இலங்கையின் சில்லுண்டித்தனமும் இணைந்த கட்சிகளும்! கதம்ப சோறு! பகுதி 47
கதம்ப சோறு!
இலங்கையின் சில்லுண்டித் தனம்!
ஒருவர் மீது என்னதான் வெறுப்பு
என்றாலும் அவரை படுகேவலமாக பொதுவில் விமரிசிப்பது அநாகரீகம். அநாகரீகத்தின் மொத்த
அங்கமாக உருவெடுத்து உள்ளது இலங்கை. முன்பே தமிழக முதல்வரை கேவலமாக சித்தரித்து
ஒரு கார்டூன் வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது. இப்போது தமிழக மீனவர்கள்
கச்சத்தீவு பிரச்சனை குறித்து முதல்வர் ஜெ. மோடிக்கு எழுதும் கடிதங்களைப் பற்றி
அநாகரீகமாக தனது அரசு இணையதளத்தில் எழுதி வெளியிட்டு பலத்த எதிர்ப்பை சந்தித்தது
இலங்கை. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் பாகுபாடில்லாமல் இலங்கையில் இந்த செயலை
கண்டித்தன. குறிப்பாக கலைஞர் அவர்கள் இலங்கை அரசின் இந்த கீழ்த்தரமான செயலைக்
கண்டித்து இலங்கை மன்னிப்புக் கோரவேண்டும் என்று முதலில் அறிக்கை விடுத்தார். இது
வரவேற்கத் தக்க ஒன்று. ஜெ. எப்பொழுதும் கலைஞரை பெயரைச்சொல்லி விமரிசிப்பார். ஆனால்
கலைஞரோ அம்மையார் என்றுவிளிப்பார். அதையெல்லாம் மறந்து தமிழக முதல்வர் மற்றும்
இந்தியப் பிரதமர் பற்றி அவதூறான செய்தி என்று தெரிந்ததும் விரைந்து எதிர்ப்புத்
தெரிவித்தது நாகரீகமான ஒன்று. இது போன்று தமிழக நலன் கோரும் பிரச்சனைகளில் அனைத்து
கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுமானால் தீர்வு நல்லபடியாக அமையும். அது நீண்டநாள்
கனவாகவே உள்ளது. இனியாவது நினைவானால் சரிதான்.
காஸா கலவரங்கள்!
இணையத்திலும் செய்தித் தாள்களிலும் காஸாவில்
நடக்கும் தாக்குதல்களை பார்த்தும் படித்தும் மனமே கல்லாகிவிட்டது. சிறு
பிஞ்சுகளைக் கூட விட்டுவைக்கவில்லை கலவரக்காரர்கள். அப்படி ஒரு கொடூரமான
தாக்குதல். உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. ஒருமாதத்திற்கும் அதிகமாக நடந்து வரும் இந்த அநியாயத்தை உலக
நாடுகள் வேடிக்கை பார்க்கின்றனவே ஒழிய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை! உலக
காவல்காரனான அமெரிக்காவும் இரட்டைவேடம் போடுகிறது. அமெரிக்காவின் ரப்பர் ஸ்டாம்ப்
ஆன ஐ.நாவும் இதில் பெரிதாக ஒன்றையும் சாதித்துவிடவில்லை! அன்றைய முள்ளிவாய்க்கால்
மரணங்கள் போலவே இன்றைய காஸா கலவரங்களும்!
நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை! இதயமே இல்லாத
கலவரக்காரர்களால் கொன்றுகுவிக்கப்படும் பிஞ்சுகளின் புகைப்படங்களை இணையத்தில்
பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும் நம் கையாலாகாத
நிலைமையை என்ன செய்வது?
காமன் வெல்த் போட்டிகள்!
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன் வெல்த்
போட்டிகளில் இந்திய அணி இம்முறை ஐந்தாவது இடம்பெற்று ஆறுதல் அடைந்தது. சென்ற
போட்டியில் இரண்டாவதாக வந்த இந்தியா நூறுக்கும் அதிகமான பதக்கம் வென்றது. இம்முறை
பதக்க எண்ணிக்கை குறைந்தாலும் எதிர்கால வீரர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
குறிப்பாக வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டி
விட்டார். இன்னும் சில தமிழக வீரர்களும் பதக்கம் வென்றது சிறப்பு. ஸ்குவாஷ்
போட்டியிலும் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட
ஹாக்கி போட்டியில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்ததில் வெள்ளிதான்
கிடைத்தது. இந்த முறை மல்யுத்த போட்டியில் மொத்தம் 5 தங்கம் கிடைத்தது. தடகளப்
போட்டியில் விகாஸ் கவுடா வட்டு எறிதலில் தங்கம் வென்று 52 ஆண்டுகளுக்குப் பின்
காமன் வெல்த் தடகளத்தில் தங்கம் வென்று சாதனைப்படைத்தார். சென்றவருடத்தைவிட
பதக்கம் குறைவு என்றாலும் இந்தியர்களின்
பங்கேற்பு மிக நிறைவாக இருந்தது.
கோழி கொத்தி இறந்த குழந்தை!
தெலுங்கானாவில் ஓர் விவசாயக் குடும்பத்தில் 8
மாத குழந்தை ஒன்று கோழி தலையில் குத்தியதால் காயமடைந்து சிகிச்சைபலனின்றி இறந்து
போனது. விவசாயக் குடும்பமான அந்த குடும்பத்தில் ஆடு மாடு கோழி வளர்க்கின்றனர்.
சம்பவத்தன்று குழந்தையின் தாய்
சமையல்கட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ஜானவி தரையில் விளையாடிக்கொண்டிருந்தது.
திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த குழந்தையின் தாய் குழந்தையின் தலையில்
ரத்தம் வடிவதை பார்த்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரண்டு நாள் தீவிர
சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்து போனது. விசாரணையில் குழந்தையில்
தலையில் அவ்வீட்டில் வளர்க்கப்படும் கோழி பலமாக குத்தியது தெரியவந்துள்ளது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பது தவறில்லைதான். ஆனால் அவற்றிடம் நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். பூனை, நாய், ஆடு, மாடு, கோழி எதுவென்றாலும் கொஞ்சம் எச்சரிக்கை
உணர்வுடனே பழக வேண்டும். இந்த செல்லப்பிராணிகள் மூலம் நோய்த் தொற்றும் ஏற்படும்.
இவை எப்போது எந்த மூடில் இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக நமது
குழந்தைகளை தனியாக பிராணிகளுடன் விளையாட அனுமதிக்க கூடாது.
கிச்சன் கார்னர்:
ஆலு பஞ்சதாங்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு
கால்கிலோ, பெரியவெங்காயம் 1 சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு -6 பல்
பஜ்ஜிமாவு, மிளகாய்த் தூள்,
உப்பு, எண்ணெய், தேவையான அளவு.
செய்முறை: உருளைக் கிழங்கை
நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், சீரகம்,
மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். பின்னர்
இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். பஜ்ஜி மாவுடன் தேவையான
அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி
ரெடியாக வைத்துள்ள உருண்டைகளை பஜ்ஜிமாவில் முக்கி நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு
சிவக்க பொரித்து எடுக்கவும்.
பாண்டிச்சேரி ஸ்பெஷல்
ரெசிபியாம் இது.
(தீபா பாலச்சந்தர் குமுதம்
சிநேகிதியில் எழுதிய ரெசிபி இது.)
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
கேஸ் சிலிண்டர்
வைக்குமிடத்தில் டைல்ஸ்மீது துருக்கறை படியாமல் இருக்க கீழே ஒரு மிதியடி போட்டு
வைக்கலாம். அல்லது கோலஸ்டிக்கர் ஒட்டி வைக்கலாம்.
துளசி இலையை வெயிலில் காயவைத்து
பொடி செய்து டீத்தூளில் சேர்த்து கலந்து டீ தயாரித்து குடித்தால் நன்றாக பசி
எடுக்கும். கபம் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
பழைய புடவைகளை வீணாக்காமல்
நான்கு அல்லது ஐந்து புடவைகளை ஒன்றாக சேர்த்து தைத்தால், படுப்பதற்கு அருமையான
‘ரஸாய்’ கிடைக்கும்.
மண்பானை வாங்கும் போது
கைகளால் உள்ளே வருடிப்பார்த்து வாங்கவும். மண் முரடாக அதிக சொரசொரப்பின்றி
இருக்கும்படி வாங்கினால் நீர் கசியாமல் இருக்கும்.
ஸ்வாமி படங்களுக்கு பூ
வைக்கும் போது விழுந்துவிடுகிறதா? கடைகளில் கிடைக்கும் சிறிய ஒட்டும் ஊக்குகளை
படத்தின் இருபுறமும் ஒட்டிவைத்தால் பூ வைக்கவும் மாலை போடவும் வசதியாக இருக்கும்.
கால் நகங்களில் அழுக்கு, மண்
புகுந்துவிட்டதா? வாய் துர்நாற்றத்தை தடுக்கும் லிஸ்டரினில் கால் நகத்தை
ஊறவைத்தால் கால் நகம் சுத்தமாகிவிடும்.
புக்ஸ் கார்னர்!
இந்த வாரமும் புத்தகங்கள் எதையும் படிக்க முடியவில்லை!
உடல்நலம் சீராக இல்லை! அதே சமயம் வேளைப்பளு அதிகம். கிடைத்த இடைவெளியில் தினசரிகள்
வார இதழ்களை அவ்வப்போது மேய்வேன். அதில் என்னை கவர்ந்த சிலவற்றை பகிர்ந்து
கொள்கின்றேன்.
தமிழ் இந்து நாளிதழில் சமஸ் எழுதும் நீர், நிலம், வனம் என்ற தொடரில் கடலோடிகளின்
வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அந்தக் கால தனுஷ்கோடியை பற்றி
விவரித்து எழுதிய அவரது கட்டுரை வருங்கால சந்ததிகளுக்கு ஓர் பொக்கிஷம். மீனவர்களின்
படகுகளின் வகைகள், கடலில் செல்லும் போது எப்படி திசை காண்கிறார்கள். காற்றை எப்படி
வகைப்படுத்துகிறார்கள்? என்று மீனவர்கள் வாழும் பகுதிக்கே சென்று செய்தி சேகரித்து
நாம் படிக்கும் வகையில் சுவாரஸ்யமாகத் தருகிறார். இந்து இதழில் நான் தொடர்ந்து
வாசித்து வரும் கட்டுரை இது! வாய்ப்பு
கிடைத்தால் நீங்களும் வாசியுங்கள்! இணையத்திலும் வெளிவருகிறது.
அதே போல
தினமலர் இதழில் கிடைத்த இன்னொரு செய்தியும் என்னை ஆச்சர்யத்தில் மட்டுமல்ல
பிரமிப்பில் ஆழ்த்தியது. ராஜேந்திர சோழன் காலத்திய நாணயங்கள் பற்றிய செய்தி அது.
இன்று போல் அன்று தொழில் நுட்பம் வளராத
காலத்தில் தங்க வெள்ளி நாணயங்கள் அச்சடித்து அதில் சின்னங்கள் பொறித்து தனது
பெயரையும் பொறித்து வெளியிட்டுள்ளான் ராஜேந்திர சோழன். பிற்காலத்தில் பொன் வெள்ளிக்கு தட்டுப்பாடு
ஏற்பட்ட சமயம் செப்பு மீது வெள்ளி முலாம், வெள்ளிமீது தங்க முலாம் பூசி நாணயங்களை
வெளியிட்டுள்ளான். இன்றைய நாணயங்கள் சில வருடங்களிலேயே பல்லிளிக்கையில் அந்த நாணயங்கள்
இன்றும் முலாம் மங்காமல் பளிச்சிடுகிறதாம். தொழில்நுட்பம் வளராத காலத்தில் இத்தகைய
நாணயங்களை அச்சிட்ட ராஜேந்திர சோழனை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இவர்களைத் தெரிந்து கொள்வோம்!
எவ்வளோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காம ஊர் சுற்றும் பிள்ளைகள் இருக்கையில் அடுக்கடுக்கான துன்பங்கள் துரத்தியும் கல்வியை துரத்திச்சென்று படிக்கிறார் இந்த மாணவி. குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கீரை விற்கிறார் இவர். இவரை பற்றி தெரிந்து கொள்வதோடு உதவவும் செய்யலாமே!
படிச்சதில் பிடிச்சது!
எதிரிக்கும் நன்மை
(தவமணி கோவிந்த ராஜன்)
கல்கத்தாவில் நடந்த ஒரு பண்டிகையில் ராமகிருஷ்ண
பரமஹம்சர் கலந்துகொண்டார். குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 1000 லட்டுகள் தயார்
செய்யப்பட்டு ஓரிடத்தில் தட்டுக்களில் வைக்கப்பட்டிருந்தன.
எதிர்பாராத விதமாய் அந்த லட்டுக்களை எறும்புகள்
சூழ்ந்துகொண்டன. பலரும் பலவிதமான ஆலோசனைகளை கூறத்தொடங்கினர். சிலர் லட்டுத் தட்டை
எடுத்து வெயிலில் வைக்க ஆலோசனை கூறினர். சிலரோ எறும்புப் பொடியை தூவலாம் என்றனர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரோ அவர்களை எல்லாம்
கையமர்த்தி லட்டுகள் வைக்கப்பட்டுள்ள தட்டுக்களை சுற்றிச் சர்க்கரையைத் தூவச்சொன்னார்.
எறும்புகள் இடம்பெயர்ந்து சர்க்கரையைத் தேடிப்போய் தின்னத் துவங்கின.
“ எப்போதும் எதிரிகளையும் வாழவைத்து நாமும் வாழ
வேண்டும். எதிரிகளை அழித்து நாம் வாழும் சிந்தனை கூடாது” என்றார் ராமகிருஷ்ணர்.
(தி இந்துவில் வரும் ஆனந்த ஜோதி இணைப்பில்
படித்தது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்.நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteசில படித்திராத செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteகிச்சன் கார்னர் - பேர் எல்லாம் புதுசு, புதுசா இருக்கு.
உண்மையை சொல்லப்போனா, ஏழைக் குழந்தைகளுக்கு தான் படிப்பின் முக்கியத்துவம் மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகமாக தெரிகிறது.
"//எப்போதும் எதிரிகளையும் வாழவைத்து நாமும் வாழ வேண்டும். எதிரிகளை அழித்து நாம் வாழும் சிந்தனை கூடாது” என்றார் ராமகிருஷ்ணர்.//"
- அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சிந்தனை.
ராமகிருஷ்ணரின் போதனைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்தமானவை. நன்றி நண்பரே...
ReplyDeleteசில நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை நண்பரே
ReplyDeleteஇப்பொழுதுதான் சரியாகி இருக்கிறது
தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன்
இனி தொடர்வேன் நண்பரே
கதம்பச் சோறு அருமை #குழந்தைகளை தனியாக பிராணிகளுடன் விளையாட அனுமதிக்க கூடாது# பெற்றோர்களுக்கு நல்ல எச்சரிக்கை !.
ReplyDeleteகடைசியில் சொன்ன இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை மிக அருமை
ReplyDeleteபழைய புடவைகளை வீணாக்காமல் நான்கு அல்லது ஐந்து புடவைகளை ஒன்றாக சேர்த்து தைத்தால், படுப்பதற்கு அருமையான ‘ரஸாய்’ கிடைக்கும்//
ReplyDeleteசிவகாசி, மதுரையில் எல்லாம் எல்லோர் வீடுகளிலும் துணி மெத்தை இருக்கும். குளிர் காலத்தில் ரஜாய் மாதிரி இருக்கும்.
பழைய புடவைகள் உள்ளே வைத்து வெளிப்பக்கம் அழகான் துணிக் கொடுத்து தைத்து தருவார்கள் புது மண்டபத்தில்.(ம்துரை)
பகிர்வு அனைத்தும் அருமை.
எல்லாமே அருமை...டாப் என்றால் ராமகிருழ்ண பரமஹம்சர்...மொழிதான்....மிகவும் ரசித்தோம்!
ReplyDelete