குறிஞ்சி நிலத் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். தலைவன் நெடும் தொலைவில் இருந்து பல்வேறு அபாயங்களை தாண்டி இரவில் வந்து தலைவியை சந்திக்கின்றான். நாள்தோறும் இது நடக்கிறது. தலைவனுக்கு என்ன அபாயம் நேர்ப்படுமோ என்று தலைவி வருந்துகின்றாள். இதையெல்லாம் கருதாது தலைவன் தொடர்ந்து இரவில் வந்தால் தோழி இறந்துவிடுவேன் பனிமிகுந்த காலத்தில் தனித்து வாழமாட்டேன் என்கின்றாள்.

தேனெடுக்க செல்வோரால் தமாலம் என்ற கொடி பாதிக்கப்படும். அது போல தலைவியை நாடிச்செல்லும் தலைவனால் தோழியின் வாழ்வு பாதிக்கப்படும். இது உள்ளுறை.

இறைச்சி: தலைவியின் நலனை விரும்புவாயின் தலைவியை விரைந்து மணந்து கொள்வாயாக என்பது இறைச்சிப்பொருள்

 தேன் எடுப்பதால் சந்தன மரத்தின் வாழ்வு அதிகரிக்கிறது. அது போல தலைவியை மணந்துகொள்வதால் தலைவியின் கவலை நீங்குகிறது. தலைவி நலமாக இருந்தால் தோழியும் நலமாக இருப்பாள்.

       அருமையான உவமை, உள்ளுறை, இறைச்சி அமைந்துள்ளதை ரசித்திருப்பீர்கள்!

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் பின்னூட்டங்கள் எங்களை ஊக்கப்படுத்தும்! நன்றி!

மேலும் தொடர்புடைய இடுகைகள்:

Comments

  1. சிறந்த தமிழ் விளக்கம்
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2